Friday, January 10, 2014

கூடியிருந்து குளிரும் கூடாரவல்லி உற்சவம்,


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
மார்கழி மாத 27ம் நாளே "கூடாரவல்லி" நாளாக அழகான 
உற்சவமாக மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படும் போது, திருப்பாவையில் வரும் ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம்  மகிழ்ச்சிகரமாகப் பாடப்படும்.
எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் ‘கூடாரை வல்லி’ வைபவம் மார்கழி 27ஆம் நாள் கொண்டாடப்படும். ஆனால்,ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தை முதல் தேதி கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளின் சிம்மாசனத்தில், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீபெரிய பெருமாள் எழுந்தருள... அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆச்சார்யர்களும் எழுந்தருளி... ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா முதலான திருப்பாவைப் பாடல்கள் பாடப்படும். 
அப்போது, ‘அக்கார அடிசில்’ நைவேத்தியம் ஆகிய பிரசாதமாக தரப்படும். மறுநாள், தந்தையாகிய பெரியாழ்வார் சந்நிதியில் ஸ்ரீஆண்டாள் எழுந்தருளி, ‘கணு’ வைபவம் நடைபெறும்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் கண்ணன் ஆண்டாளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். 
கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும். 
27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
வேதங்கள் போற்றும் வேதநாயகனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - தமிழில் பன்னிரண்டு ஆழ்வார் திருமக்கள் எழுதிய ஐந்தாம் வேதம் என்று போற்றப்படக்கூடிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" (4000 பாடல்கள்) - போற்றி பறை சாற்றுகின்றன.கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்ப் பாடல்கள். தமிழன்னையின் அழகுக்கு மேலும் அழகூட்டின.
நோன்பு சமயத்தில் "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்", 
கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று பெண்கள் தங்களை வருத்திக்கொண்டு இறைவனைப் பணிகின்றார்கள்.

மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில், விரதம் முடிக்கின்றார்கள். 
திருப்பாவையின் 27வது பாடல் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்று பாடி அக்காரவடிசல் எனும் உணவினை இறைவனுக்குப் படைத்து விரதம் முடிக்கிறார்கள். 
27வது நாள் பரமந்தாமன் ஆண்டாளுக்கு திருமணவரம் அளித்த நன்னாள்.
ஆண்டாளின் பாசுரங்களில் ஆபரணங்கள் பூணுவதைச் சொல்கின்றாள். சூடகம் எனும் கையில் அணியும் வரிவளை எனும் வளையலைச் சொல்கின்றாள். பாடகம் எனும் காலில் அணியும் ஓசை எழுப்பாத கொலுசு பற்றி சொல்கின்றாள். செவிப்பூ, காறை என்று பல அணிகலன்களை அணிந்து மகிழ்வோம் என்கின்றாள்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கிய ஆண்டாள்  எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.
* தொடர்புடைய  பதிவு

**கூடாரவல்லி வைபவம்
 

15 comments:

 1. கூடார வல்லி உற்சவம் தகவல்கள் அனைத்தும் சிறப்பு... படங்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உங்களை என்ன செய்வது என்று பார்க்கிறேன். இறைவனைத் தொழுவதா, இல்லை அக்கார வடிசிலை எண்ணி நாக்கில் நீர் ஊறுவதா ? எங்கிருந்து இப்படிப்பட்ட தத்ரூபமான படங்கள கிடைக்கின்றன உங்களுக்கு? ஒரு பதிவிற்கு எவ்வளவு மணிநேரம் உழைக்கிறீர்கள்? பிரமிப்பாக இருக்கிறது! நன்றி.

  ReplyDelete
 3. தலைப்புத் தேர்வினில் தாங்கள் என்றும் தங்கமே தங்கம் தான். ;)))))

  ”கூடியிருந்து குளிரும் கூடரவல்லி உற்சவம்” ஆஹா ! அற்புதம்.

  >>>>>

  ReplyDelete
 4. படங்கள் அத்தனையும் ஜொலிக்கும் வைரமோ வைரம் தான். ;)))))

  வைரத்தின் ஜொலிப்பினை தினமும் கண்டுகளிக்க நாங்கள் பெற்றுள்ளதோ வரம் தான்.

  >>>>>

  ReplyDelete
 5. அக்காரவடிசலாக இனிக்கும் தங்களின் இன்றைய பிரஸாதப் பதிவினையும் வழக்கம்போல் என் கண்களில் ஒற்றிக்கோண்டேன்.

  மகிழ்ச்சிகள் என்றும் நீடிக்கட்டும். நன்றிகள்.

  ReplyDelete
 6. ஒரு வித்தியாசமான கருத்துஎழுத முடியவில்லையே. எப்பொழுதும் படங்களும் பதிவும் நன்று என்பது தவிர. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. தங்களின் வெற்றிகரமான 1 1 5 0வது பதிவுக்கு என் இனிய அன்பு நல்வாழ்த்துகள். VGK

  ReplyDelete
 8. உங்களின் 1150வது பதிவிற்கு வாழ்த்துக்கள். கூடாரவல்லி உற்சவம் பற்றிய செய்திகள் அருமை. அன்று தான் ஆண்டாளுக்குத் திருமண வரம் கிடைத்தது என்கிற செய்தி அறிந்தேன். நன்றி

  ReplyDelete
 9. Wonderful post explaining Shri Andal's mahima and performance of Koodaravalli Urchavam.. The pictures are truly amazing..

  ReplyDelete
 10. கூடாரவல்லி தகவல்கள் அனைத்தும் சிறப்பு! படங்கள் வழக்கம் போல் வெகு அருமை! நன்றி!

  ReplyDelete
 11. அருமையான தகவல்கள்,அழகான படங்களுடன். நன்றி

  ReplyDelete
 12. கூடாரவல்லி தகவல்களை படங்கள் அனைத்தும் அருமை சகோதரியாரே நன்றி

  ReplyDelete
 13. கூடாரவல்லி உற்சவம் தகவல் அருமை அம்மா..

  ReplyDelete
 14. கண்குளிர ஆண்டாளையும் ரங்கமன்னாரையும், ஸ்ரீரங்கநாதனின் நாச்சியார் திருக்கோலத்தையும் சேவித்தாயிற்று!
  நன்றி!

  ReplyDelete
 15. கூடாரவல்லியும் அக்கார அடிசலும் அருமை..... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete