Monday, April 28, 2014

ஐஸ்வர்யம் அருளும் அட்சயநாதர்
மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையே விளங்குகின்ற மாந்துறை மகாதேவனாம் அட்சயநாதர்   ஐஸ்வர்யங்கள் அள்ளிதந்து குறைவில்லாத வாழ்வருளுகிறார்..

ஈசன் மாந்துறைநாதர், ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயர்களைக் கொண்டிருந்தாலும் அட்சயநாத சுவாமி என்ற திருநாமத்துடனும் அருள்புரிகிறார்

வசீகரம் மிக்க  சந்திரனுக்கு  சாபத்தால் ஏற்பட்ட க்ஷயரோகத்தால்  உடல் அங்கங்கள் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தன. 

சந்திரன் குரு பகவானிடம் சென்று பிணி தீர வழி கேட்க, அதற்கு குரு பகவான், ""சந்திரனே! நீ தட்சயாகத்திற்குச் சென்றது மட்டுமல்லாமல் அங்கே விருந்துண்ட பாவத்தால் உடலில் ரோகம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை சிவனைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது.  பூலோகம் சென்று, காவிரியின் வடகரையிலுள்ள ஆம்ரவனத்தை  அடைந்து, அங்குள்ள ஈசனை ஒரு பட்சம் (15 நாட்கள்) வழிபடு'' என்று கூறினார்.

சந்திரனும்  ஆம்ரவனமான திருமாந்துறையை அடைந்து, அங்குள்ள குளத்தில் நீராடி, ஆம்ரவனேஸ்வரரை 15 நாட்கள் வழிபட்டு ஈசனின் திருக்காட்சியைப் பெற்று நலமடைந்தான்.

அப்போது திங்களாகிய சந்திரன், ""திங்கட்கிழமை தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்து, மிளகு அன்னம் நிவேதனம் செய்து தங்களை வழிபடும் இப்பூவுலகினர் அனைவரும், நோய் விலகி குறையில்லாமல் சுகமுடன் வாழ அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினான்.

அன்றைய தினம் தை மாத முதல் நாள். சங்கராந்தி தினமான அந்த திங்கட்கிழமை மாலைப் பொழுதில், அட்சயநாதர்- யோகநாயகி  அம்பாள் மணக்கோலத்திலும், உச்சிஷ்ட கணபதி தம்பதி சமேதராகவும், மகாவிஷ்ணுவும் சந்திரனுக்காக காட்சி தந்து, ""உன் எண்ணப்படியே ஆகட்டும்'' என்று அனுக்கிரகம் செய்தனர். சந்திரன் வழிபட்டு நோய் நீங்கியதால் இத்தலம் சந்திரனுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
ஒருசமயம் சூரியனுக்கு கிரணங்கள் குறைந்தபோது, அவனுக்கு பிரகாசத்தைத் தந்து தன் பக்கத்திலிருந்து தினந்தோறும் தரிசிக்கச் சொன்னார் அட்சயநாதர்.

அதன்படி சூரியன் தங்கிய கோவில்தான் சூரியனார் கோவில். ஆகவே சூரியனார் கோவில் சூரிய க்ஷேத்திரமாகவும், அதற்குப்  பின்புறமுள்ள திருமாந்துறை அட்சயநாதர் ஆலயம் சந்திர க்ஷேத்திரமாகவும் விளங்குகிறது.

சந்திரதீர்த்தத்தில் நீராடியபின் பெருமதிலின் நுழைவாயிலைக் கடந்து கொடிமரம், பலிபீடம், நந்திதேவரை வணங்கிவிட்டு ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் உச்சிஷ்ட கணபதியும் மகாவிஷ்ணுவும் அட்சயநாதரை வழிபடுகின்ற காட்சி அழகிய கற்சிற்பமாய் விளங்குவதை தரிசிக்கலாம்.

மூலவரான அட்சயநாதரை அர்ச்சனைப் பொருட்களுடன்
மாங்கனி கொண்டு அர்ச்சித்து வழிபடுவது விஷேசம்..

உட்பிராகாரத்தில் தெற்கு நோக்கி ஹரதத்தரும், சைவசமயக் குரவர் நால்வரும் அருள்புரிகின்றனர்.

தலதுர்க்கை வடக்கு நோக்கி அருள்புரிகிறாள். 

உச்சிஷ்ட கணபதி தனது சாபத்தை நிவர்த்தி செய்துகொண்டு, தமது பூஜாபலத்தால் பெற்ற சகல சக்தியையும் கொண்டு பில்லி, சூன்யம், ஏவல், வைப்பு, மாந்திரீகம், ஆபிசாரப் பிரயோகம் போன்ற தீயசக்திகளை அழித்து, எல்லாவிதமான இடையூறுகளிலிருந்தும் மக்களைக் காக்க மிகுந்த வரப்ரசாதியாய் நிருதி மூலையில் தம்பதி சமேதராய் அருள்புரிகிறார். இது வேறெங்கும் காணமுடியாத காட்சி.

சுப்ரமணிய சுவாமி வள்ளி, தேவசேனாவுடன் அருள்புரிகிறார்


வாயு மூலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாவிஷ்ணு அருள்புரிகிறார். தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். 

ஈசான்ய திக்கில் பைரவர், சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர் ஆகியோர் சுவாமியைப் பார்த்த வண்ணம் காட்சி தருகின்றனர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது சிலகாலம் இங்கு தங்கி ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டு, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை (அன்னபாத்திரம்) இறைவனுக்கு சமர்ப்பித்து பெறற்கரிய பேறு பெற்றனர் ..

திருஞானசம்பந்தர் தலயாத்திரை செய்து பல தலங்களைப் பதிகம்பாடி வரும்போது, திருக்கஞ்சனூரை வழிபட்ட பின்பு திருமாந்துறையை அடைந்து பதிகம்பாடி வழிபட்டார். 
சுகக்குறைவு ஏற்பட்ட காலவ முனிவரும், நவகிரக நாயகர்களும் திருமங்கலக்குடியில் உள்ள அட்சயதீர்த்தத்தில் நீராடி, திருமாந்துறையிலுள்ள ஈசனை அனுதினமும் "அட்சயநாதரே அருள்புரிவாயே' என்று வழிபட்டதன்  பலனாக உடல்நலம் தேறி சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தனர் .....

அம்பாள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு
திருமணக் கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

 பழமைவாய்ந்ததும், திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை 
ஆதீனத்திற்குட்பட்டதும், காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருஞான சம்பந்தரால் பாடப்பட்டதும், உச்சிஷ்ட கணபதி, தாருகாவன முனிவர்கள், யோகநாயகி அம்பாள், மதியன், மருதவாணர், மகாவிஷ்ணு ஆகியோர் வழிபட்ட பெருமைவாய்ந்ததுமான தலம்தான் திருமாந்துறை
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம், சுக்கிரக்ஷேத்ரமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம், திருமாந்துறை ஸ்ரீஅட்சயநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் மட்டுமே சுவாமிக்கு வலப் பக்கத்தில் தனிச் சந்நிதி, தனிச்சுற்றுப் பிராகாரத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

சுவாமி சந்நிதி அருகிலும், அம்பாள் சந்நிதி அருகிலும் உள்ள கிணறு  
சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் எனப்படுகின்றன.

திங்கட்கிழமை பிறந்தவர்கள்; 2-ஆம் எண்ணில் பிறந்தவர்கள்; மனஅழுத்தம், மனநோய் உள்ளவர்கள்; சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள்; ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்தவர்கள்; தேய்பிறையில் பிறந்தவர்கள்; பௌர்ணமியில் பிறந்தவர்கள் திருமாந்துறை அட்சயநாதரை வணங்கி வந்தால், கூடுதல் பலம் கிடைப்பதோடு குறைவில்லா வாழ்வு வாழலாம் 
நவகிரகங்களுக்கே  சாபம்  நீக்கிய  தலமாதலால்  நவகிரகங்கள் இல்லை. 

திருக்கோவிலைச் சுற்றி மாமரங்கள் சூழ்ந்திருப்பதால்,  
மாந்துறை- ஆம்ரவனம் என அழைக்கப்படுகிறது.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், ஆடுதுறை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நகரப் பேருந்தில் சூரியனார் கோவில் சென்று அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில். திருமாந்துறை செல்லலாம்.

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை யிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

ஆதரவளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்
18 comments:

 1. அட்சய நாதன் அறிந்தேன் சகோதரியாரே நன்றி

  ReplyDelete
 2. அருமையான தகவல்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. திருச்சியின் மிக அருகில் இருந்தாலும் ஏனோ மாந்துறை இதுவரை சென்றதில்லை... அடுத்த பயணத்தில் செல்ல எண்ணம்.

  ReplyDelete
 4. அட்சய நாதனைப் பற்றி, அழகான படங்களுடன் - அழகான பதிவு!..

  ReplyDelete
 5. அனைவருக்கும் ஆத்ரவும், ஆனந்தமும் அளிக்கட்டும் ஆம்ரவனேஸ்வரர்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்,தகவல்கள் அருமை.
  நன்றிகள்.

  ReplyDelete
 7. ஐஸ்வர்யம் அருளும் அக்ஷயநாதர் பற்றிய இந்த இன்றையப் பதிவினில் இரு வெவ்வேறு கோயில்களைப்பற்றி கலந்து எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
 8. திருச்சியிலிருந்து லால்குடிக்குச் செல்லும் பேருந்து சாலை வழியினில் இடதுபுறமாக [ஆங்கரை கிராமத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக] அமைந்துள்ளது தான் மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஆம்ப்ரவனேஸ்வரர் திருக்கோயில்.

  அது எங்கள் குலதெய்வங்களில் ஒன்றான கிராம தேவதையாகும்.

  அங்குள்ள சிவனுக்கு அக்ஷயநாதர் என்ற பெயர் இருப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அதனால் இது வேறு அது வேறு மட்டுமே.

  மேலும் அடியேன் சொல்லும் இந்தக்கோயிலில் நவக்கிரங்களுக்கு என தனி சந்நதி, பிரதக்ஷணம் செய்யும் வண்ணம் அழகாக அமைந்துள்ளது.

  ஸ்ரீ வாலாம்பிகா அம்பாள் சந்நதிக்கு நேர் எதிரே வெளிப்பக்கம் ஒரே ஒரு கிணறு மட்டுமே இங்கு உண்டு.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. எங்கள் குல தெய்வம் இந்த மாந்துரையான் என நாங்கள் அழைக்கும்
   வாலம்பிகை சமேத ஆம்ரவநேச்வரர்.

   திரு வை. கோ. அவர்கள் சொல்வது போல, ஆம்ரவநேச்வரருக்கு அட்சய நாதர் என்று இன்னொரு பெயர் இருப்பதாக தெரியவில்லை.
   அந்த கோவிலின் தர்ம கார்த்தாவிடம் நான் இன்று இரவு விசாரித்து சொல்கிறேன்.

   இருந்தாலும், அதன் பக்கத்தில் உள்ள ஆங்கரை என்னும் கிராமத்தில் தான் நான் பிறந்தேன். அந்த பக்கம் கிட்டத்தட்ட ஒரு 20 கிராம ஜனங்களுக்கு மாந்துரையான் தான் குல தெய்வம்.

   நிற்க. பக்கத்தில் ஒரு கருப்பன். எங்களை காக்கும் தெய்வம். எங்கே போனாலும் கருப்பா குள்ளமா ஒருவன் உன் பின்னாடியே உன் துணைக்கு வருவான் மாந்துரையான் என்று என் பாட்டியும் என் அம்மாவும் எனக்கு சொல்லி இருக்கிரார்கள். நானும் என் பிள்ளைகளுக்கு சொல்லி இருக்கிறேன்.

   இங்கே ஒரு கிணறு தான் இருக்கிறது. கோவிலின் பக்கத்தில் வாய்க்கால் ஒன்று இருக்கிறது.

   சுப்பு தாத்தா.
   www.subbuthatha.blogspot.com

   Delete
 9. மேலிருந்து கீழ் படம் எண்கள்: 4 முதல் 11 வரையிலும், அதே போல கீழிருந்து மேல் படம் எண்கள்: 1 முதல் 4 வரையிலும் 100% நான் சொல்லும் திருச்சி மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஆம்ப்ரவனேஸ்வரர் ஆலயத்தை மட்டுமே சேர்ந்ததாகும்.

  >>>>>

  ReplyDelete
 10. சூரியனார் கோயில், கஞ்சனூர் போன்ற அனைத்து நவக்கிரஹ ஸ்தலங்களுக்கும் அடியேன் சென்று வந்துள்ளேன். இருப்பினும் தாங்கள் சொல்லும் திருமாந்துறை அக்ஷயநாதர் கோயிலுக்கு மட்டும் நான் இதுவரை சென்றது இல்லை.

  அதற்கும் இங்கு திருச்சி மாவட்டத்தில், திருச்சிக்கு மிக அருகேயுள்ள மாந்துறைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை.

  இது இந்தப்பதிவினை வாசிப்போருக்கு ஏதும் குழப்பம் ஏற்படாமல் இருக்க மட்டுமே நான் இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

  >>>>>

  ReplyDelete
 11. தொடர்புடைய பதிவுகளுக்கு சுட்டிகள் கொடுத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

  குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன் !

  ooooo

  ReplyDelete
 12. உங்கள் பதிவில் உள்ள சில படங்கள் என் குடும்ப வலையிலும் இருக்கிறன்றன. கருப்பு தான் எங்களுக்கு பிடிச்ச தெய்வம்.

  சுப்பு தாத்தா.
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
 13. திருமாந்துறை சிவனார் பற்றி பதிவு படங்களுடன் அருமை.

  ReplyDelete
 14. இதுவரை அறிந்திராத ஸ்தலம்
  படங்களுடன் முழுமையாக அறியும்படி
  பதிவாக்கித் தந்தமைக்கும் மிக்க நன்றி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அட்சயநாதரைப் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ள முடிந்தக்து நன்றி அம்மா.

  ReplyDelete
 16. இந்த பகுதியில் குறிப்பிட்ட அத்தனையும் உண்மை ஆனால் அரசாலும் நாயகர்களால் கவனிக்கப்படாமல் உள்ளது

  ReplyDelete
 17. இந்த திருமாந்துறை தலம் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் ஏனெனில் அனைத்து கிரகங்களின் நோய்களை தீர்த்த தலமானதால் நவகிரகங்கள் வழிபாட்டை தொடரும் முன் முதலில் அடசயநாதரை தொழுது பிறகு சூரியநாயனர் கோவிலில் இருந்து ஆரம்பித்தால் சிறப்பாகும்

  ReplyDelete