Thursday, November 28, 2013

திருப்பெருந்துறை இறைவன்..!




சிவபுராணம்

"ஈசனடி போற்றி எந்யைடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி"

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்  என்பது மூதுரை.....

தில்லை அம்பலவாணனாகிய ஆண்டவன் கைப்பட எழுதிக் கையொப்பமிட்ட திருவாசகம் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் பெருமை சேர்த்த திரு வாசகம் ஒப்பற்ற சிவனடியாராகிய மாணிக்கவாசகர் என்னும் திருவாதவூரர் இயற்றியது. 

இறைவனே "மாணிக்கவாசக' என்றழைத்து ஞானகுருவாகி உபதேசமும் அருளினார்.

தில்லை திருச்சிற்றம்பலத்தில் மணிவாசகர் என்னும் மனிதன் கூற ஆண்டவனே ஏட்டில் எழுதினார்!

ஆக, மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; 

தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; 

மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள்.

 திருமுறையாகிய திருவாசகம் இயற்றி முடிக்கப்பட்டதும் மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலவாணரின் ஜோதியுள் கலந்து இறைநிலை அடைந்துவிட்டார். 

"திருவாசகம் ஒருகால் ஓதக் கருங்கல் மனமும் கசிந்துருகும்' என்றார்கள்.

ஆத்ம ஒளியை அதிகரிக்கச் செய்யும் திருவாசகத்தை அருளியவர் மாணிக்க வாசகர். இவரை ஈசன் குருவாக வந்து திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆட்கொண்டார்.

திருப்பெருந்துறைகோவிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை அமைத்துள்ளனர். இது வேறெங்கும் இல்லாத அமைப்பாகும்.

எல்லா நட்சத்திரங்களையும் காட்ட முடியாது. எனவே, 27 நட்சத்திரங்கள் 
கரு வறையில் தீபமாக எரிகின்றன.

உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் காட்டும் வகையில் மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று வண்ணக் கண்ணாடி சட்டங்கள் இட்ட மூன்று விளக்குகள் கருவறையில் எரிகின்றன.

36 தத்துவங்களைக் குறிக்கும் தீபமாலை விளக்கை 
தேவ சபையில் ஏற்றி வைத்துள் ளனர்.

ஐந்து வகை கலைகளைக் குறிக்கும் ஐந்து விளக்குகளைக் 
கருவறையில் ஒன்றின்கீழ் ஒன்றாக ஏற்றி வைத்துள்ளனர்.

51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதனைக் குறிக்கும் 51 விளக்குகள் கருவறைமுன் உள்ள அர்த்தமண்டபத்தில் உள்ளன.

உலகங்கள் 87. இதனைக் குறிப்பதற்கு கனக சபையில் 
குதிரைச் சாமிக்குப்பின் 87 விளக்கு கள் உள்ளன.

11 மந்திரங்களைக் குறிக்கும் 11 விளக்குகளை 
நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர்.

இப்படி 27 நட்சத்திரங்கள், மும்மூர்த்திகள், 36 தத்துவங்கள், ஐந்து கலைகள்,
51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வண்ணமுள்ளன இவ்விளக்குகள். 

இப்படிப்பட்ட அதிசய அமைப்பு ஆவுடையார் கோவிலின் 
மட்டுமேதான் உள்ளது.

முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூறையில் தொங்கும் கற்சங்கிலிகளும்,    கொடுங்கைகளின் அற்புதங்களும் கண்களைக் கவர்கின்றன.

எவ்வுளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள்.

Wednesday, November 27, 2013

அருளோங்கும் திருத்தலங்கள்







ஆறு படை வீடு மன அமைதியைத் தரும் வீடு
அழகு முருகன் அருளோங்கும் தலமெனும்

பாரில் முருகன் அடியார் திருக்கூட்டம்
பார்த்து மகிழ்ந்து பணிந்திடும் அருவி

அந்தர தேவர்கள் வந்து அருள் பெற
பணிந்தது திருவாவினன் குடியாம்

அருளாளர் போற்றும் பிரணவப் பொருள் தனை
அப்பனுக்கே சொன்ன ஸ்வாமி மலை

இந்திரன் மகளாய் வளர்ந்த குஞ்சரியை
ஏற்று மணம் கொண்ட பரங்குன்றம்

குறவர் குலக்கொடி வள்ளி தனை அன்று
குமரன் மணந்த திருத் தணிகை

தந்திரம் பல கற்ற சூரனை வென்றது
தாரணியே போற்றும் சீரலைவாய்

மறத்தமிழ் மக்கள் தெய்வமெனும் குகன்
மகிழ்ந்து விளையாடும் சோலை மலை ..!

பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். 

ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. 

பழநி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பிக்கை.

தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். 

அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

Photo: திருப்பரங்குன்றம்:

தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்க முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்தது.

முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. 

வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். 

பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். 

முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

கடல் அலைகள்  'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். 

சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். 

அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். 

சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். 

அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். 

அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். 

போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். 

அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார்..

குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

திருப்புகழ்

அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -
அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;

இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே -
இருநில மீதி லெளியனும் வாழ  எனதுமுனோடி வரவேணும்

மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில்  மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. 

கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும்.
முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.