Thursday, May 15, 2014

மெலட்டூர் பாகவத மேளா ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே! - நம்மாழ்வார் பாசுரம் ..!

தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில்    நரசிம்ம ஜயந்தியையொட்டி, பாகவத மேளா அபிஷேகம், லஷ்மி நரசிம்ம ஹோமம், லட்சார்ச்சனையுடன் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது..!

ஆண்டுதோறும் 5 நாடகங்களை தேர்வு செய்து தொடர்ந்து 5 நாட்களாக இந்த பாகவதமேளை நடைபெறுகிறது

மிகப்பிரசித்தி பெற்ற பிரகலாத சரித்திர நாட்டிய நாடகம்   வள்ளி திருமணம், சதி சாவித்ரி, ருக்மணி கல்யாணம் என பல்வேறு நாடகங்கள் நடைபெறும்.. 

பாகவத மேளா நடக்கும் சமயம் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது, நாடகம் பார்க்க வருபவர்களுக்கும் நாடகத்தை நடத்துபவர்களின் வீட்டிலேயே உணவளிக்கப்பட்டு, தங்கும் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவது சிறப்பு..!

மெலட்டூர் நரசிம்ம ஸ்வாமிகள் சுவாமிகள் ஆலயத்திலிருந்து நரசிம்ம அவதார முகமூடி (மாஸ்க்) ஒரு சப்பரத்தில் எடுத்துவரப்படுகிறது. அதற்கு சில பூஜைகள் செய்யப்படுகிறது. 
தஞ்சையிலுள்ள மெலட்டூரில் நிகழ்த்தப்படும் பாகவத மேளாவில் நரசிம்ம வேடம் தரிப்பவர் அணிந்து கொள்ளும் நரசிம்ம முகம் ஆண்டு முழுவதும் வழிபடப்படுகிறது.

முறையான கர்நாடக சங்கீதத்தில் அமைந்த தெலுங்கு கீர்த்தனைகளைப் பாகவதர்கள் பாட, முறையாக பரதம் கற்றவர்கள் பாத்திரங்களாய் மாறி நடிக்கும் அந்த நாடகத்தில் எள்ளளவுகூட தமிழுக்கும், பெண்களுக்கும் இடமில்லை. ஆண்கள்தான் பெண் வேடமிடுகின்றனர். 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்கள் 
என பலரும் நடிப்பது வழக்கம்.

நடத்துபவர்கள், நடிப்பவர்கள், பாடுபவர்கள் அனைவருமே பாகவதர்கள்,  நடிக்கப்படும் கதைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து எடுக்கப்பட்டவை, எனவே இதற்கு பாகவத மேளா என்று பெயர் ஏற்பட்டது."
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும் பாகவத மேளா நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்திருக்கிறார்..

முதலில் விநாயகர் வழிபாடு முடிந்து பாத்திர பிரவேசம் ஆரம்பத்தில் பாகவதர்கள் பாட ஆரம்பிக்கின்றனர்
ஹிரண்யகசிபுவின் பிரதாபங்கள் தெலுங்கு கீர்த்தனைகளாக வெளிப்பட அவைக்கு வரும் ஹிரண்யகசிபுவின் வீரம், பராக்கிரமங்கள், திமிர், ஆணவம் அத்தனையும் நடனமொழியில், உருளும் பார்வையில்  கண்முன் விரிகிறது. 

அடுத்து லீலாவதியின் அறிமுகம்... அத்தனை அழகான பெண், அவளது குணம், திறமைகளை அடுத்து பிரகலாதனின் பண்பும் பக்தியும், தொடர்ந்து அசுரகுரு சுக்ராச்சாரியார் எனப்பாத்திரப்பிரவேசங்கள் முடிந்து கதைக்குள் நுழையும் போது நேரம் நள்ளிரவைத்தாண்டிவிடுகிறது.

கணவனுக்கும் பிள்ளைக்கும் மத்தியில் சிக்குண்டு லீலாவதி நடத்தும் பாசப்போராட்டம், உலகிடம் ஜெயித்து மகனிடம் தோற்றுப்போகும் ஹிரண்யகசிபுவின் அவஸ்தை அதைதொடர்ந்து அவனுக்கு எழும் ஆத்திரம், பிரகலாதனின் பரிபூரண பக்தி என் பிரகலாத சரித்திரம்  கண்முன்னே நிகழ்வதான உணர்வையும் -பிரகலாதனிடம் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு மவுனசாட்சியாக பார்வையாளர்களை  கலைஞர்கள் மாற்றிக்கொண்டிருப்பது விந்தைதான்...!. 
ஹிரண்யனைக் கட்டுபடுத்தவும் முடியவில்லை, லீலாவதியின் கண்ணீரையும் நிறுத்தமுடியவில்லை கையறுநிலையில் தவிக்கவைக்கிறார்கள்.. 

 நாடகத்தின் உச்சகட்டமாக தூணிலிருந்து நரசிம்மஸ்வாமிகள் எழும் காட்சி நிகழும்போது கிழக்கில் சூரியன் எட்டிப்பார்க்க  பொழுது விடியு ஆரம்பித்துவிடுகிறது..!. 

சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் நரசிம்மஸ்வாமிகளின் முகமூடி அணிந்துகொண்டு அவதாரமெடுக்கிறார். "கலைஞன் முதிர்ச்சியடைய அடைய அவனது கலை இளமையாகிறது

பொங்கி.. ஆர்ப்பரித்து, திமிறி ஹிரண்யனின் நெஞ்சைக்கிழிக்க பரபரத்த அவரை இருக்கையோடு சேர்த்து இறுக்கி கட்டிவைக்கிறார்கள்...

ஐந்து இளைஞர்கள் நரசிம்மரை இறுக்கிப்பிடித்தும் அவரை ஒன்றும் செய்யமுடியாமல் அவர்  ஆக்ரோஷமாய் உறுமிக்கொண்டிருப்பது நடுக்கம் தரும்..! 

ஹிரண்யகசிபு வேடமணிந்தவரை மேடையை 
விட்டு அகலச்சொல்லிவிடுகிறார்கள். 

சாந்தி.. சாந்தி எனப் பார்வையாளர்களும், நடிகர்களும் 
அவரிடம் கெஞ்ச ஆரம்பிக்கிறார்கள்... 

அவரது திமிறலை  அடக்க இயலாமல்.  பிரகலாதனை 
அவரது மடியில் அமரச்செய்கின்றனர்...

பிரகலாதன் "ஆசிர்வாதம் பண்ணுங்கோ... சாந்தமூர்த்தி நீங்க.. 
அமைதி.. அனுக்கிரகம் பண்ணுங்க" என்று தமிழில் கெஞ்ச ஆரம்பித்தும் நரசிம்மரது ஆவேசம் அடங்குவதாகத் தெரியவில்லை.
நரசிம்மஸ்வாமிகளுக்கு தீப ஆராதனைகள் காட்டப்பட்டபின் 
கொஞ்சம் ஆசுவாசமாகிறார். 
பார்வையாளர்கள் அவரிடம் குங்குமபிரசாதம் வாங்கிக்கொள்வார்கள்... 
நரசிம்மஸ்வாமிகளும், அவரது முகமூடியும் சிறிய சப்பரத்தில் 
மேளம் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது..!

ஆண்டாள் திருக்கல்யாணம்

வாரணம் ஆயிரம்..


15 comments:

 1. தங்களின் இந்த பதிவு மூலம், ஒரு முறையாவது அந்த பாகவத மேளாவை கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
  பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.

  ReplyDelete
 2. சில நாட்களாக கணினி கோளாறு காரணமாக தங்களின் தளத்திற்கு வர இயலவில்லை
  இனி தொடர்வேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. நெஞ்சம் நிறைந்த பாகவத மேளாவின் அருமைகளை விவரித்தது - தங்களின் பதிவு.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 4. வித்தியாசமான பாகவத மேளா. ஊரில் பார்த்த நாடகங்கள் கண்முன் ஞாபகத்தில். அதை விவரித்து பதிவாக்கியமை அருமை. நன்றி.

  ReplyDelete
 5. தங்களின் வெற்றிகரமான 1275வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 6. நேற்றைய என் கருத்துக்களில் சில வெளியாகவே இல்லை. அதில் எனக்கு மிகுந்த வருத்தமே. ;(

  இருப்பினும் மனஸு கேட்காமல் இங்கு இப்போது வந்துள்ளேன்.

  >>>>>

  ReplyDelete
 7. மெலட்டூர் பாகவத மேளா பற்றி நிறைய உபந்யாசங்களில் கேள்விப்பட்டுள்ளேன். நேரில் பார்த்தது இல்லை.

  இன்று தான், தங்களின் முதலில் காட்டியுள்ள காணொளி மூலம், மிகவும் ரஸித்துப்பார்த்து மகிழ்ந்தேன்.

  நேரில் பார்க்கவில்லையே என்ற மனக்குறை இப்போது நீங்கியது.

  மற்ற எல்லாப் படங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை.

  >>>>>

  ReplyDelete
 8. கலைஞன் முதிர்ச்சியடைய அடைய அவனது கலை இளமையாகிறது என்பது மிகவும் உண்மை தான். Bye for now.

  oooo

  ReplyDelete
 9. பாகவத மேளா குறித்த தகவல்கள் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 10. மெலட்டூர் பாகவத மேளா பற்றிய
  சிறப்பான தகவல்களுக்கும்,
  பதிவிற்கும் பாராட்டுக்கள் !

  ReplyDelete
 11. பாகவதமேளா கர்நாடாககாவின் ஒரு பாரம்பரியக் களை என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ஒரு வேளை இவை வெவ்வேறோ.

  ReplyDelete
 12. நான் வாழும் தஞ்சைக்கு அருகிலுள்ள பகுதி மெலட்டூர்
  பாகவத மேளாஅறிந்து மகிழ்ந்தேன் நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 13. மெலட்டூர் பாகவதமேளா பற்றிய தகவல்கள் குறிப்பாக காணொளி ரொம்பவும் பிரமாதமாக இருக்கிறது. அந்த காணொளியுடன் இணைந்த மற்ற பஜனை காணொளிகளும் நன்றாக இருக்கின்றன.

  ReplyDelete
 14. மெலட்டூர் பாகவத மேளா பற்றிய தகவல்கள் அனைத்தும் நன்று. ஒரு முறையாவது செல்லத் தோன்றுகிறது.

  எனது நெய்வேலி தோழி ஒருவரின் ஊர் இது....

  ReplyDelete
 15. மெலட்டூர் பாகவத மேளா பார்த்த திருப்த்தி ஏற்பட்டு விட்டது. படங்கள், காணொளி எல்லாம் மிக அருமை.

  ReplyDelete