Wednesday, April 30, 2014

அஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியைநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே! 
சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே! 

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி! 
ஸர்வதுக்க ஹரே தேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே!
திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. 

 தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 
3வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது

அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு 
மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நல்ல காரியங்கள் தொடங்கவும் 
சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘

மகிழ்வித்து மகிழ்’ என மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறலாம்..
 சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   சித்திரை மாத வளர்பிறையில் வரும்   எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.

திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை

பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது.

 பூஜை அறையில் கோலமிட்டு. அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இட்டு இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்கி அதனுள் காசுகளைப் போடுவதும், காசுகளைப் பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பதும்  வழக்கம்.

கலசத்தின் அருகே  நெல் நிறைத்து வைத்து  கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து. லட்சுமி நாராயணர் படம் வைத்து அலங்கரித்து , குத்துவிளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வைக்கலாம்..
அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் வீடு தேடிவந்துவிடும்.

முதலில் விநாயகரை வேண்டி. பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்திக்கலாம்...

 விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லலாம்... அல்லது கேட்கலாம்..

 குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.

 வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யலாம்..!

 பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் 
நிவேதிப்பது சிறப்பானது.

அட்சயதிருதியை தினம்  சிவாலயம், பெருமாள் கோயில் என்று 
 இயன்ற தலத்திற்குச் சென்று தரிசிக்கலாம்..

 அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக.கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.

எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.
 இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் 
லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, .தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் அந்த ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்
கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி பாலரிஷ்ட தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம்.

அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். 

அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். 

அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம் பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.
அமிர்த சஞ்சீவினி மந்திரம்:-
ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||

தன்வந்திரி மந்திரம்:-

ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு,சக்கரம்,அட்டைபூச்சி,அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.

தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.


அட்சயதிருதியை அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.  தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

இல்லத்தில்  கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்யலாம். குறிப்பாக, சகல வெற்றிகளும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை மனதார பிரார்த்தனை செய்தாலே , "கனகதாரை'' நிச்சயம் செல்வம் பெருக செய்வாள்.

ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

 அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில்  முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

உடல் ஊனமுற்றவர்கள்  அருளும் விசேஷமான அட்சய திருதியை பூஜை!
ஸ்ரீ சனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று. அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார்.

எனவே, உடல் ஊனமுற்றவர்கள்.திருதியைத் திதி நாட்களில் அட்சயத் திரிதியைத் தலங்களில் மற்றும் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சன்னதி கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சிறப்பு கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரருக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி முழு முந்திரி பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் தணியலாகும்.

வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளிக்கவேண்டும்...

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்குரிய நாளாக இருப்பதால் லட்சுமி சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி செந்தாமரை மலரால் அர்ச்சிப்பது நன்மை அளிக்கும்.
கிருஷ்ணருக்கு குசேலர் அவல் அளித்த நாள் என்பதால், காய்ச்சிய பாலுடன் அவல், வெல்லம் சேர்த்து கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது சிறப்பு.

அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம்.. இந்நாளில் பிதுர்தர்ப்பணம் செய்வதும், பசுவிற்கு கீரை,பழம் கொடுப்பதும் நல்லது.

அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்' எனப்போற்றுவர்.

லட்சுமி நாராயணருக்கு துளசியும், யவை என்னும் தானியத்தையும் (கோதுமை போல் இருக்கும்) படைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். யவை பூஜைபொருள்கள் விற்கும்  கடைகளில் கிடைக்கும்

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

 இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கிய பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி - அட்சய திருதியை தினத்தன்றுதான்அன்னை  காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான 
அன்னபூரணி அவதரித்தாள்

அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்' என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
தங்க ஆபரணங்க கட்டுமான பொருட்கள், கலைபொருட்கள் இப்படி எதையும் வாங்கலாம். இதன் மூலம் ஆண்டு முழுதும் சுபிட்சமாக அமையும் என்பது ஐதீகம்

அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை' நாளில் செய்யப்படுகிறது.

கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.


வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.


ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை..

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

Tuesday, April 29, 2014

தங்கத் திருநாள் அட்சயதிருதியை..சித்திரை மாதம் வரும் அமாவாசையை அடுத்த வளர்பிறையான மூன்றாம் நாளான திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்து விழாவாக கொண்டாடுகிறோம்.

அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.

அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. 

ஸ்ரீலட்சுமி வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும்,
இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும்,
மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும்,
வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும்,
குடும்பத்தில் கிரக லட்சுமியாக வும் விளங்குகிறாள்.

பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்

மகாலட்சுமி திருமால்  மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள்

பெண்கள் அட்சய திரிதியை அன்று ஸ்வர்ண கௌரி விரதம்
கடைப்பிடிப்பது விஷேசம்... 

அன்று பார்வதி பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறுநாள்
அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகரும் வருவதாகவும் நம்பிக்கை..

 கோதுமையில் இனிப்புகள் செய்து படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து ஆடை தானமும் செய்வார்கள்.

குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும்
 பெற்ற நாள்  அட்சய திரிதியை

மஹா விஷ்ணுவின் அவதாரமான வியாசபகவான் மஹாபாரதத்தை சொல்லச்சொல்ல மஹாகணபதி தன் மேன்மைமிகு தந்தத்தை ஒடித்து மஹாபாரதம் எழுத ஆரம்பித்த திருநாள் அட்சய திருதியை...

குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்து அளவற்ற செல்வம் பெற்ற திருநாள்..

கௌரவர் சபையில் பாஞ்சாலி துச்சாதனனால் துன்புறும்போது, “அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் .

பரசுராமர் அவதரித்த நாள்..
 ..
பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான்.

மணிமேகலையும் அட்சய பாத்திரம் பெற்றுள்ளாள்.

பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்
அன்னபூரணி  தன் கையில் உள்ள அட்சய பாத்திரத்தில் இருந்த உணவை சர்வேஸ்வரனுக்கு தானமிட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட வைத்த நாள் அட்சய திரிதியை நாள்தான். எனவே காசியும் அட்சய திரிதியை தலமாகிறது

கேரள சொர்ணத்து மனை யில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம்  பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாள்...

.
 குருகுல வழக்கப்படி சங்கரர் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. 

பவதி பிட்சாந்தேஹி’ என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். 

 அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அவளுக்கு உதவ விரும்பி, மகாலட்சு மியை நோக்கி மனம் உருகப் பாடினார். 

என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனி கள் குவிந்தன. அப்பாடல் தான் 
கனகதாரா ஸ்தோத் திரம்.
இது 8-ஆம் நூற்றாண்டில் நடந்த அதிசயமாகும். இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32-ஆம் வயதில். எனவே அன் றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழலாம்.
திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும்  கிருஷ்ண அம்பலம் வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சமாதியும் சிறப்புடன் அமைத்துள்ளனர்.. ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு  தரப்பட்டுள்ள சிறந்த புகழாக கல் விளக்கு ஒன்று நிரந்தரமாக அணையாதீபமாக ஒளிவீசித்திழ்கிறது..! .
ஆதிசங்கரர் அவதரித்த காலடியில்  அமைத்துள்ள கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தியாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.

கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில்- வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்யும்போது, லட்சுமி தேவியை திருமால் தன் கையால் ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது போல சங்கல்பம்  செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார்.

ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட்சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். 

காலப்போக்கில் விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சு மியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்த வற்றைக் கூறினாள்.
அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “”தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள்மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மிக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக்கொண்டார்.
லட்சுமி தேவி, “”அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு  நான் அருள்பாலிக் கிறேன்” என உறுதி கூறினாள்.  அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப் பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம்.

ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங் களுடன் காட்சி தருகிறார். இவருக்குப்பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில்- அவ்விக்ரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம்.

முழையூர் தலத்தில் வருடந்தோறும் அட்சய திரிதியை நாளன்று ஆயிரக்கணக்கானோர் கூடிக் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவன் பரசுநாதர்; இறைவி ஞானாம்பிகை. இத்தலம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது.

திருக்கயிலாயத்தில் இசைக்கப்படும் முழை என்ற இசைக்கருவியின் ஒலி முதன்முதல் பூமியை அடைந்த தலம்  முழையூர்.. முழை  ஒலியைக் கேட்பதற்காகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் அட்சய திரிதியை நாளன்று இத்திருத்தலத்தில் கூடி  கேட்டு ஆனந்திக்கின்றனர்.

அட்சய திரிதியை அன்று 3, 12, 21 என்ற எண்ணிக்கை கொண்ட ஜலமதுரம் என்ற இளநீரால் அபிஷேகம் செய்து, புடலங்காய் கலந்த உணவை தானமளித்தால் அறிந்தோ, அறியாமலோ செய்த தீவினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். முழையூர் லிங்கம் பஞ்சாட்சர பீஜங்களாலான பரசுநாத லிங்கம்.  குபேர பூஜை செய்வது சிறப்பு.

சனிபகவானின் துயரைத் தீர்க்க இறைவன் தோன்றிய தலம் தஞ்சை மாவட்டம், பேராவூரணியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விளங்குளம் ஈஸ்வரன் சனியின் ஊனத்தை நீக்கிய நாள் பூச நட்சத்திர சனிக்கிழமையுடன் கூடிய அட்சய திரிதியை நாளில்தான்.
 அட்சய திரிதியை அன்று அட்சய புரீஸ்வரருக்கும், சனி பகவானுக்கும் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம், குழப்பம் விலகும். 


திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திரிதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம்.   ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் தல பெருமாள் மரக்காலால் குபேரனுக்கு செல்வம் கொடுத்தாராம். பின் அந்த மரக்காலை தலைக்கு அடியில் வைத்தபடி சயன கோலத்தில் காட்சி தரும் வைத்த மாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் பெயர். இவரை அட்சய திரிதியை நாளில் தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

தானத் திருவிழா என்று சிறப்பிக்கப்படும் அட்சய திரிதியையில்  செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும்.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்; புத்தகம் வெளியிடலாம்; வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம்; எந்த ஒரு புதிய செயலையும், 
புண்ணிய செயலையும் செய்யலாம். 
ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.
தயிர்சாத தானம்- ஆயுள் கூடும். இனிப்புப் பண்ட தானம்- திருமணத் தடையை விலக்கும். உணவு தானிய தானம்- விபத்து, அகால மரணத்தை தடுக்கும். கால்நடை தீவன தானம்- வாழ்வை வள மாக்கும். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்தால் பாபவிமோசனம் கிட்டும். லட்சுமி பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும். 
அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும்
. நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்...
உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம்.

மாதா மாதம்  வாங்கியே ஆகவேண்டிய மளிகையை. சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்..

தொடர்புடைய பதிவுகள்


மணிராஜ்: பொன்மழை பொழிக ...

Monday, April 28, 2014

ஐஸ்வர்யம் அருளும் அட்சயநாதர்
மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையே விளங்குகின்ற மாந்துறை மகாதேவனாம் அட்சயநாதர்   ஐஸ்வர்யங்கள் அள்ளிதந்து குறைவில்லாத வாழ்வருளுகிறார்..

ஈசன் மாந்துறைநாதர், ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயர்களைக் கொண்டிருந்தாலும் அட்சயநாத சுவாமி என்ற திருநாமத்துடனும் அருள்புரிகிறார்

வசீகரம் மிக்க  சந்திரனுக்கு  சாபத்தால் ஏற்பட்ட க்ஷயரோகத்தால்  உடல் அங்கங்கள் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தன. 

சந்திரன் குரு பகவானிடம் சென்று பிணி தீர வழி கேட்க, அதற்கு குரு பகவான், ""சந்திரனே! நீ தட்சயாகத்திற்குச் சென்றது மட்டுமல்லாமல் அங்கே விருந்துண்ட பாவத்தால் உடலில் ரோகம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை சிவனைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது.  பூலோகம் சென்று, காவிரியின் வடகரையிலுள்ள ஆம்ரவனத்தை  அடைந்து, அங்குள்ள ஈசனை ஒரு பட்சம் (15 நாட்கள்) வழிபடு'' என்று கூறினார்.

சந்திரனும்  ஆம்ரவனமான திருமாந்துறையை அடைந்து, அங்குள்ள குளத்தில் நீராடி, ஆம்ரவனேஸ்வரரை 15 நாட்கள் வழிபட்டு ஈசனின் திருக்காட்சியைப் பெற்று நலமடைந்தான்.

அப்போது திங்களாகிய சந்திரன், ""திங்கட்கிழமை தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்து, மிளகு அன்னம் நிவேதனம் செய்து தங்களை வழிபடும் இப்பூவுலகினர் அனைவரும், நோய் விலகி குறையில்லாமல் சுகமுடன் வாழ அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினான்.

அன்றைய தினம் தை மாத முதல் நாள். சங்கராந்தி தினமான அந்த திங்கட்கிழமை மாலைப் பொழுதில், அட்சயநாதர்- யோகநாயகி  அம்பாள் மணக்கோலத்திலும், உச்சிஷ்ட கணபதி தம்பதி சமேதராகவும், மகாவிஷ்ணுவும் சந்திரனுக்காக காட்சி தந்து, ""உன் எண்ணப்படியே ஆகட்டும்'' என்று அனுக்கிரகம் செய்தனர். சந்திரன் வழிபட்டு நோய் நீங்கியதால் இத்தலம் சந்திரனுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
ஒருசமயம் சூரியனுக்கு கிரணங்கள் குறைந்தபோது, அவனுக்கு பிரகாசத்தைத் தந்து தன் பக்கத்திலிருந்து தினந்தோறும் தரிசிக்கச் சொன்னார் அட்சயநாதர்.

அதன்படி சூரியன் தங்கிய கோவில்தான் சூரியனார் கோவில். ஆகவே சூரியனார் கோவில் சூரிய க்ஷேத்திரமாகவும், அதற்குப்  பின்புறமுள்ள திருமாந்துறை அட்சயநாதர் ஆலயம் சந்திர க்ஷேத்திரமாகவும் விளங்குகிறது.

சந்திரதீர்த்தத்தில் நீராடியபின் பெருமதிலின் நுழைவாயிலைக் கடந்து கொடிமரம், பலிபீடம், நந்திதேவரை வணங்கிவிட்டு ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் உச்சிஷ்ட கணபதியும் மகாவிஷ்ணுவும் அட்சயநாதரை வழிபடுகின்ற காட்சி அழகிய கற்சிற்பமாய் விளங்குவதை தரிசிக்கலாம்.

மூலவரான அட்சயநாதரை அர்ச்சனைப் பொருட்களுடன்
மாங்கனி கொண்டு அர்ச்சித்து வழிபடுவது விஷேசம்..

உட்பிராகாரத்தில் தெற்கு நோக்கி ஹரதத்தரும், சைவசமயக் குரவர் நால்வரும் அருள்புரிகின்றனர்.

தலதுர்க்கை வடக்கு நோக்கி அருள்புரிகிறாள். 

உச்சிஷ்ட கணபதி தனது சாபத்தை நிவர்த்தி செய்துகொண்டு, தமது பூஜாபலத்தால் பெற்ற சகல சக்தியையும் கொண்டு பில்லி, சூன்யம், ஏவல், வைப்பு, மாந்திரீகம், ஆபிசாரப் பிரயோகம் போன்ற தீயசக்திகளை அழித்து, எல்லாவிதமான இடையூறுகளிலிருந்தும் மக்களைக் காக்க மிகுந்த வரப்ரசாதியாய் நிருதி மூலையில் தம்பதி சமேதராய் அருள்புரிகிறார். இது வேறெங்கும் காணமுடியாத காட்சி.

சுப்ரமணிய சுவாமி வள்ளி, தேவசேனாவுடன் அருள்புரிகிறார்


வாயு மூலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாவிஷ்ணு அருள்புரிகிறார். தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். 

ஈசான்ய திக்கில் பைரவர், சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர் ஆகியோர் சுவாமியைப் பார்த்த வண்ணம் காட்சி தருகின்றனர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது சிலகாலம் இங்கு தங்கி ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டு, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை (அன்னபாத்திரம்) இறைவனுக்கு சமர்ப்பித்து பெறற்கரிய பேறு பெற்றனர் ..

திருஞானசம்பந்தர் தலயாத்திரை செய்து பல தலங்களைப் பதிகம்பாடி வரும்போது, திருக்கஞ்சனூரை வழிபட்ட பின்பு திருமாந்துறையை அடைந்து பதிகம்பாடி வழிபட்டார். 
சுகக்குறைவு ஏற்பட்ட காலவ முனிவரும், நவகிரக நாயகர்களும் திருமங்கலக்குடியில் உள்ள அட்சயதீர்த்தத்தில் நீராடி, திருமாந்துறையிலுள்ள ஈசனை அனுதினமும் "அட்சயநாதரே அருள்புரிவாயே' என்று வழிபட்டதன்  பலனாக உடல்நலம் தேறி சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தனர் .....

அம்பாள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு
திருமணக் கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

 பழமைவாய்ந்ததும், திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை 
ஆதீனத்திற்குட்பட்டதும், காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருஞான சம்பந்தரால் பாடப்பட்டதும், உச்சிஷ்ட கணபதி, தாருகாவன முனிவர்கள், யோகநாயகி அம்பாள், மதியன், மருதவாணர், மகாவிஷ்ணு ஆகியோர் வழிபட்ட பெருமைவாய்ந்ததுமான தலம்தான் திருமாந்துறை
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம், சுக்கிரக்ஷேத்ரமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம், திருமாந்துறை ஸ்ரீஅட்சயநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் மட்டுமே சுவாமிக்கு வலப் பக்கத்தில் தனிச் சந்நிதி, தனிச்சுற்றுப் பிராகாரத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

சுவாமி சந்நிதி அருகிலும், அம்பாள் சந்நிதி அருகிலும் உள்ள கிணறு  
சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் எனப்படுகின்றன.

திங்கட்கிழமை பிறந்தவர்கள்; 2-ஆம் எண்ணில் பிறந்தவர்கள்; மனஅழுத்தம், மனநோய் உள்ளவர்கள்; சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள்; ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்தவர்கள்; தேய்பிறையில் பிறந்தவர்கள்; பௌர்ணமியில் பிறந்தவர்கள் திருமாந்துறை அட்சயநாதரை வணங்கி வந்தால், கூடுதல் பலம் கிடைப்பதோடு குறைவில்லா வாழ்வு வாழலாம் 
நவகிரகங்களுக்கே  சாபம்  நீக்கிய  தலமாதலால்  நவகிரகங்கள் இல்லை. 

திருக்கோவிலைச் சுற்றி மாமரங்கள் சூழ்ந்திருப்பதால்,  
மாந்துறை- ஆம்ரவனம் என அழைக்கப்படுகிறது.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், ஆடுதுறை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நகரப் பேருந்தில் சூரியனார் கோவில் சென்று அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில். திருமாந்துறை செல்லலாம்.

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை யிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

ஆதரவளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்