Saturday, May 31, 2014

ஐஸ்வர்யம் அருளும் மஹாலஷ்மி சமேத ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் பவழமல்லிப்பூ மரத்தடியில் அமர்ந்து இருந்த 
சீதாதேவியை  தரிசிக்க வந்தார் அனுமன். 

மரத்தில் இருந்து தரையில் உதிர்ந்திருந்த பூக்களெல்லாம்
கொண்டு ஸ்ரீராமா என்று எழுதுகிறாள் அதனைக் காண 
முடியாத அளவிற்கு கண்ணில் நீர் நிரம்பி அன்னையின் 
மென்மையான கன்னங்களில் ஆறாகப் பெருகி ஓடுகிறது. 
இதனைக் கண்ட அனுமனுக்கு ஆச்சரியம். 
இதுவல்லவோ ராம பக்தி. இப்படி பக்தி பண்ண 
சொல்லித் தாருங்கள் அன்னையே எனக் கேட்கிறார். 
பாஷ்பவாரி பரிபூரணலோசனம் மாருதிம் நமதா ராட்ஷசாந்தகம்’ 
என்று அனுமன் சுலோகம் செல்கிறது. பக்திக்கு அடையாளம் 
இந்த ஆனந்தக் கண்ணீர்தான்.
இதே அனுமன்தான் தனது பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து 
விடுபட மேல் வெண்பாக்கம் பெருமாளையும் தாயாரையும் 
பூஜித்துப் பலன் பெற்ற பாக்கிசாலியாகத்திகழ்கிறார்.. 

இலங்கையில் அசுரர்களை வதம்செய்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால்   பீடிக்கப்பட்ட அனுமன், மேல்வெண்பாக்கம் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு, 
அந்த தோஷத்திலிருந்து விடுபட்டதாக ஐதீகம்

பிரம்மஹத்தி தோஷத்தைக்கூட நீக்கிய சக்தி வாய்ந்த 
பெருமாளாக  மஹத்தான பெருமைமிக்கவராக இருப்பதால்,
 பக்தர்களின் தெரிந்த, தெரியாத அனைத்துத் 
தோஷத்தையும் நீக்கி விடுவார் என்பது ஐதீகம். 
மஹாலஷ்மி சமேதராக ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் 
மூலவராக சாளக்கிராமத்தில் சுயம்பு திருமேனியாக 
காட்சியளிக்கிறார். 

பெருமாளின் இடது மடியில் தாயார் அமர்ந்து இருக்க, 
பெருமாளின் திருமுக மண்டலத்திற்கு அருகில் 
தாயாரின் அழகிய திருமுகம் இருப்பது ஆபூர்வமான காட்சி. 

பெருமாள் திருமார்பில் ஆதி சேஷனே வைஜயந்தி 
மாலையாய்ப் படர்ந்து, ஐந்துதலை நாகமாய் 
சேவை சாதிக்கும் அதிசயத்தை  காணலாம். 

இத்திருச் சேவையினால், இப்பெருமாளை பக்தியுடன் 
வழிபடுவோருக்கு ராகு- கேது தோஷம் உள்ளிட்ட 
எல்லாவித சர்ப்ப தோஷங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். 

காளிங்கன் என்னும் ராஜசர்ப்பம் வழிபட்ட திருத்தலம் இது

பெருமாளின் கழுத்தில் மாலையாகக் காட்சி அளிக்கும் பாம்பின் 
ஐந்து தலைகளும் கழுத்தணியின் பதக்கம் போல் மார்பில் 
காணக் கிடக்கும் கோலம் அற்புதம்.
இந்தப் பெருமாளும் திருப்பதி பெருமாளும் 
சம காலத்தினர் என்பது வரலாறு. பெருமாள் சன்னதி சுற்றுச் சுவர் முழுவதும் ராமாயண 
நிகழ்ச்சிகளின் காட்சிகள் படங்களாக அலங்கரிக்கின்றன.

ஸ்ரீராமானுஜர் தனது காலத்தில் இங்கு விஜயம் செய்துள்ளார்.

கோயிலுக்கு 1957-ம் ஆண்டு விஜயம் செய்த காஞ்சி 
மகா பெரியவர் இங்கேயே மூன்று நாட்களுக்குத் தங்கியிருந்தார் 

கோவிலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள 
ஸ்ரீலஷ்மி நாராயாண பெருமாள் சேரிடபிள் டிரஸ்ட் 
சிறப்பான பணிகளைச் செய்துவருகிறது..

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பதினோரு நிலைகள் 
கொண்ட ராஜ கோபுரத்துடன் திகழ்ந்திருக்கிறது. 

அஷ்ட லஷ்மிகளுக்கும் தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டுப் 
பூஜைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. 

ஆனால் அந்நியர் படையெடுப்பு காரணமாக 
சிதிலமடைந்த இத்திருக்கோவிலில் காட்சி அளித்த 
அஷ்ட லஷ்மிகளின் சக்தியும் இங்கு 
ஒரே லஷ்மியிடம் இணைந்துள்ளதாக ஐதீகம்

திருக்கோவிலில், தேவர்களும், முனிவர்களும் 
சூட்சும ரூபமாக பெருமாளுக்கு நித்ய ஆராதனை 
செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது

ஆண்டாளின் அருளிச் செயலில் நன்மக்களைப் 
பெற்று வாழ்வரே, என்பதை நிரூபிப்பவர் 
இப்பெருமாள். அதனால் இப்பெருமாளுக்கு 
பிள்ளைக்காரன் சுவாமி என்பது காரணத் திருநாமம்

குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் 
வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கு 
துளசிமாலை சாற்றி பால்பாயச 
நைவேத்தியத்தை உட்கொண்டால், 
பெருமாள்- தாயாரின் திருவருளால் 
தெய்வீகமான குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது ஐதீகம்.

பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில் 
காட்சியளிக்கும் திருக்கோயிலுக்கு  வந்தால் 
தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.
பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில் 
சேவை சாதிப்பதால், மன ஒற்றுமையில்லாத 
தம்பதியர் இப்பெருமாளை வழிபட்டால், 
தம்பதியரிடையே ஒற்றுமை மலர்ந்து வாழ்க்கை ஒளிபெறும்

புது மணத் தம்பதிகள் இந்தப் பெருமாளைப் தரிசித்து 
அந்நியோன்னிய பலனைப் பெறலாம். 
குழந்தை வரமும் கேட்டுப் பெறலாம். 

நெய் தீபம் ஏற்றுதல் இங்கு விசேஷம். 

வெள்ளிக் கிழமைகளில் நிவேதனம் செய்யப்படும் 
பால் பாயசம் உடனடியாகப் பலனளிக்கும்..!

ஆறு கால பூஜை நடை பெறும் இக்கோவிலில் 
காலையில் மிளகுப் பொங்கல் பிரசாதமும், ஹோமம் 
பூஜை முடிந்த பின் மதிய உணவாக புளியோதரைப் 
பிரசாதமும் அளிக்கப்படுகின்றன. 

ஒவ்வொரு மாதமும் உத்திராட திருநட்சத்திர நாளன்று 
காலையில் ஸ்ரீலட்சுமி நாராயண நவகலச ஹோமமும், 
ஸ்ரீலட்சுமி நாராயண ஹ்ருதய பாராயண ஹோமமும் நடைபெறும். 

இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும்

இங்கு நடந்த ஹோமத்து அக்னி வலம் சுழித்து எழுந்தது 
கோவிலின் புனிதத்திற்கு சான்று என்று சொல்லப்படுகிறது.

குழந்தைவரம் வேண்டுவோர், திருமணம் நடைபெற வேண்டுவோர் 
இந்த மாதாந்திர ஹோமத்தில் தவறாமல் கலந்துகொண்டால் எண்ணங்கள் ஈடேறும்.

ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரதன்று சிறப்புக் கலச 
பூஜை, ஹோமம், பெருமாளுக்கு கலசாபிஷேகம் ஆகியவை 
சிறப்புற நடைபெறுகின்றன. 
ராகு, கேது தோஷ பரிகாரமாகவும் இத்தலம் விளங்குகிறது.
தனுசு ராசிக்காரர் களுக்கு பரிகாரத் தலமாகவும்  விளங்குகிறது

காஞ்சிபுரத்திற்கு வடக்கே தொன்மை வாய்ந்த 
மேல்வெண்பாக்கம் எனும் அழகிய சிறு கிராமம் .
 பெற்ற பேறோ பெரியது.

தாயாரின் அழகைக் காண ஒரு பிறவி போதாது. உற்சவர் 
கல்யாண கோவிந்தராஜப் பெருமாளும் கொள்ளை அழகு
பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும் 
பக்தர்களிடம் காட்டும் கருணை ஈடிணையற்றது.

.பிரம்மஹத்தி தோஷத்தையே நீக்குபவர் என்பதால், 
இத்தலப் பெருமாளை வழிபட்டால் எந்தக் கொடிய 
தோஷத்திலிருந்தும் பக்தர்களைக் காத்தருள்வார் என்பது உறுதி.


ல்லா மங்களங்களும் கிடைக்கச் செய்வதும், 
சகல தோஷங்களையும் போக்கக்கூடியதுமான 
இத்திருத்தலம் சென்னை- வேலூர் தேசிய 
நெடுஞ்சாலையில் உள்ள பனப்பாக்கத்திலிருந்து 
ஒன்பது மைல் தொலைவிலுள்ளது. 

பஸ் வசதி உண்டு.அழகிய சிறிய கிராமம் அது. 

காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருப்புட்குழி 
என்று பதாகையில் எழுதி வைக்கப்பட்டுள்ள 
இடத்தைத் தாண்டி வலதுபுறம் திரும்பினால் 
ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோவில் 
மேல்வெண்பாக்கம் என்று மற்றொரு பதாகை வழிகாட்டுகிறது. 

அந்தத் தெருவில் இறங்கினால் இருபுறமும் 
திண்ணைகள் கொண்ட பழைய கால வீடுகள். 

மேல்வெண்பாக்கம் மஹாலஷ்மி சமேத ஸ்ரீலஷ்மி நாராயணப் 
பெருமாள் நான்கு யுகங்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். Friday, May 30, 2014

திருமயிலை திருத்தலம்ஜடை அலங்காரம்..


தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படும் சுந்தரரிடம் 
இவர் தோழர் சிவன் படும் பாடு சொல்லி மாளாது. 
தன் முதல் பாடலிலேயே தன் தோழனை 'பித்தா' என்றுதான் அழைக்கிறார். அதன் பின் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று உரிமையோடு கேட்பதிலிருந்து தூது அனுப்புவது வரை தோழரைப் படுத்தும் பாடு..... அப்பப்பா... பாவம் அந்தத் தோழர்!
இவரப் பார்த்துப் பரிதாபப் பட்ட புலவரொருவர் பாடுகிறார்
இப்படி,வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில்
அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.
பாவம் அந்த அம்பலவானனுக்கு பெற்ற தாய் தந்தையர் இல்லாததனால் அல்லவோ இத்தனை அடிகளையும் வாங்கவேண்டி இருந்தது!

பாசுபதாஸ்திரம் கொடுக்கப்போய் அர்ஜுனனிடம் வில்லால் அடிவாங்கினார், 
செருப்பால் உதைத்தவர் கண்ணப்ப நாயனார்.
சமணரான சாக்கிய நாயனாரோ தினமும் ஒருகல்லால் 
சிவனுக்கு அர்ச்சனை நடத்திய பின்பே உண்ணும் வழக்கம் உடையவர்.
அதன் பின் வந்திக்கு உதவி செய்யப்போய் பாண்டியனிடம் பிரம்படி வாங்கியது தனிக்கதை!

கபாலீஸ்வரர், (சுட்டுக) வெள்ளீசுவரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று ஏழு சிவாலயங்கள் எழிலுற அமைந்துள்ள பெருமைக்குரிய தலமாகத்  கயிலை மலைக்கு நிகரான திருத்தலமாகத் திருமயிலை திகழ்கிறது

நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் இறைவனை மனக்கோயிலில் வழிபட்டு மயிலையில் வாழ்ந்தவர். 
நாகம் தீண்டி மாண்டுபோன பூம்பாவை என்ற பெண்ணை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததும், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் தோன்றியதும் திருமயில்லை திருத்தலமே.

அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் கபாலீச்சுரத்திற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும். 

வேதாரணியம் சிவாலயத்தில் அணையும் நிலையில் இருந்த விளக்கைத் தூண்டி எரியச் செய்த ஓர் எலியைச் சிவபெருமான் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.

தினைத்துணை நன்றி செய்யினும் அதைப் 
பனைத்துணையாகப் பாவித்தது பரமனின் பெருங்கருணை. 

ஆனால், அதிகாரப் போதைக்கு ஆளான மகாபலி, தேவர்களையே அவமதிக்க, அவனுக்குப் பாடம் புகட்ட, திருமால் வாமனன் அவதாரத்தில் மகாபலியின் யாகசாலைக்கு வந்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்க, மகாபலி மமதையோடு தாரைவார்த்துக் கொடுக்க முற்பட, தானத்திலும் சிறந்தது நிதானம் என்று அவனுக்கு உணர்த்த அசுர குலகுரு சுக்கிராச்சாரியார் முயன்றார்.

மகாபலி எடுத்த கெண்டியின் நீர் வரும் வாயை, அவர் வண்டு உருவம் எடுத்து அடைத்துக் கொள்ள, அதனை அறிந்த வாமனராக வந்த திருமால் தன் தருப்பைப் புல்லினால் கெண்டியின் வாயைக் குத்த வண்டு உருவில் வந்த சுக்கிராச்சாரியார் கண் பார்வையை இழந்து கீழே விழுந்தார்.

தானத்தைத் தடுத்த பாவத்திற்குக் கிடைத்தது தண்டனை.

திருமால் தன் நீண்ட திருவடியால் மேலுலகத்தை ஓரடியாலும், 
கீழுலகத்தை ஓரடியாலும் அளந்து எடுத்து, 
மூன்றாவது திருவடியை மகாபலியின் தலையில் வைத்து 
அவனைப் பாதாளத்தில் தள்ளினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண் பார்வையை மீண்டும் பெற, திருமயிலை வந்து இங்கு இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். 

வைகாசி வளர்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமான் திருமால், பிரம்மா சகிதமாகத் தோன்றி, சுக்கிராச்சாரியருக்குக் கண்பார்வை அருளினார்.

திருமயிலை திருக்கோயிலில் வைகாசிப் பெருவிழாவில் எட்டாம் நாள் சுக்கிரன் கண்ணொளி பெறும் விழாச் சிறப்பாக நடைபெறுகிறது.

வெள்ளி என்ற சுக்கிரன் வழிபட்ட இறைவன், சுக்கிரன் விரும்பியவாறு வெள்ளீசுவரர் என்ற பெயர் தாங்கினார்.

அன்று காலை 11 மணியளவில் சுக்கிராச்சாரியார், மகாபலிச் சக்கரவர்த்தி, வாமனர் ஆகிய மூன்று உற்சவ மூர்த்திகள், மயிலை சித்திரக்குளம் அருகே சென்று இருக்கப் பெற்று, அபிஷேகங்கள் நடைபெறும்.

பின்னர் உற்சவமூர்த்திகளாக உலகளந்த பெருமாள், பிரம்மா, பிரதோஷ நாயகர் சிவபெருமான் அங்கு எழுந்தருளிட பிரதோஷ கால தீபாராதனை நடைபெற்றுக் கண்ஒளி வழங்கப்படும்.

அப்போது ஓதுவார்கள் பதிகம் பாடுவார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் இழந்த தம் கண்பார்வையைப் பெற வேண்டிப் பாடிய

உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே

விற்றுக்கொள்ளீர் எனத் தொடங்கும்
விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால், வாழ்ந்து போதீரே.

இரு பாடல்கள் கோயில் சுவரில் பதிக்கப் பெற்றுள்ளன.

சுந்தரர் செய்த சத்தியத்தை மீறியதால் கண்கள் குருடாகிவிட, காஞ்சிபுரத்து இறைவனை வழிபட்டு இடக்கண் பெற்றார். அதன்பின் திருவாரூர் இறைவனை வழிபடச்சென்று அங்கே பாடியது இந்தப் பாடல்.

செய்த தவறை உணர்கின்றவர்களுக்குத் தயவு காட்ட இறைவன் தயாராக உள்ளான் என்பதனால்தான் காக்கும் எம் காவலனே, காண்பரிய பேரொளியே என்று மணிவாசகரும், காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே என்று வள்ளலாரும் மனம் கசிந்து பாடினார்கள்.

திருமயிலை தெற்குமாட வீதியின் நடுவில் உள்ள அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் செங்குந்த மரபினரால் நிர்மாணிக்கப்பட்டது. 

சித்தி புத்தியுடன் உறையும் மகா கணபதி. அருகில் செல்வ விநாயகர். தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதியில் தேவி காமாட்சி எழுந்தருளியுள்ளார். 

கா என்றால் கலைமகளையும், மா என்றால் திருமகளையும்
தனது கண்களாகத் கொண்டவர் என்று பொருள்.

கிழக்கு நோக்கிய சன்னதியில் வெள்ளீசுவரர் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். முத்துக்குமாரசாமி என்ற பெயருடன் வள்ளி, தெய்வயானை சமேதராக முருகப் பெருமான் முறுவல் புரிகிறார். 

வெளிச்சுற்றின் வடகிழக்கு மூலையில் சனிபகவான் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளன.

சனி பகவானுக்கு நேர் எதிரே சுக்கிரன் குருந்த மரத்தடியில் சிவபெருமானை வழிபட்ட நிலையில் நிற்கிறார். 

 சரபேஸ்வரர் சன்னதி. திருமால் தான் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பின்னும், உக்கிரம் தணியாமல் தவித்தபோது, சர்வேஸ்வரன் சரபம் என்ற பட்சி உருவம் தாங்கி வந்து, அவரை ஆலிங்கனம் செய்து சாந்தப்படுத்துகிறார். 

ஒவ்வொரு ஞாயிறன்று மாலை 4 1/2 & 6 மணிக்கு ராகு காலத்தில் சரபேஸ்வரர்க்குச் செய்யப்படும் பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது என்று சுந்தரமாகச் சொல்லப்படுகிறது.

கோயில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள கல்தூண்களில் வடிவுடன் காணப்படும் சிற்பங்களான சிம்மவாகனத்தில் பஞ்சமுக விநாயகர், பிரம்மா, விஷ்ணு இவர்களைத் தாங்கியவாறு பரமேஸ்வரர் ஒற்றைக்காலில் நிற்கும் ஏகபாதமூர்த்தி மனதை ஏகமாகக் கவர்கின்றன. 

கல்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள பட்டினத்தார், 
அவரது சீடர் பத்ரகிரியார், வள்ளலார் ஆகியோர் 
உருவச்சிலைகள் அருளைப் பொழிகின்றன.

கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருவிழா 
பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருவெம்பாவை பத்து நாட்கள், ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, மாசிமகக் கடலாடுதல், நவராத்திரி, ஒட்டக்கூத்தர் விழா, சேக்கிழார் விழா, 
1008 சங்காபிஷேகம், கந்தசஷ்டி, திருஅண்ணாமலையார் தீபம், மகாசிவராத்திரி முதலிய  உற்சவங்கள்  பக்தி வெள்ளத்தில் திளைக்க வைக்கின்றன.

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய இரு பதிகங்கள் பார்க்க சுட்டவும்..
Singaravelar ,Float Festival Celebrations , Kapaleeswarar Temple ,Mylapore.