Friday, January 24, 2014

வளம் வர்ஷிக்கும் வானமுட்டி பெருமாள்









லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுண்ட க்ருஷ்ண மதுசூதன ஸ்ரீ ஸ்ரீனிவாசா
ப்ரமண்ய கேசவ ஜனார்தன சக்ரபாணே
விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம்.

பழமைவாய்ந்த பெருமையுடையதும்; காவிரி வடகரை வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும்; பிதுர் தோஷம், ஹத்திதோஷம், சனி தோஷம் போன்ற தோஷங்களுக்கு நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்ற தலம் கோழிகுத்தி.

மூலவர் திருநாமம்: ஸ்ரீவானமுட்டி பெருமாள், பக்தப்ரியன், வரதராஜன்.

இறைவி: ஸ்ரீதயாலட்சுமி (மூலவரின் திருமார்பிலே உள்ள தாயார்), பூமாதேவி (சிலாரூபம்).

விமானம்: சத்திரவிமானம் (குடை போன்ற அமைப்பு).

தீர்த்தம்: விஸ்வபுஷ்கரணி, பிப்பிலமகரிஷி தீர்த்தம்.

குடகுமலைச்சாரலில் வாழ்ந்த நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். 

ஒருமுறை, அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது,  நாரத மாமுனிவர் மிக இனிமையாகப் வீணை இசைத்துக்கொண்டிருந்த  தெய்வீகமான ஒலியை செவியுற்று  வணங்கி அடிபணிந்து நின்றான்.

முனிவர்  உபதேசித்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். 

அப்போது அசரீரி ஒலித்தது.""நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் (சிவன்) உனக்கு வழிகாட்டியாக வருவார். வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ, அங்கேயே தங்கிவிடு,''என்றது.

அதன்படி, மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.
ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது.
மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான்.

அந்த இடத்தில் தோன்றிய பெரிய அத்தி மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார்.

மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் "கோடிஹத்தி' என அழைக்கப்பட்டது.

 "கோடிஹத்தி' என்றால் "சகல பாவமும்நீங்குமிடம்' என்று பொருள். 
இதுவே, காலப்போக்கில் மருவி "கோழிகுத்தி' ஆனது.  

இதன் பின் மன்னன் பெருமாள்  பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். "பிப்பல மகரிஷி' என மன்னனை மக்கள் அழைத்தனர். 

பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். 
அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை "பிப்பல மகரிஷி தீர்த்தம்' என அழைக்கிறார்கள்.


பிப்பிலர் தவம் செய்த சிறுமண்டபம் தீர்த்தக்கரையோரத்தில் 
இன்றும் உள்ளது. 
[Gal1]
பெருமாள், வானமுட்டி பெருமாள் என்று அனைவராலும் 
பயபக்தியுடன் வணங்கப்படுகிறார்.

பிப்பிலர் அருளிய சனி ஸ்தோத்திரம்

ஓம் கோணஸ்த பிங்கலே பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ- சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய: படேத்
சனைச்சர கிருதா பீடநகதாசித் பவிஷ்யதி.

கோழிகுத்தி வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட 
சரபோஜி மகராஜா,  தனது யுத்ததோஷம்  நீக்க  வேண்டிக்கொண்டார். 

பிப்பிலர்க்கு அருளியதுபோல் (வானளாவிய காட்சி) 
சரபோஜி மகாராஜாவுக்கும் இந்த அத்திமரத்தில் காட்சி தந்தருளினார். 

ஆஹா! கனவிலும் நினைவிலும் காணக்கிடைக்காத காட்சியென்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மன்னர், தன்னைப் போல அனைவரும் பலனடைய வேண்டும் என்று எண்ணினார். 

சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டு சதுர்புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புத திருக்கோலத்தை ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலைவடித்து, ஆலயம் எழுப்பி பூஜை செய்தார். 
விஸ்வரூப பெருமாள் என்பதால் 
வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார்.

மகேந்திரவர்மன் போன்ற பிற மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள் என்பதற்கு 7-ஆம் நூற்றாண்டு, 10-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன. 

அந்தக் கல்வெட்டில் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. 

 மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, வைணவ ஆகம விதிப்படி  சுற்றுப்பெருமதில் களுடன் ஆலயம் அமைத்து, முறைப்படி காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயனின் அருட்காட்சியை வணங்கிவிட்டு பலிபீடம், கொடிமரத்தைக் கடந்து ஸ்ரீவிநாயகப் பெருமானை தரிசிக்கலாம்.

கருடாழ்வாரிடம் உத்தரவு பெற்று உள்மண்டபத்தில் நுழைந்து ஆலயக் கருவறை விமானத்தின் கீழ், 14 அடி உயரத்தில், மார்பில் ஸ்ரீ தயாலக்ஷ்மியுடன் விளங்கும் வானமுட்டி பெருமாளின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம் பெறலாம் ..

மூலிகை வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்றுவரை காயாமல், வேர்களும் நிறம் மாறாமல் ஈரத்தன்மையுடன், வேரே திருவடியை தாங்கி நிற்கும் அதிசயத்தோற்றத்துடன், அருகில் பூமாதேவி சிலாரூபத்துடன் ஸ்ரீவானமுட்டி பெருமாளின் வடிவழகை மெய்ம்மறந்து மெய்யுணர்வோடு வணங்கலாம். 
பெருமாள் மார்பில் மகாலட்சுமி
[Gal1]
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளையும் தரிசிக்கலாம். தாயாருக்கு தனிச்சந்நிதி கிடையாது.

உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும், 
இடப்புறம் யோகநரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்; 
நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர்.

மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி, தைலக்காப்பு மட்டுமே. 
 பெருமாள் வளர்ந்து கொண்டே செல்வதால் அவர் மேலும் வளராமல் இருக்க தானியம் அளக்கும் மரக்காலை கிரீடம் போன்று திருமுடியில் சாற்றியுள்ளனர். 
அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் யோக நரசிம்மருக்கும் வருணமூலையில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கும் செய்து பலனடையலாம். 

வெளிப்பிராகாரத்தின் வடதிசையில் தெற்குநோக்கிய வண்ணம் விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பிலமகரிஷி இம்மூவரும் அருள்புரிகின்றனர். 
பிப்பில மகரிஷி அருளிய சனி ஸ்தோத்திரம், பெருமாள் 
தியான ஸ்லோகம் ஆலய வழிபாட்டு நேரங்களில் ஓதப்படுகின்றன.
ஈசான்ய திக்கில் மேற்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு
ஏழு ஸ்வரங்களையும் தன்னில் கொண்டவராக
சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சனேயர்' அருள்புரிகிறார்.
சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஞ்சனேயரை வழிபட்டு இன்னல்கள் நீங்கப்பெறுகிறார்கள்.. சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறைகளில் வளம் பெற தரிசித்து பயனடையலாம் ..!

அனுமன்  சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது.ம் ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலைமீது தூக்கி வைத்துள்ளதும் சிறப்பு..!

திருப்பதி சீனிவாசப் பெருமாளையும், 
சோளிங்கர் யோக நரசிம்மரையும், 
காஞ்சிபுரம் அத்திவரதராஜப் பெருமாளையும் 
ஒன்றாக தரிசித்த பலன், கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும் என்று ஸ்தலபுராணம் சொல்கிறது.
மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தில் இங்கு வழிபாடுகள் செய்தால், பன்மடங்கு பலனைப் பெறலாம்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சனிக்கிழமை வருவதால் வெகுசிறப்பாக இருக்கும்.
 சிந்தையில் மாலவனை நிலைநிறுத்தி வழிபடுவதும் வீதிதோறும் இறைவன் திருநாமத்தைப் போற்றிப்பாடுவதும் ஆடுவதும் வைணவமரபு. 

பக்தர்கள் கூடும் கூட்டத்தில் இறைவனும் இணைந்து உடனிருப்பான் என்று நம்மாழ்வார் தமது பாசுரத்தில் கூறுகிறார். 

வையத்துள் வாழ்வாங்கு வாழ வளப்படுத்தும் வானமுட்டி பெருமாளை வழிபடுவோம்.

ஆலயத் தொடர்புக்கு: எம்.எஸ். வரதராஜ பட்டாச்சார்யார், செல்: 97872 13226.

அமைவிடம்:

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையிலுள்ள மூவலூருக்கு வடக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலை விலுள்ளது கோழிகுத்தி. மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் சோழம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி அரை கிலோமீட்டர் நடைபயணம் மேற் கொண்டு கோழிகுத்தி செல்லலாம். மினி பஸ்ஸில் ஆலய வாசலுக்கே செல்லலாம். காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.



13 comments:

  1. வானமுட்டி பொருமாள் மகத்துவம் அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.

    சிறப்பான விளக்கம் படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது..வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வானமுட்டி கோவில் பாழைடைந்து இடிந்து இருந்த போதும் போய் இருக்கிறோம். அழகாய் கட்டி கும்பாபிஷேகம் ஆன போதும் போய் இருக்கிறோம். அவரின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    இப்போது மூவலூர் மார்கசகாயர் கோவிலும் கும்பாபிஷேகம் ஆகி அழகாய் காணப்படுகிறது.
    படங்கள் எல்லாம் மிக அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சிறப்பான படங்களுடன் அழகிய பகிர்வு!

    ReplyDelete
  5. சிறப்புவாய்ந்த கோவிலை பற்றிய அறியாத தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றீ..

    ReplyDelete
  6. அறியாத கோயிலைப் பற்றிய தகவல்கள் விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வையத்துள் வாழ்வாங்கு வாழவைக்கும் -
    ஸ்ரீ வானமுட்டிப் பெருமாளைப் பற்றிய அரிய தகவல்களுடன்
    கண் நிறைந்த படங்களும் - அழகின் சிகரம்.

    ReplyDelete
  8. ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள் பற்றிய செய்திகள் சிறப்பு.
    பாராட்டுக்கள்....

    ReplyDelete
  9. சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்கள் அறிந்தேன். படங்களும் அழகு.

    ReplyDelete
  10. ஒரு ஆலயத்தைப் பற்றி பதிவிடும்போது அந்தப் பதிவு தகவல் களஞ்சியமாக இருப்பது பாராட்டத்தக்கது. அருமை.

    ReplyDelete
  11. ஜொலிக்கும் படங்களுடன் ஆரம்பித்துள்ள மிக அருமையான அழகான பதிவு.

    வ .....வ ..... வா ..... பெருமாள்.

    தங்கமான தலைப்பு ;)

    ReplyDelete