Tuesday, December 24, 2013

மங்களங்கள் மலரும் ஸ்ரீ மஹா சுதர்சன வழிபாடு..




ஸ்ரீ மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

ஸ்ரீசுதர்சனர்  ஸ்நானம், தானம், தவம், ஜபம், முதலியவற்றால் எக்காலத்தும் த்யானிக்கத்தகவர் என எடுத்துக்காட்டி பிரம்மன் நாரதருக்குக் கூறுகிறார்..!

ஸநானே, தானே, ஜபாதௌச
ச்ராததே சைவ விஷேத
சிந்தநீய சக்கரபாணி: ஸர்வா
கௌக விநாசந ஸர்வ கர்மஸு
பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம்  ஹி நாரத ||

சுதர்சனம் என்ற சக்கரம், பாஞ்சசன்யம் என்ற சங்கு, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீம் என்ற கதை, நந்தகம் என்ற வாள் ஆகிய பஞ்சாயுதங்கள் திருமாலின் ஆபரணங்களாகவும் திகழ்கின்றன. 

மஹாவிஷ்ணுவின்  ஆயுதங்களாக இருந்து திருமாலுக்குப் பணிபுரிபவர்கள் வைகுண்ட லோகத்திலிருக்கும் நித்யசூரிகள் என்ற தேவர்கள் இறைவனுக்கு அடிமை செய்வதற்குப் பல்வேறு நிலைகளில் உருவெடுத்துள்ளனர்.

பஞ்சாயுதங்களில் முதன்மையானவர் ஸ்ரீசுதர்சனர், சுதர்சனமே திருமால் என்றும், திருமாலே சுதர்சனம் என்றும் வழிபடுவதுண்டு.
சுதர்சனர் என்ற பெயருக்கு நல்வழிகாட்டுபவர் என்றும் 
காண்பதற்கு இனியர் என்றும் பொருள். 

விஷ்ணுவின் கரங்களில்  காணப்படும் சுதர்சன 
சக்ராயுதத்தில் உறையும் தேவனே சுதர்சன் எனப்படுகிறார். 
இந்த சக்கரம் சுதர்சன சக்கரம் என்று வழங்கப்படுகிறது. 

காத்தல் தொழிலைக் கொண்ட விஷ்ணுவிற்கு துஷ்டநிக்ரஹம் செய்ய சக்கர ஆயுதம் உறுதுணை புரிகிறது. 
ஆயுதங்களில் இராஜனாக இருப்பதால் இவரை ஹேதிராஜன் என்றும் கூறுவர். இவர் உக்கிர வடிவினர். 
சக்கரராயர் திருவாழி ஆழ்வான், திகிரி, ஹேதிராஜன், சக்கரத்தண்ணல் நேமிதரங்கம் என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
விஷ்ணுவின்  சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்று அழைப்பதுண்டு. 
ஆனிச் சித்திரையில் சுதர்சன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. 
சுதர்சன வடிவங்களை சக்கரரூபிவிஷ்ணு எனக் குறிப்பிட்டு திருக்கோவில்களில் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் திருவுரு கல்லிலும் செம்பிலும்  அருள்புரிகிறது..!

காஞ்சியில் அஷ்டபுஜம் (எண்கரங்கள்) கொண்ட பெருமான் ஆகவும். குடந்தையில் கோவில் கொண்டுள்ள பிரான் சக்கரத்தை திருக்கரத்தில் ஏந்திநிற்கும் சக்கரபாணியாகவும் திருவருள் பொழிகிறார்...

சுதர்சனர் அறுகோணச் சக்கரத்தில் சமபங்கநிலையிலும் பிரத்யலீடமூர்த்தியாகவும் எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு திருக்கைகளுடனும் திரு ஆயுதங்களுடனும் கோவில் கொண்டு சேவை சாதிக்கிறார்.
ஸ்ரீசுதர்சன வழிபாட்டில் ஆறு மற்றும் அதன் மடங்குகளில் மௌனமாகப் பிரதக்ஷிணம் செய்வதுண்டு. 
இதனை ஆசாரமாகச் செய்தல் நலம். 

பிரதக்ஷிணம்துவங்குகையில் நெய்விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஒவ்வொரு பிரதக்ஷிணத்திற்கும் ஒரு பழமோ அல்லது வேறு பொருள்களோ சந்நிதி வாசலில் வைத்து எண்ண வேண்டுமென்ற நியமங்கள் உள்ளன. 

மண்டலத்தை முடிக்கும் போது கோதுமைப் பாயசம் நிவேதனம் செய்வது சுதர்சன பகவானுக்கு உகந்ததாகும். 

இவையனைத்தையும் கும்பகோணம் சக்கரபாணி சுவாமி 
சந்நிதியில் பின்பற்றுவதைக் காணலாம் 

சுதர்சன வழிபாட்டில்  மிக முக்கியமான யந்திர உபாசனை ..
செப்புத் தகட்டில் வரிவடிவில் முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்பிலும் விக்கிரக வடிவிலும் ஆராதிக்கப்படுகிறது..!
சிவப்பு மலர்கள் உகந்தவை.
திருவாழி ஆழ்வாரான  சக்கரத்தண்ணலின் 
பெருமை சொல்லுதற்கரியது. 

ஞானம் வழங்குபவர்; ஆரோக்கியம், அளிப்பவர்; செல்வம் தருபவர்; பகைவர்களை நீக்குபவர்; மோட்சத்திற்கு வழி செய்பவர். 

சுதர்சன உபாசனை வீரம் அளிக்கவல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியைத் தேடித்தரும்.  எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்கவல்லது. 

சக்கரத்தாழ்வாரை முறையோடும் நெறியோடும் வழிபடுபவர்கள் உடல் நலமும், நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும் பெறுவதுடன் தாங்கள் வேண்டும் வரங்களும் குறைவின்றி பெறக்கடவர் என்று சுதர்சன சதகம் என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 

நூறு பாசுரங்கள் கொண்ட சுதர்சன சதகம் நூலினைப் பாராயணம் செய்வதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் விடுபெறலாம் என்பது நம்பிக்கை. 

சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய ஸ்வாமிதேசிகர் ஸ்ரீசுதர்ன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

இறைவனின் அவதாரங்களில் திருவாழி ஆழ்வார் இறைவனை விட்டுப் பிரியாது இறைவனோடு அவதரிக்கிறான். 

நரசிம்மாவதாரத்தில் விரல் நகங்களில் பல்லுருக்கொண்டு ஆவிர்ப்பவித்து இரணியகசிபுவை கிழித்தெறிய உதவினான்.

வாமனாவதாரத்தில் பவித்ர தர்பத்தின் நுனியில் அமர்ந்து 
சுக்கிரன் கண்ணைக் கிளறியழித்தான்.

இராவணனுடைய முன்னோரான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களைத் தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான் சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.
தேவலர்  முனிவர் நீரில் நின்று கொண்டு தவம் புரிகையில் மறைந்து நின்ற கந்தர்வன் விளையாட்டாக  தேவலரது காலைப் பற்றி இழுத்தான்.  முனிவர் அவனை முதலையாகும்படி சபித்தார். 

இந்திரத்யும்னன் என்ற அரசன், திருமால் பூஜையில் ஆழ்ந்திருந்ததால் அதிதி உபசாரம் நாடி வந்த  அகத்தியரை உபசரிக்கவில்லை.

இதனால் வெகுண்ட முனிவர் யானையைப் போல் செருக்குற்றிருக்கும் நீ யானையாகக் கடவாய் என சபிக்கவே யானையான அரசன் பூர்வஜன்ம வாசனையினால் தாமரைப் பூக்களை பறித்து திருமாலை வணங்கி வந்தான்.

பூஜைக்கு பூப்பறிக்க வந்த அந்த இந்திரத்துய்ம யானையை குளத்தின் ஆழ்மடுவில் இருந்த முதலை காலைப் பற்றியதும் ஆயிரமாண்டுகள் முதலையுடன் இந்திரத்யும்ன - கஜமுகன் போராடினான். 

இறுதியில் ‘நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய் வாராய்! என் ஆரிடரை நீக்காய்என அழைத்ததும் ஆதிமூலமான நாராயணன் கருடன் மீதேறி பொய்கைக்கரை வந்து ஆழியால் முதலையைக் கொன்று கஜேந்திர யானைக்கு மோட்சம் கொடுத்தான். 

காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து தானே உண்மையான வாசுதேவன் என பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். 

கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்ததும் கருடன் மேல் ஏறிச் சென்ற கண்ணன் ஆழியினால் அவனைக் கொன்றான். 

இவ்வாறு கிருஷ்ணாவதாரக் காலத்திலும் திருவாழி ஆழ்வாரின் தொண்டு சிறப்பாக அமைந்திருந்தது.
திருமால் அடியாரான அம்பரீஷன் என்ற அரசர் இறைவனிடம் தான் பெற்ற சக்கரத்தாழ்வாரை அனுதினமும் ஆராதித்து வந்தார். 

ஏகாதசி விரதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அம்பரீஷரைச் சோதிக்க எண்ணிய துர்வாசமுனிவர் ஒரு துவாதசியன்று மன்னனிடம் வந்து தான் காலைக் கடன்களை முடித்துவிட்டு பாரணைக்கு வந்துவிடுவதாகக் கூறிச் சென்று காலம் தாழ்த்தினார். 

அன்று சிலநேரமே இருந்து துவாதசி கடந்து கொண்டிருப்பதைக் கண்ட மன்னன் தான் மட்டும் பாரணை செய்தால் முனிவரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் எனத் தவித்ததனையறிந்த அரச புரோகிதர் திருமாலை ஆராதித்து ஜலப்பாரணை செய்தால் பாரணை செய்த பலனும் உண்டு, உண்ணா நோன்பும் காப்பாற்றப்படும் என்று கூறினார். 

யோக திருஷ்டியால் மன்னனின் ஜலப் பாரணையை அறிந்த முனிவர் சினம் கொண்டு தம் தலையிலிருந்து உரோமம் ஒன்றை எடுத்து கீழே போட்டார். அதிலிருந்து தோன்றிய பூதம் மன்னனை நோக்கி விரைந்தது. 

இந்நிலையில் அவருடைய திருவாராதன மூர்த்தியான சுதர்சன ஆழ்வான் சீறிப்பாய்ந்து பூதத்தை துரத்த அதுவும் துர்வாசரை துரத்திச் சென்றது. 

நாள்கணக்கில் அன்ன ஆகாரமின்றி ஓடிய முனிவர் திருமாலை வந்தடைந்ததும் அவர் அம்பரீஷனிடம் சரணடையுமாறு கூறினார். 

தன்னிடம் அடைக்கலம் புகுந்த முனிவரைக் காப்பாற்ற அம்பரீஷன் பதினொன்று ஸ்லோகங்களால் சுதர்சனத்தைத் துதித்து முனிவரிடம் பிரீதனாக வேண்டும் என வேண்டினார். 

விடுபட்ட முனிவர் தம் ஆறாத கோபத்தினால் தம்மை இப்பாடுபடுத்திய சுதர்சனம் ஒளியிழந்து இருள்நிலை அடைவதாக எனச் சாபம் கொடுத்தார். 

திருமால் சீறி எழுந்த சுதர்சனத்தை அடக்கி மற்றொரு முக்கியமான காரியம் செய்வதற்கே இந்தச் சாபம் என்று எடுத்துரைத்தார்.

பின்னர் முனிவரும் மன்னரும் அரண்மனைக்குச் சென்று உணவு உட்கொண்டனர்.

பாரதப்போரில் தன் மகனான அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனின் தலையினை மறுநாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு அறுத்து தள்ளுவேன். இல்லாவிடில் தீக்குளிப்பேன் என அர்ச்சுனன் சபதம் செய்தான். 

ஆனால் துரியோதனனோ ஜயத்ரதனை மறைந்து வைத்துக் காப்பாற்றினான். 

மாலை நெருங்கியது. அர்ச்சுனன் கவலையடைந்தான். 

ஜயத்ரதனை கண்ணன் “துர்வாசரின் சாபம் பலிக்கிறது” என்று கூறியவண்ணம் சூரியனை அதுகாறும் மறைத்திருந்த அர்ச்சுனன் தீக்குளிப்பதைக் கண்டுகளிக்க கௌரவர்களுடன் வந்து நின்ற ஆழ்வாரைத் திரும்பப் பெற்றதால் சூரியன் பிரகாசித்தான்.
இதற்கிடையில்அர்ச்சுனன் அம்பை பிரயோகித்து ஜயத்ரன் தலையை அறுத்து மாலைக்கடன் செய்து கொண்டிருந்த அவன் தகப்பனின் கைகளில் விழவும் செய்ததால் தன் மகனின் தலை பூமியில் விழ செய்பவனின் தலை வெடி எனக் கூறியதும் அவனது தலை வெடித்தது. 

நேரே தலை கீழே விழுந்திருந்தால் அர்ச்சுனனின் தலை சிதறியிருக்கும். ஒரே சமயத்தில் கெட்ட எண்ணத்தால் தந்தையும் மகனும் அழிந்தனர்.
கண்ணனின் நெருங்கிய நண்பனான சீமாலி, எல்லா ஆயுதஙகளையும் கற்பித்த கண்ணன் தனக்குச் சக்கராயுதத்தைப் பயில்விக்கவில்லை எனக் குறை கூறினான். 

தனக்கேயுரிய அதனை வேறு எவராலும் ஆளமுடியாது எனக் கண்ணன் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஆணவம் கொண்ட சீமாலி தன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்று கூறினான். 

வற்புறுத்தலின் பெயரில் கண்ணன் சக்கராயுதத்தை ஆகாயத்தில் வீசி எறிந்து கையில் ஏந்தியதைப்போல் தானும் ஏந்த முயன்ற சீமாலியின் தலை அறுபட்டது.
 பிரம்ம தேவனுடைய தலையை பரமசிவன் கொய்ததனால் ஏற்பட்ட துயரினை நிவர்த்திக்க பரமசிவன் திருமாலை வேண்டினான். 

திருமால் பரமசிவனுக்கு பத்திரிகாசிரமத்தில் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார்.

பரமசிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட பிரம்ம தேவனின் தலையைக் கொய்ததனால் ஏற்பட்ட பாதகங்கள் நிவர்த்தியாயின. 

தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள்.


18 comments:

  1. வணக்கம்
    அம்மா
    சிறப்பான கருத்துக்கள் படங்கள் மிக அழகு வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான படங்களும் கண்ணனின் வடிவங்களுக்கே உரிய வர்ணனைகளும் கதைகளும் சிறப்பே
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  3. சுதர்சனரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது... சுதர்சன மஹாமந்திரமும், சுதர்சன காயத்ரியும் எப்போதும் பிரதட்சணம் வரும் போது சொல்வதுண்டு..

    கடைசியில் இருந்து இரண்டாவது படம் மலைக்கோட்டையில் தான் பார்த்திருக்கிறேன்... என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  4. தேடித் தேடி அழகான படங்களும் அற்புதமான புராண வரலாற்றினை
    பதிவாகவும் தந்துள்ளீர்கள். மிக அருமை!

    உங்கள் தேடலைக் கண்டு வியந்தேன் சகோதரி!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்!..

    ReplyDelete
  5. அழகான படங்கள். அருமையான விளக்கங்கள். தெரியாத புராண கதைகளை தெரிந்து கொள்ள முடிகிறது தங்களின் பதிவுகளின் மூலம். நன்றி சகோதரி.

    ReplyDelete
  6. ஸ்ரீ மஹா சுதர்சன மஹா மந்திரத்துடன் ஆரம்பித்து இன்று மிக அழகான பதிவாகக் கொடுத்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  7. படங்கள் அனைத்துமே வழக்கம்போல பரவஸம் அளிப்பதாக உள்ளன. குறிப்பாக கஜேந்திர மோக்ஷம் ;)

    எங்கிருந்து தான் எப்படித்தான் இத்தனைப் படங்களையும் கஷ்டப்பட்டு பொக்கிஷமாக திரட்டி தினமும் அசராமல் பொறுமையாகக் காட்டி அசத்துகிறீர்களோ!

    >>>>>

    ReplyDelete
  8. சுதர்சனம், அஷ்டபுஜம், சக்கரபாணி, ஸ்ரீசக்ரத்தாழ்வார் பற்றிய கதைகள் விளக்கங்கள் மிக அருமையாக உள்ளன.

    நரசிம்ஹனின் நகங்கள், பற்கள், வாமனன் கையிலிருந்த தர்ப்பை, மால்யவான், சுமாலியை ஸ்ரீசக்ரத்தால் அழித்தது போன்றவை யாம் இதுவரை அறியாத தகவல்களாக இருக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  9. சாபங்களினால் யானை + முதலை தோன்றியதும், சாப விமோசனங்களும் கதையாகக் கூறியுள்ளது ஜோர் ஜோர்.

    >>>>>

    ReplyDelete
  10. அம்பரீஷ் சரித்திரம் [அதுவும் தாங்கள் அளித்த தகவலால்] திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொல்லக் கேட்டேன். இன்று தங்கள் மூலம் மேலும் பல அழகான விபரங்கள் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ;)

    >>>>>

    ReplyDelete
  11. பாரதப்போரில் அபிமன்யுவின் மறைவு - அர்ச்சுனன் சபதம் - அதனால் நிகழ்ந்த நிகழ்வுகள் - அடடா .... நேரில் நடந்ததைப் பார்ப்பதுபோல ஜோராகக் கதைசொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    துண்டிக்கப்பட்ட தலை கீழே தரையில் விழாததால் கெட்ட எண்ணம் கொண்ட தந்தையும் தன் மகனுடன் இறந்தார்.

    எல்லாம் அந்த மாயக்கண்ணன் செய்த சூழ்ச்சிகள் அல்லவா!

    அல்வா போலச் சொல்லியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  12. எதைச்சொல்வது, எதை விடுவது?

    எல்லாமே அருமையோ அருமையாக உள்ளதுங்க. மகிழ்ச்சி. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    o o o o o o o

    ReplyDelete
  13. //ஒளி படைக்கும் புத்தாண்டே வா வா வா
    களி படைத்த மொழியினாய் வா வா வா
    தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
    கனிவு கொண்டு இனிமையாய் வா வா வா..!...
    நோய்களற்ற உடலினாய் வா வா வா

    பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும், பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட புலர்ந்தது புத்தாண்டு..

    பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை. முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.//

    அருமையான துவக்கம். 2014க்கு அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். ;)

    ReplyDelete
  14. முன்பு சொன்ன, ஸ்ரீ பத்மசக்கரம் போன்று ஸ்ரீ சுதர்சன சக்கர வழிபாடு! திரு வை கோபாலகிருஷ்ணன் சார் சொல்வது போல, நிறைய படங்களைத் திரட்டித் தர கடுமையாக உழைத்து இருக்கிறீர்கள்! தங்கள் உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  15. சுதர்சனர் பற்றிய தகவல்களும் படங்களும் மிக நன்று.

    ReplyDelete
  16. ஒரு சுதர்சனரில் இவ்வளவு கதைகளா!

    ReplyDelete
  17. சுதர்சனர் பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை.

    ReplyDelete
  18. அழகிய படங்களுடன் சுதர்சனர் பகிர்வு மகிழ்ச்சி தருகின்றது.

    ReplyDelete