Monday, August 5, 2013

கண்களிக்கும் கயிலாயக் காட்சி ..!மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.
அப்பர் சுவாமிகள் பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார்

நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்த சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். 

அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே உள்ளம் பரவசம் அடைந்தது. 

பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகஇறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். 

அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. 
ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். 

கோழி பேடையோடு கூடிக் குலாவி வந்தது; 
ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; 
அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் 
பாடிக் களித்துக் கொண்டிருந்தது
இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் (பன்றி) ஒன்று 
அதன் பெண் இனத்தோடு சென்றது;
 Pig HD wallpaper
நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன;
 
பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் 
மழலை பேசிக் கொண்டிருந்தன; 
காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. 
இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின.
உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். 

"இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை"
என்று உணர்ந்தார். 

இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். 
தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். 

இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.
ஆடி அமாவாசை அற்புதக்காட்சி: அறம்வளர்த்த நாயகியோடு 
ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு.
நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். 

நாவுக்கரசர் திருவையாறு. கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். 

மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் 
சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. 

அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். 

இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிஅமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். 

நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு.
கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். 
இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். 

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம்.

திருவையாற்றில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக்காட்சி விழா முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும்.

 சிவ பூஜையும்,  காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்டவரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளிதீர்த்த வாரியும், இரவு  ஐயாறு ஆலயத்தில் அப்பர்பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும்.

அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதயன், தலையேநீவணங்காய், வேற்றாகிவிண்ணாகி, மாதர்பலிறைக்கண்ணியினை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள்.

"யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' என்ற அப்பரின் திருவாக்கின் படி இந்நாளில் திருவையாறு சென்று திருக்கயிலைக் காட்சியைக் காண்போம்.


திருவையாறு தஞ்சாவூரிலிருந்து வடக்கே 11 கி.மீல் உள்ள மூவரால் பாடப்பெற்ற, காவிரி வடகரை தலங்களில் 51ஆவது தலம்.

காவிரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு என்ற ஐந்து நதிகள் பாயும் பிரதேசம் “ஐயாறு” (தென்னகத்தின் பஞ்சாப்) என்றழைக்கப்படுகிறது.

துரத்திவந்த எமனை விலக்கி அருளிய ஆட்கொண்டார் (சிவனின் மறு வடிவம் - தெற்கு நோக்கிய கோலம்) சந்நிதி இங்கு பிரசித்தமானது.

இவருக்கு வடைமாலை சாற்றி குங்கிலியம் வாங்கி தீக்குழியில் போட்டு எரியவிட்டால் எம பயம் வராது என்ற நம்பிக்கை உண்டு.

சிவனுக்கு வடைமாலை சாற்றுவது என்பது வேறு எந்தத் தலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு.

ஆடி அமாவாசை அன்று அப்பருக்குக் கயிலாயக் காட்சியை அருளி, பூலோகத்தில் உள்ள கயிலாயம் திருவையாறுதான் என்று சிவபெருமானால் கூறப்பட்ட தலம்.

சுந்தரர் இறைவனைத் தரிசிப்பதற்காகக் காவிரி வழிவிட்ட தலம்.

சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம்.

இறைவன் ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர், ஐயாறப்பர், பிரணதார்த்தி ஹரன் என்றும் இறைவி தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் 
திருவையாறு திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார்.
சூரிய புஷ்கரணி தீர்த்தம்  குளம் மிகவும் விசேஷமானது.

25 comments:

 1. இந்த உலகமே கைலாசம்
  உள்ளம் கொள்ளை கொண்ட செய்தியும் படங்களும். நன்றி

  ReplyDelete
 2. அத்தனைப் படங்களும் அருமையாய் உள்ளது.கைலாயத் தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 3. வணக்கம் தோழி !
  அவசியம் நீங்கள் இன்றைய இந்த ஆக்கத்தினைக் காண விரைந்து
  அழைகின்றேன் .வலைத்தளம் தந்த நட்பின் வலிமையுணர்ந்து மகிழ்வுடனே .
  http://rupika-rupika.blogspot.com/2013/08/blog-post_4.html

  ReplyDelete
 4. அருமையான படைப்பு படங்கள் சொல்லும் கதையை உணர்தேன் .பகிர்வைப் படிக்க மீண்டும் வருவேன் .வாழ்த்துக்கள்
  தோழி ........!!!!!!!

  ReplyDelete
 5. சிறப்பான பகிர்வு.... படங்களும் நன்று.

  ReplyDelete
 6. பூலோக கயிலாயம் திருவையாறு பற்றிய தகவல்கள் அருமை. நேரில் சென்று தரிசித்து வந்த‌ திருப்தியைக் கொடுத்தது இந்தப் பதிவு.

  ReplyDelete
 7. திருவையாறு தலவிஷேசம் பற்றிய தகவல்கள் அழகானபட‌ங்களுடன் அருமையாக இருக்கு.நன்றி.

  ReplyDelete
 8. அருமை! அனைத்துமே சிறப்பு!

  பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 9. ”கண்களிக்கும் கைலாயக் காட்சி” என்ற இன்றைய தலைப்பில் அருமையான பதிவு கொடுத்து எங்கள் எல்லோரையும் கைலாயத்திற்கே அழைத்துச்சென்றுள்ளீர்கள்.

  >>>>>>

  ReplyDelete
 10. நாளைய ஆடி அமாவாசைக்கு ஏற்ற நல்ல பதிவு. சந்தோஷம்

  >>>>>

  ReplyDelete
 11. உலகமே கைலாசம், தனியாக ஏதும் கைலாசம் இல்லை என்று அப்பர் ஸ்வாமிகள் உணர்ந்த கதையை வெகு அழகாக பொருத்தமான படங்களுடன் சொல்லியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 12. திருவையாற்றின் தனிச் சிறப்புக்களை நன்கு அறிய முடிந்தது.

  >>>>>

  ReplyDelete
 13. ஆண் பெண் என ஜோடி ஜோடியாக ...........

  யானைகள், கோழிகள், மயில்கள், குயில்கள், பன்றிகள், மான்கள், நாரைகள், கிளிகள், மாடுகள்

  என அனைத்தும் சிவனும் சக்தியுமாகத் தெரிந்ததா?

  அற்புதம் ! அற்புதம்!!

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  அஷ்ட லக்ஷ்மிகள் போல, அஷ்ட வசுக்கள் போல இன்னும் எட்டே எட்டுதான் பாக்கியுள்ளன.;)))))

  ooooo 992 ooooo

  ReplyDelete
 14. அருமையான படங்களுடன் கூடிய சிறப்பான பகிர்வு.

  ReplyDelete
 15. எம வாதப் பட்டினம் எனப் பெயர் பெற்ற தலமாயிற்றே!சிறப்பான பகிர்வு

  ReplyDelete
 16. Kanden....
  Kandarayathane.....
  Kanden......
  Rajeswari,
  Via your post I had seen and preyed Iyarappa with Devi.....
  Valka valamudan dear.
  viji

  ReplyDelete
 17. ஐயாறு சென்ற அப்பரைப் பற்றியும் அவரது தேவாரத்தைப் பற்றியும் ஒரு இலக்கியக் கட்டுரை. ஒரு பாடலின் ஒவ்வொரு வரிக்கும் விளக்கமாக படங்கள். புதுமையான முறை. என்னுடைய அம்மாவின் ஊருக்குப் பக்கத்தில்தான் திருவையாறு. எனவே பதிவை படித்தபோது ஒருவித இனம்புரியாத சந்தோஷம். நன்றி!

  ReplyDelete
 18. அத்தனைப் படங்களும் அழகு...

  இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்...

  ReplyDelete
 19. மிக சிறப்பான பகிர்வு மேடம்..

  ReplyDelete
 20. அருமை... உங்கள் கருத்துக்களும் அதற்கான படங்களும் சூப்பர்...

  இறையருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்...

  ReplyDelete
 21. கயிலையை கண்ட போது உண்டான மகிழ்ச்சி உங்கள் பதிவை படித்த போது உண்டானது.
  அழகிய படங்கள்.
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
 22. மனம் நிறைவான பதிவு.. அப்பர் சுவாமிகள் கண்ட திருக்காட்சியினை நாமும் கண்டோம்!.. சிவாய நம சிவாய!..

  ReplyDelete
 23. சிவசக்தி மயமான திருக்கைலைக் காட்சி சிறப்பான படங்களுடன் மகிழ்ச்சியை தருகின்றது.

  ReplyDelete