Sunday, November 22, 2015

பிருந்தாவன துவாதசி பூஜை"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

 கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதி அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதால் "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். .

நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகாவிஷ்ணு  பிருந்தாவன துவாதசி நாளில் "உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
துவாதசியன்று காலையில் துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை  துளசி மாடத்தில்  வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும். 


துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா' என்ற பெயர்களும் உண்டு.

மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற்காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள். அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்; ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.
கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து,  பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்..
. செடியாய்ப் பிறந்த துளசியை  சாளக்கிராமத்தோடு (கிருஷ்ணனோடு) சேர்த்து பூஜிப்பது விஷேசம்... 
 ``கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் நாரதர் `கூறிய யோசனைப்படி சத்தியபாமாவும், ``உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத்தந்தோம்'' என்று கூறி நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தாள். 

 நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி கேட்டார். 

தராசில் எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டுதான் இறங்கி இருந்தது. 

ருக்மிணிதேவி கிருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது. 

வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம். 

கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் . துளசி பாற்கடலில் தோன்றியது.  துளசி தெய்வீக சக்தி கொண்டது.
துளசிக்கு ஸுலபா, ஸரசா,  அம்ருதா, ச்யாமா,  வைஷ்ணவி, கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன. , 
 கரியமால் துளசி, கருந்துளசி,  கற்பூர துளசி, செந்துளசி, காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி. என ஒன்பது வகையான துளசிச் செடிகள்ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை. 
ஆன்மிகத்திலும்   திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி எனப் போற்றப்படும் பெருமை உடையது துளசி..
துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. 
துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.
 காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,

"துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம் கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ ஸோபதே'

என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். 

நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும். 

பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி இடிக்கும்போது, இடியின் தாக்கம்  வீட்டின்மீது விழாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு உண்டு. 
நல்ல கிருமிநாசினியாகச் செயல்படுவதோடல்லாமல், ஆன்மிக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் போற்றப் படுகிறது.

வயிறு உபாதை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசி இலையை மென்று தின்றுவந்தால் குடல், வயிறு, 

வாய் தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். ஜீரணசக்தியையும் புத்துணர்ச்சி யையும் அளிக்கவல்லது துளசி.  பல நோய்களை குணமாக்கும் சக்திகொண்டது.

வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபடவேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு ஏற்றி வழிபட,  வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.

திருமால் ஆலயங்களில் துளசிவனம்.  துளசிமாடம்  இருக்கும்..
துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம்  மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின் மேல் அமைந்துள்ள துளசி மாடம்.  அருகில் வில்வமரமும் உள்ளது.
ஜலந்திரனை அழிக்க சிவபெருமானுக்கு உதவிய மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் இருக்க, அவருக்குப் பிடித்தமான பிருந்தையான துளசி அவர் முதுகில் மாடத்தில் உள்ளாள். 
 துளசிமாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம். துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; 
 துளசிச் செடி துஷ்ட சக்திகளை வீட்டினுள் அனுமதிக்காது. துளசியைப் பூஜிப்பவர் வீட்டில் மகாலட்சுமி நித்யவாசம் செய்வாள்

9 comments:

 1. இதுவரை அறிந்திராத பூசை பற்றி அறிந்தேன். பெருமாள், தாயாரின் உற்சவமூர்த்திகள் மிக அருமையாக உள்ளன. நன்றி.

  ReplyDelete
 2. துளசியின் மகிமைகள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

  ReplyDelete
 3. Divinity in the petals of Thulasi.
  A hearttening exposition .
  Let us worship Vishnu Thulasi on this Great Day Dwadasi.

  subbu thatha.

  ReplyDelete
 4. துளசியைப் பற்றிய விரிவான தகவல்களுடன் பகிர்வு அருமை.

  ReplyDelete
 5. பிருந்தாவன துவாதசி பூஜை பற்றியும் துளசியின் சிறப்புக்களையும் அறிய முடிந்தது! சிறப்பான படங்கள்! நன்றி!

  ReplyDelete
 6. இன்று என்பதிவில் நிறையபேர் துளசிமடத்தைப் பார்த்திருந்தனர். காரணம் உங்கள் பதிவுதான். தமிழ் துளசித் தோத்திரம் நான் எப்போதோ போட்டது. அதிகம் பதிவுகளி்டவும்,பார்க்கவும் முடிவதில்லை. இன்று உங்களின் பதிவு மனதிற்கு ரம்யமாகவும்,பக்தியுடனும் இருந்தது. ஒரு பம்பாய் துளசிமாடம் குட்டியும் இருந்ததைப் பார்க்க எவ்வளவு ஸந்தோ,ஷ,மாக இருந்தது தெரியுமா? ஸ்ரீமத் துளசியம்மா துதி நீங்களும் பாருங்கள். நன்றி. அன்புடன்

  ReplyDelete
 7. சொல்லுகிறேனில் பூஜை என்ற கேட்டகிரியில் துளசித்துதி இருக்கிறது.
  அன்புடன். நன்றி.

  ReplyDelete
 8. வணக்கம்
  அம்மா
  படங்களுடன் அற்புத விளக்கம் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete