கும்ப மாதம் என்று சிறப்பிக்கப்படும் மாசி மாதம் முழுவதுமே
புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும்
புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும்
புண்ணிய காலங்களில் மிகவும் சிறந்ததாக மகாமகம் கருதப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்..
உமாதேவியார் மாசி மாதத்தில், மக நட்சத்திரத்தில் தக்கனின் மகளாக அவதரித்தாள் என்பதால், இந்த நாள் தேவியின் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் "பௌர்ணமி" திதி வரும் நன்னாளில் என்ன நட்சத்திரம் உள்ளதோ, அதையே அந்த மாதத்தின் பெயராகவும் வரும்படி அமைத்துள்ளார்கள். மாசியில் சிறந்தது விளங்குவது மக நட்சத்திரம் தான் அதன்படி மாசி மாதம் வரும் பௌர்ணமியில் மக நட்சத்திரம் பிறப்பதால், இந்தத் மாதம் "மாக மாதம்' (மாசி) என்ற தமிழ் மாதம் ஆகும்.
கோவில்களில் திருவிழாக்களைத் கொண்டாடுவது ஒரு முழுமதி (பௌர்ணமி) திகழும் நன்னாளாகவே அமையும். அவ்வகையில் இந்த மாசிமாதம் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மகத்திருவிழா தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவாக அமைந்துள்ளது. இதனை "மாக ஸ்நானம்' என்று சிறப்பித்துக் கூறுவார்கள். மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று.
“நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் திருவள்ளுவர். நீர்நிலைகளின் பாதுகாப்பு கருதி, நம் முன்னோர் பல திருவிழாக்களை உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்று, மாசி மகம்.
சைவ-வைணவ ஒற்றுமை விழாவாகவே எடுக்கப்படுகிறது!
சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதும் இன்றும் குடந்தை (கும்பகோணத்தில்) காணலாம்!
பின்னர் இருவரும் சேர்ந்து மாலை-பரிவட்டங்களைத் தமிழவேள் முருகப் பெருமானுக்கு அளிப்பர்!
சிவசுப்பிரமணிய சுவாமிஓம் என்னும் பிரணவத்தில்வெள்ளி மயில் வாகன சேவை
இப்படிச் சீராட்டிச் சீராட்டி, மக நீராட்டி நீராட்டிச் சமய ஒற்றுமை வளர்க்கும் திருவிழா இந்த மக நீராடல்!
திருச்செந்தூர் மாசித் திருவிழா மிகவும் புகழ் பெற்ற ஒன்று!
* சைவம்-வைணவம் தாண்டி, முகம்மதிய அன்பர்களும் சில தலங்களில் கலந்து கொள்கிறார்கள்! ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு வரும் போது, முஸ்லீம் பெருமக்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது!
* சென்னை மெரீனாக் கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளுவது இன்றும் வழக்கம்!
மாசி மகத்தன்று கடலோர சிவாலயங்களில் உள்ள சுவாமியையும் அம்பாளையும் நன்கு அலங்கரித்து, சிவசக்தி மூர்த்தங்களுடன் பல்லக்கில் இருத்தி கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வார்கள். அதுபோலவே பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து, அவர்களுடன் சக்கரத்தாழ்வாரையும் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு சிவனுக்காக அஸ்திர மூர்த்தியையும், பெருமாளுக்காக சக்கரத்தாழ்வாரையும் கடல் நீராடச் செய்வர். இதற்கு தீர்த்தவாரி என்று பெயர். பின் தூப, தீப, ஆராதனை செய்து குளிர்ச்சியான பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு தந்தபின் ஆலயம் திரும்புவார்கள்.
திருமால் திரு உள்ளம்
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். அதன் மூலம் சமுத்திரராஜன் விஷ்ணுவின் மாமனார் ஆனார். தன் மகளை மணந்து கொண்டு மகாவிஷ்ணு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் அவரை எப்படி தரிசிப்பது என வருந்தினார் சமுத்திரராஜன்.
தந்தையின் மனக்குறையை லட்சுமி விஷ்ணுவிடம் கூறினாள். அதற்கு திருமால் ஆண்டிற்கு ஒரு முறை தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் தந்தார். அந்த புண்ணிய தினமே மாசிமகம்.
ஈசனின் திருவிளையாடல்
ஒருமுறை கருணாசாகரியான அம்பிகை மீனவ குலத்தில் அவதரிக்க நேர்ந்தது. ஈசன் அம்பிகையை மணக்க காலம் கனிந்தபோது, அவர் மீனவர்போல் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடம் சென்றார். அங்கு அவரால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை தானே அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி கொடுத்தார். மீனவர் தலைவன், "தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்க அருள் புரிய வேண்டும்' என வேண்டினார்.
அதன்படி ஈசன், "மாசி மகத்தன்று கடல் நீராட வருவேன்' என்றார்.
இந்நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. மாசி மகத்தன்று ஈசன் வேடமூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்குச் செல்வர்.
அங்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலோர ஊர்களான மண்டபத்தூர், காளிகுப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனுக்குச் சிறப்பு விழா நடத்தி மகிழ்வார்கள்.
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மகாபலிபுரம்ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்ய தேசம்., முதலாழ்வார் களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம்
தலசயனப் பெருமாள் கோவிலில் திருமால் வெறும் தரையில் சயனித்திருக் கும் தயாநிதி பூமித் தாயின் மகிமை மிக்கவள்.. இத்திருக்கோவிலில் திருமகளும் "நிலமங்கை' என்ற திருநாமத்துடன் விளங்குவதும் தனிச்சிறப்பு.மூலவரான தலசயனப் பெருமாள் தனது வலது கரத்தால் அடியார்களை அழைத்து அருளும் பாவனையில் சயன கோலத்தில் காணப்படுகிறார். இவ்வமைப்புக்கு "ஆஹ்வான ஹஸ்தம்' என்று பெயர்.
இத்தலம் சேதுவுக்கு நிகரான மகிமையைப் பெற்றது "அர்த்த சேது' என்ற பெயரும் உண்டு சேதுவில் கடல் நீராடல் எவ்வளவு புனிதத் துவத்தை அளிக்குமோ அதே பலன்களை இங்குள்ள கடலில் நீராடியும் பெறலாம்.
சென்னை- மயிலை மகேஸ்வரனும், மாதவப் பெருமாளும், அல்லிக்கேணி அச்சுதனும் கடற்கரை சென்று தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள்புரிவார்கள்.
ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம்.
”நூல் திசையோர் பரவு திருக்குடமூக்கு” என்று சேக்கிழார் புகழ்ந்த கும்பகோணம், வடமொழியில் பாஸ்கரசேத்திரம் என்ற பெயர் பெற்றது... கும்பகோணம் என்ற பெயரைச் சொன்னாலே பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்
"குடமூக்கே குடமூக்கே என்பீராகில்
கொடுவினைகள் தீரும்' - என அப்பர் பெருமான் பாடியுள்ளார்.
பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தலத்தில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
”வாரணா ஸ்யாம் க்ருதம் பாபம்
கும்ப கோணே விநயஸ் யதி
கும்ப கோணே க்ருதம் பாபம்
கும்ப கோணே விநயஸ் யதி”
”காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும். கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்திலேயே நீங்கும்” என்று சுலோகம் கூறுகிறது
குடத்தின் வடிவில் குளம்
பிரளயத்திற்குப் பின் பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க
சிவபெருமானி டம் அனுமதி கேட்டார். சிவன் சம்மதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவதி நட்சத்திர நாளில் கொடி யேற்றம் செய்து, பெரு மானையும் தேவியையும் எட்டு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்தார். ஒன்பதாவது நாள் மேரு மலையைப்போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்தார். பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதி உலா வரச் செய்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த் தம் கொடுக்கும் மாசி மக விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில்தான் மாசி மக விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது.
மங்களகரமான உடையணிந்து, தன் கணவரைத் தேடி, கும்பகோணம் வந்த பார்வதிதேவி, “மங்களநாயகி’ என்ற பெயரில் தங்கினாள். புதிய உலகம் தோன்றிய பின், அம்பாள் வந்தமர்ந்த தலம் என்பதால், கும்பகோணம், முதல் சக்திபீடம் ஆயிற்று.
தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவார்கள்...
குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
இந்த மாசி மகத்தில் கடல் நீராட்டு அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் தமது திருமயிலாப்பூர் தேவாரத்தில்,
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆன் ஏறு ஊறும் அடிகள் அடி பரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
- என்று குறிப்பிட்டு பாடியருளி எலும்பாய் இருந்த பூம்பாவாவை என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினர்ர் என்பது வரலாறு,
கபாலீஸ்வரர்
மாசி மக நாளில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற வருணன் சிவபெருமானை நோக்கி, "மாசி மக நன்னாளில் தீர்த்தம் ஆடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலனைப் பெற அருள வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். சிவபெருமான் அவ்வாறே வரமருளினார்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிமகத் திருவிழா நடைபெறும் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம்
ஏவி இடர்க்கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை
இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவிஅமருலகு அனைத்தும் உருவிப் போகக்
குறியில் அறுகுணதது ஆண்டுகொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை,
சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, தெணநீர்க்
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே,
வீட்டில் குளியலறையில் இறைவனை நினைநது இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளித்தால் அவர்கள் கடலாடியதற்கு சமமான பலன்களை பெறுவார்கள் என்பது திருநாவுக்கரசரின் ஆணை ,,,
மாசி வளர்பிறை துவாதசியில் திருவெண்காடு அகோர மூர்த்தி ஆலயத்திற்கு இந்திரனே நேரில் வந்து இந்திர விழா நடத்துகிறார். இதற்கு இந்திர மகோற்சவம் என்று பெயர். இவ்வாலயத்தில் அகோர சிவன் காட்சி தருகிறார். இது போல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. கொங்கு நாட்டில் வெஞ்சமாக் கடலில் மாசி மகத் தேர்த் திருவிழா நடக்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாசி மக விழா 16 மண்டலம் நடக்கும்.
திருக்கோஷ்டியூர் வைணவத் தலத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதற்கு ‘ஜோசியர்வாள் தெப்பம்’ என்று பெயர். அன்று தெப்பக் குளக் கரைகளில் ஆயிரக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கும். இந்த வேண்டுதல் விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று நெற்பானையில் வைத்து அடுத்த ஆண்டு தெப்பத்திற்கு குளக்கரையில் ஏற்றுவார்கள்.
நம் உடல், ஆன்மாவுடன் இணைந்தது. நம் உள்ளம் உலக சுகத்துடன் நிற்காமல், ஆன்மாவையும் தேடும். நமது செயல்பாடுகள் அனைத்தும் ஆன்ம சம்பந்தத்தோடு இருக்கும். மாசியும் மகத்துவமானதே! இந்த மாதத்தில் மாக ஸ்நானம் என்கிற விசேஷ நீராடல் உண்டு. மாசி மகம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். மாசி மாத எல்லையில் (கடைசியில்) காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள். உபநயனத்துக்கும் மாசி மாதம் சிறப்பானது. அதேபோல் மகா சிவராத்திரி, பீம ஏகாதசி ஆகிய வைபவங்களும் மாசி மாதத்தை அலங்கரிக்கும். இப்படி, பண்டிகைகளும் வழிபாடுகளும் நிறைந்த மாசியை கொண்டாடினால்; மகத்துவம் கிட்டும்.
இன்றும் மாசி மாதத்தில் வள்ளாள மகாராஜாவிற்கு அருணாசலேசுவரர் திதி செய்து வைக்கிறார். இதற்கு மாசி மகம் தீர்த்தவாரி என்று பெயர்.
மாகமாதம் என்று சொல்லப்படும் மாசி மாத முதல் தேதியன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை மகா ஸ்நானம் என்பார்கள்.
புனித நதிகள், கடற்கரைகள், குளங்கள் ஆகியவற்றில் சுவாமி தீர்த்தவாரிகாண்பது மாசிமகத் திருநாளில் என்பதை யாவரும் அறிவோம். அப்போது நாமும் அந்தநீர் நிலைகளில் நீராடினால் பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்று ஞானநூல்கள் சொல்கின்றன.
மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சிவராத்திரி மகாசிவராத்திரி என்று போற்றப் பட்டு, எல்லா சிவாலயங்களிலும் இரவு முழுவதும்நான்கு கால பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. அபிஷேகப் பிரியரானசிவபெருமானை அன்றிரவு கண்விழித்திலிருந்து ஆராதனைகள் செய்தால் சிவனருள்கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
சிவபெருமான், குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத் தில்தான் என்பதும் புராணக் கூற்று.
பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.
மாசி மாதப் பௌர்ணமியில் (மாசி மக நட்சத்திரம்) கும்பகோணம் மகாமகக்குளத்தில் நீராடினால் புண்ணியம் சேரும். அன்று, அந்தக் குளக்கரையில்முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்தால்,
பிதுர் தோஷங்கள் விலகிவிடும்.குடும்பத்தில் சுபிட்சம் நிலவும் என்பர்.
மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம்கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.
மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.
மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு. அதனால், மகா விஷ்ணுவை இம்மாதம்முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழி பட்டால், இல்லத்தில்சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
மாசி மகத்தன்று சிவபெருமான், திருமால், முருகப் பெருமான் ஆகியோரின்உற்சவத் திருமேனிகள் கடல், நதி, குளம் மற்றும் நீர் நிலைகளில் எழுந்தருளிதீர்த்தவாரி காண்பார்கள்.
கும்பகோணம் மகாமகக் குளத்தில், சிவாலயத் தில் அருள்புரியும் சுவாமிகளும்;குடந்தை ஸ்ரீசக்கர தீர்த்தத்தில் பெருமாள் கோவில் உற்சவர்களும்;திருச்செந்தூர் கடற்கரையில் அருள்மிகு முருகப் பெருமானும் தீர்த்தவாரிகாண்பார்கள்.
, கும்பகோணம் மகாமகக் கோவில்களில் ஒன்றானஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அன்னை காளிகா பரமேஸ்வரி நந்தி வாகனத்துடன் காட்சிதருவாள்.
அம்பாள் சிவசக்தி சொரூபமாக காட்சி தருவதால் அம்பாளுக்கு நந்தி வாகனமாக உள்ளது. அம்பாள் மட்டுமேமகாமகக் குளத்திற்கு தீர்த்தவாரி காணச் செல்வாள் என்பது தனிச்சிறப்பு ஆகும்.
கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களில் உள்ள சுவாமிகளும் மாசி மாதப் பௌர்ணமி அன்று தீர்த்தவாரி காண்பார்கள்.
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும்மகாதேவருக்கு மாசி மகத்தன்று பெருந்திரு அமுது படைக்கும் நிகழ்ச்சிநடைபெறும்.
மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடை பெறும் முழுக்கு தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.
மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.
பிரளய காலம் முடிந்ததும், அதற்குப் பின் பிரம்மனுக்குப் படைக்கும் திறனைசிவபெருமான் அருளிய நாள் மாசி மகம் என்பதால், கும்ப கோணத்தில்கும்பேஸ்வரர் கோவில் விழாக் கோலம் காணும்.
மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பௌர்ணமியில்தான்.
மாசி மாதம் மஹா சிவராத்திரி நாளில் சிவபெருமான் அடிமுடி காண இயலாத ஜோதி பிழம்பாக, லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்ததாக ஐதீகம்.
இந்த வரலாறு நிகழ்ந்த இடமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும்.
சேஷ வாகன சேவை
மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்க ளைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவ தும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத் தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.
மாசி மக நடராஜர் உற்சவம்
மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம்! அடியேனும் மகம் தான்! ஹி,ஹி!
ReplyDeleteமிக விரிவான இடுகை ராஜி.. அருமையாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteமகத்துவம் மிக்க மாசி மகம்.
ReplyDelete;)
மகத்துவம் மிக்க அருமையாக பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteஇன்றைய படங்களில் “சேஷ வாகன் சேவை” மிகச் சிறப்பான படமாக முதலிடத்தைப் பெறுகின்றது. ;)
ReplyDeleteகீழிருந்து மேலாக இரண்டாம் படமும் மூன்றாம் படமும், அலங்கார வடிவமைப்புகளுக்கும், கீழிருந்து நான்காவது படம் நல்ல தெளிவுக்கும் [Clarity] இன்றைய படங்களில் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றன.
ReplyDelete;)
மாசியைப்பற்றியும், மகத்தின் மகத்துவத்தைப்பற்றியும், எவ்ளோ விஷயங்கள் கூறியிருக்கிறீர்கள்!
ReplyDeleteமாசிமகத்தன்று இதைப்படிக்கும் வாய்ப்பை உருவாக்கித்தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
சிறப்பான பகிர்வு
ReplyDeleteமாசி மகம் பற்றிய அரிய தகவல்கள். சிறந்த கடவுள் தரிசனங்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி...
http://anubhudhi.blogspot.in/
மாசி மகத்தின் சிறப்பினை மகத்துவத்துடன் சொல்லும் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநிறைய புராண கதைகள் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் இடுகையின் சிறந்த பகுதியாக நான் இதனை நினைக்கிறேன்.
ReplyDeleteநல்லதொரு பகிர்வு.
ReplyDeleteஇந்தப் பதிவில் காணும் செய்திகளை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். ஏன் என்றால் பதிவு முழுவதும் அவ்வளவு விஷயங்கள்.இப்படி தொகுத்து எழுதுவது குறித்த ஆச்சரியம் மலைப்பு அகலவே அதிக நேரம் பிடிக்கும். பாராட்டுக்கள்.
ReplyDeleteவிரிவான இடுகையெனினும் படங்களும் மாசிமகத்தினைப் பற்றிய செய்திகளும் அதற்குரிய கோவில்களில் நடைபெறும் விஷேசங்களும் அருமை.
ReplyDeleteமாசிமகத்தின் பெருமையை கூறும் பதிவு.
ReplyDeleteதிருவெண்காட்டில் இன்று அகோரமூர்த்தி உற்சவர் உள் மண்டபத்தை விட்டு வெளி மண்டபத்திற்கு வந்து இருப்பார் இன்று, நாளை அவருக்கு அபிஷேகம், மற்றும் பட்டு சாற்றுதல் எல்லாம் நடைபெறும். இரவு மருத்துவ சம்காரம் நடைபெறும்.
திருகோஷ்டியூரில் தெப்பதிருவிழா பார்த்து விளக்கு எடுத்து வந்து இருக்கிறேன்.
இன்று புதுச்சேரியில் 100 கோவில்களிலிருந்து சுவாமிகள் கடற்கரையில் வந்து காட்சி கொடுப்பார்களாம், என் தோழி சொன்னாள்.
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
நிறைய விபரங்கள்.
நன்றி அம்மா.
38. ஸ்ரீ த்பரிபாலக கோவிந்தா
ReplyDelete2431+5+1=2437
ReplyDelete