

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

உமையவளாகிய பராசக்தியை லோகமாதா என்று வழிபடுகிறோம். அவளே கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன
ஸ்ரீமீனாட்சி அம்பாள் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.
ஆடிப் பூரம் தினத்தில் அம்பிகை கருவுற்று இருப்பதாக ஆவகணம் செய்து முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.
![[k159.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaRj1yOhw1PQVNyDXP1qc8f7F_Uw8hkAC_gMtFl5X8C-Mzuo4BkP6ym0j6OxUjcGCSPWRekPdDZEY9_1knolKR4JGxkFlxYDijZjMvH_EI1Gj3fA3nrkbf1bRAoR5ZnmWgq_t-wJdhiFx0/s400/k159.jpg)
திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் விசேஷம்.
இந்த விழாவின் நான்காவது நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். அப்போது ஊறவைத்த பயறு வகைகளை அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வார்கள். பார்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண் போலவே காட்சி தருவாள் அம்பாள்.
முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.

இந்த வளைகாப்பு வைபவத்தை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு பிள்ளைப்பேறு விரைவில் வாய்க்கும் என்பது நம்பிக்கை.
கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்யும் வழக்கப்படி அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.
அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் ஆடிப்பூர நாள் ஆகும்.
அகிலாண்ட நாயகி வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தம் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது,
ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.
பூப்புனித நீராட்டுவிழாவும் நடாத்துகின்றார்கள். அம்பிகை மகப்பேறு அருளுபவராகவும், விவாகமாகாத கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய அருள்பவராகவும், தாலிபாக்கியம் நிலைக்க அருள்பவாராகவும் இருப்பதனால் இது போன்ற விழாக்களை நம் முன்னோர் முன்னெடுத்தனர்.
லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்பதாக நினைந்து, ஆற்றங்கரைகளில், அகிலம் காக்கும் அம்பிகைக்கு தேங்காய், பழம், மங்கலப்பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள்.
அம்பிகைக்கு, வகைவகையான வண்ண சாதங்களை (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல்) ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, அம்பிகைக்கு படைத்துவிட்டு, குடும்பத்துடன் குதூகலமாக உண்டு களிப்பார்கள்.
அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள்.



