Tuesday, February 25, 2014

தடைக்கற்களைத் தகர்க்கும் தண்டுமாரியம்மன்






தண்டுமாரியம்மன் பாமாலை

கோவன் புத்தூர்க் கோட்டையிலே வேப்பத் தொரட்டி விருட்சத்திலே
வடக்கு நோக்கி அம்பிகையாய் வாழ்விக்க வந்த வரப்ரசாதியே
-அன்னை தண்டுமாரியே 

நொய்யல் நதியில் நீராடி
நெய்யால் தீபங்கள் ஏற்ற 
பொய்யின்றி மெய்யோடு
நோய்தீர்க்க வந்தவளே -அன்னை தண்டுமாரியே

முத்திரை பதிக்க வந்த மைசூர் மன்னனாம் திப்புவின் படை வீரனுக்கு
நித்திரையில் காட்சி தந்த  சித்திரை சிங்காரச் செல்வியே 
-அன்னை தண்டுமாரியே
கொங்கு மண்டலத்தில் கொலுவீற்றிருந்து தண்ணருள் பொழியும் தாரகையாம் தண்டுமாரியம்மனின் அருள் வரலாறு ஆனந்தமளிக்கும்..!
ஆதியில் கோவன்புத்தூர் என்ற சிற்றூராகத் திகழ்ந்த  வரலாற்றுப் புகழ் கொண்ட  கோயம்புத்தூர் கோட்டை வலிமை பொருந்தியதாக விளங்கியது. 

கோட்டை மற்றும் பேட்டை என்ற இரண்டு பெரும் பிரிவுகளாக நகரம் திகழ்ந்த அன்றைய காலத்தில் கோட்டையில் ஒரு ஈஸ்வரன் கோவிலும், பேட்டையில் ஒரு ஈஸ்வரன் கோவிலும் எழுப்பிய அவை இன்றும் பொலிவுடன் புகழ் பெற்றுத் திகழ்கின்றன.
Thandumariamman Temple Coimbatore
வணிகம் செய்ய  வந்த ஆங்கிலேயர், நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத்திட்டங்களையும் கையாண்ட தருணத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். 

அதுபோல் மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து, மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்த காலத்தில்தான் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள்மழை பொழிய தன் இருப்பிடத்தை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள்.

தண்டு என்றால் "படை' என்றும், படைவீரர்கள் தங்குவதற்கு அமைக்கப்படும்"கூடாரம்' என்றும் பொருள். 

 இந்த "தண்டு' என்ற சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்காரச் சொல்லாய், அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கிவருகிறது.

திப்புவின் படைகள் கோவை கோட்டை மதிலுக்குள் தங்கியிருந்த சமயத்தில்,  படையில் இருந்த ஒரு வீரனுக்கு அன்னை கனவில் தோன்றி கண்ணுக்கும் கருத்துக்கும் அரிய நம் தாய் தண்டுமாரியம்மன், கற்பனைக்கு எட்டாத காலம் முதல் இப்புவியில் வாழ்ந்து வருவதாகக் கூறினாள்...! 

வேப்ப மரம், தொரட்டி மரச் செடி கொடிகளுக்கிடையில், நீர்ச்சுனைக்கு அருகில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில், அன்னை தண்டுமாரி வீற்றிருந்த கோலத்தை கனவில் கண்ட வீரன், மறுநாள் எழுந்து அதிகாலையில் ஆவலுடன் தேடி வேப்ப மர, தொரட்டி மரக்கிளைகளைத் தன் கையால் விலக்கிப் பார்த்தபோது, பெற்ற தாயை முதலில் நோக்கும் குழந்தையாய் அவன் அன்னையை முதலில் கண்டு இன்புற்றான்; கையெடுத்துத் தொழுதான்; கூத்தாடி மகிழ்வுற்றான்.

நல்லநாள் பார்த்து சிறு மேடை அமைத்து, அம்மேடைமீது அன்னை தண்டுமாரியை எழுந்தருளச் செய்தான். திப்புவின் படை வீரர்கள் அன்னை எழுந்தருளிய இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். 

படைவீடான தண்டு இருந்த இடத்தில் கண்டெடுக்கப் பட்ட  மாரி 
தண்டு மாரி என அழைக்கப்பெற்றாள். 

சங்கத்தமிழ்க் கவிபாடி 
சக்திக் கரகமெடுத்து 
அங்கப்பிரதட்சணை செய்து 
அகல்விளக்கேற்றி 
தங்கரதமேறி 
தடைகளைத் தகர்த்தெறிகின்ற 
மங்காத மங்கள ஜோதியே-அன்னை தண்டுமாரியே

முற்காலத்தில் பிளேக், காலரா, அம்மை போன்ற கொடிய
நோய் வந்தால் ஒரேசமயத்தில் பலர் மரணத்தை சந்தித்தனர். 

மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், "எங்க தண்டுல (பாடையில்) போய் விட்டுடுமோன்னு  தெரியல' என்று அஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை வேப்பிலையிலும், திருநீற்றிலும், தீர்த்தத்திலும் கலந்தருள் செய்தாள். 

மேனியில் அவை பட்டவுடன் நோயின் 
வேகம் குறைந்து கவலைகள் மறைந்தன. 

துர்க்காதேவியின் அம்சமாக கொலுவீற்றிருக்கும் அன்னை தண்டுமாரியம்மன் தீராத நோய் தீர்க்கும் தாயாக அருள் செய்தாள். 

அன்னையை வேண்டிப் பிரார்த்தனை செய்து நோய்தீரப் பெற்றவர்கள் திருக்கோவிலில் கண்ணடக்கம் சாத்துகின்றனர்; குழந்தைப்பேறு பெற்றோர் பொம்மை உருவங்களை மண்ணினாலோ வெள்ளியிலோ தங்கத்திலோ செய்து அம்மனுக்கு காணிக்கையாய் செலுத்தி தங்களது பிரார்த்தனையை நிறைவு செய்கின்றனர்.
பாடையிலே செல்கின்ற தோஷமிருப்பினும் 
வெற்றிமேடையிலே அமர வைப்பவள் தண்டுமாரி தாய் என்று 
போற்றிப் புகழ்கின்றனர்..!

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி உள்ள ஆலயத்தில் நுழைந்ததும் இடப்புறம், பில்லி, சூன்யத்தை விரட்டியருளும் கருப்பராயன், முனியப்பசுவாமி தெற்கு நோக்கி அருள்புரிகின்றனர். 

நடுவில் கொடிமரம், பலிபீடம், சிம்மவாகனம் உள்ளன. 

ஈசான்ய திக்கில் நவநாயகர்கள் அருள்புரிகிறார்கள். 

அதனருகில் ஸ்தலவிருட்சமான தொரட்டி மரம் உள்ளது. 

நுழைவாயிலில் மகிஷாசுரமர்த்தினி, கஜலட்சுமி, சரஸ்வதி 
அருள்பொங்க காட்சி யளிக்கின்றனர்.

கருவறையில் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் 
அன்னை தண்டுமாரி அருள்புரிகிறாள். 
கிழக்குப் பகுதியில் ராஜகணபதியும், 

மகிஷத் தலைமீது வெற்றிக்களிப்புடன் துர்க்கையும் அருள்பொங்க கொலுவீற்றிருக்கின்றனர். 
தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்குப் பகுதியில் தாமரையில் அமர்ந்த லட்சுமியும், வேலேந்தி நின்ற கோலத்தில் முருகப்பெருமானும் அருள்புரிகின்றனர். 
மேற்குப்புறம் அரச மரத்தின்கீழ் கற்பக விநாயகர் க்ஷேத்திர விநாயகராக அருள்புரிகிறார். மகாமண்டபத்தில் அஷ்டலட்சுமியின் திருவுருவங்கள் உள்ளன. 

 திருவிழாவின்போது நிகழ்ச்சிகள் நிகழ வசந்த மண்டபம் உள்ளது. 

அக்னிமூலையில் மடப்பள்ளியும் நிருதிமூலையில் திருக்கோவில் அலுவலகமும், அதன் மேற்பகுதியில் அன்னதான வளாகமும் உள்ளன.

ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, ஆடிவெள்ளி மற்றும் வாரச் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு அலங்காரம் உண்டு. 

சித்திரைத் திருவிழா மிக முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுடன் தொடங்கி, தொடர்ந்து 13 தினங்கள் இசை, இலக்கிய நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடந்துவருகிறது.

மூன்றாம் நாள் அக்னி கம்பம் நட்டு, நான்கு மற்றும் எட்டாம் நாளில் குத்துவிளக்குப் பூஜை நடைபெறும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி "சக்தி கரகம்' ஆகும். 
அன்றைய தினம் கோனியம்மன் கோவிலிலிருந்து தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க யானை ஊர்வலத்துடன், ஆயிரக்கணக்கிலே ஆண்களும் பெண்களும் விரதமிருந்து கையில் தீச்சட்டி, சக்தி கரகம் எடுத்து வருவது காணக்கிடைக்காத காட்சியாக கோவை மாநகரமே விழாக்கோலமாகத் திகழும். அதனையடுத்து திருக்கல்யாணம், மறுநாள் மஞ்சள் உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். 
புகழ்பெற்ற கோவை தண்டுமாரியம்மன் கோயிலின் 
தீச்சட்டி ஏந்தும் திருவிழாவில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்...
புகழ்பெற்ற கோவை தண்டுமாரியம்மன் கோயிலின்  தீச்சட்டி ஏந்தும் திருவிழாவில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் #Coimbatore
கட்டளைதாரர்களின் அடிப்படையில் அனுதினமும் 
தங்கரத புறப்பாடு மற்றும் அன்னதானம் நடக்கும்.
மகிமைகள் , தனியே நின்று தர்மத்தைக் கடைப்பிடிக்கும் நெறி, அளப்பரிய மனதைரியம், புத்திக்கூர்மையால் சத்ருக்களை வெற்றிகொள்ளும் திறன், தடைகளைத் தகர்த்தெறியும் பேராற்றல், எண்ணிய லட்சியத்தை அடையும் தீரம், துன்பங்களை எளிதில் கடந்திடவல்ல மனவுறுதி போன்றவையெல்லாம்  அன்னையை வழிபட்டால் கிடைக்கும். 

கண்ணுக்குப் புலப்படாத பகைவர்களையும், அவர்களது தீயசெயல்களையும் நெருங்கவிடாது தகர்த்திடுவாள் அன்னை.  

அன்னையின் அருள்பார்வை பட்டாலே போதும்- துன்பங்கள் பறந் தோடும். அவளது திருவடி தரிசனம் தீர்க்கமுடியாத பிரச்சினைகளையும், முடிவுக்கு வராத வழக்குகளையும் தீர்த்திடும். 

மனவேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றுசேர்வர். 

பெருமைவாய்ந்த இத்தலத்தில் நித்தமும் நான்கு கால பூஜைகள் முறைப்படி நடக்கின்றன. 

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற முதல் நிலைக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
தடைக்கற்களைத் தகர்த்தெறிகின்ற தண்டுமாரியை  வழிபட்டு
 தனக் கென்று தனிவெற்றியைத் தக்கவைப்போம். 

காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி  வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

தங்கரத புறப்பாடு: மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை. 

ஆலயத்தொடர்புக்கு: 0422- 2304106, 2300360.
Thandu Mariamman
கோவை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஐந்து நிமிட நடைப்பயண தூரத்தில் ஆலயம் உள்ளது. அவிநாசி சாலையின் தொடக்கத்தில்- மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள் ளது.

லட்டுத்தேரில் தண்டுமாரியம்மனின் அருட்கோலம்..!

12 comments:

  1. தண்டு மாரியம்மன் மகிமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. தண்டு மாரியம்மன் பற்றிய தகவல்கள், படங்கள் அனைத்தும் சிறப்பு அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தண்டுமாரியம்மனின் பெருமை கூறும் சிறப்பு பகிர்வு! முதுகெலும்பு போல் தலையான பிரச்சினைகளை தீர்ப்பவளே அன்னை தண்டு மாரியம்மன் என்பதனை உணர்த்தும் உன்னத பகிர்வு! நன்றி சகோதரி சீர் மிகு படைப்பிற்கு!

    ReplyDelete
  4. தண்டு மாரியம்மனை
    கண்டு அவள் அருள் பெறவே
    விண்டு அவள் வீற்றல் அழகை
    உண்டு எமை மகிழச் செய்யும்
    உன்னதமாம் உங்கள் நெஞ்சே
    ஒரு லட்டு

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  5. அருள்மிகு அன்னை தண்டு மாரியம்மன்
    அனைவரையும் காத்தருள்வாளாக!..

    ReplyDelete
  6. தண்டு மாரியம்மனின் வரலாறையும், தகவல்களையும் படித்து மகிழ்ந்தேன்.

    கோவிலின் அருகிலேயே தான் என் பள்ளி. கோவிலில் வழங்கும் நீர்மோரை வாங்கி வந்து எல்லோரும் குடிப்போம்.

    படங்களுடன் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  7. ஆஹா, தடைக்கற்களைத் தகர்க்கும் தண்டு மாரியம்மனா !!!!!

    எவ்வளவு யோசித்து தலைப்புத்தருகிறீர்கள் !!!!!

    இணைப்புக்கொடுத்துள்ள பழைய 24.02.2012 பதிவான தரணியாளும் தண்டு மாரியம்மனைப்போய் மீண்டும் கண்டு களித்து வந்தேன்.

    காணொளி + பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன்..

    மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  8. வழக்கம் போல அருமையான படங்கள், அற்புதமான விளக்கங்கள், கோவன் புதூரே 'கோயம்புத்தூர்' ஆனது போன்ற சிறப்புத்தகவல்கள் எல்லாமே அருமை. சுவையான பகிர்வு.

    லட்டுத்தேர் சூப்பராக உள்ளது. நான் இதுவரை நேரில் இதுபோலப் பார்த்ததே இல்லை.

    >>>>>

    ReplyDelete
  9. சமீபத்தில் 60ம் கல்யாணம் ஆன நம் அன்புச்சகோதரி திருமதி ஜெயந்தி ரமணி, அவரின் கணவர் திரு. ரமணி, அவரின் பெண் செள. சந்தியா [புதுமணப்பெண்], மாப்பிள்ளை ஸ்ரீ ஆனந்த் அவர்கள் + அவரின் அப்பா + அம்மா [சம்பந்தி மாமா + மாமி] சஹிதம் மூன்று தம்பதியினர் [6 நபர்கள்] நம் ஆத்துக்கு வருகை தந்து சிறப்பித்து அரைமணி நேரத்திற்கு முன்புதான் [மதியம் சரியாக ஒரு மணிக்கு] இங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    சென்ற வெள்ளிக்கிழமை 21.02.2014 தான் சென்னையில் கல்யாணம் நடந்தது. அதற்குள் நாலே நாளில் நம் ஆத்துக்கு இந்த புது மணமக்கள் வருகை தந்துள்ளது ஆச்சர்யம் அளித்தது.

    ஹாரத்தி எடுத்து அனைவரையும் வரவேற்றோம்.

    ஓரளவு இன்று அதிகாலையிலேயே ஃபோன் மூலம் சொல்லிவிட்டு வந்ததால், என்னால் முடிந்த மரியாதைகள் செய்து மூன்று தம்பதியினரையும் நல்லபடியாக இப்போத்தான் அனுப்பி வைத்துவிட்டு இங்கு தங்கள் பதிவுகள் பக்கம் வர முடிந்தது. தகவலுக்காக மட்டும். ;)

    o O o

    ReplyDelete
  10. சந்தோஷமாய் இருக்கு...
    எங்கள் ஊர் தண்டு மாரியம்மன் தரிசனம் மாசி செவ்வாய் அன்று கிடைக்கபெற்றது என் அதிருஷ்டம்...நன்றி.

    ReplyDelete
  11. அம்மா....
    தண்டு மாரியம்மன் பற்றி அருமையான படங்களுடன் அழகிய பகிர்வு...
    அருமை.... அருமை....

    ReplyDelete
  12. 1980இல் நான் கோவையில் (ஸ்டேன்ஸ் அன்ட் கோ, ரேஸ் கோர்ஸ் சாலை) பணியாற்றினேன். அப்போது கோவையிலிருந்தஅனைத்துக் கோயில்களுக்கும் சென்றுள்ளேன். தண்டுமாரியம்மன் கோயிலில் சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரியை அப்போது நான் நண்பர்களுடன் கேட்டுள்ளேன். தங்களது பதிவைப் பார்த்தவுடன் எனக்கு அந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. சுமார் 35 ஆண்டுகள் கழித்து, தங்கள் பதிவின் மூலமாக அக்கோயிலுக்கு மறுபடியும் சென்று அம்மனைத் தரிசித்த நிறைவு ஏற்பட்டது. நன்றி.

    ReplyDelete