Saturday, August 30, 2014

பொய்யாமொழி விநாயகர்


விதியோடு விளையாடி, விக்னங்களை விரட்டி, 
விநயமாக காப்பவர் விநாயகர்..!
அம்சமான இடத்தில் அமர்க்களமாக அமர்ந்து கோயிலின் வெளியே நவகிரகங்களின் அமைப்பில்  பலிபீடம்.  ஒன்றின் மீது இரண்டு விரல்களை வைத்து மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா என வேண்டிக் கேட்க, நடக்குமென்றால் விரல்கள் இரண்டும் நகர்ந்து ஒன்று சேருமாம். பல காரியங்களுக்கு இங்கு வந்து இப்படியொரு உத்தரவு பெற்று செல்கிறார்கள், 
[Gal1]
கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல அங்கே மூன்று வாகனங்கள். அதிசயம் , விநாயகர் இங்கு லிங்க ரூபமாய் இருக்கிறார். ஆதலால் நந்தி. 
இவருக்கே உரிய மூஞ்சூறு, யானைத் தலையர் என்பதால் யானையும் வாகனமாய் இங்கே இருக்கிறது . 

நாகர், தனிச்சந்நதியில் ஜோதிர்லிங்கேஸ்வரர் அருள்கிறார். முன் மண்டபத்தில் நவகிரக சந்நதி.
[Gal1]
 பிராகாரத்தை ஒட்டி வெளியே ஒரு கல்மேடை.நிழல் பரப்பி நிற்கிறது . அடிவேரிலிருந்து மூன்று பிரிவாக வளர்ந்திருக்கிறது கல்லால மரம்
[Gal1]
இம்மூன்றும் மும்மூர்த்திகள் என்றும் தீவனூர் விநாயகரை தரிசிக்க வந்தவர்கள் தம் நினைவு மறந்தவராய் இப்படி கல்லால மரமாய் சமைந்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த மரத்துக்கு நூல் சுற்றி வழிபட திருமண வரமும் குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கிறதாம். 

ஆடு மேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமி நீக்கி, சோறு பொங்கி சாப்பிட சேகரித்த நெல்மணிகளை குத்தி அரிசியாக்க கல் தேடிய போது ஒரு கல் யானைத் தலை போன்று இருக்க, இது உதவாது என ஓரமாய் வைத்துவிட்டு வேறு கல் தேடிப் போனார்கள். 

வேறு கல்லைத் தேடி எடுத்து வந்தபோது  யானைக்கல் அருகே இருந்த நெல்லெல்லாம் அரிசியாகி இருந்தது! சிறுவர்களுக்கு வியப்பு. நெல் எப்படி அரிசியானது? இந்த அதிசயக் கல் செய்த வேலைதான் இது என உணர்ந்து அந்தக் கல்லை ஒரு இடத்தில் மறைத்து வைத்தார்கள். 

ஆனால் மறுநாள் அவர்கள் மறைத்து வைத்த இடத்தில் கல் இல்லை. தேடியபோது அருகில் இருந்த குளத்திலிருந்து நீர்க்குமிழ்கள் எழுந்தன. பளிச்சென்று குளத்தில் பாய்ந்து, மூழ்கி கல்லை மீட்டெடுத்து, ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டிப் போடுகிறார்கள்.

இதே காலகட்டத்தில் வயலில் நெற்கதிர்கள் திருடு போக, ஊர்ப் பெரியவர்களின் விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பிடிபட்டார்கள். 

இந்த விசாரணையில் தங்களுக்கு கிடைத்த இரண்டு கல் பற்றி சொல்ல, ‘நெல்குத்தி அதிசயக் கல்’ விவரமும் தெரியவந்தது. 
அந்த இரண்டு கற்களையும் ஊர்ப் பெரியவர் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார். 

அன்று இரவு அவர் கனவில் தோன்றிய கணநாதன், ‘‘தான் விநாயகர் என்றும் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபட, குலம் காப்பேன் என்றும் கூறி, தன்னோடு கிடைத்த இன்னொரு கல்லையும் கருவறையில் வைக்க வேண்டும் என்றும் தான் வளர வளர அது தேயும்’’ என்றும் கூறி அருளினார். 
[Gal1]
மறுநாள் கனவை ஊராரோடு பகிர்ந்து கொண்ட பெரியவர் விநாயகருக்கு ஆலயம் அமைத்து குடமுழக்கும் செய்தார். அன்று முதல் இவர் நெற்குத்தி விநாயகர் என் அழைக்கப்பட்டார்.
இவரை, பொய்யாமொழி பிள்ளையார் என்றும் போற்றுகிறார்கள். 

திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வியாபாரத்திற்கு மிளகு ஏற்றிச் சென்ற வியாபாரி மரத்தடியில் வண்டியை நிறுத்தி விட்டு கோயிலில் படுத்து ஓய்வெடுத்தார். 
[Gal1]
 நைவேத்தியத்திற்கு  கோயில் பணியாளர்கள் வியாபாரியிடம் கொஞ்சம் மிளகு கேட்டார்கள்.

வியாபாரியோ, ‘‘இது மிளகு இல்லை, உளுந்து’’ என்று சொன்னான். காலையில் எழுந்து மூட்டையைத் திறந்து பார்த்த வியாபாரி, அதிர்ந்து போனான். அத்தனை மூட்டையும் உளுந்தாகிவிட்டது! பதறியவன் விநாயகரிடம் விழுந்து மன்னிப்பு கேட்க, உளுந்து மூட்டைகள் மீண்டும் மிளகாகின. 

அன்று முதல் இவருக்கு பொய்யாமொழி விநாயகர் என பெயர் உண்டானது. 

இன்றும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை என்றாலும் திருடு தொடர்பான வழக்கு என்றாலும் இவர் சந்நதிக்கு அவ்வாறு வரும் பஞ்சாயத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது. 

லிங்க ரூபமாய் அருளும் விநாயகருக்கு பாலபிஷேகம் செய்யும்போது நாம் துதிக்கையில் அவரும்  தும்பிக்கையோடு தரிசனம் தருவது அற்புதக் காட்சி. 
கற்பூர ஆரத்தியால் மின்னும்  திருமேனி தரிசனம் நம் வாழ்வை பொலிவாக்கும். 

பொய்யாமொழி விநாயகரை வணங்க மும்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும். 
திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், 
செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது, தீவனூர். 
தீவனூர் பிள்ளையார் கோயில்

[Image1]


12 comments:

 1. வணக்கம்
  அம்மா
  விளக்கமும் நன்று படங்களும் நன்று பகிர்வுக்கு நன்றி அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. பொய்யாமொழி விநாயகர் அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. விநாயகர் பெருமைகள் படித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 4. பொய்யா மொழி விநாயகர் பற்றிய தகவல் அருமை ....!

  ReplyDelete
 5. தீவனூர் பொய்யாமொழி ஆண்டவர் திருத்தல வரலாற்றுடன், அழகிய வண்ணப்படங்களுடன்.... அருமை! அருமை! நர்த்தனமாடும் விக்னேஷ்வரனின் நாட்டியமும் மிகவும் அருமை!

  ReplyDelete
 6. அரிய தகவல்களுடன் நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
 7. விநாயகரைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 8. அருமை! அருமை!
  விநாயகரின் வேடிக்கை, விநோதம், அற்புதம், அழகு எல்லாமே!
  மிக்க மகிழ்ச்சி சகோதரி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. சிறப்பான பகிர்வு ! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அன்புத் தோழியே .

  ReplyDelete
 11. சிறந்த அறிமுகங்கள்

  தொடருங்கள்

  ReplyDelete
 12. அம்மா,
  அற்புதமான பதிவு.
  லிங்க ரூப விநாயகர் - புதுமை மற்றும் ஆச்சர்யம். நல்ல தகவல்.
  அன்பு மகன்.
  தமிழ் பிரியன்.

  ReplyDelete