Monday, August 25, 2014

ஸ்ரீ பகவத் விநாயகர்





வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’
       "காசியை விட வீசம் உயர்ந்த தலம் கும்பகோணம் கோவில் மாநகரம் என்று பெருமை பெற்றது ..!.

புனிதத் தீர்த்தங்கள் ஒன்றுசேர காட்சி யளிக்கும் மகாமகக் குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது. பல பெருமைகள் பெற்ற கும்பகோணம்  காவேரிக் கரையோரம் மடத்துத் தெருவில் எழுந்தருளியுள்ளார் பகவத் பிள்ளையார்!
 பிள்ளையார் ஆரம்ப காலத்தில் தற்போதுள்ள மடத்துத் தெருவிற்கு அருகில், அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்தார். 

வேதாரண்யத்தில் ஸ்ரீ பகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வருகிறார்
அப்போது வேதாரண்யம் தலத்தில்  தன் சீடர்களுடன் குடில் அமைத்து வாழ்ந்து வந்த பகவத் முனிவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் தன் மகனிடம், "நான் இறந்ததும் என் அஸ்தியை ஒரு கலசத் தில் சேகரித்து புனிதத் திருத்தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறி காட்சி தருகிறதோ, அங்கு ஓடும் புனித நதியில் கரைத்து விடு!' என்று சொல்லிவிட்டு உயிர்துறந்தார்.

2.ஸ்ரீ பகவரின் வயதான தாயார் தான் காலமானபிறகு தன் அஸ்தியை அது எந்த இடத்தில் மலர்களாக மலர்கிறதோ அந்த இடத்தில் கரைக்குமாறு கேட்டுக்கொள்கிறாள்
அவர் சொன்னது போல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து, துணியில் மூட்டைபோல் கட்டி  ஒரு ஓலைக்கூடையில் வைத்துக் கொண்டு சீடர் களில் ஒருவரை அழைத்துக்கொண்டு பயணமானார்.

3.ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை புறப்படுகிறார்.

காசி புனிதமான திருத்தலம்; அங்கு ஓடும் கங்கை புனிதமானது என்பதால், "காசியில்தான் தன் தாயாரின் அஸ்தி பூக்களாக மாறும்' என்று கருதிய பகவத் முனிவர் காசி நோக்கிப் பயணமானார். 

வழியில் கும்பகோணம் திருத் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவேரியில் நீராட விரும்பினார். அஸ்தி கலசக்கூடையை அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர், தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு காவேரியில் நீராடச் சென்றார்.

குருநாதர் நீராடிக்கொண்டிருக்கும்போது சீடனுக்கு பசியெடுத்தது. கூடையில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று எண்ணியவன், மண்பாண்டமான அஸ்திக்கலசத்தை ஆவலுடன் திறந்து பார்த்தான்.

4. அவர் திருக்குடந்தை வந்து காவேரி நதியில் நீராடும் போது அவருடைய சீடர் பெட்டியை திறந்து பார்க்க அதில் மலர் இருக்கக்கண்டு குரு கோபிப்பாரோ என்று பயந்து மூடிவிடுகிறார்

கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பிருந்ததுபோல் வைத்து பத்திரப்படுத்திவிட்டு குருநாதருக்காகக் காத்திருந்தான்.

நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர் விநாயகரை வழிபட்ட பின், மேற் கொண்டு பயணத்தைத் தொடர்ந்து காசிமாநகரத்தை அடைந்து கங்கைக் கரைக்குச் சென்றார்.

கங்கையில் நீராடிவிட்டு அஸ்திக்கலசத்தைத் திறந்து பார்த்தார். மண் கலசத்திற்குள்ளிருந்த எலும்பு மற்றும் சாம்பல் (அஸ்தி) அப்படியே இருந்தது. அப்போது பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டி ருந்த சீடன், "கும்பகோணத்தில் கலசத்திலிருந்த பூக்கள் எப்படி அஸ்தியாக மாறியது' என்று குழப்பமடைந்தான்.

பகவத் முனிவர், ""அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன், மாறவில்லையே'' என்று முணுமுணுத்தார்.

5.காசியிலே ஹஸ்தி மலருமென்று எண்ணிய குருநாதர் காசியிலும் மலராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அப்பொழுது குருவிற்கு சீடர் குடந்தையில் நடந்ததை கூறுகிறார்.

உடனே சீடன், ""குருவே, என்னை மன்னித்துவிடுங்கள். இது அஸ்திக் கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவேரியில் நீராடும்போது, எனக்கு பசி எடுத்தது. மண்பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்தில் பூக்கள் மலர்ந்திருந்தன'' என்று பயத்துடன் கூறினான்.


""இதை ஏன் அங்கேயே கூறவில்லை?'' என்று கோபித்துக்கொண்ட பகவத் முனிவர், திரும்ப கும்பகோணம் வந்தடைந்ததும் முன்பு நீராடிய இடத்துக்கு வந்து, காவேரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன் அஸ்திக்கலசத்தை வைத்து விநாயகரை வேண்டி கலசத்தைத் திறந்து பார்க்க, அதிலிருந்த அஸ்தி பூக்களாக மாறியிருந்ததைக் கண்டு மகிழ்ந்தார்.
6.மீண்டும் ஸ்ரீ பகவர் கும்பகோணம் அடைந்து காவிரியாற்றில் ஸ்நானம் செய்துவிட்டு, அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுற்று அஸ்தியை கரைக்கிறார்.

அந்தப் பூக்களை அதற்குரிய வழிபாடுகள் செய்து காவேரியில் சங்கமம் செய்தார். இதனால்தான் "காசியைவிட வீசம் அதிகம் கொண்ட திருத்தலம்' என்று கும்ப கோணம் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

7.குடந்தை சேத்திரம் காசிக்கு வீசம் அதிகம் என்று காட்டியருளிய மரத்தடியில் இருந்த விநாயகரை இங்கோயே தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்றுமுதல் இந்த கணபதிக்கு ஸ்ரீ பகவத் விநாயகர் என்ற பெயர் வரலாயிற்று.
அஸ்தியானது பூக்களாக மாறிய காவேரிக் கரையே பகவத் படித்துறை என்றும், பகவத் முனிவர் வழிபட்டதால் இந்தப் பிள்ளையார்
  "ஸ்ரீபகவத் விநாயகர்' என்றும் போற்றப்படுகிறார்.

ஆரம்ப காலத்தில் பகவத் விநாயகர் காவேரிப் படித்துறையையொட்டியே இருந்தார். கால ஓட்டத்தில் காவேரி குறுகி விட்டது. தற்பொழுது, இங்கே கோவில் கிழக்கு நோக்கி தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.

அரசமரத்தடியிலிருந்த பிள்ளையாருக்கு பகவத் முனிவர் அங்குள்ள பக்தர்கள் உதவியுடன் கோவில் கட்டினார். மிகவும் பழங்காலக் கோவிலான இது தற்பொழுது பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு விக்ரகம் உள்ளது.

காஞ்சி மகாபெரியவர் கும்பகோணம் சங்கரமடத்திற்கு வரும் போதெல்லாம் இந்த விநாயகரை வழிபடுவது வழக்கம்.

1952-ஆம் ஆண்டு, காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீசந்திரமௌலீஸ்வரன் என்னும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகாபெரியவர் யானையின் இரண்டு தந்தங்களையும் இந்த விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார்.

மூன்று அடி உயரமுள்ள இரு தந்தங்கள் விநாயகரின் இருபுறமும்
அலங்காரமாக வைத்து அருளினார்.

மகாபெரியவர் அளித்த இரண்டு யானைத் தந்தங்களை சங்கட ஹர சதுர்த்தி,  விநாயக சதுர்த்தி மற்றும் சிறப்பு நாட்களில் ஸ்ரீ பகவத் விநாயகருக்கு அருகே வைத்து அலங்கரிப்பார்கள். 

இந்தப் பகவத் விநாயகரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவதுடன், பாவங்கள் விலகி புண்ணியங்கள் சேரும் என்பது ஐதீகம்.

வே
நிறைந்த நன்றிகள்:
http://www.kumbakonammarket.com/sribhavathvinayagar.html

8 comments:

  1. பகவர் விநாயகர் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. என்றும் நமக்கு பிடித்தமான - குடந்தை விநாயக மூர்த்தியைப் பதிவில் தரிசித்தேன். மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. அற்புதமான பதிவு.
    பகிர்வுக்கு நன்றி அம்மா
    அன்புடன்,
    சிவசுந்தரம்

    ReplyDelete
  4. ஸ்ரீ பகவத் விநாயகரின் வரலாறு,கோவில் தகவல்கள் விபரமாக படங்களுடன் சிறப்பான பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  5. மிக அருமை!
    அறியாத வரலாறு! படங்களும் சிறப்பு!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. ஸ்ரீ பகவத் விநாயகரின் பெருமைகளை அறிந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. காசியைவிட வீசம் உயர்ந்த தலம் கும்பகோணம் மாநகரம் என்ற தகவலையும் ஸ்ரீ பகவத் விநாயரின் பெருமைகளையும் படித்து அறிந்து கொண்டேன் நன்றி

    ReplyDelete
  8. ஸ்ரீ பகவத் விநாயகரின் பெருமை உணர்ந்தேன்.
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete