Sunday, July 27, 2014

ஸ்ரீசக்ர கல்யாண காமாட்சி!கருணயின் வடிவான மனங்களில் அன்னை ஆட்சி!
காமாட்சி சங்கரன் துணையாகி சர்வமும் தனதாகி

இங்கொரு நிலையாகி இன்னருள் மழையாகி
இன்னலைத் துடைத்திட இன்பங்கள் வழங்கிட

கண்ணின் மணியாய் வந்தமர்ந்தாள் 
கல்யாண காமாட்சி திருவருள் புரிந்திடுவாள்..

தையல் நல்லாளை தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை
பைய நின்றேத்திப் பணியின் பணிந்தபின்
வெய்ய பவமினி மேவகிலாவே


என திருமூலர், திருமந்திரத்தில் கல்யாண காமாட்சி அம்பிகை அன்னையைப் பணிந்தேத்துகிறார். 

சிரசில் பொன்மணிக் கீரிடம்,  ஜொலிக்கும் நெற்றிப் பட்டயம், 
மிளிரும் மங்கலக் குங்குமம்,  கருணை பொழியும் கயல்விழிகள்
காதிலே பெரிய தாடகங்கள்,  கழுத்திலே மாங்கல்ய மணியாரத்துடன் மலர்மாலை  மற்றும் எலுமிச்சை மாலை தாங்கி,
அபய- வரத ஹஸ்தங்களுடன் ஸ்ரீகல்யாண காமாட்சி தரிசனம் தரும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும்....
அதியமான் நெடுமான் அஞ்சிஎன்னும் மன்னன் தகடூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த புராதன நகரமே இன்று தர்மபுரி என அழைக்கப்படுகிறது.. இங்கு தர்மதேவர் தவம் இருந்ததால், தருமபுரி என்ற பெயர் பெற்றதாகவும் கூறுவார்கள்.
ஆடிப் பூரம் தினத்தில் ஸ்ரீவித்யா மண்டபத்தில் கல்யாண காமாட்சிக்கு வளைகாப்பு விழா ,  மகா தீபாராதனை.நடைபெறும்...

சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து 68 கி.மீ. தொலைவில் தருமபுரி அமைந்துள்ளது. 

தருமபுரி நகரின் கோட்டை என்றழைக்கப்படும் பகுதியில், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 
 
மக்களால் ஈஸ்வரன் கோயில், காமாட்சியம்மன் கோயில் என்ற பெயர்களால் போற்றப்படும் இக்கோயில், ஆதியில் பாணாசுரனால் ஸ்தாபிக்கப்பட்ட கோயிலாகும்.

சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீராமன், குறுமுனி அகத்தியர் வாயிலாக ‘பஞ்சதசாக்ஷரி’ மகா மந்திரத்தைப் பெற்று வசந்த நவராத்திரியை உலகில் ஆரம்பித்த புண்ணியமான திருத்தலம் இதுவே. 

குறுமுனிவரும் ‘நவரத்தின மணிமாலை’ எனும் லலிதாம்பிகை துதியை இத்திருத்தலத்தில் பாடிப் பணிந்திருக்கிறார். இந்திரஜித் வழிபாடு செய்த தலம்.

துர்வாசர், கௌசிகர், காசியபர், அகத்தியர், பரத்வாஜர் என்கிற ஐந்து முனிவர்களாலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனப்படும் அஷ்டதிக் பாலகர்களாலும், 
பஞ்ச பாண்டவர்களாலும், ஐராவதம் என்ற தேவயானையாலும், யோகநரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணன் ஆகியோராலும் 
வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம். 

முற்காலத்தில் புகழ்பெற்ற 1008 சிவாலயங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்கியதாம். 
பஞ்ச பாண்டவர்கள் இங்குதான் பஞ்சபூதத் தலங்களைத் தோற்றுவித்தனர். 

காளத்தி மலையைச் சேர்ந்த பூரிசித்தர் என்ற சித்தர், குலோத்துங்க சோழனிடம் திருவேளாலீஸ்வரம் என்ற இந்த ஆலயத்தைப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். 
ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, ‘சாணாயிரம் முழமாயிரம்’ எனப் பெயரிடப்பட்டது. 
அதியர், சோழர், நுளம்பல்லவர், கங்கர், பாணர், போசனர், ஹொய்சாலர், நாயக்கர் போன்ற அரச வம்சத்தினர் திருப்பணிகளைப் பெற்ற பெருமை இவ்வாலயத்துக்கு உண்டு எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. 


திப்புசுல்தான் கூட இக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளார். 
சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடலில் தகடூர் என்று இடம்பெற்றிருக்கும் தேவார வைப்புத்தலம் இதுவே என்பார்கள். 


இங்குள்ள அதிகார நந்தியை, ‘கூழை’ என்று சுந்தரர், தேவாரத்தில் திருநாட்டுத் தொகையில் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
சுவாமி, அம்மன் சந்நிதிகளின் மேற்குப் பகுதிகளில் அழகிய விமானங்கள் உள்ளன.
கல்யாண காமாட்சி அம்பிகை உடனாகிய அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் பிராகாரத்துக்குள் வரிசையாக மூன்று பிரதான சந்நிதிகள் அமைந்துள்ளது. 


சித்தலிங்கம் என வழங்கப்படும் ‘காடுவெட்டி சித்தர்’ சோமநாதர் சந்நிதி 
ஒரு தள விமானம்
மல்லிகார்ஜுனர் எனப் போற்றப்படும் திருவேளாலீசர் சந்நிதி இருதள விமானம். 
இரண்டுக்கும் இடையே 50 அடிக்கும் மேலாக உயர்ந்து ஸ்ரீசக்ரமேடைமேல் மூன்றுதள விமானத்துடன், தன்னிகரில்லா பெருமையுடன் 
தகடூர் அன்னை கல்யாண காமாட்சி கோயில் கொண்டுள்ளாள்.
கருவறையில் மூலவர் மல்லிகார்ஜுனேஸ்வரர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். ஆவுடையார் சதுர பீடமாக உள்ளது. 
சிவாகம முறையில் 36 தத்துவங்களுக்கும் 36 பட்டினங்களுடன் கூடியது. இயற்கை ஒளி, லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கிறது.

மூலவர் சந்நிதிக்கு முன்பு, மகா மண்டபத்திலுள்ள இரு தூண்களின் அமைப்புகளும் நம் கவனத்தைக் கவரக்கூடியதாகும். 
தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால் அது மறுபுறத்துக்கு வந்துவிடுகிறது
[Gal1]
ஒவ்வொரு தூணின் எடையும் இரண்டரை டன் இருக்கும். இவற்றை, தொங்கும் தூண்கள் என்றும் அழைக்கிறார்கள்.
இந்தத் தூண்களில் நாட்டியப் பெண்களின் நளினமான உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. 
விதானத்தில் வட்ட வடிவமான அமைப்பில், அஷ்டதிக் பாலகர்களின் திருவுருவங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. 
நடுவில் ஊர்த்துவ தாண்டவமூர்த்தியும் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். 

மூலவரின் கருவறை வாயிலுள்ள எண்கர கஜலட்சுமியின் உருவம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விநாயகரின் உருவம், அவரது சந்நிதிக்கு மேலுள்ள சிறு விமானம் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டதாகும்.
அன்னை கல்யாண காமாட்சிக்குத் தனிச் சந்நிதி. 
காமாட்சி என்ற சொல் கா-மா-ஆட்சி எனப் பிரியும். 
கா என்றால் காமாட்சி, மா என்றால் லட்சுமி, ஆட்சி என்றால் கண்ணையுடையவள். 
தன் கண்பார்வையால் கல்வி, செல்வம் இரண்டையும் ஒருங்கே வழங்க வல்லவள் காமாட்சி. 
காஞ்சியில் தவமிருந்த யோகக் காமாட்சி, இங்கு சிவசக்தி ஐக்கிய நிலையில் ஐக்கியமாகி, போக சக்தியாக அருள்புரிகிறாள். 
காமேஸ்வரருடன் ஸ்ரீகாமேஸ்வரியாகக் கூடி, சதாசிவர் ஆஸனப் பலகையாக பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரர் ஆகியோர் நான்கு கால்களாகக் கூடிய பஞ்சப் பிரம்மாசனத்தில் அமர்ந்த அன்னையாகத் தரிசனம் தருகிறாள். 
[Gal1]
காமாட்சியம்மன் சந்நிதி 18 படிகள் உடைய உயர்ந்த மேடையின்மீது அமைக்கப்பட்டுள்ளது. 18 படிகளும் சிறப்புடையவை. 


பிற ஆலயங்களில் ஸ்ரீசக்கரம் அம்மனுக்கு முன்பாகவோ, கீழ்ப்பகுதியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். 

இங்கோ, அம்மன் சந்நிதியே ஸ்ரீசக்கரத்தின்மீது நிறுவப்பட்டிருக்கிறது. சக்திபீடமான மேருவின்மேல் எழுந்துள்ளதால், இச்சந்நிதி உயரமாக உள்ளது.
அம்மன் சந்நிதி 18 யானைகள் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பிராகாரத்தை  சுற்றிவந்தால், ராமாயணக் காட்சிகள் முழுவதையும் புடைப்புச் சிற்பங்களாகத் தரிசிக்கலாம். 

காமாட்சியம்மனை மையமாகக் கொண்டு இருபுறமும் மல்லிகாஜுனேஸ்வரர், சோமேசுவரர் ஆகிய இரு லிங்கங்கள் உள்ளன. 

காமாட்சியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயிலைக் காட்டிலும் உயரமான விமானத்தை உடையது.
பிரதோஷ காலத்தில், சிவம் சக்தியுடன் ஐக்கியமாகி தம்மைத் தாமே வலம் வரும் வகையில் ஐக்கிய காமாட்சியைத் திருவலம் வருவது எந்தச் சிவாலயத்திலும் பார்த்திராத சிறப்பாகும். 


மேரு வடிவில் பல கோணங்களில் 18 கோணங்களை முன்னிலைப்படுத்தி, அவற்றை 18 யானைகள் தாங்குவதாகவும், ‘வித்யை’ எனும் தாய் வழிபாட்டில் சமஸ்டி ரூபம் எனும் வகையில் திதி நித்யைகளைக் காண்பது மரபு. 
மதுரை ஆலயத்தில் சொக்கநாதருக்கு 8 யானைகள் கருவறையைத் தாங்கும். ஆனால், ஆட்சி பீடம் மீனாட்சி. 
தகடூர் தலத்தில் அம்பிகையின் பெருமையை விளக்க 18 யானைகள் தாங்குகிறது. 

அணைத்தெழுந்த நாதராக பிரதோஷ வேளையில் வலம் வரும்போது அம்பிகையின் ஆலயத்தையும் சேர்த்தே வலம் வருகிறார் ஈசன். 
மாங்காடு - தபஸ் காமாட்சி
காஞ்சி - யோகக் காமாட்சி, 
தகடூர் - ஐக்கியக் காமாட்சி.

உலகில் தாய் வழிபாட்டின் பெருமையை, அம்பிகையின் சிறப்பை விளக்கும் உயரிய திருத்தலம்.

காஞ்சியில் தவமிருந்த யோகக் காமாட்சியானவள், நவராத்திரி 
9 நாட்களும் ஸ்ரீ துர்கையுடன் இணைந்து சூரனை வதம் செய்தாள். 

தருமபுரியிலுள்ள கல்யாண காமாட்சியோ, போக சக்தி காமாட்சியாக, ஸ்ரீசூலினி எனும் கொற்றவை ராஜ துர்கையுடன் சேர்ந்து சூரனை வதம் செய்த அருள்தோற்றத்தை,  எல்லா நாட்களிலும் இங்கு தரிசிக்கலாம். 


அன்னை காமாட்சியும், கலிகாலத்தில் எளிதில் அருள்புரியும் கொற்றவை சூலினி ஸ்ரீராஜதுர்கையும் இணைந்து அருள்பாலிக்கும் தலம். 


ஸ்ரீசரபமூர்த்தியின் பத்தினியான ஸ்ரீராஜதுர்கை மஹா வரப்ரசாதி. 

ராஜ துர்கையை வருடத்தில் ஆடி 3-ஆம் செவ்வாய்க்கிழமை தினத்தில் மட்டும் மதியம் 4.35 முதல் இரவு 8.30 வரை சந்தனக் காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

அமாவாசைகளில், மாலை 5 முதல் 6.30 மணி வரையிலான 18-ஆம் படி வழிபாட்டை பெண்கள் மட்டுமே செய்கின்றனர் என்பது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும். 


அம்மன் சந்நிதியில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. சண்டிஹோமம், திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 


காமாட்சியம்மன் சந்நிதியில் பிரதி மாத பௌர்ணமியில் திருவல பூஜை, நிசிபூஜை ஆகியவை நடைபெறுகின்றன. பௌர்ணமியில் காமாட்சிக்கும், அமாவாசையில் ராஜதுர்கைக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.


கல்யாண காமாட்சி கோயிலில், திருமணத் தடை அகல்வதற்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தேய்பிறை அஷ்டமியில் காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரை கல்யாண மாலை பூஜை செய்து, கால பைரவர் சந்நிதியில் 
கந்தர்வ ராஜ கல்யாண மாலை தருகிறார்கள். 

தேய்பிறை அஷ்டமி மாலை வேளையில் பிரார்த்தனை நிறைவு பெற்றவர்களுக்காகவும், மக்கள் மன அமைதி பெறவும் ஸ்ரீசரபேஸ்வர, ஸ்ரீப்ரத்யங்கராதேவி ஸ்வர்ணாகர்ஷண பைரவ ஹோமம் 5 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகிறது.
[Gal1]

[Gal1]
The entrance to the Mallikarjuneswara temple.


adhiyamankottai16 comments:

 1. கல்யாண காமாட்சிஅறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. ஹப்பா எவ்வளவு தகவல்கள்! எத்தனை அழகு படங்கள்! மிக அருமை...."ஸ்ரீ சக்ர ராஜ சிம் ஹாஸ நேஸ்வரி பாடல் நினைவுக்கு வந்தது.

  மிக்க நன்றி!

  ReplyDelete
 3. ஸ்ரீகல்யாண காமாட்சி தரிசனம் கண்டோம் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்பிகை ஆலய தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 5. அசத்தலான 1350வது பதிவுக்குப்பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  இன்னும் 150 நாட்களே உள்ளன .... வெற்றிகரமான 1500ஐ எட்ட ! ;)

  >>>>>

  ReplyDelete

 6. ’ஸ்ரீசக்ர கல்யாண காமாக்ஷி’

  தலைப்பே வெகு அழகாக அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.

  தங்கத் தலைவியின் தலைப்பைப்பற்றி கேட்கவும் வேண்டுமோ ! ;)

  அது ஊரறிந்த விஷயமாச்சே !


  >>>>>

  ReplyDelete
 7. திருமூலரின் திருமந்திரத்துடன் கல்யாண காமாக்ஷியின் கல்யாண ரூப வர்ணனை மிகவும் ஜோராக உள்ளது.

  எல்லோருடைய இல்லத்திலும் அடுத்தடுத்து கல்யாண நிகழ்ச்சிகள் நடந்து மனதில் குஷி பிறக்கட்டும்.

  >>>>>

  ReplyDelete
 8. மஹா தீபாராதனைப்படம் வெகு அழகாக உள்ளது.

  எப்படி எப்படி எப்படி ? இதெல்லாம் தேடிப்பிடிக்கிறீர்களோ !

  மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 9. தர்மபுரிக்கு இருமுறைகள் சில உறவினர் + நண்பர் கல்யாணங்களுக்குச் சென்று வந்துள்ளேன்.

  ஆனால் இங்கு நீங்க சொல்லியுள்ள கோயிலுக்கெல்லாம் செல்லும் பாக்யம் கிடைக்கவில்லை.

  தாங்களே அழைத்துப்போனால் தான் என்னவாம் ?

  உங்களுடனே வந்து தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டுப்பார்த்து, அது மறுபுறம் வந்தால் மட்டுமே நான் நம்புவேன். அதற்காகவாவது என்னைத் தங்களுடன் உடனே அங்கே அழைத்துச் செல்லவும்.

  >>>>>

  ReplyDelete
 10. பல்வேறு கதைகளும் விளக்கங்களும், படங்களும் வழக்கம்போல் அருமையோ அருமை.

  காலையில் ஏராளமான காணொளிகள் இருந்தன என ஞாபகம். இப்போது அவை காணாமல் போய்விட்டன. எனினும் நேரமின்மையால் எனக்கு இதில் [காணாமல் போனதில்] சந்தோஷமே.

  >>>>>

  ReplyDelete
 11. அனைத்துக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  பலமுறை வரணும் வரணும் என நான் முயற்சித்தும், பதிவுப்பக்கம் வந்துமேகூட இப்போதுதான் என்னால் பின்னூட்டம் அளிக்க முடிந்தது. நேரம் சரியாக டைட்டாக உள்ளது.

  தங்களைப்போன்ற மஹா மஹா சுறுசுறுப்பான, துடிப்பான, வேகமான, மனதுக்குப்பிடித்த ஓர் உதவியாளர் மட்டும் என்னுடன் எப்போதும் இருந்தால் நானும் வானத்தையே வில்லாக வளைத்து விடுவேனாக்கும். அதற்கு எனக்குப் ப்ராப்தம் இல்லையே !

  என் செய்வேன் என் காமாக்ஷி தாயே !
  கடைக்கண் பார்வையை அருள்வாய் நீயே !!

  ;) 1350 ;)

  oooOooo

  ReplyDelete
 12. கண் நிறைந்த காட்சியாக ஸ்ரீ கல்யாண காமாட்சி!..
  மங்களகரமான பதிவு.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 13. ஸ்ரீகல்யாண காமாட்சி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
  படங்கள், காணொளி எல்லாம் அருமை.

  ReplyDelete
 14. இப்போது ஒரு காணொளி மட்டும் காட்சி அளிக்கிறது.

  திருமதி. சுதா ரகுநாதன் அவர்களின் ’கெளரிக்கல்யாண வைபோவமே கல்யாணப்பாடல்’ எனப்புரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

  பிறகு என் ஆத்துக்காரிக்கு MOOD இருக்கும்போது அவளுடன் சேர்ந்து போட்டுக்கேட்டு மகிழ்ந்து கொள்கிறேன்.

  இப்போ அவளும் டீ.வி.யில் பிஸி ......
  நானும் என் வலைத்தளத்தினில் பிஸி...... ;)))))

  ReplyDelete
 15. அருமையான பகிர்வு.... படங்கள் மனதினைக் கொள்ளை கொண்டன.

  ReplyDelete
 16. ஸ்ரீசக்ர கல்யாண காமாட்சி பற்றி முதல் தடவையாக அறிந்து கொண்டேன். தொங்கும் தூண்கள் மிகவும் வியப்பான செய்தி.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete