Monday, December 30, 2013

ஆனந்தம் அளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.

சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலைவாரி
ஓடுநீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே

என்று நெக்குருகிப் பாடுகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.மாந்துறை பெருமானைத் துதிக்க,எமபயம்இல்லையென்றும் சொல்கிறார்- 

திருஞானசம்பந்தர் போற்றி  பதிகம்  பாடித் துதிக்கும் மாந்துறை, 'காவிரியின் வட கரையில் இருப்பதால் வடகரை மாந்துறை' எனப்படுகிறது.
இலவம், குங்குமப்பூ, ஈச்சம், சுரபுன்னை, இளமருது, இலவங்கம், கோங்கு, செண்பகம், குருந்தை, பாதிரி, குரவம், நறவ மல்லிகை (தேன் சிந்தும் மல்லிகை), முல்லை ஆகியவற்றுடன், மௌவல் (ஒரு வகை காட்டு மல்லிகை) மலர்கள் போன்ற . வித வித மலர்களைக் கொண்டு வரும் காவிரியின் பெருமைகளைப் புகழ்ந்துள்ளார்.

தேவர்கள் தொழும் மாந்துறை ஈசனை சிவாகம முறைப்படி தூப, தீபங்கள் மற்றும் தோத்திரப் பாடல்களால் மலர் தூவி, வணங்கி வழிபடுவோர், தவப்பயனதனைப் பெறுவார்கள் என்றும், எக்காலமும் தொழும் அடியவர்களின் உள்ளத்துள் எழுந்து, ஆனந்தம் தருவார் என்றும் போற்றுகின்றார். 

மாமரங்கள் நிறைந்திருந்ததால் ஆம்ரவன க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட தலம், திருமாந்துறை. தற்போது, மாந்துறை  என்று வழங்கப்படுகிறது..!

ஆம்ரவனம், பிரம்மானந்தபுரம், அஹாபஹாரி, மிருகண்டீஸ்வரபுரம் என்றெல்லாம் போற்றப்பட்ட தலம்.

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரரான மாமரநாதர். அழகான சுயம்புநாதர். ஆதிரத்னேஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர், மிருகண்டீசர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்

மிருகண்டு முனிவர் புத்திரன் வேண்டி இத்தலத்தில் தவமியற்றியுள்ளார்.
மிருகண்டு முனிவர் வழிபடும் ஓவியக் காட்சிகள் காணலாம்..!
மிருகண்டு வழிபட்டதால், மிருகண்டீஸ்வரம்; துன்பம் போக்கும் தலம் என்பதால் அகாபஹாரி என்றும் வழங்குவர். 

பொய் சொன்னதால் தண்டனைக்குள்ளான பிரம்மா, தனது பாவம் தீர வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. எனவே, பிரம்மதீர்த்தபுரம், பிரம்மானந்தபுரம் என்றும் பெயர்கள் உள்ளன.

இந்திரனுக்கு கௌதமரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்
அவன் செய்த பூஜையால் நிவர்த்தியானது. 

வேதமித்திரன் என்பவரது தந்தையின் அஸ்தி, தூய ரத்தினமானது இங்கே

தட்ச  யாகத்தில் கலந்து கொண்ட பாவத்துக்காகச் சூரியன் ஒளி மங்கியது  தனது ஒளியைத் திரும்பப் பெறுவதற்காகக் கதிரவன் மாந்துறையிலும் பூஜை செய்ததான

கணவனான சூரியனின் வெப்பத்தைத் தாங்குவதற்காக
சஞ்சனாதேவி பூசித்த தலம்;

ஈசனைத் துதித்த சந்திரன் இரவுக்கு அதிபதியாக பதவி பெற்றான்.

இரவியும் மதியமும்- சூரியனும் சந்திரனும். இந்திரனும் பார் மன்னர் பணிந்தேத்த- உலக மன்னர்கள் பலரும் பணிந்தார்கள்

பலவகை அழுக்குகளும் சேருவதால் மாசுபட்டுப் போகும் தனது மேனியைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சமுத்திரராஜன் வணங்கிய தலம்...

தாயை இழந்த மான் குட்டிகளுக்காக  ஈஸ்வரனும், அம்பிகையும் தந்தை மான், தாய்மானாக உருவெடுத்து, அந்த மான் குட்டிகளைக் காப்பாற்றியுள்ளனர்.
கஹோல ரிஷியின் மகன் மருதாந்தன் அடைந்த தோஷம்
மாந்துறை திருத்தலத்தில் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது. 

அந்த தோஷத்தால் அவனது கழுத்தில் ஏற்பட்டு இருந்த இரும்பு குண்டுகள் ரத்தினக் கற்களாக மாறின. இதை முனிவர்கள் அவனிடம் கூறி அவன் பாபவிமோசனம் அடைந்து விட்டதை உணர்த்தினர். 

மருதாந்தனும் ஆம்ரவனேஸ்வரரைத் துதித்து போற்றினான். 

பின்னர் மாந்துறைக்கு அடுத்துள்ள அகம்ஹர எனப்படும் ஆங்கரை எனும் ஊரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். 

அந்த லிங்கமூர்த்தி மருதாந்த நாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த இயற்கை எழில்
நிறைந்த ஊரே மாந்துறை. 

இந்த ஊருக்கு அருகே ஆங்கரை, திருத்தவத்துறை, அன்பிலாந்துறை
ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. 

சாலையை ஒட்டி பூஞ்சோலைகளுக்கும், மாஞ்சோலைகளுக்கும்
இடையே ஆலயம் அழகுற அமைந்துள்ளது. 

அற்புதமான இயற்கை எழிலின் ரம்யமான சூழலில் இறைவனை
தரிசிப்பதால், அருளோடு மன அமைதியும் கிடைக்கிறது.

வர்ணங்களின் ஜொலிப்பில் நம் கண்கள் மலர, அழகிய மூன்று நிலை 
கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் ஆலயம் அற்புதமாக அமையப் பெற்றுள்ளது. 

மகாமண்டபம் மிகவும் கலைநயம் மிக்க தூண்களைக் கொண்டு விளங்குகிறது. அர்த்த மண்டபம் மற்றும் ஈசனது கருவறை. 

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற கோல நாயகியான அம்பாளுக்கு, அழகம்மை என்றும் பாலாம்பிகை என்றும் திருநாமங்கள். பாலாம்பாள் என்பதே வாலாம்பிகை என்றும் வழங்கப்படுகிறது.
மேலிரு கரங்களில் தாமரை புஷ்பங்களோடும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகக் கொண்டு பாலாம்பிகை என்கிற திருநாமத்தோடு நின்ற வண்ணம் எழில் சிந்தும் திருக்கோலத்தில் இறைவி தரிசனம் அளிக்கிறாள். 
[Gal1]
அம்பிகையின் வாகனமாக நந்திதேவர் வீற்றிருப்பதால் 
இந்த ஆலயத்தின் பழைமை புரிகிறது.
கருவறையில் ஆம்ரவனேஸ்வரர் கிழக்கு முகமாக 
சுமார் ஐந்தடி உயரத்தில் வீற்றருள்கிறார். 

மூலவர் சந்நிதி சுற்றில்   நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா மற்றும் துர்கை. தெற்குப் பகுதியில் ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
மகாமண்டப கிழக்கு வாயிலில் மான்குட்டிக்கு தாயாக 
அம்மையப்பர் விளங்கிய நிகழ்வுகள் சுதைச் 
சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.
[Gal1]
 உயரிய மதில்கள். ஆலயத்தினுள் நீண்ட மண்டப வரிசை. வலப்பக்கம் விநாயகர் சந்நதியும் தல விருட்சமான மாமரமும் அமைந்துள்ளன. வில்வமரமும் உடன் உள்ளது.
வள்ளி- தெய்வானையுடன் மயிலேறும் முருகன். 
அடுத்து தண்டபாணி. தொடர்ந்து கஜலட்சுமி சந்நிதி.  
பைரவர் சந்நிதியும் உண்டு. 

நவகிரக சந்நதியுள் சூரியன் மேற்கு நோக்கி இருக்க, அவரைப் பார்த்தபடி மற்றைய கிரகங்கள் உள்ளது, வித்தியாசமான அமைப்பாகும். 

ஹர ஹர என்று சொல்லும் பணியை செய்யும் சம்பந்தன் எனத் தன்னை சுட்டிக் காட்டிக் கொள்ளும் ஆளுடையப்பிள்ளையார் இடைவிடாது அரன் நாமத்தைச் சொல்லி அவனருளை பரிபூரணமாய் அடைந்திட வழி காட்டுகின்றார்.

வள்ளல் ராமலிங்கரும் தனது அருட்பாவில் இப்பதியை ஆராதித்துள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

தல தீர்த்தமாக காயத்ரி நதி என அழைக்கப்படும் கொள்ளிட நதி, ஆலயத்தின் வலப்புறம் ஓடுகிறது. 
 இந்நதியில் நீராடி அங்காரக சதுர்த்தியன்று (செவ்வாய்க் கிழமையன்று வரும் சதுர்த்தி) ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால் அனைத்துவித ரோகங்களும் நீங்கும். 

மனதில் தோன்றும் நியாயமான ஆசைகள் நிறைவேறும். துன்பங்கள்
அகன்று இன்பங்கள் பெருகும்.

ஆலயத்தை சோழமன்னன் சுவேதகேது கட்டியுள்ளார். 

திருபுவனச் சக்ரவர்த்தி மற்றும் ராஜராஜதேவர் ஆகியோரது
கல்வெட்டுகள்  காணப்படுகின்றன.

ஆலயத்தில் தினமும் மூன்று கால பூஜைகள் நடக்கின்றன. காலை 6 முதல் 11 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும். 

ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், சங்கரஜெயந்தி, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் ஆலயத்தில் விசேஷமாக நடத்தப்படுகின்றன. 

பங்குனி மாதம் 1, 2, 3 தேதிகளில் காலையில் சூரிய கதிர்கள் ஈசன் மீது படர்கிறது. அந்த சமயம் இங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

திருச்சி-லால்குடி பேருந்து சாலையில் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது மாந்துறை. சாலையை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளது. 
சுயம்பு மூர்த்தமாக மாமரத்தடியில் வெளிப்பட்ட மாந்துறையானை 'மருத்துகள்' எனப்படும் தவசீலர்களும் (இவர்களே மருதவானவர் என்றும் அழைக்கப்பட்டனர்.

வேதங்களின்படி, பூலோக வாழ்க்கையை முறையாக வாழ்ந்து, அதனால் வானுலக வாழ்க்கையைப் பெற்றவர்கள் மருத்துகள் ஆவர்),

கண்வ மகரிஷியும் வழிபட்ட தாக செய்திகள் உண்டு..! சுவாமி சந்நிதியிலேயே உற்சவ மூர்த்தங்களும் உள்ளன.

காவிரி நதியையே தீர்த்தமாகக் கொண்ட மாந்துறைக்குச் சோழ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். ராஜராஜ சோழ மன்னர் காலத்துக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில், சிறப்பான- சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்கள் வரி கட்ட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். வரி தர முடியாத நிலையில் இருந்தவர்கள், நகரை விட்டு வெளியேறத் தலைப்பட்டுள்ளனர். இதையறிந்த மன்னர், உடனடியாக வரியைத் தள்ளுபடி செய்து, அவர்களை மீண்டும் நகருக்குள் வரும்படிக்கு வேண்டியுள்ளார்.

மக்களின் பெருமிதமும் மன்னரின் பெருமையும் ஒருசேர விளங்கும் இந்தத் தகவலுடன், நந்தவனப் பராமரிப்பு நிலம் விடப்பட்ட செய்திகளும், பல்வேறு திருப்பணி நிவந்தங்களும் காணப்படுகின்றன.
எளிமையாகவும் எழிலார்ந்தும் காட்சி தரும் மாந்துறை திருக்கோயிலை வணங்கி  வளமான வாழ்வு பெறலாம்..!

கோயிலுக்கு வெளியில் நந்தி மண்டபம், பலி பீடம். நந்தி மண்டபத்துக்கு முன்பாக, தரையில் காணப்படும் இரண்டு நந்தி சிலைகள். மண்ணுக்குள் புதைந்ததுபோல் கிடந்தாலும், சோழர் சிற்பக் கலைக்கு அழகான எடுத்துக்காட்டுகள்; கண்களோடு கருத்தையும் கவரும் கம்பீரங்கள்.

நந்தி மண்டபத்துக்குச் சற்று வடக்காக, ஊரின் காவல் தெய்வங்கள். பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி. பக்கத்திலேயே பண்டிதர்சாமி மற்றும் மதுரை வீரன். கருப்பசாமிக்குச் சிறப்பு பூஜைகள் உண்டு.
இங்கிருக்கும் ஆல மரத்து மண்ணை, பிரசாதமாகத் தருவது வழக்கம்
சிவன் கோயில் திருநீறு- குங்குமத்துடன்,
இந்த மண்ணையும் சிறிய பொட்டலத்தில் தருகிறார்கள்.
தொடர்புடைய பதிவு 
ஆதரவளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்26 comments:

 1. மாந்துறை பெருமை உணர்ந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. மாந்துறை ஈசன் பற்றியும், மாமரங்கள் நிறைந்துள்ளதால் ஆம்ரவனம் என்றழைக்கப்படுவது பற்றியும் அறிந்து கொண்டேன். கோவில் படங்கள் அழகு. இந்த மாந்துறை சமீபத்தில் செய்தித் தாள்களில் எதற்கோ அடிபட்டதோ?

  ReplyDelete
 3. நடராஜர் கிளாக் அற்புதம்.

  ReplyDelete
 4. சிறப்பான பகிர்வு.. மாந்துறை, ஆங்கரை வழியாக அன்பில் சென்றதுண்டு... அடுத்த முறை இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும்...

  வை.கோ தன்னுடைய சொந்த ஊராக மாந்துறையை குறிப்பிட்டு எழுதியதை படித்த ஞாபகம் உள்ளது..

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும்... வை.கோ சார் என்று வர வேண்டும்... அவசரத்தில் டைப்பியதன் விளைவு...

   Delete
 5. அற்புதமானதொரு ஆலயத்தினைப் பற்றி நால்வரின் பாடல்களோடு, அற்புதம்... உன்னதமானதொரு தொண்டிற்கு நன்றி!

  ReplyDelete
 6. அனைத்தும் அறியாத விபரங்கள்.
  ஆலமரத்து மண்ணையே பிரசாதமாக வளங்குகிறாகளா?
  அருமையான பட்டங்களும் விபரங்களும்.
  நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

  ReplyDelete
 7. அறியாத சிறப்பு தகவல்களுக்கு நன்றி அம்மா... நன்றிகள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. ஆம்ரவனேஸ்வரர் அனைவருக்கும் நல்லருள் பொழிவாராக!..

  ReplyDelete
 9. மாந்துரை ஆம்ரவனேஸ்வர் பார்த்து இருக்கிறேன். விளக்கமாய், படங்களுடன் செய்திகள் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. மாந்துறை ஸ்ரீவாலாம்பிகா [ஸ்ரீ பாலாம்பிகா] ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வர ஸ்வாமிக்கு அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

  >>>>>

  ReplyDelete
 11. மிகவும் அழகான பதிவு. நேரில் மீண்டும் இன்று ஒருமுறை தங்கள் தலைமையில்/வழிகாட்டலில் சென்று வந்தது போன்ற மகிழ்ச்சியளிக்கிறது.

  >>>>>

  ReplyDelete
 12. படங்களும் தகவல்களும் உண்மையிலேயே என்னை அப்படியே பிரமிக்க வைக்கின்றன.

  >>>>>

  ReplyDelete
 13. அந்தக்கோயிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதி மட்டும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகப் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அதையும் விடாமல் தாங்கள் எழுதியுள்ளது பார்த்து மகிழ்ந்தேன்.

  ஸ்வாமி அம்பாளைச் சேர்த்து அந்த சிறிய கோயிலை பிரதக்ஷணமாக வரும்போது வலதுபுறமாக, அம்பாள் போலவே தெற்கு நோக்கி, இந்த ஆதிசங்கரர் சன்னதி, தக்ஷிணாமூர்த்தி + ஸ்ரீதுர்க்கைக்கு அருகில், கிணற்றுக்கு சற்றே எதிர்புறமாக அமைந்துள்ளது.

  >>>>>

  ReplyDelete

 14. மேலும் காஞ்சி காமாக்ஷி கோயிலிலும், இந்த மாந்துறை கோயிலிலும் நித்ய அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது.

  நம் கோத்ரம் + பிறந்த நாள் தமிழ் மாதம் நக்ஷத்திரம் கொடுத்து ஓர் பெரும் தொகையை கட்டிவிட்டால் போதும். அதை டெபாஸிட் செய்து அதில் வரும் வட்டியில் நாம் சொல்லும் தினத்தில் நமக்காக விசேஷ பூஜைகள் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்கிறார்கள்.

  நமக்கும் முன்கூட்டியே தகவல் வந்துவிடும். முடிந்தால் நேரில் சென்று பிரஸாதம் பெற்றுக்கொள்ளலாம். இல்லை அவர்கள் தபாலில் அனுப்பி வைத்து விடுவார்கள்.

  எங்கள் இல்லத்தில் உள்ள பல பேர்கள் பெயர்களிலும், இந்த இரு கோயில்களுக்கும் பணம் கட்டி, இந்த புண்ணியமான கார்யத்தில் ஈடுபட்டு தொடர்ந்து செய்து வருகிறோம்.

  >>>>>

  ReplyDelete
 15. தாங்கள் என் வேண்டுகோளுக்காகவே முன்பு இதே கோயிலைப்பற்றி வெகு அழகாக எழுதியிருந்தீர்கள். அதன் இணைப்பையும் இங்கு கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சி.

  அந்தப் பழைய பதிவினிலேயே நிறைய பின்னூட்டங்கள் கொடுத்து என் மகிழ்ச்சியினை நான் தங்களுடன் ஏற்கனவே பகிர்ந்து கொண்டு விட்டதாலும், எனக்கு இப்போது கொஞ்சம் கண் பார்வை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாலும், இங்கு இன்று என் கருத்துக்களைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டுள்ளேன்.

  மேலும் மேலும் நிறைய எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். அதுவும் எங்கள் குலதெய்வம் + கிராம தேவதையல்லவா ! ;)))))

  >>>>>

  ReplyDelete
 16. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள், பாராட்டுக்கள், நன்றியோ நன்றிகள்.

  வாழ்க !

  தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  என்றும் அன்புடன் VGK

  o o o o o o o

  ReplyDelete
 17. எங்கள் குலதெய்வம் மாந்துரையானை கருப்பனை நீங்கள் உங்கள் பதிவு இட்டமைக்கு நன்றி.

  எனது பதிவுகளில் இக்கோவிலின் படமும் கருப்பனின் குதிரைகளும் இருப்பதை காணலாம்.

  மேலும் எனது ஐ.டி. படமும் இக்கோவில் தான்.

  இந்த ஊர் கும்பாபிஷேகம் புனருத்தாரணம் நடை பெற இருக்கிறது.

  தினம் இந்த கருப்பனை மனதில் நினையாது நாங்கள் தூங்கச் செல்வதில்லை. எங்கே போனாலும் இந்த கருப்பன், ஒரு குள்ளமான கருப்பான் உருவத்துடன் கையில் ஒரு தடியுடன் கூட வருவான் என்று எங்களது நம்பிக்கை.

  கருப்பனுக்கு நைவேத்தியம், பீடியும் கள்ளும் ஆகும். அதை எங்கள் பூசாரி (இப்போது இருப்பவர் பெயர் இராமதாஸ் ) வாங்கி வைத்து விடுவார்.

  மற்றபடி, வாலம்பிகா சமேத ஆம்ரவனேச்வரருக்கான வழக்கமான
  மாவிளக்கு பூஜைகள், ஒவ்வொரு தை அல்லது ஆடி மாதமும்
  இந்த தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்ட எல்லோரும் செய்வர்.

  குருக்கள் பெயர். த.சுப்பிரமணியம். ஒவ்வொரு மாதமும் அர்ச்சனை செய்து பிரசாதம் எங்களுக்கு அனுப்புகிறார்.

  அப்பர் பாடிய ஸ்தலம் இது.

  எங்கள் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயது முடியும்போது இந்த கருப்பசாமி கோவிலில் தான் முதல் முடி இறக்கப்படும்.

  மாந்துறை தெய்வத்தை குல தெய்வமாக கொண்ட அனைவரும்
  இந்த கோவில் புனர் உத்தாரனத்தின் போது தம்மால் இயன்ற பொருள் உதவியை செய்ய வேண்டுகிறேன். ஒரு ரூபாய் அனுப்பித்தாலும் நல்லது. உங்கள் குடும்பத்தின் பங்கு என்று இருத்தல் நலம்.
  அர்ச்சகர் பெயர்
  விலாசம்:
  டி. சுப்பிரமணியம். 5, அக்ரஹாரம்,மாந்துறை, லால்குடி தாலுகா.

  இது இந்து அறநிலைய துறைக்கு உட்பட்டது. கோவில் புனர் உத்தாரனத்துக்காக, பணம் செலுத்துவோர் நேரடியாக அலுவலகத்திடம் செலுத்தி, உரிய அச்சிட்ட ரசீது
  பெற்றுக்கொள்ளவும்.

  உங்கள் வலை மூலம் இதை பிரசுரித்தால், உலகில் இன்னும் இத்தகவலை அதிகமான நபர்கள் படிப்பார் என்ற நினைப்பில் இந்த பின்னூட்டம்.

  சுப்பு தாத்தா.
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
 18. அருமையான தகவல்கள். அருகில் இருக்கும் எத்தனை இடங்கள் பார்க்கப் படாமல்...? அடுத்த திருச்சி பயணத்தில் தரிசிக்க பாக்கியம் இருக்கிறதா பார்க்கலாம்.

  ReplyDelete
 19. திருச்சி அருகே இருந்தும், இந்த வழியே சென்றிருந்தும், இக்கோவில் இன்னும் பார்க்கவில்லை. அடுத்த பயணத்தின் போது செல்ல வேண்டும்.

  ReplyDelete
 20. எங்கள் திருச்சிக்கு அருகிலுள்ள மாந்துறை ஈசன் பற்றி அழகாகச் சொன்னீர்கள். இந்த ஊரின் அருகிலுள்ள ஆங்கரை எனது நண்பரின் ஊர். பெரும்பாலும் திருச்சி ஆண்டார் வீதியில் உள்ள நண்பர்கள் மற்றவர்களின் சொந்த ஊர் மாந்துறை அல்லது ஆங்கரையாகவே இருக்கும். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 21. மாந்துறை ஈசனைப் பற்றிய பதிவு பக்தி மனம் கமழ்கிறது. அடுத்த முறை திருச்சி போகும் பொது அவசியம் இந்த கோவிலிற்கு செல்ல நினைத்திருக்கிறேன். நன்றி

  ReplyDelete
 22. ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

  ReplyDelete