Friday, January 17, 2014

ஞானம் அருளும் தைப்பூசத் திருநாள்ஓம் ஜெயஜெய மகாவீர பகவான் ஸ்ரீஸ்கந்தா நமோநம!
ஓம் ஜெயஜெய மகாஜோதி சக்தி சரவணபவாயி நமோநம!'

என்னும் மந்திரத்தை  சொல்லி தைப்பூசத்தில் ஷண்முகியாம் வேலாகிய ஜோதியை வழிபடும் வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் காணலாம்.

வேல் வழிபாடு முருகன் வழிபாடு மட்டுமல்ல;
ஜோதி வழிபாடும், சக்தி வழிபாடுமாகும்.

சூரனை வதம் செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு, தன் ஞானசக்தியால் அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வேல் வழங்கி ஆசிவழங்கினாள்.\
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. - 

வேல் என்பதும் ஜோதி என்பதும் வேறல்ல. பார்வதி தேவியின் சக்தியிலிருந்து அவதரித்ததால் அந்த வேலாகிய ஜோதி முருகனுக்குத் தங்கையாகிற வேல் பிரம்மவித்யா சொரூபமானது. 

சக்தியின் வடிவாய்- சக்தியிடமே உருவான வேல், கந்தனின் தங்கை என்றும்; 

அந்த வேலைத் தோற்றுவித்து அன்னை அளித்த திருநாள் தைப்பூசத் திருநாள் என்றும் போற்றி வழிபடுகிறார்கள் . 

முருகனையும் ஜோதியையும் (வேல்)  எப்போதும் பிரிக்கமுடியாது. எனவேதான் புராணங்கள் ஜோதியாகிய சக்தி வேலை "ஷண்முகி' 
என்று போற்றுகின்றன.
இந்த வேல்தான் சூரபத்மனை இரண்டா கப் பிளந்து ஞானத்தை அளித்தது. எனவே, ஞானத்தின் அம்சம் வேல். அந்த வேலைத் தாங்குகின்ற முருகப்பெருமானை "ஞானவேல்முருகன்' என்று போற்றுகின்றன ஆகமங்கள்.

பேசமுடியாத நிலையிலிருந்த குமர குருபரர் திருச்செந்தூர் முருகனின் தாள் பணிந்திட, முருகன் அவரது நாவில், ஞானவேல் கொண்டு அட்சரம் எழுத, குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவைப் பாடினார்.

மாயையே உருவாகத் திகழ்ந்த கிரௌஞ்ச மலையைப் பொடிப்பொடியாக்கியதும் இந்த வேல்தான்.

தன் படைவீரர்களின் தாகம் தணிக்க திருச்செந்தூர் கடற் கரையில் நாழிக்கிணற்றினைத் தோற்றுவித்ததும் இந்த சக்திவேல் என்கிறது கந்தபுராணம்.

திருப்பரங்குன்றத்தில் வேலுக்குதான் முதல் பூஜை நடைபெறுகிறது.

மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேல்கோட்டம் தியான மண்டபம் கோவிலில் வேல்தான் மூலவர். சுமார் ஆறரை அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய வேல் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

வேலின் தண்டுப்பகுதியில் பஞ்சபூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வேலின் முகப்பில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில், விதானத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

முன் மண்டபம் "சரவணபவ' எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வகையில் அறுகோண வடிவில் அமைந்துள்ளது. 
 
தைப்பூசநன்னாள் உலக சிருஷ்டியின் ஆரம்ப நாள்..! 
உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

சிவசக்தி ஜக்கியம்  நிகழ்ந்த திருநாள்... 

சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை .. 
சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் 
சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது 

வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஞானக்கண் தந்து, அவர்களுக்காக சிவபெருமான்  சிவதாண்டவ திருநடனம் புரிந்தது ஒரு தைப்பூசத் திருநாளில்தான்...
திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும். - 
வரகுணபாண்டியன்  தனக்கேற்பட்ட தோஷங்கள் நீங்க, திருவிடைமருதூர் சென்று நீராடி, அங்குள்ள வில்வ மரத்தை வலம்வந்து இறைவனை வழிபட்டு தோஷங்கள் நீங்கிய நாள் தைப்பூசமாகும். தைப்பூசத்தன்று வில்வமரத்தை பூஜித்து வலம்வந்து வணங்கினால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும்.

-அருட்பெருஞ் ஜோதி - தனிப் பெருங்கருணை‘ எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி, ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். 

இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். -
 மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக தாண்டவம் (நடனம்) புரிவார்.

நடன நிலையில் இருக்கும் சிவனை ‘நடராஜர்’ என்கிறோம். நடராஜப் பெருமான் தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த நிலையையே ‘உமா மகேஸ்வரர்’ என்று வழிபடுகிறோம்...

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். 

இறைவனும், இறைவியும் இணைந்து நடனம் புரிந்த  
தைப்பூச திருநாள் மிகவும் விசேஷமான நாளாகும். 
தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் சிறப்பு. - ஆதலால் தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், குரு பகவானாகிய பிரகஸ்பதியையும், தட்சிணாமூர்த்தி கடவுளையும் தியானித்து வழிபடுவதன் மூலம் கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

ஒரு தைப்பூச நன்னாளில்தான் வள்ளியை 
முருகப் பெருமான் மணமுடித்தார். 
ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை. - 

 தைப்பூசம் காவடிப் பிரியன் கந்தனுக்கும் மிகவும் உகந்த நாள்.தைப்பூச தினம் முருக பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சேவற்காவடி, மச்சக்காவடி, தீர்த்தக்காவடி என அவரவர் பிரார்த்தனைக்கு ஏற்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் மெய் சிலிர்க்கும் நேர்த்திக் கடன்கள் செலுத்தியும் கந்தப் பெருமானை வணங்குவார்கள். 
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும் மருதமலை, சிக்கல் வயலூர், குன்றக்குடி, விராலிமலை, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் உற்சவங்கள், சிறப்பு பூஜைகள், யாகங்கள், திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் போன்றவை மிக விமரிசையாக நடக்கின்றன. 

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நாளாக தைப்பூசத்தை கொண்டாடுகிறார்கள். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடக்கும். 
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறும். 

தஞ்சை மாவட்டம் திருவையாறில், காவேரியின் வடகரையில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகையரின் சமாதி உள்ளது. 

இங்கு ஆண்டுதோறும் தைமாத பூச நட்சத்திரம்கூடிய 
பகுன பஞ்சமியன்று ஆராதனை விழா நடைபெறும்.

திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் 
தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

இரண்டாம் நாளிலிருந்து எட்டாம் நாள்வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷ, குதிரை வாகனங்களில் அம்மன் உலா வருவாள். 

ஒன்பதாம் நாளன்று தெப்பத்திருவிழா நடைபெறும். 

பத்தாம் நாள்- தைப்பூசத்திருநாளன்று மாரியம்மன் சமயபுரத்திலிருந்து புறப் பட்டு, ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் வடபுறத்தில் ஓடும் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு எழுந்தருள்வாள். 

அப்போது ஸ்ரீரங்கநாதர், தன் தங்கையான  (வைஷ்ணவி) மாரியம் மனுக்குப் பிறந்தவீட்டு சீர் அளிக்கும் வைபவம் நடைபெறும்.

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 26 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது வானவன் மாதேவீச்சுரம் ஸ்ரீவானந்தேஸ்வரர் கோவில். இங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை தைப்பூச நாள் காலையில் சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சி வழிபடுகிறான். இந்த சூரிய பூஜையை தரிசித்தால் புனிதம் சேருமென்பது ஐதீகம்.

தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழுநிலவும், ஞானசபையில் நடுவில் உள்ள ஜோதியும் ஒரே நேர்கோட்டில் அமையும். இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டும் நிகழும். 

இதனை அறிவியல் ஆய்வாளர்கள் உண்மை என்று உறுதியளிக்கிறார்கள்.

தைப்பூச நன்னாள் பௌர்ணமி தினத்தில்தான் வரும். 

அன்றைய தினம் "காஸ்மிக் எனர்ஜி' எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பர். 

20 comments:

 1. சூரியன், நிலவு, ஜோதி மூன்றும் ஒரே நேர்கோட்டில் தெரிவது தைப்பூசத்தன்று மட்டுமே & என்பது போன்ற அரிய பல தகவல்களோடு ஆன்மீக ரசமும் பருக முடிந்ததில் மகிழ்ச்சி. அழகழகான முருகன் படங்கள் (முருகு என்றாலே அழகுதானே!) கூடுதல் போனஸ்!

  ReplyDelete
 2. சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு அம்மா...

  அருமையான தகவல்கள் + விளக்கங்கள்...

  நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தைபூச திருநாளின் சிறப்புக்கள் அனைத்தையும் அழகான படங்களுடன் பகிர்ந்திருக்கிறீங்க. சிறப்பாக சூரியன்,நிலவு,ஜோதி பற்றிய செய்தி வியப்பளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இன்று தைப்பூசம் + வெள்ளிக்கிழமை.

  தங்கமான பதிவாகக் கொடுத்துள்ளீர்கள்.

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

  >>>>>

  ReplyDelete
 5. பளிச்சென்று தெரியும் முதல் படத்தை வெகு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். ;)

  முருகப்பெருமான் அழகோ அழகு !

  >>>>>

  ReplyDelete
 6. இரண்டாவது படத்தில் மிகவும் நான் லயித்துப்போனேன்.

  விநாயகரின் இரு கண்களிலும் அவரின் பெற்றோர்களான சிவபெருமானும், பார்வதி தேவியும்.

  ஆஹா! எவ்வளவு அழகாக கற்பனைசெய்து கச்சிதமாக ரஸிக்கும் விதமாக வரைந்துள்ளார்கள்.

  >>>>>

  ReplyDelete
 7. எல்லாப்படங்களுமே அருமை. அழகு. திருப்தி. மகிழ்ச்சி.

  வழக்கம்போல என் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

  >>>>>

  ReplyDelete
 8. இங்கு எங்கள் தெரு முனையிலும் வழக்கம்போல தீர்த்தவாரிக்கு காவிரிக்குச் சென்று வரும் அனைத்துக்கோயில் ஸ்வாமி + அம்பாள் புறப்பாடுகளை வரவேற்க ‘ராமா கஃபே’ வாசலில் பெரிய பந்தல் போட்டு, மாலையிட வசதியாக, தவழும் ஸ்ரீ கிருஷ்ணன் விக்ரஹத்தை தொங்க விட்டுள்ளார்கள். ;)))))

  >>>>>

  ReplyDelete
 9. அ னை த் து க் கு ம் ;))))) என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  o o o o o

  ReplyDelete
 10. அ னை த் து க் கு ம் ;))))) என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  o o o o o o

  ReplyDelete
 11. தைப்பூசத் திருநாளில் சிறப்பான பகிர்வு...

  சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரிக்கு கொள்ளிடத்திற்கு வந்தாச்சு...

  ReplyDelete
 12. தைப்பூசத்திற்கு என்னென்னகோவில்களில் என்ன விழாக்கள் என்னவிசேஷம் விலாவரியாக அழகான படங்களுடன் மிகவும் அருமையான ஒரு பதிவு திருச்சி ஊரில் உள்ள அனைத்து சிவன் கோவில் ஸ்வாமிகளும் காவிரியில் தீர்த்தவாரி முடிந்து விடிய விடிய மலையை ச்சுற்றி வலம் வரும் .குளித்தலையிலும் தைப்பூசம் மிகசிறப்பாக இருக்கும். நன்றி

  ReplyDelete
 13. தைப்பூசத்தின் மகிமையை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு படங்களும் கண்களுக்கு அருமையான விருந்து.

  வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சொன்னது போல, முருகப்பெருமானின் முதல் படத்தில், முருகன் அப்படி ஒரு அழகாக காட்சி கொடுக்கிறான்.

  ReplyDelete
 14. அத்தனை தகவல்களும் அருமை! விரிவான அழகான பதிவு! வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 15. அழகான அருமையான பதிவு. வாழ்த்துகள். நன்றி அம்மா.

  ReplyDelete
 16. எம்பெருமான் முருகனின் தரிசனம் அருமை...
  வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 17. தைப்பூச திருநாளின் சிறப்புக்களையும், எந்தெந்த ஊர்களில் எவ்வாறு இது கொண்டாடப் படுகிறது என்ற விவரங்களையும் அருமையான படங்களையும் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. தைபூசதிருநாள் தரிசனம் மிக அருமையாக ஆனது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. மிகவும் அறிய தகவல்கள் .எங்களையும் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 20. வணக்கம்
  அம்மா.
  மிகச் சிறப்பாக பதிவை தொகுத்து வழங்கியுள்ளிர்கள் அதிலும் வேலுக்கு சொல்லிய வரலாற்றுக்கதையும் சிறப்பு... வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete