கும்பமகத்து வாயுமைந்தன் கோதண்டாத்தானொடு கூடியே
பலித் தலமேகி தீர்த்தவாரியாடியே உத்திர மணக்கோலத்துமிருந்து
தொழுதேத்தக் கண்டோம் மெய்யே - வாயு மைந்தருக்கு நவவியாகரணபட்டமுங் கிட்ட கருவான தலமிதே’’
-என திருமூலர் திருவாக்கில் வியப்புடன் வணங்கிப்போற்றும் ஆஞ்சநேயருக்கு சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் ஆச்சாரியனாய் இருந்து உபதேசிக்கும் குரு அம்சமாய் கோலம் கொண்டு கல்வி விருத்திக்கும் ஆரோக்ய மேம்பாட்டுக்கும் ஒருசேர ஞானமொடு சேர்க்க யோக ராமச்சந்திர மூர்த்தியாக அருள்கிறார்..!
ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், சீதாபிராட்டியுடன் அமர்ந்து வீராசனத்தில் , சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கும் அரிய அமைப்பில் அருள்கிறார்...இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாகத்திகழ்கிறது.! .
கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
ராமர்-சீதை மூர்த்திக்கு அருகில் ஆஞ்சநேயரும் அமர்ந்த நிலையில் கையில் ஓலைச்சுவடியைத் தாங்கி நிற்பது விசேஷம்.

தன்னைத்தியானிப்பவர்களுக்கு தாயார் செண்பகவல்லி நாச்சியார் இனிய மன அமைதியை அருள்கிறார்..
கடன் சுமை நீக்கி தீராத நோய் தீர்த்து பிறவி இல்லாது இறைவனோடு உயிரை இணைக்கும் சக்தி உடையவள் செண்பகவல்லித் தாயார் தைரியத்தையும் தெம்பையும் ஊட்டுகிறாள்..!
கோயிலுக்கு நேரே வெளியில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர் உள்ளனர். பிரகாரத்தில் வேணுகோபாலர், பரசுராமர், ஆஞ்சநேயர் உள்ளனர்
வால்மீகி மகரிஷி உள்ளிட்ட சப்தரிஷிகளும் பல்வேறு சித்தர்களும் நாரத மகரிஷியும் பிரம்மதேவரும் கொங்கணர். கோரக்கரும் பிருகு மகரிஷியும். தொழுது பேறுபெற்ற புண்ணிய ஆலயம் இது.
ஆவணி மாதத்தில் இரண்டாம் வெள்ளிக்கிழமை, இன்றும் வால்மீகி மகரிஷி, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் முதலான பல சித்தர் பெருமக்களுடன் தசரத சக்ரவர்த்தி அரூபமாக திருக்கோயிலுக்கு எழுந்தருளி ராமச்சந்திரமூர்த்தி, தன் நாச்சியார் சீதாபிராட்டியுடனும் இளைய பெருமாள் லட்சுமணருடனும் கருடன் மேல் எழுந்தருளும் காட்சியைக் கண்டு தொழுது இன்புறுகின்றனர்.
ஆவணி இரண்டாம் வெள்ளியன்று ராமர், சீதை, லட்சுமணருடன் கருட சேவை காட்சி தருவார். மாசி மகத்தன்று கோதண்டராமர், இங்கிருந்து மகாபலிபுரம் சென்று கடலில் தீர்த்தவாரி கண்டு திரும்புவார். பங்குனியில் நடக்கும் ராமநவமி விழாவில், உத்திரத்தன்று சுவாமி திருக்கல்யாணம் நடக்கும்.
யோகராமச்சந்திரமூர்த்தியை ஆஞ்சநேயர் குருவாய் பெற்றதாலேயே. மிகுந்த ஞானம், கூரிய நுண்ணறிவு, வேகமாக சரியாகச் செயல்படுதல், மாறாத பிரம்மச்சாரியம், சத்யம் போன்ற சீரிய பண்புகள் நிறைந்து ஒழுக்கங்களையும் ஒருங்கே அமைப்பெற்றார்..!
உலகத்தின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் சாரம் என்ன? என ஆஞ்சநேயருக்கு சந்தேகம் உண்டானது. தனக்கு சந்தேகம் தீர்க்கும்படி ஆஞ்சநேயர், ராமபிரானை வேண்டினார்.
சுவாமி சின்முத்திரை காட்டிய தனது வலது கையை நெஞ்சில் வைத்து, ""எல்லா உயிர்களுக்குள்ளும் பரமாத்மா என்னும் இறைவன் இருப்பதைப்போல, நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன்' என்று உணர்த்தினார். இந்த அமைப்பில் அமைந்துள்ள கோயில் இது. யோக நிலையில் இருப்பதால் சுவாமிக்கு,
"யோக ராமச்சந்திரமூர்த்தி' என்ற பெயர் ஏற்பட்டது.
அக்கினி பகவானும் வாயுபகவானும் வருண பகவானும் தொழுது போற்றிய தலவிருட்சமான செண்பக மரம், மிகவும் புண்ணியமானது.
மிகவும் சிறப்புற்றுத்திகழும் தல் விருட்சமான செண்பகமரத்தை சிரத்தையுடன் வணங்கித்தொழுது செல்வத்தில் குபேரனையும் மிஞ்சி இருப்பவர் நீருக்கு அதிபதியான வருணபகவான் ..!.
ஞானத்தில் ஓங்கி இருப்பவர்கள் வாயுவும் அக்கினியும்.
கோயிலுக்குப் பின்புறமுள்ள கோட்டை மலையில்
வேணுகோபாலர் கோயில் உள்ளது..
வேணுகோபாலர் கோயில் உள்ளது..
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் 48 கி.மீ.யில் (வேலூரில் இருந்து 32 கி.மீ.) உள்ள சந்தவாசலிலிருந்து 7 கி.மீ. சென்று படவேடு அடையலாம். பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவு..கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் கோயில் இருக்கிறது

![[sathya6.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRbRTTUrZbeQi89HDxzpfTrrdg3iMneIm5_xR-4DBSVKThmsoEbeN0nOn-azzi1GmEr8W9lPUoNt-koxXxUvFkCLrQHSx9sh1qhtHOyfOanN7dsJplvmmqclUL7yGJ55DNIw2SF35jMZ0/s1600/sathya6.jpg)
