Wednesday, July 10, 2013

விநாயகர் அகவல்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

விநாயகர் மிகவும் விரும்பும் பாடல் - 
விநாயகரேஔவையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி 
சொல்லி, தலையாட்டிக் கேட்ட பாடல் விநாயகர் அகவல்
மாயாப்பிறவி மயக்கம் அறுத்து சொற்பதங் கடந்த துரிய 
மெய்ஞானத்தைக் காட்டுபவர் மூலாதார கணபதி ..!

அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டுகிறார். 
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து தத்துவநிலையைத் தந்தெமையாண்ட வித்தக விநாயகன் விரை கழல் சரணடைவோம்.
திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கியநண்பர்.

ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணிசிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்.

சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச்செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.
சுந்தரரும்யானை மீது கிளம்பி விட்டார்.
 சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார்.

அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில்"சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப்பறந்தது. 

 சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். 

ஓரிடத்தில்ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு 
அவரையும்  அழைத்தனர்.

பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்றார் ஔவை..!
விநாயகர் ஔவையார் முன் தோன்றி,  கைலாயம் போக வேண்டுமா?' என்றார்.

கணபதி  இருக்கும் இடமும்,அவரைப்  பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீவிருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் ஔவையார்.
 தெய்வக் குழந்தையான தன்னைப்பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். 
பாடிமுடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் ஔவையைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான்பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

ஔவையின் கயிலைப் பயணம்விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சுகரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே

திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி

புரியட்ட காயம் புலப்பட எனக்கு சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும் எண்முகமாக இனிதெனக் கருளிபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே

வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்

எல்லை இல்லா ஆனந் தமளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக விரைகழல்  சரணே.


19 comments:

 1. ஐராவதத்தை சிவாயநம என்றோதக் கேட்ட குதிரை தொடர, அதையும் விஞ்சிய தும்பிக்கையானின் தும்பிக்கை சிலிர்க்கச் செய்தது.

  குடங் களால் உருவான விநாயகர் கண்ணுக்கு விருந்து. தீபாராதனையும் ஆனந்த நடனமுமாக கொண்டாட்டம் தான் விநாயகர் தயவில்.

  அகவல் 'காப்பி'செய்து கொள்ள முடியாதது வருத்தமே. இருக்கவே இருக்கு எழுது கோலும் தாளும்.

  ReplyDelete
 2. அருமையான தகவல். நர்த்தனம் புரியும் விநாயகர் படம் ரொம்பவும் பிடித்தது!

  ReplyDelete
 3. சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
  எண்முகமாக இனிதெனக் கருளி
  புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
  தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

  என்று வரும் கொஞ்சம் மாறி வந்து இருக்கிறது.
  நிலாமகள் எழுதிக் கொள்வேன் என்றதால் இந்த வரியை சரிப் படுத்தி இருக்கிறேன்.
  படங்கள் எல்லாம் அழகு.
  ஒளவையின் கயிலைப்படம் மிக அழகு.
  ஒளவையின் கயிலை வரலாறூ அருமை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்த கதை சொல்வார்கள். நீங்கள் சொல்லும் கதை மிக அருமை.

  ReplyDelete
 4. அழகு. அழகு கொஞ்சும் படங்களுடன், கருத்துப் பேழை. சிறப்பானதொரு பகிர்வு. நன்றி சகோதரி!
  தங்களின் ஓய்வில் வருகை தாருங்கள் கிருஷ்ணாலயாவிற்கு!
  http://www.krishnaalaya.com

  ReplyDelete
 5. ஆஹா..படமும் பாடலும் அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. Aha ha
  Arputham. Each and every pictures are very very pretty.
  Since i know vinayagar akaval, I spend much more time watching the pictures only again and agin and enjoy every bit.
  Thanks dear.
  viji

  ReplyDelete
 7. இன்று ”விநாயகர் அகவல்” பற்றிய மிகவும் அருமையான எளிமையான பதிவாகக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 8. ஒளவைக்கிழவி மஹாகெட்டிக்காரி. [உங்களைப்போலவே]

  அந்தக்காலத்திலேயே விநாயகரிடம் ”நான் நான்கு தருகிறேன், நீ மூன்று தா போதும்” என BARGAIN செய்திருக்கிறாள், பாருங்கோ.

  இதை நான் தாங்கள் என் பதிவுகளுக்குத் தந்துவரும் பின்னூட்டங்களுக்காகச் சொல்லவில்லையாக்கும். ;)))))

  >>>>>

  ReplyDelete
 9. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் கைலாயம் புறப்பட்டுச் சென்றதும், ஒளவைப்பாட்டி விநாயகரை வேண்டிக்கொள்ள, அவர் தன் துதிக்கையை மிக நீளமாக்கி, ஒளவையை ஒரே சுருட்டாகச்சுருட்டி, கைலாயத்துக்குக் கொண்டு சேர்க்கும் அழகான காட்சிகளை, கலர் கலரான மிகப்பிரும்மாண்டமான, படங்களுடன் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் உள்ள ஜில் ஜில் மண்டபத்தில் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

  இது, இதுவரை, அதனைப்பார்க்காதவர்கள் பார்ப்பதற்காக மட்டுமே எழுதியுள்ளேன்.

  தாங்கள் பார்க்காத கோயிலோ, குளமோ, படமோ, பதிவோ தான், இந்த உலககத்திலேயே இருக்க முடியாதே !

  >>>>>>

  ReplyDelete
 10. விநாயகர் அகவல் படித்தால் மிகவும் நல்லது. பழகி விட்டால் உச்சரித்துச் சொல்ல மிகவும் எளிமையானது.

  எந்தப் புராண கதைகளாயினும் தாங்கள் சொல்லிக்கேட்கும் போது, நான் ஒரு சிறு குழந்தைபோல ஆகி விடுகிறேன்.

  தாயின் தாலாட்டு கேட்டு தூளியில் தூங்கப்போகும் குழந்தைபோல ஆகிவிடுகிறது, என் மனது. ;)))))

  [ருத்ராக்ஷப்பூனை பற்றி நான் கேட்டதற்கு ஓர் விளக்கம் கொடுத்து கதை சொன்னீர்களே! என்னால் அதை மறக்கவே முடியாது.

  அதிலும் அந்தக்கதையில் “சிவ சிவா” என்று வருமே, அந்த இடத்தில் தாங்களே நேரில் பொறுமையாக இனிமையாக ஓர் கைக்குழந்தைக்கு கதை சொல்வதுபோல கற்பனை செய்து மகிழ்ந்தேன்.]

  >>>>>>

  ReplyDelete
 11. படங்கள் அத்தனையும் வழக்கம்போல் அழ்கோ அழகு. கொலுசு அணிந்துள்ள யானையை பஹூத் படா சைஸில் காட்டியுள்ளீர்கள். அச்சா, பஹூத் அச்சா.

  >>>>>>

  ReplyDelete
 12. விநாயகரையும் ஹனுமனையும் பற்றி தாங்கள் எவ்வளவு பதிவுகள் கொடுத்தாலும், ஒவ்வொன்றிலும் புதுமையான பதுப்புதுச் செய்திகள் அறிந்துகொள்ள முடிகிறது. தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணிகள்.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  இனிமையான நல்வாழ்த்துகள்

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  ooooo 966 ooooo

  ReplyDelete
 13. படமும், தகவலும் அருமை...

  ReplyDelete
 14. சங்கத் தமிழ் மூன்றும் தா ! அற்புதமான வேண்டுதல் யாம் வேண்டுவதும் அதே...
  முழு உருவ யானைப் படம் முதல். வாகத்தில் பயணம் செய்யும் விநாயகர் படம் என எல்லாமே அருமை.

  ReplyDelete
 15. விநாயகர் அகவலின் மகிமையைத் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 16. விநாயகர் அகவல் பிறந்த கதையும் படங்களும் விளக்கங்களும் மிகவும் சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 17. ஔவையார் கைலாசம் சென்ற கதையும், சிற்பமும் அருமை. தும்பிக்கையானின் பல்வேறு அலங்காரக் கோலங்கள் கண்ணுக்கு விருந்து.
  விநாயகர் அகவல் தினமும் சேவிக்க வசதியாக உங்கள் தளத்தில் கிடைப்பது எங்கள் பாக்கியம்.

  ReplyDelete

 18. பெரும்பாலும் அகவலில்வரும் பல சொற்றொடர்களுக்குப் பொருள் புரிவதில்லை. நிறைய விஷய ஞானம் தேவை. வழக்கம்போல் படங்களும் பதிவும் நேர்த்தியாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete