Saturday, May 11, 2013

அட்சய திரிதியைத் திருநாள்!


அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொடுக்கும் தன்மை கொண்ட அட்சய பாத்திரம் போல் அட்சய திரிதியை  செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாளாகவும்..இறைவனுக்குப் பூஜை செய்தால் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் நாளாகவும் சிறப்பிடம் பெறுகிறது ..

ஒவ்வொரு மூன்றாம் பிறையின்போதும் அம்பாள் காட்சி கொடுத்து அருள்புரிவதாகவும், அன்று சித்தர் பெருமக்கள் வானத்தில் வலம் வருவதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

அதனால்தான் மூன்றாம் பிறையைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு ...

காண்பதற்கே அரியது மூன்றாம்பிறை.....அதைப் பிடித்து அதில் தொட்டில் கட்டி.....முல்லை,மல்லிகை எல்லாம் வாரி இறைப்பதாக அத்தை மடி மெத்தையைடி என்று அருமையான பாடல் கூட உண்டு ..

மூன்றாம் பிறையைத் தரிசித்தபின் அம்பாளை வழிபட்டு, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றி தரும் ... அன்று எதை வாங்கினா லும் அச்செல்வம் பெருகும்.

கிருஷ்ணர் குசேலரின் அவலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், குசேலரின் இல்லத்தில் செல்வங்கள் குவிந்தன. ஏழையின் குடிசை மாளிகையாக மாறியது. குசேலர் கிருஷ்ண பகவானைப் பார்க்கச் சென்ற நாள் அட்சய திரிதியைத் திருநாள்!

இந்நாளில் ஏழைகளுக்கு தர்மம் செய்தால் எதிர்காலம் செழுமையாக இருக்கும்; வசதியான வாழ்வு கிட்டும்.

அட்சய திரிதியை நாளில் ஆடைகளையும் பழங்களையும் தானம் செய்தால் சிறப்பான வாழ்வு அமையும். அன்னதானம் செய்தால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைத்துக் கொண்டிருக்கும். தயிர் சாதம் தானம் செய்தால் பாவங்கள் அழியும்.

பாண்டவர்களிடம் அட்சயப் பாத்திரம் இருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. இந்தப் பாத்திரத்தை பாண்டவர்களுக்குக் கொடுத்த வர் சூரியன். அள்ள அள்ளக் குறையாமல் எத்தனை பேர்களுக்கு வேண்டுமானாலும் உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்தை திரௌபதி

ஒருசமயம் அட்சய திரிதியை அன்று உணவு உண்டபின் பாத்திரத்தைக் கழுவி வைத்ததும், அங்கு கண்ணபிரான் வந்தார். அவர் திரௌபதியிடம், "பசியாற ஏதாவது உணவு கொடு' என்று கேட்க, என்ன செய்வதென்று புரியாமல் வருந்திய திரௌபதி மகாவிஷ்ணு வைப் பிரார்த்தித்து, கழுவி வைத்த அட்சய பாத்திரத்தைப் பார்த்தாள். அதில் ஒரே ஒரு கீரைத் துண்டு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து கிருஷ்ண பரமாத்மாவுக்குக் கொடுத்தாள். திரௌபதி அளித்த அந்தக் கீரைத்துண்டினைச் சாப்பிட்ட கிருஷ்ணரின் வயிறு நிறைந்தது; அவரது மனமும் மகிழ்ந்தது என்று மகாபாரதக் கதை கூறுகிறது.

இந்தப் புனித நாளில்தான் பிரம்மன் இந்தப் பூவுலகைப் படைத்தார் என்று புராணங்கள் பேசுகின்றன. அன்றுதான் திரேதாயுகம் பிறந்தது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இத்தனை சிறப்புகள் மிக்க அட்சய திரிதியை நாளில் தெய்வ வழிபாடு செய்து வாழ்க்கையில் வளம் பெறுவோம்.


சிலிர்த்துப் பறக்கும் எழில் பொன் வண்டுகளைப்போன்று
மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள்
திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின்
மலர் விழிப் பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும் (1)

நீலத் தாமரையில் வண்டு அமர்வதும் பறப்பதும் போல்
நீல விழி வண்டுகள் மாதவன் மலர் முகம் நோக்க
பாற்கடலில் உதித்த மந்தஹாச மலர் முகத்தாள் நின்
பார்வை எனக்கு செல்வச் செழிப்பினை அருளட்டும் (2)
அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே
முரன் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட
நீலோற்பவ மலரின் விழி முகத்தாள் நின்
நீல விழி பார்வை எனக்கு சௌபாக்யத்தை அளிக்கட்டும் (3)

எல்லையில்லா இன்பத்தில் கார்வண்ணன் இமைகள் மூட
எல்லையில்லா காதலினால் நின் இமைகள் மூட
மறக்க அளவில்லாக் கருணையே உருவாய் அமைந்த தேவி நின்
கோல விழி பார்வை எனக்கு கோடி செல்வம் அளிக்கட்டும் (4)
மது அரக்கனை அழித்த மாலவன் மருவும் தேவி
மாதவன் மார்பினில் ஒளிரும் கௌஸ்துப மணி நீயே
மான் விழி பார்வை மாலுக்கே வளம் சேர்க்கும் நின்
மகத்தான பார்வை எனக்கு மங்களத்தை அளிக்கட்டும் (5)  

கார்மேக வர்ணனின் கண்ணனின் பரந்த மார்பில்
ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி
பார்க்கவ மகரிஷியின் பார்காக்கும் திருமகளே
நின் பார்வை எனக்கு பல வளங்கள் சேர்க்கட்டும் (6)
பொங்கும் மங்களம் தங்க அரக்கனை சம்ஹரித்த
மகாவிஷ்ணு மார்பினில் மகிழ்வுடன் உறைபவளே
நின் காதற் பார்வை காமனுக்கு பெருமை சேர்க்க
நின் அருட் பார்வை எனக்கு அருளும் பொருளும் அருளட்டும் (7)

வேள்வியோ கடும் தவமோ புரிய இயலாத என்னை
கேள்வியே கேளாமல் சுகமான வாழ்வைத் தந்து
தோல்விகள் இல்லாத வெற்றிகள் எனக்கருள்வாய் நின்
தளிர் பார்வை எனக்கு தாராளமாய் நிதி அருளட்டும் (8)

கருணை மழைக்காக ஏங்கும் சாதகப் பறவை என்னை
வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே
பெருமை பொங்க உலகில் வாழவைப்பாயே நின்
குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும் (9)

முத்தொழில் புரியும் முகுந்தனின் துணைவியே
காத்தலில் அலை மகள் நீ படைத்தலில் கலைமகள் நீ
அழித்தலில் மலைமகள் நீ எத்தொழில் புரிந்திடவும் நின்
எழில் பார்வை எனக்கு தொழில் மேன்மை அளிக்கட்டும் (10)
வேத வடிவானவளே ஞானஒளி தந்தருள்வாய்
நாத வடிவானவளே நற்கல்வி தந்தருள்வாய்
வேத நாதம் அனைத்தும் அருளிடும் வேதவல்லியே நின்
கடைக்கண் பார்வை எனக்கு கலை மேன்மை அளிக்கட்டும் (11)  

எழில் தாமரை ஒத்த முகமதியாளே வணக்கம்
திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம்
அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின்
அருட்பார்வை எனக்கு ஆயகலைகள் அருளட்டும் (12)

பொற்றாமரை வீற்றிருக்கும் கொற்றவளே வணக்கம்
கற்றார் உளம் வீற்றிருக்கும் திருமகளே வணக்கம்
கமல மலரில் உறையும் லட்சுமி தேவியே வணக்கம்
கவலையெலாம் போக்கும் அலைமகளே வணக்கம் (13)

பெருமா மகரிஷியின் தவ செல்வியே வணக்கம்
திருமால் மார்பில் திகழும் தேவ தேவியே வணக்கம்
கமல மலரில் உறையும் லட்சுமி தேவியே வணக்கம்
கவலையெல்லாம் போக்கும் அலைமகளே வணக்கம் (14)  
தாமரையில் கொலுவீற்றிருக்கும் ஒளிவடிவே வணக்கம்
மூவுலகும் தொழும் களஞ்கியமே வணக்கம்
தேவருலகம் வணங்கும் தெய்வ வடிவே வணக்கம்
நந்த கோபாலன் கோகுல நாயகியே வணக்கம் (15)

கமல விழி மலரே காண்போர்க்கு அருள் விருந்தே
ஐம்புலன்களின் ஆனந்தமே ஐஸ்வர்யம் அளிப்பவளே
என்றும் தொழுவோர்க்கு ஏற்றங்கள் தரும் தேவி
என்றென்றும் எனக்கே செல்வ வளங்கள் தந்தருள்வாய் (16)
கண்ணாளன் திருமாலின் மலர் மார்பில் உறைபவளே
வெண்பட்டு சந்தனம் மலர் மாலை அணிபவளே
எண்ணற்ற செல்வம் எளியோர்ர்க்கு அருள்பவளே
கண் மலர்ந்து தேவி செல்வங்கள் நீ அருள்வாய் (17)

கடைக்கண் பார்வை வேண்டி நிதம் தொழுவோர் கோடி
கடைக்கண் மட்டுமின்றி கமலவிழி பார்வையால்
கடையனாய் இருந்தோர்க்கு கணக்கற்ற செல்வம் தந்தாய்
கடயேனைக் காத்தருள் கனிந்துருகி வணங்குகின்றேன் (18)
அஷ்டதிக் கஜங்களால் கங்கை நீரால் அபிஷேகம்
அஷ்ட ஐஸ்வர்யம் வேண்டி தங்கக் குடத்தால் அபிஷேகம்
அஷ்ட லெக்ஷுமியே உன்னை வணங்குகிறோம் நாளும்
கஷ்டங்கள் களைந்து இஷ்ட செல்வங்கள் நீ அளிப்பாய் (19)

கமல மலர் உறைபவளே மலரிதழ் விழியாலே
மாதவன் துணையாக மார்பில் உறை ஓவியமே
ஏழைக்குள் முதல்வனாய் எளிமையுடன் வாழுகின்றோம்
ஏழையை காத்து என்றும் இனிய வாழ்வினை நீ அளிப்பாய் (20)
வேதஸ்வரூபினியை மூவுலகும் தொழும்
நாதஸ்வரூபினியை நாள்தோறும் வணங்கி
ஸ்வர்ணமாரி பொழியும் ஸ்ரீதேவி மந்த்ரமிதை
சொல்பவர்க்கு திருமகள் திருவருள் புரிந்திடுவாய் (21)

-ஸ்ரீ கனகதரா ஸ்தோத்ரம் சம்பூர்ணம்

ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் தனக்கு பிக்ஷை அளிக்க ஏதுமில்லாது ஒரு நெல்லிக்கனியை அளித்த  பெண்மணியின் தரித்திர நிலை நீங்கும்படி செய்யவேண்டுமென்று ஸ்ரீ லக்ஷ்மியை பிரார்த்திக்க கனகதாரை (பொன்மழை) பொழிந்ததாகக் கூறுவார்.

கனகதாரா திதியை பக்தியுடன் பாராயணம் செய்பவர்க்கு ஸ்ரீ தேவியின் அனுக்ரகத்தால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்)

 32 நம்பூதிரிகள் கனகதாரா யாகத்தை நடத்துவார்கள்..
. லட்சுமி யந்திரமும், தங்க நெல்லிக்கனிகளும் வைத்து, கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்படும்.

அட்சய திரிதியை அன்று கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு பின்  தங்க நெல்லிக்கனிகளால் விஷ்ணு, லட்சுமிக்கு அபிஷேகம் செய்யப்படும்..

தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் பிரசாதமாக கோயிலில்
விற்பனை செய்யப்படுகிறது.12 comments:

 1. வணக்கம்
  அம்மா

  அட்சய திரிதியைத் திருநாள் பற்றிய விளக்கம் மிக அருமையாக உள்ளது அறிய முடியாத பல தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக நன்றி படங்கள் மிக அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அறியாதன் பல அறிந்தோம்
  படங்களும் பகிர்வும் மிக மிக அருமை
  பதிவுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 3. அறியாத தகவல்கள்... அருமையான படங்கள்.. நன்றி...

  ReplyDelete
 4. அட்சய திரிதியை விளக்கம் அருமை.
  கனகதாரா தமிழாக்கம் தந்தமைக்கு நன்றி.
  நல்ல செயல்கள செய்து அலைமகளின் கருணை கிடைத்து வளமோடு வாழ்வோம்.
  வாழ்கவளமுடன்.

  ReplyDelete
 5. அக்ஷய திரிதியை பற்றிய அசத்தலான பதிவு.

  அக்ஷயமாக அள்ளி அள்ளிக்கொடுத்துள்ள அழகான படங்களும் விளக்கங்களும்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ooooo 906 ooooo

  ReplyDelete
 6. thanks for providing useful information

  ReplyDelete
 7. அட்சய திரிதியை குறித்து அரிய தகவல்களை அறிந்து கொண்டேன். மக்கள் அன்றைய தினம் தான தருமம் செய்கின்றார்களோ இல்லையோ, போட்டி போட்டுக் கொண்டு தங்கம் வாங்கிக் குவிக்கின்றார்கள். எனினும் மக்களுக்கு எல்லா வளமும் பெருகட்டும். சிறப்பான மற்றுமொரு பதிவுக்கு வாழ்த்துகள் ! நன்றி !!

  ReplyDelete
 8. அறியாத தகவல்களுடன் அருமையான பகிர்வு...

  நன்றி அம்மா... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 9. படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை அம்மா .... அருமையாக அழகாக படிப்பவர்கள் பயன்பெறும்படியாக தொடர்ந்து தருவது
  மனம் கவர்ந்தது. வாழ்த்துக்கள் அம்மா...நன்றி ...

  ReplyDelete
 10. அறியாத தகவல்கள் அருமையான படங்கள்

  ReplyDelete
 11. நல்ல பதிவு.....அனைவராலும் இது போன்ற பதிவுகளை பகிர இயலாது!!!

  ReplyDelete
 12. Aha ha....arputha darisanam. All photos and Tamil kanakadara slokam all are fine. Thanks for this post Rajeswari.
  viji

  ReplyDelete