Showing posts with label சென்னை ஆலயங்கள்.. Show all posts
Showing posts with label சென்னை ஆலயங்கள்.. Show all posts

Friday, May 30, 2014

திருமயிலை திருத்தலம்



ஜடை அலங்காரம்..






















தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படும் சுந்தரரிடம் 
இவர் தோழர் சிவன் படும் பாடு சொல்லி மாளாது. 
தன் முதல் பாடலிலேயே தன் தோழனை 'பித்தா' என்றுதான் அழைக்கிறார். அதன் பின் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று உரிமையோடு கேட்பதிலிருந்து தூது அனுப்புவது வரை தோழரைப் படுத்தும் பாடு..... அப்பப்பா... பாவம் அந்தத் தோழர்!
இவரப் பார்த்துப் பரிதாபப் பட்ட புலவரொருவர் பாடுகிறார்
இப்படி,வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில்
அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.
பாவம் அந்த அம்பலவானனுக்கு பெற்ற தாய் தந்தையர் இல்லாததனால் அல்லவோ இத்தனை அடிகளையும் வாங்கவேண்டி இருந்தது!

பாசுபதாஸ்திரம் கொடுக்கப்போய் அர்ஜுனனிடம் வில்லால் அடிவாங்கினார், 
செருப்பால் உதைத்தவர் கண்ணப்ப நாயனார்.
சமணரான சாக்கிய நாயனாரோ தினமும் ஒருகல்லால் 
சிவனுக்கு அர்ச்சனை நடத்திய பின்பே உண்ணும் வழக்கம் உடையவர்.
அதன் பின் வந்திக்கு உதவி செய்யப்போய் பாண்டியனிடம் பிரம்படி வாங்கியது தனிக்கதை!

கபாலீஸ்வரர், (சுட்டுக) வெள்ளீசுவரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று ஏழு சிவாலயங்கள் எழிலுற அமைந்துள்ள பெருமைக்குரிய தலமாகத்  கயிலை மலைக்கு நிகரான திருத்தலமாகத் திருமயிலை திகழ்கிறது

நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் இறைவனை மனக்கோயிலில் வழிபட்டு மயிலையில் வாழ்ந்தவர். 
நாகம் தீண்டி மாண்டுபோன பூம்பாவை என்ற பெண்ணை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததும், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் தோன்றியதும் திருமயில்லை திருத்தலமே.

அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் கபாலீச்சுரத்திற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும். 

வேதாரணியம் சிவாலயத்தில் அணையும் நிலையில் இருந்த விளக்கைத் தூண்டி எரியச் செய்த ஓர் எலியைச் சிவபெருமான் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.

தினைத்துணை நன்றி செய்யினும் அதைப் 
பனைத்துணையாகப் பாவித்தது பரமனின் பெருங்கருணை. 

ஆனால், அதிகாரப் போதைக்கு ஆளான மகாபலி, தேவர்களையே அவமதிக்க, அவனுக்குப் பாடம் புகட்ட, திருமால் வாமனன் அவதாரத்தில் மகாபலியின் யாகசாலைக்கு வந்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்க, மகாபலி மமதையோடு தாரைவார்த்துக் கொடுக்க முற்பட, தானத்திலும் சிறந்தது நிதானம் என்று அவனுக்கு உணர்த்த அசுர குலகுரு சுக்கிராச்சாரியார் முயன்றார்.

மகாபலி எடுத்த கெண்டியின் நீர் வரும் வாயை, அவர் வண்டு உருவம் எடுத்து அடைத்துக் கொள்ள, அதனை அறிந்த வாமனராக வந்த திருமால் தன் தருப்பைப் புல்லினால் கெண்டியின் வாயைக் குத்த வண்டு உருவில் வந்த சுக்கிராச்சாரியார் கண் பார்வையை இழந்து கீழே விழுந்தார்.

தானத்தைத் தடுத்த பாவத்திற்குக் கிடைத்தது தண்டனை.

திருமால் தன் நீண்ட திருவடியால் மேலுலகத்தை ஓரடியாலும், 
கீழுலகத்தை ஓரடியாலும் அளந்து எடுத்து, 
மூன்றாவது திருவடியை மகாபலியின் தலையில் வைத்து 
அவனைப் பாதாளத்தில் தள்ளினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண் பார்வையை மீண்டும் பெற, திருமயிலை வந்து இங்கு இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். 

வைகாசி வளர்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமான் திருமால், பிரம்மா சகிதமாகத் தோன்றி, சுக்கிராச்சாரியருக்குக் கண்பார்வை அருளினார்.

திருமயிலை திருக்கோயிலில் வைகாசிப் பெருவிழாவில் எட்டாம் நாள் சுக்கிரன் கண்ணொளி பெறும் விழாச் சிறப்பாக நடைபெறுகிறது.

வெள்ளி என்ற சுக்கிரன் வழிபட்ட இறைவன், சுக்கிரன் விரும்பியவாறு வெள்ளீசுவரர் என்ற பெயர் தாங்கினார்.

அன்று காலை 11 மணியளவில் சுக்கிராச்சாரியார், மகாபலிச் சக்கரவர்த்தி, வாமனர் ஆகிய மூன்று உற்சவ மூர்த்திகள், மயிலை சித்திரக்குளம் அருகே சென்று இருக்கப் பெற்று, அபிஷேகங்கள் நடைபெறும்.

பின்னர் உற்சவமூர்த்திகளாக உலகளந்த பெருமாள், பிரம்மா, பிரதோஷ நாயகர் சிவபெருமான் அங்கு எழுந்தருளிட பிரதோஷ கால தீபாராதனை நடைபெற்றுக் கண்ஒளி வழங்கப்படும்.

அப்போது ஓதுவார்கள் பதிகம் பாடுவார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் இழந்த தம் கண்பார்வையைப் பெற வேண்டிப் பாடிய

உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே

விற்றுக்கொள்ளீர் எனத் தொடங்கும்
விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால், வாழ்ந்து போதீரே.

இரு பாடல்கள் கோயில் சுவரில் பதிக்கப் பெற்றுள்ளன.

சுந்தரர் செய்த சத்தியத்தை மீறியதால் கண்கள் குருடாகிவிட, காஞ்சிபுரத்து இறைவனை வழிபட்டு இடக்கண் பெற்றார். அதன்பின் திருவாரூர் இறைவனை வழிபடச்சென்று அங்கே பாடியது இந்தப் பாடல்.

செய்த தவறை உணர்கின்றவர்களுக்குத் தயவு காட்ட இறைவன் தயாராக உள்ளான் என்பதனால்தான் காக்கும் எம் காவலனே, காண்பரிய பேரொளியே என்று மணிவாசகரும், காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே என்று வள்ளலாரும் மனம் கசிந்து பாடினார்கள்.

திருமயிலை தெற்குமாட வீதியின் நடுவில் உள்ள அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் செங்குந்த மரபினரால் நிர்மாணிக்கப்பட்டது. 

சித்தி புத்தியுடன் உறையும் மகா கணபதி. அருகில் செல்வ விநாயகர். தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதியில் தேவி காமாட்சி எழுந்தருளியுள்ளார். 

கா என்றால் கலைமகளையும், மா என்றால் திருமகளையும்
தனது கண்களாகத் கொண்டவர் என்று பொருள்.

கிழக்கு நோக்கிய சன்னதியில் வெள்ளீசுவரர் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். முத்துக்குமாரசாமி என்ற பெயருடன் வள்ளி, தெய்வயானை சமேதராக முருகப் பெருமான் முறுவல் புரிகிறார். 

வெளிச்சுற்றின் வடகிழக்கு மூலையில் சனிபகவான் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளன.

சனி பகவானுக்கு நேர் எதிரே சுக்கிரன் குருந்த மரத்தடியில் சிவபெருமானை வழிபட்ட நிலையில் நிற்கிறார். 

 சரபேஸ்வரர் சன்னதி. திருமால் தான் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பின்னும், உக்கிரம் தணியாமல் தவித்தபோது, சர்வேஸ்வரன் சரபம் என்ற பட்சி உருவம் தாங்கி வந்து, அவரை ஆலிங்கனம் செய்து சாந்தப்படுத்துகிறார். 

ஒவ்வொரு ஞாயிறன்று மாலை 4 1/2 & 6 மணிக்கு ராகு காலத்தில் சரபேஸ்வரர்க்குச் செய்யப்படும் பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது என்று சுந்தரமாகச் சொல்லப்படுகிறது.

கோயில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள கல்தூண்களில் வடிவுடன் காணப்படும் சிற்பங்களான சிம்மவாகனத்தில் பஞ்சமுக விநாயகர், பிரம்மா, விஷ்ணு இவர்களைத் தாங்கியவாறு பரமேஸ்வரர் ஒற்றைக்காலில் நிற்கும் ஏகபாதமூர்த்தி மனதை ஏகமாகக் கவர்கின்றன. 

கல்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள பட்டினத்தார், 
அவரது சீடர் பத்ரகிரியார், வள்ளலார் ஆகியோர் 
உருவச்சிலைகள் அருளைப் பொழிகின்றன.

கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருவிழா 
பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 



திருவெம்பாவை பத்து நாட்கள், ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, மாசிமகக் கடலாடுதல், நவராத்திரி, ஒட்டக்கூத்தர் விழா, சேக்கிழார் விழா, 
1008 சங்காபிஷேகம், கந்தசஷ்டி, திருஅண்ணாமலையார் தீபம், மகாசிவராத்திரி முதலிய  உற்சவங்கள்  பக்தி வெள்ளத்தில் திளைக்க வைக்கின்றன.

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய இரு பதிகங்கள் பார்க்க சுட்டவும்..




Singaravelar ,Float Festival Celebrations , Kapaleeswarar Temple ,Mylapore.

Saturday, May 17, 2014

சென்னை ஸ்ரீ .மீனாட்சி திருக்கல்யாணம்..




சென்னை முகப்பேரில் ஸ்ரீராம் நகரில்  
சென்னை மீனாட்சி அம்மன் ஆலயம் 
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை 
அடியொட்டி அதேபோல அமைத்திருக்கிறார்கள்..

மூலவராக மெல்லதவழுகின்ற செல்லக்கிளி அழகிய திருக்கரத்திலும்  

மென்னகை அதரத்திலும் தவழ  எழில் கோலம் கொண்டு திகழும்
அன்னை மீனாட்சி மஞ்சள் காப்பில் மங்களகரமாக அருள் பொழிகிறாள்...!


பொற்றாமரைக்குளம் 



சித்திரை மாதத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணவிழாவில், திருக்கயிலாய சிவபூதகண வாத்திய முழக்கத்துடன், மங்கலவாத்தியமும் இசைக்க, நாராயணனின் சீர்வரிசையை பெண்கள் ஏந்தி வர, மதுரையில் நடைபெறுவது போன்றே வைதீக சம்பிரதாயத்துடன் சிவாச்சாரியார்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபவத்தை கோலாகலமாக நடத்தி வைக்கின்றனர்..


Displaying IMG_20140510_112122.jpg

விபூதி விநாயகர்


பூங்காவாக இருந்த இடத்தை ஸ்ரீ ராம் நகர் குடியிருப்பு மக்கள் தங்கள் வழிபாட்டுதலமாக சாந்நித்யமாக திகழச் செய்திருக்கிறார்கள்..

சமீபத்தில் 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது..!
வரசித்தி விநாயகர்

அன்னையின் எதிரில் நந்திகேஸ்வரர் சந்நிதியும் பக்கத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதியும்   உள்ளது..!

அஷ்டதிக் கஜங்களாக எட்டுத்திசைகளிலும் கரும்போடு நிற்கும் யானைகளால் தாங்கப்படும் கருவறையில் சொக்கநாதர் அருள்புரிகிறார்.



சுவாமி சுந்தரேஸ்வரர்  சந்நிதியில் பிரதோஷ நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்..

பள்ளியறைக்கு எழுந்தருள சுந்தரேஸ்வரர் அழகே உருவாய்
தரிசனம் தருகிறார்..
கூடல் முருகன் சந்நிதியில் வள்ளி தெய்வானையோடு முருகன் தரிசனம் தருகிறார்...!

எல்லாம் வல்ல சித்தர்  சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சண்டிகேஸ்வரர்  சந்நிதி உண்டு   

நவக்கிரஹங்கள் , மஹாலஷ்மி சந்நிதி 
ஆகிய சந்நிதிகள்  சிறப்பாக் திகழ்கின்றன்..!

மதுரையில் நடைபெறும் அத்தனை திருவிழாக்களும் 
அதே தினத்தில் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன ..! 

பூங்காவாக இருந்தபோது கிணறு இப்போது தீர்த்தமாக சுவாமிகளின் அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது..!
ஆலயத்தின் இணையதளம் -
http://chennaisrimeenakshi.weebly.com/index.html
ஆலயம் செல்லும் வழி -முகவரி..
http://chennaisrimeenakshi.weebly.com/location--route-map.html
தொடர்புடைய பதிவு
சென்னை ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலயம்

வைத்திய லிங்கம் , 


பைரவர் சந்நிதி


வன்னி மரமும் சிறிய நந்தவனமும் இருக்கிறது..!
ஆலய வாசலில் தூதுவளைச்செடி --தானாக முளைத்ததாம் ..!



Sunday, May 11, 2014

நவநிதிகள் வர்ஷிக்கும் ரத்னமங்கலம்ஸ்ரீலக்ஷ்மிகுபேரர்











Shree Arakasu Amman Temple [Rathinamangalam]



சென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர்  கோயில்தான் குபேரனுக்கு என்று தனிப்பட்ட முறையில் அமைக்கப் பட்ட உலகின் முதல் கோயிலாகத் திகழ்கிறது.
    
 வடக்கு திசையே குபேரனுக்குரிய திசை என்பதாலேயே 
ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஆலயம் வடக்கு நோக்கிய ஸ்தலமாக இருக்கிறது.... 

கோயிலுக்குள் ஷோடஷ கணபதி ஆலயத்தில் 
16 கணபதிகள் அருள்பாலிக்கிறார்கள்.
   
 லிங்க வடிவத்தில்  இருக்கும் ஈசான குபேரர் வழிபடும் போது, 
சிவனின் அருள் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை... 

 நவக்கிரகங்கள் வழிபட்டு, அக்னி மூலையில் ஸ்தலவிருட்சமான வில்வ மரத்திஞ் கீழ் உள்ள  அக்னி லிங்கத்திற்கு சான தீபம் ஏற்றப் படுவது புனிதமாகவும்  வேண்டுதலுக்கு வெற்றியாகவும் கருதப் படுகிறது. 

 மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கவும், கடன்கள் தீரவும்  தீபம் ஏற்றப்படுகிறது.  
குபேரனிடம் கடன் வாங்கிய வெங்கடாசலபதி திருத்தலம் உள்ளது. 
இவர் தனது திருமணத்திற்கு குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், 
இந்த கலியுகம் முடியும்  போதுதான்  அசல் கட்டி முடியும் என்று 
குபேரன் கூறியதாகவும் ஐதீகம்.
   
 காவல்காக்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதி இருக்கிறது. 

மொத்தம் 64 வகை பைரவர்களில்  தங்கம் போன்ற செல்வங்கள் கொடுத்து அதற்கு காவல்காக்கும் தெய்வமாகவும். குபேரனின் காவல் தெய்வமாக இங்கு வீற்றிருக்கிறார். 

சனி பகவானால் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் இவருக்கு பூசணி தீபம், அல்லது மிளகு மூட்டை தீபம் ஏற்றி வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் தொல்லைகள் மாறி நன்மைகள் கிட்டுமாம். 

இவரை வழிபட உகந்த நேரம், ராகுகாலம், எமகண்டம், 
அஷ்டமி, நவமி தினங்கள்.
    
 கன்னி  மூலையில் அருள்பாலிக்கும் பிரம்மா சரஸ்வதி தம்பதியருக்கு  மஞ்சள் காப்பு நெஞ்சில் சாத்தி வழிபாட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டுவர  தலை எழுத்து மிக நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை..!. 

 ஹேப்பி மேன் என்று சொல்லப்படும் சீன வாஸ்து பொம்மையான லாபிங் புப்தா. இவரை கிச்சு கிச்சு மூட்டுவது போல வயிற்றில் தடவினால் அவர் மகிழ்ச்சியில் சிரிப்பார், நமக்கும் தினம் மகிழ்ச்சியை அள்ளித் தருவார் என்பது சீன மக்களின் ஐதீகம்.
     
குபேரனை சீன மக்கள் லாபிங் புத்தாவாக வழிபடுகிறார்கள் என்பதை உணர்த்தவே   லாபிங் புத்தா பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாம்.. 

 18 படிகள் கொண்ட சன்னதியில் ஐயப்பன். அறுபடை வீடு கொண்ட முருகன் அனைவரையும் தரிசித்து விட்டு  குபேரன் கருவறை வணங்கலாம்..
   
குபேரன் சன்னதி: கண்களைக் கொள்ளை கொள்ளும் விதமாக பணமாலையோடு லக்ஷ்மி. 
அதற்கும் சற்று கீழே குபேரன் தனது மனைவி சித்ரலேகாவுடன் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் 
செல்வத்தை தரும் மகாலக்ஷ்மி ஆனால் நிலையாகத் 
தங்கவிடமாட்டார் என்பதும் ஐதீகம். 

ஆனால் லக்ஷ்மியின் அருளால் பெற்ற செல்வத்தை 
குபேரனை வழிபட்டுத் தக்கவைத்துக் கொள்ளலாம். 

குபேரன் மடியில் கீரிப்பிள்ளை வைத்திருப்பார், நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தருபவர் குபேரன் என்பது பொருள்.
     
குபேரனுக்கு பூஜை செய்யும் போது, நாணயங்களால் ஓங்கி சப்தம் எழுப்பும் படி குபேர மந்திரங்களை கூறி, வழிபடவேண்டுமாம். 

காரணம் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விட  நாணயங்கள் மூலம் நாம் அர்ச்சனை செய்யும் ஒலி கேட்டால் மிக சீக்கிரம் நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்கள் என்பது நம்பிக்கை...
     
நவநிதி அதிபதி என்று சொல்லப்படும் குபேரனின் எதிர்புறம் மச்சநிதியும், கச்சபம் நிதியும் வளர்க்கிறார்கள். அதாவது, மீனும் ஆமையும்.

குபேரர் சங்கநிதி, பதும நிதி எனப்படும் தேவர் காலத்து பணத்திற்கும், காமதேனு, கற்பக விருட்சம் என்று சொல்லக் கூடிய கற்பக விருட்ச மரத்துக்கும், நீலநிதி என்று சொல்லக் கூடிய கடல் செல்வத்துக்கும், நந்தநிதி, முகுந்த நிதி சுக்கிரன் என்று  சொல்லக் கூடிய அதிர்ஷ்ட தேவதைக்கும் அதிபதியாக இருக்கிறாராம் குபேரன்.
     
 வழிபட்டு வருபர் இல்லங்களில் செல்வம் கொழிக்கும், 
உள்ளங்களில் மகிழ்ச்சி திளைக்கும்.

சித்ரலேகா. இவளை சித்ராபவுர்ணமி அன்று நெய் தீபமேற்றி 
வணங்க அல்லவை அகன்று நல்லவை பெருகும்.

தேவி உபாசனையால் சகல சௌபாக்கியங்களைப் பெற்ற குபேரன் யோக சாதனை செய்ய நேரமில்லாதிருப்பதனால் குண்டலினி சக்தியை உயர்த்த எந்த யோகமும் செய்வதில்லை. 

பாம்பு, கீரியைக் கண்டால் படமெடுக்கும். எனவே, குபேரனின் கையில் உள்ள கீரியைப் பார்த்து குபேரனின் குண்டலினி சக்தி படிப்படியாக உயரும் என்பதை உணர்த்தவே  கையில் கீரிப்பிள்ளை. 

கீரிபிள்ளை மிகக் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தின் விஷத்தை தாங்கக் கூடிய அபரிதமான எதிர்பாற்றலை பெற்று விளங்குவதே அதனுடைய தலையாய பாதுகாப்பு அரணாகவும் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட விதிவிலக்கான அம்சமும் ஆகும். 

குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் 
தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் சேவை சாதிக்கிறார் குபேரன். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்

நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். இவற்றுள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் இந்த சங்க நிதி மற்றும் பதும நிதிகளின் அதிபதியான தெய்வ மகளீரை சங்க லட்சுமி, பதும லட்சுமி  இருவரும் குபேரனின் மனைவிமார்கள் இவர்களிடம் குபேரன் செல்வத்தினை கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை .

நர வாகனம் என்னும் மனிதன் மேல் ஆரோகணித்துச் செல்பவன். 
 மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் அமர்ந்து செல்வதில் பிரியமுள்ளவன். 

பூமியில் உள்ள சகல ஜீவராசிகள் செய்யும் காரியங்களைக் கணக்கு எழுத சிவபெருமான் . ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட, அதிலிருந்து தோன்றியவர் சித்திர குப்தர்! காமதேனுவின் புத்திரனாகப் பிறக்க சிவன் அருள்புரிந்தார்.

அவரிடம் மனிதர், தேவர் செயல்களைப் பற்றிக் கணக்கெழுதும் பணியை ஒப்படைத்தார். சித்திர புத்திரனாகப் பிறந்தாலும் சித்திர குப்தன் என்ற பெயரே நிலைத்து விட்டது. சித்திரம் என்றால் ஆச்சர்யமான என்று பொருள். குப்தம் என்றால் ரகசியம் என்று பொருள். சித்திர குப்தரின் கணக்குகள் மிகவும் ஆச்சர்யமான முறையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன .

சித்திர குப்தர் யமதர்மராஜனின் முன்னிலையில் இறந்தவர்களின் பாவ, புண்ணியங்களைத் தன்னுடைய ஏட்டிலிருந்து படிக்கிறார் என்பதும், தீவினை, நல்வினைக் கேற்ப நரக, சொர்க்க வாழ்வை ஜீவ ராசிகள் அடைகிறார்கள் என்பதும்  நம்பிக்கை.

நவகிரகங்களில் ஒன்றான கேதுவுக்கு, இந்தச் சித்திர குப்தர் அதிதேவதை என்றும், கேது புக்தி, கேது தசைகளால் சங்கடப்படுபவர்கள், சித்திர குப்தரை வழிபட வேண்டும் என்றும் தென் இந்தியாவிலேயே சித்திர குப்தருக்காகக் கட்டப்பட்ட ஒரே கோயிலான காஞ்சிபுரத்திலுள்ள நெல்லுக்காரன் தெருவில் இருக்கும் சித்திர குப்தர் கோயிலில் எழுதப்பட்டுள்ளது.

 சித்திரா பௌர்ணமியன்று சித்திர குப்தரை வேண்டி, உப்பில்லாமல் உணவருந்தி நோன்பு இருப்பது சிறப்பு..!

பெண்கள் வணங்கும்போது ""உன்னோடு பிறக்கவில்லை, உன் மனேவியோடு பிறந்தவர் நாங்கள்; எங்கள் பாவங்களை அழித்து விடு'' என்று வேண்டுவார்களாம். 
"தலைமுடிக்கு மிஞ்சின கருப்பில்லை; 
மச்சினிக்கு மிஞ்சின உறவில்லை" என்று சித்திர குப்தனும் மன்னித்தருளுவார் என்பது நம்பிக்கை!

சித்திர குப்தனின் மனைவி பெயர் பிரபாவதி என்கிற கர்ணிகை ஆகும்.