Monday, July 7, 2014

கலைகளில் சிறக்க அருளும் தாண்டேஸ்வரர் திருக்கோயில்


Photo: <3 Om Nama Shivaya - ஓம் நம சிவாய <3

மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெரும் கருணையினால் அவரை அவர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலாய மலையில் சென்று தரிசித்து வரும் பேறு கிட்டியது. அப்போது சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்திற்க்கும் அதன் மூலமாக அந்த ஆண்டவனுக்கும் மங்களம் பாடும் விதமாக அமைந்த பாடல். (ஹிந்தியில் அமைந்திருந்தாலும் யாவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்). 

திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய 

பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும் சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில் முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின் நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ் பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய் அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை, கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல் வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும், முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில் திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம் தீர்க்கும் மந்திரம். 

கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம். சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம். இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால் கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம். 

சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம் வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது. கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும் இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன் சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது. 
ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம் அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில் ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு, திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும். 

108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால் என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால் ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால் ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால் மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம், நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால் சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது. 

இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும் அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல் செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம். ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும். ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும், 18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால் அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால் வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால் ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63 கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72 கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81 கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90 கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99 கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர் மோட்சம் அடைவர். 

இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும், கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம் ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில் செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம் லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப் போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால் மோக்ஷம் கிட்டும். 

திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் . 

காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி 
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது 
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது 
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1) 

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால் 
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது 
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் 
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2) 

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து 
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் 
தக்க வானவராத் தருவிப்பது 
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3) 

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் 
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் 
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி 
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4) 

கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள் 
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின் 
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் 
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5) 

மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய 
பந்தனை யவர் தாமும் பகர்வரேல் 
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் 
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6) 

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் 
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் 
விரவியே புகுவித்திடும் என்பரால் 
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7) 

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் 
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் 
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை 
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8) 

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் 
பாதம் தான்முடி தேடியப் பண்பராய் 
யாரும் காண்பதரிதாகி அலந்தவர் 
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9) 

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் 
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் 
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் 
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10) 

நமச்சிவாயப்பதிகத்திற்க்குப்பின் ஓம் மங்களம் பாடல் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.











ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே

  ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
   ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
 தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
மூர்த்தி, தலம், தீர்த்த சிறப்புடன், பெரிய கோயில் எனப்படும் 
தாண்டேஸ்வரர் திருக்கோவில் '  அமராவதி ஆற்றின் 
தென்கரையில் அமைந்துள்ளது. 

தென்சிதம்பரம்: தில்லையில் அமைந்துள்ளது போலவே, இடது காலைத் தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் நடராஜர் காட்சி தருவதால் "தென் சிதம்பரம்' என சிறப்பிக்கப்படுகிறது.
இவரை வணங்கிட கலைகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
[Gal1]
 இப்பகுதியை குமண மன்னர் ஆட்சி செய்ததால் "குமணன் நகர்' எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் "குழுமூர்' எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி "கொழுமம்' எனப்படுகிறது. 

ஜமன்னர், இங்கு நடராஜரை உற்சவராக வைக்க விரும்பி, அவரை சிலையாக வடித்த போது இரண்டு முறை சரியாக அமையவில்லை. 

கோபமடைந்த அவர், அடுத்த சிலை சரியாக அமையவில்லை எனில் சிற்பிக்கு மரணதண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

வருந்திய சிற்பி இறைவனிடம், "மன்னர் கையால் உயிர் போவதை விட நீயே எனது உயிரை எடுத்துக் கொள்!' என முறையிட்டார்.

மனமிரங்கிய நடராஜர், அவருக்கு அருட்காட்சி தந்து, அழகிய அம்சத்துடன் தானாகவே சிலைவடிவில் அமைந்தார். 

தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயரில் அழைக்கப்படும் இவரது பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது.
[Gal1]
சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் தனிச்சன்னதியில் அருள்கிறாள்.., 

அவளுக்கு முன்பகுதியில் ஜேஷ்டாதேவி,

பிரகாரத்தில் சுந்தரவிநாயகர், பாலமுருகன், சூரியன், ஐயப்பன், மகாவிஷ்ணு, துர்க்கை, பைரவர், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மேற்கு நோக்கியபடி சனீஸ்வரன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். 

கல்மண்டபம் போல் உள்ள இங்கு கருவறைக்கு பின்புறம் உள்ள அக்னீஸ்வரர் சன்னதியும், 32 தத்துவங்களை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட தூண்களும் கலையம்சத்துடன் உள்ளன

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும் செழிப்பின்றி இருந்தது. அச்சம்கொண்ட மன்னர் தனது குருவிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யும்படி கூறினார். அதன்படி, வில்வ வனமாக இருந்த பகுதியை சீரமைத்து கோயில் எழுப்பினார்.

இரட்டை சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: தெட்சிணாமூர்த்திக்கு நான்கு சீடர்கள் உண்டு. ஆனால், இங்குகருவறை சுற்றுச்சுவரில் அருளும்  தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் இரண்டுசீடர்கள் தனியே தவக்கோலத்தில் அமர்ந்துள்ளனர்
[Gal1]

[Image1]

23 comments:

  1. தான்டேசுவரர் திருக்கோயில் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. தாண்டேஸ்வரர் திருக்கோயில் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. புதிய ஒரு கோயிலைப் பற்றி அறிந்தேன். நன்றி. அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்ற இடத்தில் நண்பர் திரு செல்வபாண்டியன் அவர்களோடு களப்பணி மேற்கொண்டபோது ஒரு புத்தர் சிலையைக் கண்டுபிடித்தேன். குழுமூர் என்றதும் எனக்கு அந்த ஊர் நினைவிற்கு வந்தது. நன்றி.

    ReplyDelete
  4. அருமையான தகவல்...அழகான படங்கள்...பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. தாண்டேஸ்வரர் திருக்கோயில் விவரங்களும், படங்களும் வெகு சிறப்பு.

    ReplyDelete
  6. தாண்டேசுவரர் திருக்கோயிலை நன்கு தரிசித்து விட்டேன்.
    படங்களும் அழகு. காணொளிமூலம் கோவிலை நன்க்கு சுற்றிப்பார்த்து விட்டேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கொழுமம் - உடுமலை - திருப்பூர் - தாண்டேஸ்வரர் கோயில் பற்றிய முதல் காணொளி அருமையாய் உள்ளது. தென்னை போன்ற பல மரங்களின் அசைவுகளுடன், தூய்மையான ஒரு கோயிலின் சக்திமிக்க பல சந்நதிகள் அதில் தத்ரூபமாக இடம்பெற்று மகிழ்வித்துள்ளன. நேரில் சென்று வந்தது போல ஒரு மகிழ்ச்சி மனதில் உண்டாகியது.

    >>>>>

    ReplyDelete
  8. கலைகளில் சிறக்க அருளுபவரா ?

    சந்தோஷம். சந்தோஷம்.

    காலங்களில் அவள் வஸந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை

    என்ற பாட்டுத்தான் என் நினைவுக்கு வந்தது. ;)

    >>>>>

    ReplyDelete
  9. ’ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம்’ என்ற பாடல் வரிகளுடன் ஆரம்பமே இனிப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. இடையிடையே ஸ்ரீருத்ர மந்திரங்களும், சிவனுக்கான காயத்ரி மந்திரமும் கொடுத்துள்ளது சிறப்பாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  11. காணொளிக்கு அடுத்த முதல் படத்தில் மும்மூர்த்திகளுடன், என் அன்புக்குரிய ஆசைக்குரிய இஷ்ட தெய்வமான தொந்திப் பிள்ளையாரப்பா சூப்பர் !

    அதுபோல அந்தக்கடைசி படத்திலும் குழந்தையாக அவரே ! ;)

    அவருக்கு என் ஸ்பெஷல் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  12. குமணன் நகர், குழுமூர், கொழுமம் போன்ற பெயர்க் காரணங்கள் கொடுத்துள்ளது அழகு.

    கொழுகொழு என்றும் மொழுமொழு என்றும், கும்முன்னு ஜிம்முன்னு சிலர், மோத முழங்க கொழுப்பெடுத்து, அங்கு இருந்திருக்கலாம். ;)))))

    அதைப்பார்த்துப் பரவஸமான என்னைப்போன்ற யாரோ ஒருவர் தன் கற்பனையில் ‘கொழுமம்’ என பெயர் வைத்திருக்கலாம் எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ;)))))

    >>>>>

    ReplyDelete
  13. சிலையை சரியாக அமைக்காவிட்டால் சிற்பிக்கு மரண தண்டனை - ராஜ தண்டனை ..... என்ன கொடுமை பாருங்கோ. நல்லவேளை சிவனே என இருந்துள்ள அவரை அந்த சிவனே காத்தருளியுள்ளதைக்கேட்க .... அதுவும் தங்கள் மூலம் கேட்க .... மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  14. இரட்டை சீடர்களுடன் மட்டுமே தக்ஷிணாமூர்த்தி ..... ஆச்சர்யமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  15. வழக்கம் போல அனைத்துப்படங்களும் அழகாக உள்ளன. பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றியோ நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    எங்கிருந்தாலும் வாழ்க !

    ;) 1328 ;)

    ooo ooo ooo

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாழ்க வளமுடன்..
      அருமையான கருத்துரைகள் அனைத்திற்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  16. அழகான படங்கள்..
    இனிய சிவ தரிசனம்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  17. பதிவில் எழுதும் கோவில்களுக்குச் சென்றிருக்கிறீர்களா. ?

    ReplyDelete
  18. வணக்கம் வாழ்க வளமுடன்..

    மிகப்பெரும்பாலான ஆலயங்கள் குடும்பத்தோடும் எங்கள் பாகவத, நாராயணீய, சகஸ்ரநாம , தேவிமகாத்மிய திருப்புகழ் குழுவினருடனும் பலமுறை சென்று தரிசித்து தகவல்கள் திரட்டி பதிந்தவையே..

    மற்றவை சிலர் வந்து தகவல்கள் சொல்லியும் இ மெயில் அனுப்பியும் எழுதச்சொன்னவை..

    செல்லவேண்டும் என திட்டமிட்டு செல்லும் போது குறிப்புகளுடன் செல்ல தகவல்களும் படங்களும் திரட்டிய எனக்கான குறிப்புகள்..

    கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  19. தகவல்களுக்கு நன்றி.....

    ReplyDelete
  20. அறியாத கோவில் பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. தாண்டேஸ்வரர் கோவில் காணொளி நாதஸ்வர இசையுடன் அருமையாக இருந்தது நாமும் அக்கோவில் சென்றமாதிரி ஓர் உணர்வு. அழகான படங்கள்,சிறப்பான தகவல்கள்.நன்றி.

    ReplyDelete