Thursday, July 31, 2014

சகல சௌபாக்கியங்கள் அருளும் கருட பஞ்சமி


கருடன் காயத்திரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

கருட மாலா மந்திரம்

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிஹ்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் 
பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று  கருட பஞ்சமி தினத்தில்  கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். 

கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். 

வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்களான் நாகங்கள்  செய்த சூழ்ச்சியினால்  வினதை அடிமையாக நேர்ந்தது ..

அன்னையின் அடிமைத் தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்து பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்து பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது ..

எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். 

 கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் 
அஷ்ட நாகங்களே. 

நோன்பிருந்து கௌரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். 

அன்று வடை, பாயசம், முக்கியமாக  கொழுக்கட்டை செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். 

சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். 

பூஜை செய்யும் போது அம்மனுக்கு  சரடு  சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். 
அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம்.  

வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். 
இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். 

ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். 

சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்
சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும்.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். 

அவர்களில்,   தாய் கத்ரு  சொல்லைக் கேட்காததால், தீயில் விழும்படி நாகருக்கு  கொடுத்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின் போது அக்கினியில் வீழ்ந்தன..

அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் 
சாப நிவர்த்தி கொடுத்தஅ நாள்தான்  நாக பஞ்சமி தினம்.
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 

புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
விரதம் கடைப்பிடிக்கும்போது,  உலோகத்தில் நாக உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

 கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். 
கருடன்,  தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்று தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்தவர்களுடன்  கடும் போர் நடத்தி இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். 

அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்த கருடாழ்வார் அவதரித்த தினம் பெருமாள் கோவில்களில் கருட பஞ்சமி என்று சிறப்புடன்கொண்டாடப்படுகிறது..! 

 நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களைக் கடைப்பிடிப்பதால், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். 

முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தனது உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார். 

பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். 

இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார். 

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. 

பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. 

பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், "பிரம்மோற்சவம்' என்பர். 

பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது. 

ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். 

ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்போதும் தொண்டு செய்து கொண்டிருக்கும் நித்யசூரியான கருடன்  திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார். 

கருடன்  பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள். 

கச்யபர்-வினதையின் மகனான் கருடனுக்கு பிரகஸ்பதி குரு. 

ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் பெருமாளின் சன்னதிக்கு எதிராக கருடன் சன்னதியும், துவஜ ஸ்தம்பம் என்ற கருடக்கொடி மரமும் அமைந்தள்ளன. 

வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும். 

கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். 

விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருட பஞ்சமி  கருடன் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்து வந்த தினம். 

கருடன் வேதங்களே வடிவானவர். 

சூரியனின் தேரோட்டியான அருணன், கருடனின் சகோதரன். 

ருத்ரா, சுகீர்த்தி இருவரும் கருடனின் மனைவியர். 

ராம-ராவண யுத்தத்தில் இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடந்த ராம-லட்சுமணர், ஆகாயத்தில் சஞ்சரித்த கருடனின் இறக்கைக்காற்றால் விழித்தெழுந்தனர். 

ஆறு மாதங்கள் கருட தியானத்தை விடாமல் உபாசிப்பவருக்கு தன் சக்தியில் ஒரு துளியை கருட பகவான் அருள்கிறார். 

கருட பக்தனின் பார்வை பட்டால் விஷ ஜுரம் குணமாகிவிடும். 

கருட பஞ்சமியன்று கருட சரித்திரம்  படித்தால் அமிர்தம் போல வாழ்வும் தீர்க்காயுளும் கிட்டும்.

Wednesday, July 30, 2014

ஆடிப்பூர நாயகி ஆண்டாள்




ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ்  ஒளி வீசும் முகத்துடன், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச்செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.

திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.  .

ஆண்டாளை வடமாநிலங்களில் கோதாதேவி என சீராட்டி  
அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை  கோதாதேவி 
அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். 

பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். 
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். 
தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். 

அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். 

தானே அரங்கனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம் ஆடிப்பூரம்.  அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் விதைத்த ஆன்மீக விதை, பிற்காலத்தில் சமயம் காக்கும் பெரும் விருக்ஷமாக வளர்ந்தது.
.
இலங்கையை நோக்கி அரங்கன் பள்ளிகொண்டு அறிதுயில் கொள்வதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்! 

உறங்குவது போல நடித்தபடி நடக்க இருக்கும் நிகழ்வுகளை 
அசை போடுகிறாராம்!

ஸ்ரீவில்லிபுத்தூரிலே  ஆண்டாள் அவதரிக்கக் காரணம்- நூற்றெட்டு திவ்ய தேசத்தில்  தெற்கு பார்த்து சயனித்துக்கொண்டு அரங்கன்  தெற்கே ஸ்ரீவில்லிபுத்தூரைப் பார்த்து படுத்துக் கிடக்க! அரங்கன் பார்வை படும் இடத்தில் எழில்பாவையாக  தன்னைக் கிடத்திக்கொண்டாளாம்! 

நூற்றெட்டுத் திவ்ய தேசப் பெருமான்களில் ஆண்டாளுக்கு 
அரங்கனின் அழகு மட்டுமே நெஞ்சைக் கவர்கிறது.
எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர்  கண்ணழகர் கொப்பூழில் 
எழுகமலப் பூவழக ரெம்மானார்  என்னுடைய 
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே

என்று பாடுகிறாள்.
திருவரங்கத்தில் அரங்கன் ஆண்டாளுடன் அவள் ஸந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக்கொள்கின்றார்.
ஆடிப் பூரத்தன்று பெரிய பெருமாளுக்குத் தினந்தோறும் காலையில் காவேரியிலிருந்து வரும் திருமஞ்சனத்தைவிட விசேஷ விமரிசையுடன் பெரிய கோயில் கைங்கரியபரர்கள் யானை மேல் கொண்டுவரும் தீர்த்தத்தால் ஆண்டாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். 
 பெரிய பெருமாள் ஸந்நிதியிலிருந்து சேலையும் அலங்காரமும் வந்து, அலங்காரம் அமுது செய்ததும் கோஷ்டி. முதலில் வெளியாண்டாளுக்குத் திருமஞ்சனம் வந்த பிறகு உள்ளாண்டாளுக்கு வரும்.
பெரிய பெருமாள் தம்முடைய திருமஞ்சன வேதி முதலியவற்றை (கோவிலுக்குள் நுழைந்ததும் இருக்கும்) உள்ளாண்டாளுக்குக் கொடுத்தனுப்புவார்.

பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும்,
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

பெருமான் கீதையில் விரித்து விரித்துக் கஷ்டப்பட்டுச் சொன்னதை எல்லாம் இவள், முப்பதே பாட்டில் ! அதுவும் எளிய, இனிய, புரியும் தமிழில்! நமக்குக் காட்டிக் கொடுத்துவிட்டாளே..!! 
அதனால்தான் அது கோதற்ற இனிய கோதைத் தமிழ் என்றானது
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே என்று கூறி, 
ஆண்டாள் திருவடிகளை வணங்குவோம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், 
அழகான புன்முறுவலோடு காட்சியளிக்கிறாள். 

சாய்ந்த எழில்  கொண்டை, மூன்று வளைவுகளோடு கூடிய திருமேனி, கையிலே அழகிய கிளி என்று அழகிய மணவாளனான ஸ்ரீரங்கமன்னாருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஆண்டாளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாளுக்காக ஸ்ரீரங்கநாதன், ரங்கமன்னாராக ராஜகோபாலனாக கண்ணனாக எழுந்தருளியுள்ளார். 

 ஸ்ரீவைகானஸ ஆகம விதியின்படி ராஜகோபாலனுக்கு வலதுபுறம் 
ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளியுள்ளதால் மஹாலட்சுமியின் அவதாரமான ஸ்ரீருக்மணி பிராட்டியின் அம்சமும் உடையவளாகிறாள். 

க, கருணையே வடிவமான மஹாலட்சுமியின் அம்சத்துடனும், புராணத்தின்படி பொறுமையே வடிவமான பூமிப் பிராட்டியின் அம்சத்துடனும், தன்னையே கோபிகையாக ராதையாக எண்ணி பக்தி செய்ததால் அன்பே வடிவமான, நீளாதேவியான ராதையின் அம்சத்துடனும் ஸ்ரீஆண்டாள்  ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பானது. 

பூமிப்பிராட்டி ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தது போல, உபநிடதங்கள் எல்லாம் திருப்பாவையாக அவளால் சொல்லப்பட்டது. என  குறிப்பிடுகிறார் வைணவ ஆசாரியர் சுவாமி பெரியவாச்சான் பிள்ளை

Tuesday, July 29, 2014

ஆடிப்பூர வழிபாடு



தேவி ஜெகன்மாதா ஜெய ஜெய தேவி ஜெகன்மாதா
தேவி ஜெகன்மாதா ஜெய தேவி ஜெகன்மாதா

இயற்கையின் இன்பத்தில் ஆழ்ந்திருந்தேன் எழில் 
அன்னத்தில் ஏறி வந்தாள் அன்னை

அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக்கே ஆட்படுவாள் ஆனந்த கல்யாணி அவள்




அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் ஆடிப் பூர தினத்தில்  அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தி வழிபாடுகள் நடைபெறும் -வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.

அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

ஆண்டாள் பாடிய வாரணமாயிரம்’ என  தொடங்கும் 
பத்து பாடல்கள் திருமண பாடல்களாகும். 

பக்தி சிரத்தையுடன் படிக்க தீங்கின்றி நாடெங்கும் மழை பொழியும், கன்னிப் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் நீங்கி திருமண பிராப்தம் கூடிவரும் என்பது ஐதீகமாகும். 

ஆடிப்பூர நாளில் அம்மன், அம்பாள், பெருமாள் கோயில்களில் 
சிறப்பு வழிபாடு நடக்கும். 

ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் திருத்தேரோட்ட உற்சவம் நடக்கும். அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக அருள்பாலிக்கும் மேல்மருவத்தூரிலும் ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. 

எல்லா கோயில்களிலும் அம்மன், அம்பாளுக்கு 
வளையல் சாற்றுவார்கள்,

பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். 
அணிந்துகொண்டால் இல்லத்தில்  மங்களங்கள்  நிறையும் 
என்பது நம்பிக்கை. 

ஆடிப்பூர நாளில் சகல நலங்களையும், வளங்களையும், 
நீங்காத செல்வத்தையும் அருள்வாள் அன்னை..!
Valai Malai to Devi today being Aadi Pooram-100_2144.jpg