Monday, March 25, 2013

பங்குனி உத்திரத் திருநாள்
"ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாமாயே மகாயோகின்யை ஈஸ்வரி!
நந்தகோப ஸுதம் தேவி பதிம்தே குருவே நமஹ'

என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால்,
விரும்பிய  வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்கும்.மகாலட்சுமி பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து,
மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
பிரம்மா, தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன்,
மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் ...

சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

வைணவர் களின் பெரிய கோவில் என சிறப்பிக்கப்படுவதும் 108 திவ்யதேசங்களில் முதன்மையான தலமுமான திருவரங்கத்தில், 12 மாதங்களும் உற்சவம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

பங்குனியில் நடைபெறும் உற்சவத்தின் 9-ஆம் நாள்
பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி சேவை நடைபெறும். அன்று பெருமாள் தன் பிராட்டி ஸ்ரீரங்க நாச்சியாரை காண்பதற்குப் புறப்படுவார்.

அப்போது பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாதென தடை செய்வார் பிராட்டியார்.

ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறையூர் சென்று ஒருநாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்த கோபம்தான் தடை செய்ததன் காரணம்.

இந்த பிணக்கை நம்மாழ்வார் தீர்த்து வைத்தார்.

பெருமாள் தன் தவறை பிரதான பிராட்டியிடம் ஒப்புக்கொள்ள, நாச்சியார் பெருமாளை ஏற்றுக் கொண்டார்.பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர்.

இது  ஆலய 5-ஆவது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும். சேர்த்தி விழாவைக் காண் பவர்களுக்கும் திருமணப்பேறு சித்திக்கும்.

சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான்.

அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும்.

எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு.

இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள்.

கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது.

ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான்.

முருகப் பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.


ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி யாற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தாரை, தப்பட்டை, உடுக்கை, பெரியமேளம், திருச்சின்னம், பேரிகை, நாதஸ்வரம் உள் ளிட்ட இசைக்கருவிகள் முழங்க பழனி வந்தடைந்து தீர்த்தக் காவடிகளுடன் ஆறுமுகக் காவடி, மயில் காவடி, சர்க்கரைக்காவடி, இளநீர்க் காவடிகளும் எடுத்து வருவார்கள்..


பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.


வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்

ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக் கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான்.

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கி யம் பெற்றாள்.

அத்துடன் மகாலட்சுமி யின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள்.

அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பர ரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராள மானோர் திருமணம் செய்து கொள்வார் கள்- மதுரையைப்போலவே.

தேவேந்திரன்- இந்திராணி, நான் முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடை பெற்றன.

 இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரத்தன்று  கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங் களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.

அதுபோல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால்
முந்திக் கல்யாணம்தான்.

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.

அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

சபரிமலை ஐயப்பன் அவதார தினம் இது.

காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும்; திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர்.

 பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது.


Palani Panguni Uthiram Festival Aid0174

11 comments:

 1. விளக்கங்களும், படங்களும் மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. good pics especially lord murugan in chariot

  ReplyDelete
 3. ஆஹா காலையில் அற்புதமான என்பெருமான் தரிசனம்..அழகான புகைப்படங்கள்..பங்குனி விரதத்தின் சிறப்புகளை அழகா சொல்லிருக்கீங்க!!

  ReplyDelete
 4. அருமையான அழகான படைப்பு.

  அற்புதமான படங்கள்.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete
 5. கீழிருந்து ஐந்தாவது படம் புதுமையாக உள்ளது.

  விளக்கங்கள் யாவும் அசத்தலாக உள்ளது. ;)))))

  ReplyDelete
 6. சகோதரி...
  பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கிறது. இத்தனை சிறப்புக்கள் இந்த பங்குனி உத்திரத் திருநாளிலா???

  அற்புதமான பதிவு. அழகிய படங்கள்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 7. எத்தனை எத்தனை அற்புதத் தகவல்கள். மிக மிக அருமையான அழகுப்படங்கள். மிக நல்லதொரு தெய்வீகப் பதிவைத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி அம்மா!!

  ReplyDelete
 8. எத்தனை தகவல்கள்!அழகிய படங்கள்!தெய்வீகம்!

  ReplyDelete
 9. இவ்வளவு தெய்வீகம் நிறைந்ததா பங்குனி உத்திரம்.
  மலைக்க வைக்கிறது நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள்.
  நன்றி உங்கள் பகிர்விற்கு.

  ReplyDelete
 10. பங்குனிஉத்திரம் பலசிறப்புக்களையும் விரிவாகப் பகிர்ந்து சிறப்பித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete