Sunday, August 24, 2014

ஆவணி ஞாயிறு வழிபாடு

வாழ்வில் சகல செய்ல்களிலும் வெற்றியை அருளவல்ல அகத்தியர் அருளிய ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம் துதியை சொல்லி பயன்பெறலாம்..

பிரார்த்தனை

ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி இராவணனை வெல்ல முனைந்த போது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, 
ஆதித்ய ஹ்ருதயத்தை பகவான் அகஸ்தியர் உபதேசித்தார்.

உலகில் அனைவருக்கும் ரக்ஷையாக ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரம் ஜபித்து துன்பம் நீங்கி,  ஆயுள், ஆரோக்கியம், செல்வம் முதலிய எல்லா  நலன்களையும் அடையலாம்...
தியானம்

சூரிய பகவான் ஏழு உலகங்களுக்கும் ஒளி தரும் விளக்கு. 
தன் கதிர்களால் வெப்பத்தைத் தணிப்பவர். துன்பத்தைத் துடைப்பவர். அருணனின் கதிர்களால் சூரிய  உதயத்தை உலகம் அறிகிறது. உலகத்திற்கு முதலானவர். மிகவும் உயர்ந்தவர். 
அத்தகைய  சூரிய பகவானை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம் − ஸ்ரீ சூரிய பகவானின் பெருமை

யுத்தம் செய்தபின் சற்று ஒய்வுடன் அது பற்றிச் சிந்திக்கும் ஸ்ரீ ராமனையும், யுத்தத்தைத் தொடர வந்துள்ள இராவணனையும்  காண விண்ணவருடன் அங்கு வந்திருந்த அகஸ்திய பகவான் ஸ்ரீ ராமனை அணுகிக் கூறினார்.

பெருமை பொருந்திய திருக்கைகளையுடைய குழந்தாய் ராமா நிரந்தரமான ஒர் உண்மையை உனக்குக் கூறுகிறேன், கேள். இதனால் உனக்குப் பெரும் வெற்றி கிடைக்கும்.

இந்த ஆதித்தியனின் பெருமை புண்ணியமானது. இது எதிர்ப்பே இல்லாமல் செய்யும். வெற்றிதரும். இதைத் தினமும் ஜபம் செய்ய வேண்டும். இது குறைவற்றது. சிறந்தது. நன்மை தருவது.

இது நன்மைக்கெல்லாம் நன்மை தருவது. எல்லாப் பாவங்களையும் போக்க வல்லது. கவலைகளையும், துயரங்களையும் அகற்றுவது, ஆயுளை வளர்க்கும், மிகச் சிறந்தது.

இந்த சூரிய பகவான் ஒளி மிக்கவர். விண்ணவரும் அரக்கரும் இவரை வணங்குவர். உதயமாகும் இவரை நீ வணங்குவாயாக, இவர் ஒளி தருபவர். உலகின் ஈஸ்வரன்.

இவர் விண்ணவர் அனைவரின் உருவானவர், ஒளிநிறைந்தவர். ஒளிமை உண்டாக்குபவர். தனது கதிர்களால் உலகங்களையும், விண்ணவரையும், அரக்கரையும் காப்பாற்றுகிறார்.

இவரே படைக்கும் பிரமன், ஸ்ரீ மஹாவிஷ்ணு, பரமேஸ்வரன், கந்தன், மக்களின் தலைவன், இந்திரன், செல்வம் அளிக்கும் குபேரன், காலதேவன், சந்திரன், வருணன் ஆக விளங்குகிறார்.

சூரிய பகவான் நம் முன்னோராகவும் உடல் நலம் அருளும் அசுவினி தேவதைகளாகவும், வாயு பகவானாகவும், வாழ்க்கை நேறியை உணர்த்துபவராகவும், காற்று கனல் உயிராகவும், பருவங்களைப் படைப்பவராகவும் உள்ளார்.

இவரே படைப்பவர். விண்ணில் விளங்குபவர். தங்கம் போன்ற ஒளி படைத்தவர். தங்கத்தின் உள்ளேயும் உள்ளவர். பகல் வேளையைப் படைப்பவர்.

பச்சை நிறமுள்ள ஏழு குதிரைகளைக் கொண்டவர், எண்ணற்ற கதிர்களைக் கொண்டு இருளை அகற்றி நலம் தருபவர், விண்ணவருக்கும் ஆக்கம் அளிப்பவர்.

தனக்குள் தங்கத்தைக் கொண்டவர், குளிர்த்தவர், வெப்பம் தருபவர், ஒளியை அருளுபவர், தனக்குள் தீயையும் கொண்டவர். அதிதி என்ற தாயின் மகனாவார். தூய்மையானவர், பனியை அகற்றுபவர்.

சூரிய பகவான்விண்ணுலகின் தலைவர். இருளை அகற்றுபவர், ருக், யஜுஸ், ஸாமம் ஆகிய வேதங்களில் தேர்ச்சி பெற்றவர். மழையைத் தருபவர், நீரின் நண்பன், ஆகாய வீதியில் பவனி வருபவர் நக்ஷத்ர க்ரஹ தாராணாம்.

வெயிலைக் கொடுப்பவர், முடிவையும் தருபவர், வெப்பம் தருபவர், கற்பனை மிக்க கவி. உலகத்தின் உருவானவர். பேரொளியானவர், பரிவுள்ளவர், எல்லாவற்றுக்கும் ஆதிகாரணமானவர்.

அசுவினி முதலிய நட்சத்திரங்களுக்கும் சந்திரன் முதலிய கிரகங்களுக்கும் மற்ற தாரகைகளுக்கும் தலைவர். உலகைப் படைப்பவர். ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். பன்னிரண்டு உருவமுள்ள பகவானே உம்மை வணங்குகிறேன். 

'ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ' 
'ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ' 
'ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ' 
'ஓம் ஹ்ரைம் பானவே நமஹ' 
'ஓம் ஹ்ரெளம் ககாய நமஹ' 
'ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ' 
'ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ' 
'ஓம் ஹ்ரிம் மாரிசயே நமஹ' 
'ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ' 
ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ' 
'ஓம் ஹ்ரெளம் அர்க்காய நமஹ' 
'ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ' 


பகலவன் தோன்றும் கிழக்கிலுள்ள மலையையும், மறையுமிடமான மேகிலுள்ள மலையையும் வணங்குவோம். ஒளிக் கூட்டங்களுக்கும் பகலுக்கும் நாயகனை நமஸ்கரிப்போம்

வெற்றியே உருவானவரும், அதனால் கிடைக்கும் நன்மையுமான 
சூர்ய பகவனுக்கு நமஸ்காரம், எண்ணற்ற கதிர்களை உள்ள 
பகவானே, உம்மை நமஸ்கரிக்கிறோம்.

கடுமையானவரும், வீரம் நிறைந்தவம், தாமரை மலரை 
மலர வைப்பவருமான சூரிய பகவானை நமஸ்கரிப்போம்.

படைக்கும் பிரமன், ஈசன், மஹாவிஷ்ணு ஆகியோருக்கும் ஈசனும், ஒளி மிகுந்தவரும், உலகத்தையே உண்டு விடும் சக்தி உள்ளவருமான ருத்திரனின் உருவான ஸபீர்ய பகவானுக்கு நமஸ்காரம்.

இருளையும், பனியையும் எதிரிகளையும் செயலிழக்கச் செய்பவரும், அளவிட முடியாத பெருமை உள்ளவரும். செய்நன்றி கொன்றவரை மாய்ப்பவருமான ஜோதிகளின் தலைவருக்கு நமஸ்காரம்.

உருக்கிய தங்கத்தின் ஒளியையும், தீயின் தன்மையையும் கொண்டவரும், விச்வகர்மாவின் உருவானவரும், இருளை வெல்பவரும், உலகின் சாக்ஷந்யுமான பகவானை வணங்குகிறேன்.

ஐம்பூதங்களையும் இவர் ஆக்கியும் அழிக்கிறார். அதைக் காக்கிறார். அதற்கு வெப்பம் தந்து தன் கதிர்களால் நனைக்கவும் செய்கிறார்.

ஐம்பூதங்களுக்குள்ளும் இருந்து கொண்டு அவை தூங்கும் போது விழித்திருக்கிறார். இவரே அக்கினி ஹோத்திரமாகவும் அதன் பயனாகவும் அமைந்துள்ளார்.

பிரபுவாகிய இவரே வேதங்களாகவும், அதில் கூறப்பட்டுள்ள வேள்விகளாகவும், அவற்றின் பயனாகவும், உலகின் எல்லாச் செயல்களாகவும் உள்ளார்.

ராகவா ஆபத்திலும், துன்பத்திலும், காட்டின் நடுவிலும், பயம் தோன்றிய நிலையிலும் இந்த சூரிய பகவானின் பெயர் கூறும் யாரும் வருந்துவது கிடையாது.

விண்ணவருக்கும் தேவனும், லோக நாயகனுமான இவரை கவனத்துடன் பூஜிப்பாயாக. இதை மூன்று முறை ஜபம் செய்து யுத்தத்தில் வெற்றி காண்பாய்.

பெருமை மிகுந்த கைகளையுடைய ராமா நீ இப்பொழுதே ராவணனின் முடிவு காணப் போகிறாய், எனக் கூறி அகஸ்தியர் வந்தவாறே திரும்பிச் சென்றார்
.
இதைக் கேட்டு ஸ்ரீராமன் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெற்றுக் கவலை நீங்கினார். மகிழ்ச்சியுடன் இதை மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

வீரனான ஸ்ரீ ராமன் சூரிய பகவானை நோக்கி, சுத்தமாக மூன்று முறை ஆசமனம் செய்து, இதை ஜபித்து, வில்லை எடுத்தார்.

மகிழ்ச்சியோடு ராவணனுடன் போருக்குப் புறப்பட்டார். 
எல்லா வகையிலும் அவனை முடிக்க விரைந்தார்.

பிறகு சூரிய பகவான், தேவர்களின் நடுவில் இருந்து கொண்டு அரக்கர் தலைவனின் முடிவை அறிந்து மகிழ்ந்து "விரைந்து செயல்படுக" என்று 
ஸ்ரீ ராமனைப் பார்த்துக் கூறினார். 

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். 

முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சருமநோய்களில் இருந்து குணம்பெறலாம்.தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்

ஆவணி மாதத்தில் ஆத்மபலத்தைத் தரும் சூரியன்  
பலம் பெறும் இடமான சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார்.  

ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்தது..!

ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். 

சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்த கிருஷ்ணர் ஆவணி மாதம் பிறந்தார். 

இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும்
ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

அகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் 


எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும்.

காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.
பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். 

இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து, பாம்புத்தொல்லை இருக்கக்கூடாது என வேண்டி விரதம் இருப்பர்.

ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விரதமிருந்து சூரியனுக்குப் பொங்கலிடுவது சிறப்பைத்தரும். 

ஞாயிறு அன்று  மாரியம்மனை வழிபாடு குடும்பம் சிறக்கச்செய்யும்.


 இரு கண்களாலும் பிரத்தியட்சமாகக் காண்பது சூரியனையேயாகும். சிவாலயங்களில் சூரிய பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார். ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம் காண முடியும். 
சூரியன்  வெளிச்சம், வெப்பம், சூடு, உஷ்ணம் ஆகியனவற்றைத் தருகின்றார். 

 சூரிய வெப்பத்தால் கடல், ஆறு, குளம் முதலானவற்றின் நீர் ஆவியாக மேலெழுந்து பின்னர் மழையாகப் பொழிகின்றது. இதனால் விவசாயம் மேம்படுகின்றது. நீர் விசையால் மின்சாரம் கிடைக்கின்றது. வாழ்வுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. 

நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்கின்றது. எனவே தான் பன்னெடுங்காலமாக நமது முன்னோர் சூரியனை வழிபட்டு வந்தார்கள். 

 சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களில் ஒருவர் சிவசூரியன். சிவபெருமானின் முக்கண்களில் ஞானக் கண்ணாக உள்ளவர். 

இதனால் சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில் சிவசூரியனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. 

சிவ சூரியனுக்குப் பூஜைகள் செய்த பின்னரே ஏனைய பூஜைகள் செய்யப்படுகின்றன. அதேபோல எல்லா ஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதானத்தில் நடுநாயகனாக உள்ளவர் சூரியனே ஆவார். 

 இதனாலலேயே புலவர்கள் “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” எனப் புகழ்ந்து பாடியுள்ளனர்

ஒருவரின் ஜாதகப்படி ஆயுள், வீரியம், இருதய பலம், துணிவு, தலைமைத்துவத் தன்மை என்பனவற்றைக் கொடுப்பவர் சூரியனேயாவார். ஒருவரின் தந்தையினுடைய நிலைப் பாங்கை அவரின் ஜாதகத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும். ஆகவே ஜாதகத்தில் சூரியனின் நிலை முக்கியமானதாகும். 

சிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில் வெண்டாமரையை வைத்திருக்கின்றார். ஏனைய இரு கரங்களும் அபய, வரத ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய குதிரை வண்டியில் சஞ்சாரஞ் செய்வார் என்பது வேதவாக்கு. அவர் மாதுளம் பழ நிறத்தவர். 

வேதியர்கள் சந்தியா காலங்களில் சந்தியா வந்தனம்  சூரிய தர்ப்பணம்  108, 1008 என்ற வகையில் காயத்திரி மஹா மந்திரங்களை  ஜபம் செய்து உலக க்ஷேமத்துக்கு வழிவகுக்கிறார்கள்.! வேத மந்திரங்களின் தலை சிறந்த மந்திரம், காயத்ரி, காயத்திரிக்கு உரியவன் கதிரவன்

 தினமும் ஹோமம் செய்து அக்கினியில் சூரியனைக் கண்டு வழிபாடுகள்  செய்யப்படுகின்றது. எனவே சூரிய வழிபாடு முதன்மையானது. எல்லோருக்குமே நன்மை பயக்கக் கூடியது. 
தொடர்புடைய பதிவு..
ஆவணி ஞாயிறு

Posted ImageSun Flowers Cool HD Wallpaper Widescreen Download

10 comments:

 1. ஞாயிறு ஒளிமழையில் குளித்து வந்த பதிவு. “ஞாயிறு போற்றுதும் “ என்று போற்றியவர் இளங்கோ அடிகள்.

  ReplyDelete
 2. ஞாயிறு போற்றுதும்...ஞாயிறு போற்றுதும் எனும் பாடலுக்கேற்ப ஆவணியில் ஆரம்பித்து செய்ய வேண்டியவற்றை அழகுற பக்தியுடன் செய்ய சிறப்புகள் நலம் பெற்று இகலோக வாழ்வு வாழ வலியுறுத்தும் பகிர்வு! அருமை!

  ReplyDelete
 3. ஆதவன் புகழ் பாடும் இனிய பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 4. ஞாயிறு அன்று சூரிய பகவானின் பெருமைகளை அறியக் கொடுத்தது மிக மகிழ்ச்சி ராஜேஸ்வரி. மிகச் சிரமமான நேரங்களில் ஆதித்ய ஸ்லோகம் ஒன்பது முறை ஜபிக்கச் சொல்லிக் கொடுப்பார் தந்தை. மிக நன்றி.

  ReplyDelete
 5. சூரிய பகவான் வழிபாடும் ஆவணி ஞாயிறுச் சிறப்பும்
  அழகிய படங்களுடன் அருமை சகோதரி!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. சூரிய வழிபாடு குறித்த தகவல்கள் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 7. ஞாயிறு வழிபாடு அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 8. ஆதவன் வழிபாடு குறித்து ஞாயிறன்று நல்பதிவு அம்மா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. சூரியவழிபாடு,ஆவணிஞாயிறு பற்றி, அதன் சிறப்புகளை தங்கள் பகிர்வின் மூலம் அறிந்துகொண்டேன். உன்னதமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஆதவன் வழிபாடு அருமை. ஆவணி ஞாயிறு சூரியனுக்கு பொங்கல் வைக்கும் பழக்கம் உண்டு எங்கள் அம்மாவீட்டில்.
  ஞாயிறு விரதம் பலவருடங்களாய் இருந்து வருகிறேன்.
  பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete