Showing posts with label அனுமன். Show all posts
Showing posts with label அனுமன். Show all posts

Saturday, July 4, 2015

ஞான வழிகாட்டி அனுமன்




விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
உறைவார் முடிவே உணரா முதலோன்
கரைவார் நிறைவே கருதாதவன் போல்
உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

சரமே தொளையா சகமே மறவா
சரீரா அனுமா ஜமதக் கினிநீ
உரமே உறவே உறவோய் பெரியோய் உயர்வே
அருள்வாய் திருமாருதியே ! -


நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அனுமன் அளவுகள் கடந்து பெற்ற வரம் காரணமாக, இன்றும் அனுமன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.

பரந்த இந்த உலகில் அனுமனுக்கு மிகப் பிடித்தமான இடம் இமயமலைச் சாரல்!
அங்கே அனுமனது ராமநாம வேள்வி இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. அதேசமயம் அனுமனது ஸ்தூலம் கடந்த ஒளியுடல் ஒன்றுக்குப் பலவாகி, பக்தர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு கை கொடுத்து உதவியபடி இருக்கிறது.

பாரத தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அனுமனுக்கான ஆலயங்கள் எழுப்பப்பட் டுள்ளன.

இதில் மிக அதிகமான ஆலயங்கள் இருப்பது நம் பாரத தேசத்தில் கர்நாடகம், பின் மகாராஷ்டிரம், அதன்பின் ஆந்திரம், பிறகு தான் தமிழகம்!

அனுமனது ரூபமே அனுமனது குணத்தைச் சொல்லிவிடும்.

தலைக்குமேல் வால் வளைந்து நிற்க, அதில் மணி இருந்தால், அனுமன் கேட்ட வரத்தை நம்மை பரிகாரம் செய்யவைத்து வழங்குபவன்.

கையில் சஞ்ஜீவி பர்வதத்துடன் அனுமன் இருந்தால், கடமை உணர்வோடு இருப்பவன். அனுமனது இந்த தோற்ற தரிசனம் நோயை நீக்கும்.
   
 
கைகூப்பி வணங்கியபடி அனுமன் இருந்தால், அனுமன் காதில் நாம் சொல்வது எல்லாமும் ஈடேறும். அனுமன் அதை மேலே சொல்லி நிறைவேற்றித் தருபவன். நிஷ்டையில் இருந்தால் மனஅமைதி தருபவன்.

தாவக் காத்திருந்தால் நண்பனாக- குருவாக- துணைவரத் தயாராக இருப்பதாகப் பொருள்.

இப்படி அனுமன் ரூபத்துக்குப் பின்னாலேயே பல பொருளுண்டு.

இப்படி எல்லாவித ரூபங்களோடு விஸ்வரூபியாகவும் அனுமன் பல இடங்களில காட்சி தருகிறான்.

அந்த தரிசனம் நம் மனதின் பயத்தைப் போக்கி, உலகில் உண்மையில் எது பெரிதோ அதை நமக்கு உணர்த்தும். விஸ்வரூப தரிசனம் செய்யச் செய்ய மலிவானவை மனதைவிட்டுத் தானாக வெளியேறிவிடும்.

அனுமனுக்கு பழங்கள் என்றால் மிகப் பிரியம். அதேபோல் வடை, வெண்ணெயும் மிகப் பிடிக்கும். உண்ண எவ்வளவோ பதார்த்தங்கள் இருக்க, இம்மூன்றை இவனுக்கு பெரிதாக நிவேதனம் செய்வதன் பின்னணியில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

தென்னிந்தியாவில்தான் வடைமாலை பிரசித்தி... வடஇந்தியாவில் இனிப்பாலான ஜாங்கிரியைதான் பெரிதும் பிரசாதமாகப் படைப்பார்கள். எல்லாவற்றிலுமே நுட்பமான பல உள்விஷயங்கள் ஒளிந்துள்ளன.

 பழம்.உணவுப் பொருட்களிலேயே உன்னதமானது

பழம் என்பதற்கு ஒரே காரணம்தான். பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய்தான் கனியாகிறது.

நால்வகை நிலைப்பாடு... இந்தக் கனியாதல் என்பதன் பின்னே பழுத்தல் என்பது உள்ளது. அதாவது காலத்தால் பழுத்தல். பழுத்தபின் பழம் மரத்தில் தங்காது. உதிர்ந்து விழுந்துவிடும். அப்படி உதிரும்போது பால்வடியாது.

அதாவது மரத்தைப் பிரியும் துக்கத்தை மரமோ அல்லது பழமோ காட்டாது.

அது ஒரு சந்தோஷப் பிரிவு!

இந்தக் கனிந்த நிலையை சமைந்த நிலை எனலாம். அதாவது அடுப்பு, பாத்திரம், நெருப்பு என்று முயன்று நாம் சமைக்கத் தேவையின்றி இயற்கையே சமைக்கும்போது அதைப் பழுத்தல் என்கிறோம். 

அப்படி பழுக்கின்ற பழங்களும் உடம்புக்கு மிக உகந்தவையாக- எல்லா சக்தியும் உடையதாக- சத்வ குணத்தை அளிப்பதாக இருப்பதால், முனிவர்களின் முக்கிய உணவாக பழமே விளங்கியது. 

எனவேதான் இறை பிரசாதமாகவும் இது முதலிடம் பெறுகிறது. 
அனுமனோ விலங்கினத்துக்கும் பிரதிநிதி. 

அதிலும் பழங்களையே பிரதான உணவாகக் கொண்ட குரங்கு இனத்தவன். எனவே பழம் பெரும் பிரசாதம் இவனுக்கு.

வடையின் பிரதான தானியம் உளுந்து.

உளுந்து கோள்களில் ராகுவை உடையது. ராகு- கேது எனும் இரு உபகிரகங்களும் அசுர வழி வந்து, அமுதம் திருடப்போய் தலையை இழந்து பாம்பின் தலையைப் பெற்றதெல்லாம் புராண வரலாறாகும்.
[DSC02469a.JPG]
இந்த இரு கோள்களும் மானிட வாழ்வை தங்கள் தசைகளில்- புக்திகளில்- அந்தரங்களில் ஆட்டி வைப்பவர்கள். இவர்களை நாம் இணக்கமாக அடைய, இவர்களின் அம்சம் சார்ந்ததை அனுமனுக்குப் படையலிடும்போது, அனுமன் தன் மேலான சக்தியால் இவர்களின் பாதிப்புகளைத் தான் ஏற்று நம்மை ரட்சிக்கிறான்.

இந்த உளுந்தைப் பயன்படுத்தியே ஜாங்கிரி செய்யப்படுகிறது. எனவே உளுந்துதான் இதில் பிரதானம்.




வெண்ணெய் கண்ணனுக்கும் பிரியமான உணவு.

விஞ்ஞானம் இதை கொழுப்பாகப் பார்க்கிறது.

மெய்ஞ்ஞானமோ இதை பெரும் தத்துவப் புதையலாகப் பார்க்கிறது.

பசுவின் பால் காய்ச்சப்பட்டு, பின் தயிராக்கப் பட்டு, அந்த தயிரும் கடையப்பட்டு அதனுள் இருந்தே மோரை விலக்கி வெண்ணெய் பிரிந்து வருகிறது. மோரோடும் தயிரோடும் இருந்தவரை ஒட்டி இருந்தது- பிரியவும் நீர்மேல் மிதக்கிறது. உருக்கினால் மணம் மிக்க நெய்யாகி வேள்விக்குப் பயன்பட்டு புனிதத் தீயாகி வானேகி மறைகிறது.

மனித வாழ்வும் இன்ப துன்பங்களால் கடையப்படுகிறது. அதன் காரணமாக  விளைந்த ஞானம் உலக பந்தத்தை நிலையற்றதாகக் கருதி, உலகோடு இருந்தாலும் அதோடு ஒட்டி விடாதபடி தனித்து நிற்க வழிசெய்கிறது. பின் பக்தியின் உருக்கத்தில் நெய் போலாகி, பின் தீயாகி விண்ணேகுகிறோம்.

வெண்ணெய்க்குப் பின்னால் இப்படி ஒரு நுட்பச் செறிவு இருப்பதால்தான் பிரசாதத் தில் வெண்ணெய்க்கு பிரதான இடம்.

பற்றற்ற வெண்ணெய் அனுமன் நெஞ்சை அடையும்போது, அவனது இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ராமநாம அதிர்வுகளுடன் கலந்து பெரும் பிரசாதமாகிவிடுகிறது. எனவேதான் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பும் இடப்படுகிறது.

 வெற்றிலை மாலையும் அனுமனுக்கு மிக விசேஷமானது.

  செந்தூரமும் மிகப் பிரியம்.
பல இடங்களில் செந்தூர ஆஞ்சநேயனைக் காணலாம்.

செந்தூரம் அனுமனுக்கு  பிடிக்கும் என்பதன் பின்னே ரசமான . சம்பவத்துக்கும் சீதாபிராட்டிக்கும்கூட தொடர்புண்டு. அந்த சம்பவத் தொடர்புக்குரிய விஷயங்களை மட்டுமல்ல; இந்த யுகத்தில் அனுமன் பல ஞானியர்க்கு தரிசனமளித்து, அவர்களுக்கு ராம தரிசனம் கிடைக்கவும் வழிகாட்டியுள்ளான்.

இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட வீரசிவாஜி, அவரது குருவான ராமதாசரால் அனுமனின் திவ்ய தரிசனத்தைக் கண்டவராவர்.

அதேபோல கபீர்தாசர் தொடங்கி, சமர்த்த ராமதாசர், பத்ராசல ராமதாசர் என்று அனுமனை  நேரில் தரிசித்தவர்கள் பலப்பலர்.

 பெரும் மகானான ராகவேந்திரரும் அனுமனின் பேரருளால் இன்புற்றுத் திளைத்தவர்.

அனுமன் உபாசனா மூர்த்தி. அனுமன் எப்படி "ராம ராம' என்று ஜெபித்தபடி பெரும் உபாசகனாக இருக்கிறானோ அதேபோல அனுமனை
 உபாசிப் பவர் களுக்கு அனுமன் இஷ்ட தெய்வமாகி, அவர்களுக்கும் ராம தரிசனம் கிடைக்கச் செய்து பிறவித்தளையை விடுவிக்கிறான்.



Thursday, September 18, 2014

ஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்



யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகா அஞ்சலிம்
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நாமதா ராக்ஷஸா அந்தகம்

எங்கெங்கு இராமபிரானது புகழ் பாடப்படுகிறதோ அங்கெல்லாம் சிரத்தின் மேற்குவித்த கையனாய் ஆனந்தக் கண்ணீர் நிரம்பிய கண்ணனாய் அனுமன் நிற்பார் ...

அசாத்திய சாதக சுவாமின் அசாத்தியம் தவ கிம் வத
ராம துதோ கிருபா சிந்தோ மத் கார்யம் சாதக பிரப்ஹோ !!!

  புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
  அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்


சனிக்கிழமை இரவு கோவை அவினாசி சாலயில் அமைந்திருக்கும் அஷ்டாம்ச வரத ஆஞ்நேயர் ஆலயத்திற்குச்சென்றிருந்தோம்..

கர்பக்கிரஹ கதவுகள் மூடியிருக்க  வழக்கமாக முன்புறம் எரியும் நெய்விளக்கின் ஒளியில் பஜனை நடைபெற்றுக்கொண்டிருந்தது..
அமரப்போன எங்களை முன்புறம் வாருங்கள் என அழைத்துச்சென்று கர்பக்கிரகத்தின் வாசற்படி அருகில் அமரவைத்தது அந்த அனுமனைத்தவிர யாராக இருக்கும் ..!
அன்று மகனின் பிறந்த நாள்..வெளிநாட்டில் இருக்கும் அவருக்கு போனில்வாழ்த்துதெரிவிட்டு வந்திருந்தோம்..
பஜனைப்பாடல்களை உள்வாங்கி திருப்பிச்சொல்லி பஜனையில் கலந்துகொண்டோம்..நெய் விளக்கின் அற்புத தீபாரதனை மனம் நிறைத்தது..!
புரட்டாசி சனிக்கிழமைகளில் விஷேச அலங்காரகளை விளக்கினார் அர்ச்சகர் ஸ்வாமி..
புரட்டாசி சனிக்கிழமை கூட்டம் அதிகம் இருக்கும் காரணத்தால் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவேண்டாம் ..
ஒரு முறை அலங்காரத்தை தவறவிட்டால் மறுபடியும் அந்த அலங்காரத்தைப்போல் வேறு நாளில் காணமுடியாத நூதனமான வித்யாசம் இருக்கும் .. அன்று அந்த அலங்காரத்தை தவறவிட்டால் இனி அடுத்த ஜன்மாவில்தான் காணக்கிடைக்குமாம்..
திருப்பதியைப்போல் அண்டா அண்டாவாக சர்கரைப்பொங்கல் நைவேதம் நடைபெறுமாம்.. அதற்கு தரமான பச்சரி , புத்துருக்கு பசுநெய் , முந்திரி ,திராட்ஷை நெய் ஆகியவை விரும்புபர்கள் காணிக்கைகளாக அளிக்கலாம் என அறிவித்தார்கள்.

வஸ்திரம் சாற்றுவதற்கும் முன்பதிவு அவசியம் .. பட்டுப்புடவை மிக அலங்காரமாக சாற்றுகிறார்கள்..! 
புரட்டாசி சனிக்கிழமை பத்தாயிரக்காக்கான வடைகளால் வடை அலங்காரம் ,

கோடிக்கணக்கான ராமநாமம் ஜபித்து பெற்ற சுயரூப பச்சை சார்த்தி வானர அனுமன் அலங்காரம் ,


செந்தூர , வெண்ணைக்காப்பு அலங்காரங்கள் ,

ஒளிரும் முத்துக்களால் ஆன முத்தங்கி அலங்காரம் ,

தங்கக்கவசம் அலங்காரம் ,

 தக தக என ஒளிரும் கதிரவனுக்கு நடுவில் 
ஸ்வர்ணம் போல ஜொலிக்கும் அலங்காரம் ,



















ஐப்பசிமாதம் பொங்கலன்று கரும்பு அலங்காரம் , போன்றவற்றைப் பற்றியும் சிறப்பாக கூறினார்கள்..
Photo: பீளமேடு - ஆஞ்சநேயர்

 
சாளக்கிராமத்தால் ஆன மூலவர் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்  சிவலிங்கத்திற்குள் காட்சியளிப்பது சிறப்பம்சம். ஆஞ்சநேயரின் வால், குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்குவதோடு செல்வவளமும் பெருகும். உற்சவர் சிலை ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் வழங்கப்பட்டது. சுவாமியின் வலக்கையில் மகாலட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம்
ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்

 :1. அனுமனது  வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

2.மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த. ஐந்து வகை ஆயுதங்களில்  கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு :

3.  மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி  மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு :

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு :

5.ஆஞ்சநேயரது மிகவும் சிறப்புபெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ள  .  அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது  இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. ""ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு :

6. ஆலவாயன்  சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு : ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.
எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது .. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம் ..!