Wednesday, March 19, 2014

திருமணக்கோலம் கொண்ட திருமுருகன்..!!
உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.


செந்தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாக அருளோங்கி சிறபிக்கிறார்..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். 

லிங்க வடிவில் இருக்கும்  திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். 
சங்ககாலப் புலவரான நக்கீரர் திருப்பரங்கிரி தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார் ...

இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.

நீலக்கல் பத்க்கத்தில் ஜொலிக்கும் நீலமயில் வாகனன்..

ஒரு குடை நிழலில் 
இரு நிலம் குளிர, 
மூவகைத் தமிழும் முறைமையில் விளங்க, 
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர, 
ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற, 
அறுவகை சமயமும் அழகுடன் திகழ, 
எழுவகைப்பாடலும் இயலுடன் பரவ, 
எண் திசை அளவும் சக்கரம் செல்ல
நவகோள் மகிழ்ந்து நன்மைகள் அருள
பத்திப் பற்றுவோம் பரங்கிரி தீரனை...!

 முருகப்பெருமான் திருஅவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். 
 தெய்வயானை ஐராவதத்துடன்...
முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பி, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டருளினார்..!திருப்பரங்குன்றமா மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு உபயமாக 
வந்த தங்கப்பூணூல். சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான, 
420 கிராம் எடையுள்ள தங்கப் பூணூல் 17 வைரக்கற்கள் பதித்து, 
ஓம் என வடிவமைக்கப்பட்டுள்ளது.


முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்தார். அதனால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது.

திரு + பரம் + குன்றம் என்பதே திருப்பரங்குன்றம் என்று வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானையும், குன்றம் என்பது குன்றுவாகிய மலையையும், திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையும் குறிக்கிறது.

இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. 

இந்த மலையை அனுதினமும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர்.

கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.

புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆனால், முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரே என்றாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இந்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

அதன்தொடர்ச்சியாக, சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள்.

அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
Sri Chokkanathar - Sivan Temple, Thiruparankundram
எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில்  அமைந்துள்ள சரவணப்பொய்கை  தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் நம்பிக்கை உண்டு..!

 கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது.

மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

கருவறையில் முருகப் பெருமான் காலடியில் காணப்படும்.  யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற வந்தது என்றும் கூறுகிறார்கள்.

 குகைக்கோவிலில் அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சி தருகிறாள்.

மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் முடியாது.


கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தொடர்புடைய பதிவு....

மணிராஜ்: திருப்பரங்கிரி ஸ்ரீ முருகன் ...

16 comments:

 1. திருமணக்கோலத்தில் முருகப் பெருமான் தரிசனம்..... மிக்க மகிழ்ச்சி....

  ReplyDelete
 2. வேலுண்டு வினையில்லை..
  மயிலுண்டு பயமில்லை!..

  முருகன் திருவருள் முன்னின்று காக்கும்!..

  ReplyDelete
 3. படங்களும் அற்புதம்... படங்களும் அற்புதம் அம்மா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. திருமணக் கோலமும் ஏனைய காட்சிகளும் கண்டு களித்தேன் கோவில் பற்றிய விபரமும் அறிந்தேன்.மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்.....!

  ReplyDelete
 5. மறை முடிவாம் சைவக் கொழுந்தே !

  தவக் கடலே !

  தெய்வக் களிற்றை மணம் செய்தோனே !

  தெள்ளித் தினை மாவும், தேனும் பரிந்தளித்த

  வள்ளிக் கொடியை மணந்தோனே !

  பச்சை மயில் வாகனமும்,

  பன்னிரு திண் தோளும் ,

  அச்சம் அகற்றும் அயில் வேலும்,

  கச்சைத் திருவரையும், சீறடியும்,

  செங்கையும், ஈராறு அருள் விழியும்,

  மா முகங்கள் ஆறும்,

  பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு,

  அடியேற்கு முன்னின்று அருள்.

  உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

  மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

  கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !  நீலக்கல் பதக்கத்தில் நீல மயில் வாகனனை

  நெஞ்சுருக காண வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 6. திருப்பரங்குன்றத்தின் சிறப்புக்களையும்,முருகனின் திருமணக்கோலத்தினையும் பகிர்வினில் அழகான படங்களுடன் கண்டுகளித்தேன்.நன்றி.

  ReplyDelete
 7. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் , அதுவே மணிராஜ் வலையில் பதிவாகும்படங்களும் பதிவும் பேஷ் பேஷ்..!

  ReplyDelete
 8. எனக்கும் அந்த பாடலை கேட்கும் உணர்வோடே பகிர்வை படித்தேன்.

  ReplyDelete
 9. திருப்பரங்குன்ற முருகன் திருமணக் காட்சி, சரவணபொய்கை, காட்சி, சொக்கநாதர் , பார்வதி திருக்கோவில் எல்லாம் கண்டு களித்தேன்.
  படங்கள் எல்லாம் அருமை. செய்திகள் மிக மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. முருகனைப்பற்றிய மிகவும் அழகான பதிவு.

  >>>>>

  ReplyDelete
 11. அத்தனைப் படங்களும் அருமை.

  >>>>>

  ReplyDelete
 12. திருப்பரங்குன்றம் பற்றியும் தெய்வயானை பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக விளக்கிச்சொல்லியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 13. தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன். அங்கு 20க்கு 11 மார்க்குகள் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி.

  >>>>>

  ReplyDelete
 14. காணொளிக்காட்சியைக் கண்குளிரக்காண முடிந்தது.

  >>>>>

  ReplyDelete
 15. முதல் படம் சூப்பரோ சூப்பர்.

  >>>>>

  ReplyDelete
 16. இன்று [19.03.2014] புதிய பேரனுக்கு புண்ணியாஹாவாசனம்.

  வெகு விமர்சையாக நடைபெற்றது.

  அங்கு சென்று வந்ததால் இங்கு தாமதமாகிவிட்டது.

  அனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ooo o ooo

  ReplyDelete