Tuesday, May 21, 2013

திருமோகூர் ஆப்தன்













திருமோகூர்  புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதியில்  உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 

பதினாறு கைகளில் ஆயுதங்களுடன்  அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.

சக்கரத்தாழ்வார் சிலையின் மேல் பகுதியில், மடியில் இரணியனை கிடத்தி சம்ஹாரம் செய்யும் நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி வராகரும் காட்சி தருகின்றனர். 
இவரது திருநட்சத்திர தினமான ஆனி சித்திரையில், விசேஷ ஹோமம் செய்து, எண்ணெய் காப்பிடுகின்றனர். 
சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கரங்களிலும் சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு இல்லை. 
சக்கரத்தாழ்வார் சன்னதியில் தங்க விமானம் அமைந்திருக்கிறது....
Sri Kaalamegha Perumal Temple (ThiruMogur) Madurai - Divya Desam 79
கோயிலின் தென்மேற்கு பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சந்நதி உள்ளது. 

திருமோகூர் என்றாலேதிருவாழி ஆழ்வான் எனும் அற்புதப் பெருமான் சக்கரத்தாழ்வாரே மனதில் வருவார் ..  

திருமாலின் ஐந்து படைக்கலன்களில் முதன்மையும், 
ஆதியந்தமுமில்லாததும், பெருமாளைவிட்டு பிரியாததுமான சுதர்சனமே ஆகும். 

சுதர்சனம் என்றாலே  சுப தரிசனம் தரும் காட்சிக்கு இனியவன், நல்வழிகாட்டும் நாயகன் என்று பல பொருள்கள் உண்டு. 

முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சிதரும்  திருக்கோலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

மிகப் பிரமாண்டமான ஒரு சக்திச் சுழற்சியின் முன்பு நாம் ஏதுமற்றவர்கள் என்ற ஓர் உணர்வு நம்முள் அழுத்தமாய் பரவுகிறது. 

திகழ்ச்சக்கரமான சக்கரத்தாழ்வார் அருட்சக்கரமாகி தீப்போல் பிரகாசிக்கிறார். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு ஆதாரமான விஷயம் இங்கு வீற்றிருக்கிறதோ எனும் பெரும் வியப்பு  சிலிர்க்க வைக்கிறது.   


ஆனி மாதம் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரத்தில்  நடத்தப்படும் சுதர்சன வேள்வி பங்கு கொண்டோரை பவித்ரமாக்குகிறது. 

சுதர்சனப்பெருமானை ஆறுமுறையோ, ஆறின் மடங்குகளிலோ வலம் வந்தால் எண்ணிய செயல்கள் சட்டென்று நிறைவேறுகின்றன. வேண்டுதல்கள் விரைவில் பலிதமாகின்றன. வேண்டிய வரமருளும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். மரணபயம் அறுத்தும், மனோவியாதியை ஒழித்தும், கன்னியருக்கு மாலை கொடுத்தும், காளையருக்கு வேலை கொடுத்தும், மக்கட்பேறை மட்டிலாது அளித்தும், தொழிலில் ஏற்படும் தோல்வியை நீக்கி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக நரசிம்ம சுதர்சனப் பெருமாள் அருளாட்சி நடத்துகிறார். 



Sri Kaalamegha Perumal Temple (ThiruMogur) Madurai - Divya Desam 79
நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்றென்னுமின் எத்துமின் நமர்காள்

-என்று திருமோகூர் பெருமாளைப் போற்றிப் புகழ்கிறார் நம்மாழ்வார். 

‘நமக்கு நல்ல அரணாக அமைந்து நம்மைக் காப்பாற்றுகிறார்  பெருமாள்.  
அப்படியும் தீமையே உருவான அசுரரை அண்டினோமானால், காமரூபம் கொண்டு, அந்த அசுரரை நிர்மூலமாக்கி நம்மைக் காக்கவல்லவன் இந்தப்  பெருமாள். 
இவனது திருநாமமே நம்மை எல்லாத் துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கும்’ என்கிறார்.
திருமோகூர்திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாள் காளமேகப் பெருமாளே நமஸ்காரம். 
மேகலதா நாச்சி யாருடன் கேதக விமான நிழலில் க்ஷீராப்தி புஷ்கரணிக் கரையில் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், எல்லாத் தேவர்களின் விருப்பத்தையும்  நிறைவேற்றி அவர்கட்குக் காட்சி தந்தருளி விளங்கும் பெருமாளே நமஸ்காரம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற  திருமோகூர் திருத்தலத்தில் கருணைக் கடலான காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார். 

திருப்பாற்கடலில் கடைந் தெடுத்த அமுதத்தை தேவர்களுக்கு பெருமாள் வழங்கிய இடம் தான் திருமோகூர். 

12 ஆழ்வார் களில் முதல் ஆழ்வாரான நம்மாழ்வாரும், கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

மூலவர் கிழக்கு நோக்கி காளமேகப் பெருமாள் எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சேவை சாதிக்கிறார். 

நீருண்டமேகம் போன்ற திருமேனியுடனும், சங்கு சக்கரங்கள் ஏந்திய திருக்கரங்களோடும், மேகம் கருணைகொண்டு மழைபொழிவதுபோல்  அருள்மழை பொழிவதால் காளமேகப் பெருமாள் எனும் நாமம் பெற்றார். 

இவரை குடமாடுகூத்தன், தயரதம் பெற்ற மரகத மணித்தடம், சுடர்கொள் சோதி, திருமோகூர் ஆப்தன் என்றும் ஆழ்வார்கள் பாடிப் பரவுகிறார்கள். இங்கு மூலவருக்கும் திருமஞ்சனம் உண்டு.
ஒவ்வொரு மாதமும் திருவோண நாளில் ஆப்தன் என்றழைக்கப்படும் உற்சவர் எழுந்தருளுகிறார்
ThiruMogur Apthan
கருணை பொழியும் திருமுகத்தோடு காட்சிதரும் அன்னை  மோகன வல்லி தாயார் என்றும் மோகவல்லி என்றும் திருமோகூர் வல்லி என்றும் அழைக்கப்படுகிறார். 

வீதி உலா வரும்போது பெருமாள் மட்டும் கோயிலுக்கு வெளியே செல்வார். தாயார் எந்த காலத்திலும் கோயில் படியை தாண்டியதில்லை. 
தாயார் படிதாண்டா பத்தினி ..

நெடிதுயர்ந்த துவஜஸ்தம்பம் பீடத்தில் கம்பத்தடி பெருமாள் பளபளவென்று காட்சியளிக்க, அவருக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். 

அருகே மண்டபத் தூணில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய்க் காப்பிட்டு,  நெய்தீபம் ஏற்றுகிறார்கள். 
ஆஞ்சநேயருக்கு ஆதிசேஷன் குடைபிடித்திருப்பது  சிறப்பு. 

ராமர், சீதை, லட்சுமணன் சிற்பங்கள் காளமேகப் பெருமாளை நோக்கி காணப்படுகின்றன. 
கம்பத்தடி மண்டப தூண்களில் மருது சகோதரர்களின் சிற்பம் உள்ளது. கோயிலுக்கு வெளியே பதினெட்டாம்படி கருப்பன்னசாமி கோயில் உண்டு .கருட மண்டபத்தின் தென்புறத் தூண் ஒன்றில் கரும்புவில், மலர் கணையுடன் மன்மதன் சிற்பமும், எதிரேயுள்ள தூணில் மன்மதனை பார்த்தபடி அன்னப் பறவையில் ரதிதேவி சிற்பமும் உள்ளது. 



நம்மாழ்வாரின் மனங்கவர்ந்த பெருமான் காளமேகப் பிரான். வைகுண்டத்திற்கு போகும் போது நம்மாழ்வாருக்கு வழித்துணையாக காளமேகப்  பெருமானே நேரடியாக சென்றுள்ளார். 

நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் பிறந்ததால், விசாகத்தை நிறைவு நாளாக வைத்து பத்து நாள் திருவிழா நடத்தப்படுகிறது. திருத்தேரோட்டம், தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நடைபெறும். 


தமிழை வேதமாக்கிய நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் இப்பெருமானை பாடிப் பரவசமாகி பாசுரங்கள் செய்து கருணை மழை பொழியும் காளமேகப் பெருமானின் திருவடி பரவிநின்றனர். 

திருப்பாற்கடல் தீர்த்தம் என்று பொருள்படும் க்ஷீராப்தி புஷ்கரணி, பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தத்தின் ஒரு துளி விழுந்ததால் உண்டானது என்கிறது புராணம்.

நாங்கள் சென்றிருந்த நேரத்தில் புஷகரினி நிரம்ப அழகிய தாமரைப்பூக்கள் மலர்ந்து நிறைந்திருந்தன..

அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தாமரை வேணுமா அக்கா  சுவாமிக்குச் சாத்துங்கள் ரொம்ப விஷேசம் என்று நிறைய கைகள் கொள்ளாத அளவுக்கு தாமரைகள் பறித்துத்தந்தார்கள்...



Sri Kaalamegha Perumal Temple (ThiruMogur) Madurai - Divya Desam 79Sri Kaalamegha Perumal Temple (ThiruMogur) Madurai - Divya Desam 79Sri Kaalamegha Perumal Temple (ThiruMogur) Madurai - Divya Desam 79

12 comments:

  1. கொள்ளை அழகான படங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அறியாத தகவல்கள் + சிறப்பான படங்களுடன்.... நன்றி அம்மா... வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  3. கண்ணுக்கு அழகான படங்களும் ..
    மனதுக்கு இதம் தரும் செய்திகளும்..
    நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete
  4. ”திருமோஹூர் ஆப்தன்” பற்றிய அருமையான பதிவு.

    அற்புதமான செய்திகள்.

    அழகழகான படங்கள்.

    அனைத்துமே அருமையோ அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ooooo 916 ooooo

    ReplyDelete
  5. திருமோகூர் சக்கரத்தாழ்வாரை நான் 1994-ஆம் ஆண்டு வாக்கில் சென்று தரிசித்து அருள் பெற்றேன். அக்கோவிலின் பெருமைகளை, சக்கரத்தாழ்வாரின் மகிமைகளை எழுதி எனது விருப்பத்தை பூர்த்தி செய்தமைக்கு நன்றி. ராமேஸ்வரம் கோவில் பற்றி ஒரு தொடர் பதிவு தந்தால் எனது மனம் உவகை கொள்ளும். சின்ன சின்னதாக சொல்வதற்கு பெரிய விஷயங்கள் நிரம்ப இருக்கும் அக்கோவிலின் அரும் பெருமைகளை சொன்னால் அனைவரும் அருள் பெறுவார்.

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள். அருமையான படங்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி!

    ReplyDelete
  7. சிறப்பான இப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  8. திருமோகுரின் சிறப்புப் பற்றி ஒரு முறை வித்வான் லட்சுமணன் சொல்லக் கெட்டிருக்கிறேன்;சிறப்பான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. ஆனைமலை பின் புறத்தில் தெரிய திருமோகூர் திருத்தல திருக்குள படம் மிக அருமை.
    திருமோகூர் போய் பலவருடங்கள் ஆகி விட்டது. இப்போது உங்கள் பதிவை படித்தவுடன் ஆசை வந்து விட்டது. மதுரை போகும் போது பார்த்து வரவேண்டும்.
    நன்றி.

    ReplyDelete
  10. சந்தனக் காப்பு சூப்பராக இருக்கு. அழகிய தொகுப்பு.

    ReplyDelete
  11. உண்மையில் சொல்லப் போனால் கடவுளின் அருள் கடலில் மூழும் பக்தர்களுக்கு நீங்கள் வழங்கும் பதிவுகள் கண் முன் நிற்கிறது ...

    ReplyDelete
  12. வழித்துணைப் பெருமாளான திருமோகூர் ஆப்தனின் தரிசனம் இன்று கிடைத்தது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

    ReplyDelete