Sunday, December 8, 2013

ஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..!


 
”நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம்
பல்லாயிர கோடி பரந்துளவால்;
இல்லாதன இல்லை – இளங்குமரா!

முறையும், முடிவும் இலை, மொய் உயிர்’ என்று
இறைவன் இளையானொடு இயம்பினனால்

தங்கமயமான தகதகக்கும் உடலும், மாணிக்கத்தால் காதுகளும், கால்களும், வாலும் கொண்ட மானைப் பார்த்து,  அதைப் பிடித்துத் தாருங்கள் என்று சீதை வேண்டுகிறாள். சந்தேகத்துடன், இது போன்ற  மான் உலகில் கண்டதில்லை  என்று லட்சுமணன் கூற

இந்த உலகின் ரகசியங்களை அறிவில் வல்லவர்களும் முழுதும் உணர முடியாது. பல்லாயிரம் கோடியாகப்  பரந்து, முறையும், முடிவும் இல்லாத உயிர்த் தொகுதியில்,  இல்லாதது என்று ஒன்று இல்லை  தம்பி”  என்று  இராமன் அதற்குப் பதில் கூறுகிறார்..!.
இராமாயணத்தில் கம்பர் காட்டும் அற்புதக்காட்சி .....!

மனித பிரக்ஞையில் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சாத்தியங்கள் தெய்வீகப் பிரக்ஞையில்  உண்மையாகவே இருக்கக் கூடும்.

மாவீரனான அர்ஜுனனுக்கு  முன்  சேவல் தலை,  மயில் கழுத்து,  எருதின் திமிலுடன் கூடிய உடல்,  சிங்கத்தின்  கம்பீரமான இடை, பாம்பு வால்.    யானைக் கால், மான் கால்,  புலிக் கால் என்று மூன்று கால்களுடனும்,  ஒரு மனிதக் கையுடனும் ஒரு விசித்திர பிராணி தோன்றியது – 
இது ஒரு அரக்கன் தான் என்று முடிவுகட்டி விட்ட அர்ஜுனன், தாக்குதலுக்காகத் தன் வில்லை எடுக்கையில் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான்.  அந்தப் பிராணி தன் கையில் தாமரை மலரை ஏந்தி இருந்தது.

உடனே அர்ஜுனன் என்ன பிராணி இது என்று யோசிக்கத் தொடங்கினான்.

ஒரு குறிப்பிட்ட ஜந்து என்று சொல்ல முடியாமல் இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று சேர்ந்து இருந்தது அது.

இயற்கையின் சிருஷ்டியில் இப்படி ஒரு பிராணியும் இருக்குமா என்ன?
இது போன்ற ஒரு மிருகத்தை இது வரை அவன் கண்டதில்லை.

ஆனால் அப்படிக் காணாததாலேயே அது இல்லை என்று
ஆகிவிடாது  என்று அவன் மனம் சொன்னது. ,

 “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய் நண்பா!”  என்று ஆரம்பிக்கும் தனது உயிர் நண்பனான கிருஷ்ண பரமாத்மாவின்  உபதேசத்தை எண்ணிப் பார்த்தான்.

“மனித மனம் ஒரு எல்லைக்குள் அடங்குவது, ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது” என்பதை நினைவுகூர்ந்தான்.

தன் வில்லைக் கீழே வைத்து விட்டு, விழுந்து வணங்கினான்.

ஒன்பது  உயிர்வகைகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய அந்தப் பிராணியின் பெயர் நவகுஞ்சரம் (Navagunjara). இந்த ஞானத்தை அர்ஜுனனுக்கு வழங்குவதற்காகவே எழுந்தருளிய தெய்வ வடிவம் அது!

விசித்திர பிராணியிடத்தில் சிறுதுளியாக அர்ஜுனனுக்கு வந்த ஞானம், விஸ்வரூப தரிசனத்தில் முழுமையடைந்திருக்க வேண்டும்.

கடந்தவையும், வருபவையும்,  கண்டவையும், காணாதவையும்,  அறிந்தவையும், அறியாதவையும் எல்லாம் அர்ஜுனனுக்கு அந்த தரிசனத்தில் புலப் பட்டது.

அவன் கண்கள் கூசின,  உடல் சிலிர்த்தது.  பிரமிப்பு அடங்கவில்லை. ”வானத்தின் எல்லைகளுக்குள் தன்னைக் கட்டி வைத்திருக்கும் மனிதன் தான் எவ்வளவு முட்டாள்?” என்ற எண்ணம் மேலிட்டது.

பணிவுடன் சிரம் தாழ்த்தி பிரபஞ்சத்தின் அந்தப் பேரிருப்பை அவன் மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தான்.

அவனது பார்வை வானத்திற்கப்பால்  சத்தியத்தின் (இருப்பின்) எல்லையற்ற சாத்தியங்களை .நோக்கி  :பகிர்ந்து கொள்ளவிரிந்தது, ’

அர்ஜுனன் - மகாபாரதக் கதையை,  கிரேக்க புராணங்களில் வரும் கைமெரா (Chimera) என்ற விசித்திரப் பிராணியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்..!


ஹோமரின் இலியட் காவியத்திலும்  விசித்திரப் பிராணி குறிப்பிடப் படுகிறது.
சிங்க உடலும்,  முதுகிலிருந்து கிளைக்கும் ஆட்டுத் தலையும்,  பாம்பு வாலும் கொண்ட நெருப்பு உமிழும் விசித்திர மிருகம் இது.
கைமெராவைக் காண்பது ஒரு தீய சகுனம்;

அது சூறாவளி,  எரிமலைகள், கப்பல் கவிழ்தல் மற்றும் இயற்கை விபத்துக்களுடன் தொடர்புடையது என்று கூறப் பட்டது.

அரக்கத் தன்மை கொண்ட இந்த மிருகம் ஆசியாவைச் சேர்ந்ததாகவும்,  பெண்ணாகவும் கருதப் பட்டது ...

கடைசியில் பெகாஸஸ் (Pegasus) என்ற தேவலோகக் குதிரை மீதேறி வரும் வீர நாயகன் பெல்லர்ஃபோன் (Bellerophon) இந்தப் பிராணியை வேட்டையாடி முற்றிலுமாக அழிக்கிறான்.

ஆங்கில மொழி வழக்கில்  chimera என்ற சொல்லுக்கு  ”முட்டாள்தனமான பொய்க் கற்பனை” என்றே பொருள் உண்டாகி விட்டது!

இந்து புராணங்களில் பூதகணங்கள் தர்மத்திற்காகப் போராடுகிறார்கள்; கோயில் மதில்சுவர்களில் மனிதர்களின் பாதுகாவலர்களாக நிற்கிறார்கள்;  தெய்வவடிவங்களைச் சுற்றிய  அலங்கார  பிரபை வளைவில் திருவாசிகளில் கீர்த்திமுகமாக  அருள் வழங்குகிறார்கள்....


யாளிகள் போன்றவற்றை ஆலயங்களின் தூண்களிலும் கோவில் கோபுர சிற்பங்களிலும் கண்டு வியக்கலம் ..!

 சரபேஸ்வரர் , நரசிம்மர் போன்ற வடிவங்கள் தத்துவங்கள் நிரம்பியவை ..
நம் பயங்களை போக்குபவை ..!

”அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்று அடக்கத்துடன் உரைத்தார்
தெய்வப் புலவர். வள்ளுவர்..!

”ஒற்றைப் படையான குறுகிய அறிவை விடுத்து, மாறுபட்டுத் தோன்றும்  பொருட்கள் அனைத்திலும் பிரியாமல் நிற்கும் ஒருமையை உணர்வதே உண்மையான அறிவு. அத்தகைய அறிவாகத் திகழும் பிரான் அல்லவா நீ?” என்று பாடுகிறார்கள்  இறைஞானிகள்..!

“அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிரிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?”

(கந்தர் அனுபூதி, அருணகிரிநாதர்)

இந்து ஞான மரபின் தத்துவ தரிசனங்கள் அனைத்திலும் இந்த ஞானம் இழையோடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

 வேதாந்த தரிசனத்தில்   பரம்பொருளான  பிரம்மமாகவும்,  அதன் இயங்கு சக்தியான  மாயையாகவும்  பரிணாமம் கொள்கிறது.

தேவதைகள்,  அசுரர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யட்சர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், மிருகங்கள், பறவைகள், செடி, கொடிகள் இவற்றோடு அறியாதவையும்,  கற்பனை செய்யாதவையும், ஏன் கற்பனை செய்ய முடியாதவையும் எல்லாம்  அங்கே உயிர்த்துடிப்புடன் திகழ்கின்றன.

அழகு ததும்பும் அப்சரஸ்களும்,  அச்சுறுத்தும் வடிவம் கொண்ட பூதகணங்களும்  அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள்.

மிருகங்களுக்கும்  மனிதர்களுக்கும்,  மனிதர்களுக்கும் தேவர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான இடைவெளிகள் எல்லாம் அங்கே அழிந்து விடுவதாகத் தோன்றுகிறது!

மனித மனத்தின் கசடுகள் செயற்கையாக, அடுக்கடுக்காக உருவாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு  சுவரையும் உடைப்பதற்காகவே  நம் முன்னோர்கள் ஆலயங்களில் இத்தகைய  ஏற்பாட்டைச் செய்தார்களோ? இருக்கலாம்.

அறிவார்ந்த தத்துவ ஞானம், அற்புதமான படைப்புத் திறனுடன் கலந்து, அழகிய கலையாக வெளிப்பட்டு நிற்கையில், அது நம் ஆழ்மனத்தில்  பதிந்து விடுவதில் ஆச்சரியமில்லையே!

விசித்திரங்கள் கொண்ட புராணங்களும்,  கோயில் சிற்பங்களும்  நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை  நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.

முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும்,  புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது  என்று  நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

 ’ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன் படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகள் தான்!

19 comments:

 1. எப்படித்தான் இந்தப் படங்கள் தங்களுக்கு மட்டும் கிடைக்கின்றதோ
  அருமை சகோதரியாரே

  ReplyDelete
 2. இப்பதிவு ஒரு முக்கியமானதொரு கருத்தினை தெளிவுபடுத்தும் பதிவு! ஆனாலும் முழுமை பெறவில்லை என்பது என் கருத்து. இரு பதிவுகளாக அளிக்கப் பட வேண்டிய கருத்துகள் நிறைந்துள்ளன. இது காறும் வந்த பதிவுகளில் இதுவே தலைசிறந்த பதிவாக அடியேன் பார்க்கின்றேன். சமயம் வரும் போது, மெய்ஞான உண்மைப்பொருளினை அளிக்கும் இப்பதிவை தாங்களே மெருகூட்டி அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது..

  சகோதரி! வழமையான பதிவுகளில் இருந்து விடுபட்டு மெய்ஞான பதிவை எழுத வைத்த எம் கண்ணனுக்கும் எம் சகோதரிக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

  மெய்ஞான பதிவு எழுதிடும் வல்லமை எம் கண்ணன் அருள்வானாக!
  அன்னை அபிராமியின் அருளாசியும் தொடருக!....வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. பிரமிப்பாக இருக்கின்றது!..
  திரு. ரவி கிருஷ்ணா அவர்கள் கூறியது போல - இந்தப்பதிவின் உண்மைப் பொருளையும் தாங்களே எழுதிட இறைவன் அருள்வானாக!..

  ReplyDelete
 4. அசர வைக்கும் படங்கள் + தகவல்கள்... வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...

  ReplyDelete
 5. உண்மையிலும் படங்கள் எம்மையும் அதிசயிக்கத் தான் வைக்கிறது !!
  பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள் சகோதரி .

  ReplyDelete
 6. மேலிருந்து கீழ் நான்காவது வரிசைப்படம் அற்புதமாக ஆச்சர்யமாக அதிசயமாக உள்ளது.

  எப்படித்தான் இதைக் கஷ்டப்பட்டுப் பிடித்து இங்கு பகிர்ந்துள்ளீர்களோ !

  பல்வேறு உணர்வுகளின், திறமைகளின், ஆற்றல்களில், தனித்தன்மைகளின் ஓர் கூட்டுக் கலவையாகவும் என்னால் பார்த்து மகிழ முடிகிறது.

  >>>>>

  ReplyDelete
 7. அதி காலையில் சீக்கரமாக எழ வேண்டும் என அழகாகச் சொல்லும் சேவல் ....

  உலகிலேயே என்னைப்போல அழகுண்டா நிறமுண்டா என அகந்தையுடன் அகவும் மயில் கழுத்து .....

  எந்த பாரத்தையும் துயரத்தையும் என்னால் என் முதுகில் ஏற்றி வாய் திறந்து புலம்பாமல் முடிந்தவரை இழுக்க முடியும் என்று பொறுமையுடன் கூறிடும் எருதின் திமில் .....

  மிகச்சிறந்த தலைமைப்பண்பினை சொல்லுவதாக சிங்கத்தின் உடல் .....

  தவறுகள் செய்து வாலாட்டுபவர்களைக்கண்டால் பொங்கியெழுந்து சீற்றத்துடன் தவறுகளைச் சுட்டிக்காட்டிட பாம்பின் உருவத்துடன் கூடிய வால் .....

  வேகமாக அதே சமயம் விவேகத்துடன் தான் முன்னடிகளை எடுத்து வைக்க வேண்டும் எனச் சொல்லும் யானையின் கால் ஒன்று மட்டும் முன்னே .......

  பிரச்சனை தீவிரமாகும் போது, அதனை வேரறுக்க மான் போலத் துள்ளி ஓடவும், மானை வேடையாடத் துரத்திடும் புலி போல பாய்ந்து ஓடவும் இரு பின்னங்கால்கள் ......

  ஆறாம் அறிவுடன் கூடிய தன் ஆற்றலைக் காட்டிடும் மனிதனின் கரம் .....

  அன்பு, அமைதி, சமாதானம், நட்பு இவற்றைச் சுட்டிக் காட்டிடும் தாமரைப்பூ .....

  என நாமும் அவரவர்களுக்குத் தோன்றியபடி கற்பனை செய்து மகிழக்கூடியதாக இந்தப்படம் அமைந்துள்ளது.

  >>>>>

  ReplyDelete
 8. ’நவகுஞ்சரம்’ பற்றிய விளக்கம் மிகவும் பாராட்டுக்குரியவை.

  >>>>>

  ReplyDelete
 9. எல்லாம் எனக்குத்தெரியும் என அர்ஜுனன் போல நினைப்பவர்கள் தான் இன்று ஏராளம் .... ஏராளம்.

  தெரியாதது எல்லாம் இல்லாதது என்று ஆகாது. மிகச்சரியாகச் சொல்லப்பட்டுள்ளது.

  இன்று நம் கணனியிலேயே, மின்னஞ்சல் தொடர்புகளிலேயே, எடுத்துக்கொண்டால், ஏதோ பதிவுகள், பின்னூட்டங்கள் என்று மட்டுமல்லாமல் பல்வேறு திரட்டிகள், INDLI, தமிழ்மணம், VOTES, LIKES, FACE BOOK, TWITTER, GOOGLE+, BCC COPY MARKING, CHATTING என எத்தனை எத்தனை மர்மமான வசதிகள் உள்ளன !

  ஒருவரையொருவர் தொடர்பு கொள்வது மற்றவர்களுக்குத் தெரியாத வண்ணம் SHARED IN PUBLIC, SHARED PRIVATELY என எவ்வளவோ வசதிகள் ஆச்சர்யமாக கொடுக்கப்பட்டுள்ளனவே !

  இவை எல்லாமே எல்லோருக்குமே தெரிய நேர்ந்தால் என்ன ஆகும் ! மேலும் மேலும் பிரச்சனைகளும் வெறுப்பும் அல்லவா ஏற்படக்கூடும்.

  அதனால் தெரியாதது எல்லாம் இல்லாதது என்று ஆகாது, என்பது மிகவும் உண்மைதான் !

  நன்றாகவே பசுமரத்தாணி போல, மனதில் ஏற்றி, இப்போதாவது புரிந்து கொள்ள முடிந்ததில் சந்தோஷமே.

  >>>>>

  ReplyDelete
 10. விஸ்வரூபம் எடுத்த கண்ணன் அர்ஜுனனுக்குச் சொல்வது போல

  ’மனிதமனம் ஒரு எல்லைக்குள் அடங்குவது [என்னைப்போலவும் என் பதிவுகள் போலவும்]

  ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது [தங்களைப்போலவும், தங்களின் பதிவுகள் + செயல்பாடுகள் + மற்றவர்களுடன் வைத்துக்கொள்ளும் தொடர்புகள் போலவும்]

  >>>>>

  ReplyDelete
 11. கோயில் சிற்பங்களில் உள்ள யாளிகள், சரபேஸ்வரர், நரசிம்ஹர் பற்றிச் சொல்லியுள்ளதெல்லாம் மிகச்சிறந்த உதாரணங்கள் + எடுத்துக்காட்டுகள்.

  >>>>>

  ReplyDelete
 12. உபநிஷத் வாக்கியமும், வள்ளுவர், அருணகிரிநாதர் போன்ற இறைஞானிகள் சொல்லியவற்றையும் சுட்டிக்காட்டி புரிய வைத்துள்ளது அருமையோ அருமை.

  மனித மனத்தின் கசடுகள் நீங்க, நம்முன்னோர்கள் எது செய்திருந்தாலும் அதில் எத்தனை எத்தனையோ உள் அர்த்தங்கள் நிரம்பியுள்ளன என்பது மிகவும் உண்மைதான்.

  >>>>>

  ReplyDelete
 13. ’ஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள்’ என்ற இன்றையப் பதிவும் எதேதோ சொல்லுகின்றன.

  படிக்கப்படிக்க விசித்திரமாகவும் வித்யாசமாகவும் ‘புரிந்தும் புரியாமலுமே’ உள்ளன.

  இதைத்திரும்பத்திரும்ப படித்தாலாவது ‘ஞானம்’ ஏற்பட்டால் சரியே.

  oo oo oo oo

  ReplyDelete
 14. மிகவும் அருமையாக இருந்த பதிவு. அந்த வினோத ஜந்து என்ன என்பது தெரியவில்லையே!

  ReplyDelete
 15. நவகுஞ்சரம்..... இதுவரை தெரியாத தகவல்.

  படங்கள் அனைத்துமே அருமை...

  ReplyDelete
 16. படங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
  விழிவிரிய பார்த்துக்கொண்டே இருந்தேன் சில கணங்கள்

  ReplyDelete
 17. படங்களுடன் விளக்கம் அருமை அம்மா...
  ஆஹா படங்கள் எல்லாம் அருமை... எங்கிருந்து கிடைக்கின்றன அம்மா.

  ReplyDelete
 18. முத்திரைக் குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும் புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதை திறந்து வைத்துக் கொள்வதே நல்லது. . அட்சரலட்சம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. இந்த பதிவினைத் தத்துவங்களின் தேரோட்டமாகவே பார்க்கிறேன். மேலெழுந்தவாரியாக கருத்து எழுத முடியாது.

  நில்லாத உலகை நிலையென்று நினைக்கும் நமது மனநிலையை விளக்கும் கருத்துரைகள் ஆங்காங்கே பொதிந்துள்ளன.

  அர்ச்சுனன் முன் தோன்றிய நவகுஞ்சரம் பற்றி பிரமிப்பான தகவல்கள், கிரேக்க புராணக் கதையில் வரும் Chimera மற்றும் ஹோமரின் இலக்கியத்தில் வரும் ட்ராகன் போன்ற விசித்திரப் பிராணி பற்றிய செய்திகள் தங்களது இலக்கிய ஆர்வத்தை காட்டுவதாகவே உள்ளன.

  இந்த பதிவை மீண்டும் ஒருமுறை நிதானமாக அசை போட வேண்டும். சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete