Wednesday, September 11, 2013

ஆற்றல் அருளும் ஆதிவராகர்


ஸ்ரீ லட்சுமி வராகர் காயத்ரி மந்திரம் 

ஓம் தநுர்த்தராய வித்மஹே 
வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி 
தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்.

 

மூலவர் ஆதிவராகராகவும் உற்சவர் லட்சுமிபதி எனும் திருப்பெயருடனும் தாயார் பூமாதேவியுடன் திருவருள் புரியும் திருத்தலம் கல்லிடைக்குறிச்சி  ..

குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் சிலாசாலிபுரம் என்றானதனால் ரிஷிகள் இங்கு தவம் செய்ய ருசி (ஆசை) கொண்டதால் ‘குருசி’ எனப்பட்டது. சிலாசாலிகுரிசி - கற்கள் குவிந்த, யாக ருசி மிகுந்த ஊர் எனும் பொருள்படும்படி. இதுவே ‘கல்லிடைக்குறிச்சி’யாயிற்று.

தல தீர்த்தமாக தாமிரபரணி ஆறு விளங்குகிறது..  
வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது.

திருக்கரந்தை, கல்யாணபுரி என புராணங்களில் அழைக்கப்படுகிறது.

சாப விமோசனத்திற்காக பூமிக்கு வந்த குபேரன், ஈசனை பல தலங்களில் தரிசித்து ஆதிவராகரை கல்லிடைக்குறிச்சி தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

குபேரன் பிரதிஷ்டை செய்த மூர்த்தி காலப்போக்கில் பூமியில் புதையுண்டது. ஒரு பக்தரின் கனவில் பெருமாள் தோன்றி தான் இருக்கும் இடத்தை அறிவித்து ஆலயம் எழுப்ப ஆணையிட அதன்படி  எழுப்பப்பட்டது.

கருவறையில் பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் பெருமாள் தரிசனமளிக்கிறார்.

எப்போதும் தாயாருடன் சேர்ந்தே இருப்பதால் இவரை நித்ய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கின்றனர்.

திருமண வரம் வேண்டுவோர்க்கு தட்டாமல்  அருள்வதால் கல்யாணபுரி என்று அழைக்கப்படுகிறது.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் வராகர் பாடப்பெற்றிருக்கிறார்.

ஆலய பிராகாரத்தில் ஒரு புறம் ஸ்ரீதேவி சந்நதி கொண்டிருக்கிறாள்; மறுபுறம், வழக்கமாக ஆண்டாள் இருக்க வேண்டிய சந்நதியில் பூதேவி வீற்றிருப்பது  சிறப்பு.

தாயார் சந்நதியருகே அற்புதமான தசாவதார சிலைகளைக் கண்டு மகிழலாம்.

வெளிப் பிராகாரத்தின் தென்புறத்தில் சாஸ்தா மண்டபமும் வடகிழக்குப் பகுதியில் தர்மசாஸ்தா சந்நதியும் உள்ளது வைணவ தலத்தில் அபூர்வமாகக் காணக் கிடைக்கக்கூடியது.


பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு கருடசேவை உற்சவம் நிகழ்த்தி தம் நன்றிக் கடனை செலுத்துகின்றனர். அதனால்  அடிக்கடி கருட சேவையில் பெருமாளை தரிசிக்கலாம்.

கருவறை விமானத்தில் சயனப்பெருமாளை தரிசிக்கலாம். பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளுடன் காட்சியளிக்கும் இவருக்கு வராகமூர்த்திக்கு பூஜை செய்த பின் காலையில் பூஜை செய்யப்படுகிறது. அப்போது மட்டுமே இவரை தரிசனம் செய்யலாம்.
ஆலய மேற்புற சுவரில் வீற்றுள்ள மூலை கருடாழ்வாருக்கு ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று கருடபகவானை புஷ்பாங்கியில் தரிசிக்கலாம்.
பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தினமும் ஆலய பட்டாச்சார்யார் மேளதாளங்கள் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று திருமஞ்சனத்திற்கான தீர்த்தத்தை எடுத்து வருவார்.

நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரவும் கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் ஆதிவராகர் அருள்வதாக  நம்பிக்கை..!

பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதும் விசேஷ திருமஞ்சனம் செய்வதும் ஆலயத்தின் சிறப்பு மிக்க பிரார்த்தனைகள்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் கல்லிடைக்குறிச்சி உள்ளது.
15 comments:

 1. அருமையான படங்கள்... நன்றி அம்மா...

  ReplyDelete
 2. படங்கள் அட்டகாசம் அம்மா... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அழகான படங்களுடன் கூடிய சிறப்பான பதிவு. இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. good info about varaga murthy with pictures thanks for sharing

  ReplyDelete
 5. ஆதிவராகர் பெயர்தான் அறிந்துள்ளேன் இதுவரை..
  இவ்வளவு விரிவாக விபரமாக இப்போதுதான் உங்கள் பதிவால் அறிகிறேன்..

  அருமை!

  என் நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 6. நல்ல தரிசனம் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. தெய்வீக தரிசனம். நன்றி அம்மா

  ReplyDelete
 8. கல்லிடைக்குறிச்சி யின் பெயர்க்காரணம் தெரிந்து கொண்டேன், இங்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் போன்ற தகவல்களையும் அறிந்து பொண்டேன். நன்றி

  ReplyDelete
 9. ஆற்றல் அருளும் ஆதி வராஹருக்கு அடியேனின் வந்தனங்கள்.

  >>>>>

  ReplyDelete
 10. கல்லிடைக்குறிச்சி என்ற ஸ்தலம் பற்றியும், ஊரின் பெயர் காரணம் பற்றியும், இந்தக்கோயில் கொண்டுள்ள பெருமாள் பற்றியும், மும்மூர்த்திகளின் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதர் அவர்களின் கீர்த்தனைகளைப்பற்றியும் தகவல்கள் அருமையாய் உள்ளன.

  இதுவரை கல்லிடைக்குறிச்சி என்றால் அப்பளாம் தயாரிப்புக்கு பெயர்போன ஊர் என்று மட்டுமே நான் நினைத்திருந்தேன் + தெரிந்திருந்தேன்.

  >>>>>

  ReplyDelete
 11. எப்போதும் தாயாருடன் சேர்ந்தே இருப்பதால்

  ”நித்ய கல்யாணப்பெருமாள்” ;)))))

  ஆஹா ! கேட்கவே மிகவும் மனதுக்கு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதே!

  >>>>>

  ReplyDelete
 12. கடைசி படம் விசித்திரமாக உள்ளது.

  "சோதனை மேல் சோதனை ... போதுமடா சாமி ...
  வேதனை தான் வாழ்க்கையென்றால் .... தாங்காது பூமி ...!" என்பது திரைப்படப்பாடல்.

  அந்த நம்மால் தாங்க முடியாத பூமியை அப்படியே பந்து போல கையில் ஏந்தி விளையாடும் வராஹப்பெருமாள் ... அடேங்கப்பா ... சூப்பரோ சூப்பர் தான்.

  >>>>>

  ReplyDelete
 13. அருமையான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள்.

  எதுவும் தாங்கள் சொன்னால் அதில் ஓர் தனி அழகோ அழகு தான்.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  எங்கிருந்தாலும் வாழ்க !

  ooooo

  ReplyDelete
 14. ஸ்ரீவராக மூர்த்தியைப் பற்றி அருமையான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!..

  ReplyDelete
 15. உங்கள் பதிவுகளைப் படித்து வருவதால் நான் போகவேண்டிய திருத்தலங்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே போகிறது. வழக்கம்போல புகைப்படங்கள் மனதை நிறைக்கின்றன.

  ReplyDelete