Thursday, September 11, 2014

மகாகவி பாரதியார் நினைவலைகள்..


எட்டையபுரத்தில் ஒளிக்கதிராய் உதித்து 
எட்டுத்திக்கும் புகழ்பரவ பாடிகளித்து
ஏறுபோல் நடையினாய் வா ..வா. என
எதிர்வரும் பாரத்தத்தை வாழ்த்தி வரவேற்று
எக்காளமிட்டவர்  முறுக்குமீசை முண்டாசுக்கவிஞர் பாரதியார்

“பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்;
புன்மை இருட்கணம் போயினயாவும்;
எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழி துயில்கின்றனை இன்னுமெந்தாயே,
வியப்பிது காண்! பள்ளி எழுந்தருளாயே! ”

பாரதியாரைப் போலவே வீரத்துறவி விவேகானந்தரும் தம் எழுத்திலும் பேச்சிலும் விழித்தெழுவதையே (Awakening) தம் தலையாய செய்தியாகக் கொண்டார்; 

“தேசத்திற்கு தொண்டுசெய்வது, அதனுடைய உழைக்கும் மக்களுக்கு தொண்டு செய்வதற்குச் சமம்’’ என்று அவர் கூறியுள்ளார். இதனையே சுவாமி விவேகானந்தர்  தன்னுடைய ஆன்மிகத் தேடலின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

“நீங்கள் பகவத் கீதையைப் படிப்பதைக் காட்டிலும், கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள்” என்று இந்திய வாலிபர்களுக்கு சுவாமிஜி சொன்னார்.

ஏனெனில் “தங்களுடைய தோள்கள் வலிமையாக இருக்கும்போது மட்டுமே  பகவத்கீதையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

பலவீனமான. வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை உள்ள இளைஞனுக்கு கீதையை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவை என்பது சுவாமிகளின் கருத்து. 

வெறுமனே கீதை ஆராய்ச்சி செய்தால் அவனது மூளை மேலும் உலர்ந்து போய்விடும், சரீரம் மேலும் தளர்ந்து போய் விடும் என அவர் புதிய விளக்கமே தந்தார். 

மனிதனை ஒன்றுக்கும் உதவாதவன் ஆக்குவது விவேகானந்தரின் செய்தியல்ல; கிருஷ்ண பரமாத்மாவின் செய்தியும் அல்ல. மனிதனை நல்ல தீரனாகவும் வீரனாகவும் ஆக்குவதே அவர்களின் செய்தி.

இதையே, ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடலுறுதி வேண்டும்’ என்று பராசக்தியிடம் பாரதி பிரார்த்திக்கிறார். ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்றும் பாரதி கேட்கிறார்.

“அச்சம் தவிர், ஆண்மை தவறேல், 
உடலினை உறுதி செய், போர்த்தொழில் பழகு, 
யௌவனம் காத்தல் செய், வீரியம் பெருக்கு” 

என்றெல்லாம் புதிய ஆத்திசூடியில் கூறும் மகாகவி பாரதி, 

அதில் “தேசத்தைக் காத்தல் செய்” என்றும், “வையத் தலைமை கொள்” என்றும் கூறுகிறார். இது சுவாமி விவேகானந்தரின் தாக்கமே வீறுகொண்டெழுகிறது..!

‘பலமே வாழ்வு; பலவீனமே மரணம்’ என்கிறர் சுவாமி விவேகானந்தர். மகாகவி பாரதியோ, ‘இளைத்தல் இகழ்ச்சி, ஏறு போல் நட’ என்கிறார்.
விவேகானந்தர் என்ற மாமனிதர் காவியுடை தரித்த சன்னியாசி. ஆனால் பாரதியார் இல்லற வாழ்வில் ஈடுபட்டவர். இது மட்டுமே இவர்களுக்கு இடையே உள்ள வேற்றுமை.

முட்டையானது வெளிப்புற சக்தி கொண்டு உடைக்கப்பட்டால் அதனுள் இருக்கும் உயிரானது அழிக்கப்படுகிறது. ஆனால் அதே முட்டையானது உட்புற சக்தி கொண்டு உடைக்கப்படுமாயின் அங்கு ஒரு உயிர் உருவாகிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து ஆகும்.


 அனைத்து மக்களும் நாம் வாழும் நாடு நமதென்பதை உணர வேண்டும்; அறிய வேண்டும்; அதன் பெருமையைப் போற்ற வேண்டும்.
நமக்குத் தீங்கு செய்பவருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் சாராம்சம் இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றை தலையாய கொள்கையாக கொண்டுள்ளது; மக்கள் யாரும் மதவெறி கொள்ளக் கூடாது என்பதே. பாரதத்தின் ஆன்மிக வானில் என்றும் பிரகாசிக்கும், ஒளி வீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம். தெய்வீகத்தையும், தேசியத்தையும் ஒன்றிணைத்து நம் நாட்டு மக்களிடையே புதிய பரிமாணத்தையும், பாதையையும் வகுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமும் உண்டோடா?—மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”
பாரதியின் தேசபக்திப் பாடல்களும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்களும்,தெய்வ பக்திப் பாடல்களும் என்றும்  எக்காலத்திலும் வழிகாட்டுபவை,,! 

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

13 comments:

 1. மனிதனின் பிரச்னையே, சென்றதை நினைத்து, கவலை கொண்டு, வரும் காலத்தை செம்மைப் படுத்தாது விடுவது என்பதனையும், அதனை எதிர்கொள்ள மனதினில் உறுதி வேண்டும் என்ற பாடலின் மூலமும் உணர்த்தியவர். ஒரு சீரிய சிந்தனை வாதியின் புகழினைப் பாடும் தேவையான சமயத்தில், பகிர்ந்திருப்பது நன்று! உறங்கிக் கிடப்போரை தட்டியெழுப்பும் பதிவு.

  ReplyDelete
 2. மகா கவி பாரதி போற்றுவோம்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. சுவாமி விவேகாநந்தருடன் பாரதியை ஒப்பிட்டு எழுதி இருந்தது ரசிக்க வைத்தது( இந்தப் பின்னூட்டக் கருத்தை வேறு ஒரு பதிவில் எழுதப் போய் தமாஷாகி விட்டது)

  ReplyDelete
  Replies
  1. சார் அட...நாங்கள் பின்னூட்டம் இட்டு மேலே வந்தால் எங்கள் கருத்தும் ...முதல் வரி தங்களது போலவே......
   அது சரி அது என்ன தமாஷ் என்று தங்கள் வலையில் சொல்லலாமே சார்....

   Delete
 4. என்றும் நெஞ்சில் இருக்கும் மகாகவிக்கு சிறப்பான நினைவஞ்சலி..
  வாழ்க மகாகவி பாரதியின் புகழ்!..

  ReplyDelete
 5. புதிதாய் பிறந்தோம் என பாடி என்றென்றும் நினைவில் வாழும் மகாகவிக்கு வணக்கத்துடன் தென்றலும்.

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு..

  ReplyDelete
 7. அமரகவி பாரதியின் நினைவுகளுக்கு சிறப்பான அஞ்சலி.

  ReplyDelete
 8. வணக்கம்
  அம்மா.

  பாரதியின் நினைவு நாளளை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. பாரதி பற்றிய உங்களின் நினைவலைகளில் நீந்தி மகிழ்ந்தேன் !

  ReplyDelete
 10. சுவாமி விவேகானந்தரையும், பாரதியையும் ஒப்பிட்டு எழுதியது அருமை! மிகவும் அழகான ஒரு ஒப்பீடு. உங்கள் பதிவு மிகவும் வித்தியாசமாக பாரதியை நினைவு கூரலாக இருக்கின்றது....மிகவும் ரசித்தோம்.....

  ReplyDelete
 11. பாரதி நினைவலைகள் நன்று.....

  ReplyDelete
 12. பிறரை ஏமாற்றாமல் தன் நலம் பேண் பிறர் நலம் பறிக்கும் அவலம் வேண்டாம் பாரதி சொன்னது போல்.
  பாரதியின் நினைவுகள் பாடல் பகிர்வு மிக அருமை.

  ReplyDelete