ஸ்ரீமத் பாகவதத்தில் வியாச முனிவர் மகாவிஷ்ணு எடுத்த எண்ணற்ற அவதாரங்களில் முக்கியமான அவதாரங்களை விவரிக்கும் பகுதி சுவாரஸ்யமானது..

பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதத்தை விளக்கிக் காட்ட, நான்முகனை சரீரமாகக் கொண்டு அவரது புத்திரர்களாக அவதரித்தவர்கள் சனக, சனந்தன, சனத்குமார, சனத்சுஜாத (நால்வர்) அவதாரம்.
சிவபெருமான் சனகாதி நால்வருக்கும் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் விளக்கிக் கூறினார்.
இதில் பரப்ரம்ம தத்வத்தைச் சொல்வது வயதில் சிறியவராக உள்ள தக்ஷிணாமூர்த்தி. அவர் தத்துவம் கூறிய விதம் மௌனமொழி. சிறந்ததான சிஷ்யர்கள் நால்வருக்கும் அது எளிதில் விளங்கிவிட்டது.
அற்புதமான ஓர் ஆசிரியரல்லவா தென்திசைக்கடவுள் தட்சிணாமூர்த்தி..
இரண்யாட்சகனால் பாதாளலோகத்திற்கு கவர்ந்து செல்லப்பட்ட பூமியை மீட்டு வெளிக்கொண்டுவர எடுத்தது வராக அவதாரம்.
பக்தியே முக்கியம் என்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தை விளக்குவதற்காக எடுத்தது நாரதர் அவதாரம்.
புலனடக்கம் செய்து தவமியற்றுவது எப்படி என்பதை நிரூபிக்க எடுத்தது
நர- நாராயணர்களின் அவதாரம்.
தன் தாய்க்கு நற்கதியடையும் வழிகளை உபதேசிக்க எடுத்தது
கபில அவதாரம்.
தாய் தேவஹூதிக்கு உபதேசிக்கும் கபில முனிவர்
அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாகத் தோன்றி,
பிரகலாதனுக்கும், அலர்க்கனுக்கும் உபதேசிக்க எடுத்தது
தத்தாத்ரேயர் அவதாரம்.

ஒரு தேசத்தை நன்றாக ஆளும் விதத்தை ருசி என்னும் முனிவருக்கு விளக்கிக் கூற எடுத்தது யக்ஞ அவதாரம்.
சுருதிகளின் சாரமாகிய பகவத் கீதையிலும் கண்ணனும், "அதி யஜ்ஞோ அஹம் ஏவ" [அதியக்ஞம் எனப்படுவதும் நானே --என்றான்.
ஸ்வாயம்பு மனுவின் பேரனுக்கு புத்திரனாகப் பிறந்து, தருமங்களை நிலைநாட்ட எடுத்தது ரிஷபதேவ அவதாரம்.
தவ முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடியவனான வேனனை அழிக்க எடுத்தது பிருது அவதாரம்.
- பிருது மன்னன் அவதாரத்தில் எல்லாத் தலங்களுக்கும் பறக்கும் விமானத்தில் சென்று வழிபட்டுவரும் சமயத்தில் கூடல் மாநகரத்தின் மீது பறக்கும் போது அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போக இறங்கி வணங்கினார்

மச்ச அவதாரம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்துக்காக பாற்கடலைக் கடைந்தபோது, அதைத் தாங்க கடலடியில் போய் எடுத்தது கூர்ம (ஆமை) அவதாரம்.
பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிவந்த போது, அதை பாத்திரத்தில் எடுத்து தேவர் களிடம் கொடுப்பதற்காக எடுத்தது தன்வந்திரி அவதாரம்.

அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட எடுத்தது
மோகினி அவதாரம்.

தன் பக்தன் பிரகலாதனைத் துன்புறுத்திய இரண்ய கசிபுவைக் கொல்வதற்காக எடுத்தது நரசிம்ம அவதாரம்.
தன் பக்தனான மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனைப் பாதாள லோகத்திற்கு போகச் செய்ய எடுத்தது வாமன அவதாரம்.
ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வனாகப் பிறந்து, 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழிக்க எடுத்தது பரசுராம அவதாரம்.
வேதங்கள் மிகவும் விஸ்தாரமாய் இருந்ததால், அவற்றை நான்காக வகுத்து பரவச் செய்யும் பொருட்டும், தருமங்களை எல்லாருக்கும் உபதேசிக்கும் பொருட்டும் எடுத்தது வியாச அவதாரம்.
இராவணன், கும்பகர்ணன் மற்றும் அரக்கர்களைக் கொன்று, முனிவர்களைக் காப்பாற்றி சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்தது ராம அவதாரம்.
கம்சன், சிசுபாலன், தந்த வக்ரன் முதலிய அரக்கர்கள் நீண்டநாள் வாழ்ந்ததனால்,அவர்களைக் கொன்று பூமி பாரத்தைக் குறைக்க எடுத்தது பலராம- ஸ்ரீகிருஷ்ணஅவதாரங்கள்.


அஹிம்சை தத்துவத்தை மறுபடியும் பூமியில் நிலைநாட்டி வேரூன்றச் செய்ய எடுத்தது புத்தர் அவதாரம்.
கலியுகத்தில் அதர்மம் மேலிட்டு தர்மம் அழியும்போது அந்த தர்மத்தை மறுபடியும் நிலைநாட்ட பகவான் எடுக்க இருப்பது கல்கி அவதாரம்.
எந்தெந்த சமயத்தில் என்னென்ன குணங்கள் குறைந்து, கெட்ட குணங்களும் அதர்ம மும் மேலிடுகின்றனவோ, அவ்வப்பொழு தெல்லாம் தோன்றி அவ்வக்குறைகளைத் தீர்த்து உலகத்தை பகவான் உய்வித்திருக்கிறார்.
இந்த அவதாரங்களில் பகவான் முழுஅம்சத்துடன் அவதரித்தது ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் நோக்கம்- நடக்கும் கலியுகத்தில் இன்று வாழும் மானுடர்களுக்கும் பிறக்கப்போகும் மானுடர்களுக்கும் நல்வழிகாட்டி தர்மத்தை உபதேசிப்பதேயாகும்!
திருமால் பெருமைக்கு நிகரேது -
உன்றன் திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் -
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் -
தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் - மச்ச அவதாரம்!
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் -
எங்கள் அச்சுதனே உன்றன் அவதாரம் - கூர்ம அவதாரம்!
பூமியைக் காத்திட ஒரு காலம் -
நீ புனைந்தது மற்றொரு அவதாரம் - வராக அவதாரம்!
நாராயணா என்னும் திருநாமம் -
நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் - நரசிம்ம அவதாரம்!
மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து -
இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம- வாமன அவதாரம்!
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் -
என்று சாற்றியதும் ஒரு அவதாரம் - பரசுராம அவதாரம்!
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் -
எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம் - ராம அவதாரம்!
ரகு குலம் கொண்டது ஒரு ராமன் -
பின்பு யது குலம் கண்டது பலராமன் - பலராமன்
அரசு முறை வழிநெறி காக்க -
நீ அடைந்தது இன்னொரு அவதாரம் - கண்ணன் அவதாரம்
விதி நடந்ததென மதி முடிந்ததென வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும் உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க -
நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் - கல்கி அவதாரம்!




