Showing posts with label கிறிஸ்தவ திருநாள். Show all posts
Showing posts with label கிறிஸ்தவ திருநாள். Show all posts

Friday, April 18, 2014

புனித - பெரிய வெள்ளி



கிறிஸ்துவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் ஈஸ்டர் பண்டிகை முக்கியமானதொன்றாகும். 

ஈஸ்டர் அல்லது உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களை தவக்காலம் என்று கிறிஸ்துவர்கள் அழைக்கிறார்கள். 

இந்நாட்கள் செபத்திலும் தவத்திலும், 
தானதர்மத்திலும் செலவழிக்கப்படுகிறது.
ஈஸ்டருக்கு முந்தைய வாரம்தான் புனித வாரம் என்று அழைக்கப்படுகிறது. 

புனித வாரத்தின் வியாழன், பெரிய வியாழன் எனவும், 
வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. 

அந்த வாரத்தின் இறுதி நாளான ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
பெரிய வெள்ளி இயேசு சிலுவையில் உயிர் துறந்த நாளாகும். 

மனிதரின் மீட்புக்காக இறை மகனே மனித உருவெடுத்து சிலுவைச் சாவுக்கு தம்மை உட்படுத்திக் கொண்ட நாளாகும். 

அன்றைய ஆளும் வர்க்கத்தினரால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி என்று அழைக்கப்பட்ட மலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிலுவையில் அறையப்பட்டு மரணத்துக்கு உட்படுத்தப்பட்டார்.
இயேசுநாதரின் பாடுகளின் பதினான்கு நிலைகள் ஒவ்வொரு தவக்கால வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயங்களில் நடைபெறும் சிலுவைப்பாதை என்னும் வழிபாட்டின்போது தியானிக்கப்படுகின்றன.

புனித வெள்ளியன்று நடைபெறும் சிலுவைப்பாதைக்குப் பின்னர் 
மூன்று நாட்களுக்கு கோயிலில் எந்த வழிபாடும் நடைபெறாது.
கிறிஸ்து மூன்று நாட்கள் கல்லறையில் புதையுண்டிருந்ததை நினைவுகூறும் விதமாகத்தான் இவ்வாறு நடைபெறுகிறது.
கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசு மூன்றாம் நாள் மாட்சிமையுடன் உயிர் பெற்று எழுந்தார். இந்த நிகழ்ச்சியைத்தான் சனிக்கிழமையன்று இரவு பன்னிரண்டு மணியளவில் கிறிஸ்துவ ஆலயங்களில் மிகுந்த விமரிசையோடு வழிபாடுகளாக நடத்துகிறார்கள். 

தீயசக்திகளை எதிர்த்து வெற்றி கண்டு, ஒளியான இறைவன் உயிர்த்தெழுந்தார் என்பதை நினைவூட்டும் விதமாக நெருப்பு, தண்ணீர் ஆகியவை மந்திரிக்கப்படுகின்றன.
ஆம்.. சூதும், வாதும் வெற்றி பெறுவதுபோல் தோன்றினாலும் இறுதியில் ஒளிப்பிழம்பான இறைவனுக்குத்தான் வெற்றி. நல்லோர்களின் துன்பமும் வேதனையும் ஒருபோதும் வீண்போவதில்லை. இதுவே ஈஸ்டர் பெருநாள் நமக்கு உணர்த்தும் உண்மை.

Thursday, April 17, 2014

மனிதம் மலரும் மகத்தான திருநாள்- புனித பெரிய வியாழன்.

















பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது.

இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு
எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும்.

பெரிய வியாழன்  "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" (Easter Triduum) முதல் நாள் ஆகும்.

இரண்டாம் நாள் புனித வெள்ளி (Good Friday),
மூன்றாம் நாள் புனித சனி (Holy Saturday) என்று அழைக்கப்படுகின்றன.

இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.

இயேசு தன்  சீடர்களின் பாதங்களை கழுவி தலைமைக்கு முதல் பண்பு முதலில் நாம் ஒரு தொண்டனாக இருக்க வேண்டும் என்று பாடம் கற்பித்த நாள் -தம்மைத் தாழ்த்துகிறவர், உயர்த்தப்படுவார்” என்று அவரே மொழிந்ததற்கேற்ப, தன்னை அவர் தாழ்த்திக்கொண்டார்.

அவருடைய தாழ்ச்சி புகழப்படுகிறது “சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்குமளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்..என வேண்டிக்கொள்கின்றனர்..

Wednesday, April 16, 2014

திருநீற்றுப் புதன்






Mother Mary Matha's photo of Jinil Mb, Nibin Kanjirathingal, Arun P Alphonse and 17 other people.
ஈஸ்டர் வாரத்திற்கு முந்திய 40 நாட்கள் ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து  தவக்காலமாக கடைப்பிடிப்பார்கள்..!

நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள்  சாம்பல் புதன் வழிபாட்டு நாளில் இருந்து தொடங்கும். 
இதுவே  திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். 


தவக்காலம் என்பது  தவறுகளை உணர்ந்து திருந்தவும், தம்மை தாமே அறிந்து தம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். 
அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.

நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.

நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.

இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.

தவக்காலம் தமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். தமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.

இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.
நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. 

நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.

இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.

குருத்தோலை நாளில் அளிக்கப்பட்ட ஓலகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை ஆலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார் பூசுவார். 

அப்போது ‘‘மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’’ என்று கூறுவார்.

இதன்மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல. தவறு செய்வோர் தன்னை திருத்திக் கொள்ளவும், அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும் என்பது நினைவூட்டப்படுகிறது. நாளை முதல் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் தவக்காலம் தொடங்குகிறது.

இந்த 40 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். வீடுகளில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது. அன்னதானம் வழங்குவர். ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் ஏசுவின் இறப்பை நினைவூட்டும் சிலுவைபாதை வழிபாடு நடைபெறும்.
இந்த தவக்காலத்தின் கடைசி வாரமான ஏப்ரல் 17, 18–ந்தேதிகளில் புனித வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. 

புனித வியாழன் அன்று ஏசுவின் கடைசி விருந்து, புனித வெள்ளியில் ஏசுவின் சிலுவை மரணம் ஆகிய வற்றை நினைவூட்டும் வழிபாடுகள் நடைபெறும். 

 புனித சனி இரவில் ஈஸ்டர் வழிபாடும்,  ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டமும் நடைபெறுகிறது.
இறை வார்த்தை

நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.