Friday, February 7, 2014

சுபிட்சம் தரும் பீஷ்மாஷ்டமி பிரவாகம்





"கங்கையின் மைந்தன்'  , காங்கேயன் என்றும்; "பிதாமகர்  என்றும் போற்றப்படுபவர்  பீஷ்மர்...
பீஷ்மரின் தந்தையாகிய சாந்தனு மன்னன்  மீனவப்பெண் சத்யவதியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
அவளது தந்தையோ தன் மகளுக்குப்பிறக்கும் வாரிசுகளே அரசாளவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்..!

பீஷ்மர் மீனவர் குலத் தலைவனிடம்  தன்னுடைய அரசுரிமையைத் துறப்பதாகவும், பின்னாளில் உரிமைப்போர் வராத வகையில் தான் திருமணமே செய்துகொள்ளாமல் சுத்த பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார். .
சாந்தனுவின் ஒரே வாரிசான காங்கேயன் தன் தந்தையின் பொருட்டு அரச பதவியையும் மணவாழ்க்கையையும் துறந்ததை அறிந்த அஸ்தினாபுரத்தின் மக்கள் மட்டுமல்ல; தேவர்களும் வியப்படைந்தார்கள். அப்போது வானுலகினர் பூமாரி பொழிந்து, 
"பீஷ்ம... பீஷ்ம...' என்று வாழ்த்தினார்கள்

"பீஷ்ம' என்ற சொல்லுக்கு கடுமையான விரதத்தை உடையவன் என்று பொருள்.

தன் மகனின் தியாகத்தைப் போற்றிய சாந்தனு, ""எப்போது நீ மரணம் வேண்டும் என்று விரும்பு கிறாயோ அப்போதுதான் உனக்கு மரணம் சம்பவிக்கும்'' என்ற இச்சா மிருத்யூ  வரம் கொடுத்து வாழ்த்தினார் ..!

தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்!

ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை!

தட்சிணாயன கால இறுதி மாதமான   மார்கழியில் நடைபெற்ற பாரதப்போரில் துரியோதனன் படைக்கு பீஷ்மர் தலைமை தாங்கினார்.

 பாண்டவர் சார்பில் அவரை எதிர்க்க வந்த அர்ச்சுனன் சிகண்டி எனப்படும் அலியை.பாரதப்போர் முன்நிறுத்திக் கொண்டான். 

சுத்த வீரனுடன் போரிட்டு வெற்றி கண்ட பீஷ்மர் சிகண்டியைப் பார்த்ததும் அம்பு தொடுக்காமல் நின்றார். 
இதுதான் சமயம் என்று கண்ணபிரான் ஜாடை காட்ட, அர்ச்சுனன் பீஷ்மர்மீது சரமாரியாக அம்புகளை எய்த அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்மர் கீழே சாய்ந்தார். 

ஆனால் பூமியில் விழாமல், அந்த அம்புகள் படுக்கையாக பூமியில் பதிந்து பீஷ்மரைத் தாங்கின 

ஆனால் உயிர் பிரியவில்லை. 

தான் விரும்பிய நேரத்தில் முக்தியடையலாம் என்ற இச்சாமிருத்யூ வரத்தின்படி தட்சிணாயன காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிட்டாது உத்ராயன காலத்தில் உயிர் பிரிந்தால் எந்தத் தடையுமின்றி சொர்க்கம் போகலாம் என்பது சாஸ்திரம் சொல்லும் விதி என்பதால், உத்தராயண காலம் துவங்கும் வரை காத்திருக்க விரும்பி அதுவரை  அம்புப் படுக்கை யில் படுத்துத் தவம் செய்த பீஷ்மரைக் காண்பதற்கு பாண்டவர்கள் வந்தனர். 

தலைப்பக்கத்தில் துரியோதனன் நின்று கொண்டிருந்தான். 

பீஷ்மரின் காலடிப் பக்கம் பாண்டவர்கள் நின்றிருந்தனர். 

அப்போது தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார் பீஷ்மர். 

துரியோதனன் பழரசம் கொண்டுவர ஓடினான். 

பீஷ்மர் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, அர்ச்சுனனைப் பார்த்தார்.


அர்ச்சுனன் ஓர் அம்பினை மந்திரம் ஜெபித்து பூமியில் எய்தான். 

















அம்பு துளைத்த இடத்திலிருந்து தன் மகனுக்கு கங்கை அளித்த கடைசி நீராக அன்னை கங்கை ஊற்றெடுத்து மேலே பீறிட்டு வந்து பீஷ்மரின் தாகத்தைத் தணித்தாள். 

 உத்தராயணம் பிறக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மர் ஸ்ரீமன் நாராயணனை நினைத்துப் பிரார்த்தித்தார். 
அப்பொழுது பீஷ்மர் துதித்ததுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.

பாரதப் போரினால் இந்த உலகிற்கு கீதையும் கிடைத்தது.
அளப்பரிய நன்மைகளை விளைவிக்கும் விஷ்ணு சகஸ்ரநாமமும் கிடைத்தது..!

உத்ராயன காலமும் வந்து. பீஷ்மரின் உயிர் அவர் விரும்பியதுபோல பிரியாததால் அவஸ்தைக்குள்ளானார். 
காரணம் என்ன என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். 

வியாசரிடம் பீஷ்மர், நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பிய படி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார். 

வியாசர், பீஷ்மரே, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்குத் தீமை அநீதிகளைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும் கூட பாவம்தான் அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில்தான் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

உடல் அளவில் அவஸ்தைபட்டாலும், அதை விட உள்ளம் 
படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும் தண்டனைதான் என்றார். 

பீஷ்மருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். 

ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், அதைத் தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர்.

வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து,  இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். 

சூரியனின் முழு சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும் என்றவர், அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். 

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்

பீஷ்மர் யோக சாதனைகளுள் "தாரணை'' என்னும் சாதனத்தைக் கடைப் பிடித்தார்.உத்தராயண காலமான தை மாத ரத சப்தமிக்கு அடுத்த நாள், பீஷ்மர் தான் விரும்பியபடி உயிர் துறந்தார். 

அதன்படி காயம்பட்டி ருந்த தன் உடலிலிருந்து தமது மனதைப் பிரித்துக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். 

பின்னர் உத்தராயண காலம் பிறந்து, அவர் விரும்பிய நாளில் உயிர் துறந்தார்.  அந்த நாள் பீஷ்மாஷ்டமி எனப்படுகிறது. 
அந்த நாள் அஷ்டமி திதி. அதுவே, "பீஷ்மாஷ்டமி' என்று போற்றப்படுகிறது.

பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் கிடைக்கும் என்று வியாசர் கூறினார்.
ரதசப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும்  ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். 

அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை!


 பிரம்மச்சாரியான  பீஷ்மர் முக்தி அடைந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க வாரிசுகள் இல்லாததால், அவர்மீது அன்பு கொண்டவர்கள், தகப்பனார் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சமூகத்தினரும் தர்ப்பணம் கொடுப்பதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது. 

பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை..! 
பீஷ்மாஷ்டமி நாளில் யார் வேண்டுமானாலும் 
பீஷ்மருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது விஷேசம்..!

சுலோகம்

"வையாக்ரபாதி கோத்ராய 
ஸாங்க்ருதி ப்ரவராயச
கங்கா புத்ராய பீஷ்மாய ஆஜநம
ப்ரஹ்ம சாரிணே.
பீஷ்மாய நம: இத மர்க்யம்' 
என்று சொல்லி நீர் விடவேண்டும்.
"அபுத்ராய ஜலம் தத்மி 
நமோ பீஷ்மாய வர்மணே
பீஷ்ம: ஸாந்த நவோ வீர:
ஸத்ய வாதி ஜிதேந்த்ரிய:
ஆபி ரத்பி ரவாப் நோது
புத்ர பௌத் ரோசிதாம் க்ரியாமி
பீஷ்மாய நம: இத மர்க்யம்'
என்று சொல்லி நீர் விடவேண்டும்
"வஸூநா மவதாராய ஸந்தநோ ராத்மஜாய ச
அர்க்யமி ததாமி பீஷ்மாய 
ஆபால ப்ரஹ்ம சாரிணே
பீஷ்மாய நம: இத மர்க்யம்'

என்று சொல்லி நீர் விட வேண்டும்
முதலில் சுத்தம் செய்த ஒரு செம்பில் (தாமிரச்செம்பு மிகவும் விசேஷம்) தண்ணீர் நிறைத்து இடது கையில் அதை வைத்துக்கொண்டு, வலது கையால் ஒரு தட்டில் நீர் வார்க்க வேண்டும். இதுதான் அர்க்கி யம் என்பது. இவ்விதம் அர்க்கியம் விடுவதால் நாம் செய்த பாவங்கள் விலகும் என்று புராணம் கூறுகிறது.
தொடர்புடைய பதிவு
பீஷ்மாஷ்டமி பிரவாகம்


























13 comments:

  1. தவறு நடக்கும் போது தட்டிக் கேட்காமல் இருப்பதற்கும் தண்டனை உண்டு என்பதற்கு பீஷ்மர் நல்ல உதாரணம்... அருமையான படங்களுடன் விளக்கம் அருமை அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் அம்மா
    கங்கையின் மைந்தன் பீஸ்மர் பற்றிய தகவல்கள் தங்களின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அம்மா. அழகான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. பதிவின் தலைப்பும், படங்களும், எடுத்துச்சொல்லியுள்ள விஷயங்களும் அருமையோ அருமையாய் உள்ளன. இன்றைய விசேஷ நாளுக்கேற்ற நல்லதொரு பதிவு.

    >>>>>

    ReplyDelete
  4. தொடர்புடைய பதிவுக்கும் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.

    அங்குள்ள என் பின்னூட்டங்களையும் திரும்பப்படித்து மகிழ்ந்தேன். ;)

    http://gopu1949.blogspot.in/2012/01/31012012.html அங்கு என் பதிவு ஒன்றும் கண்களில் பட்டது. ;)))))

    அதில் தங்கள் பதிவுகளுக்கான இணைப்புகளும் தரப்பட்டிருந்தன. தொடர்புகள் தொடர்கதையாக ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளதாக நினைத்து மகிழ்ந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  5. சுலோகங்களையும் வெளியிட்டு, பிரும்மச்சாரியான பீஷ்மப் பிதாமஹருக்காக யார் வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம் எனச்சொல்லியுள்ளது மிகச் சிறப்பாக உள்ளது. உண்மை தான்.

    >>>>>

    ReplyDelete
  6. புராணக்கதைகளை கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களுடன், புரியும் படியாக, அழகாக, தெளிவாக, பொறுமையாக, திறமையாக புட்டுப்புட்டு எடுத்துச்சொல்ல தங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்?

    மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    o o o o

    ReplyDelete
  7. பிதாமகருக்கு யார் வேணுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது சிறப்பே. அவரின் உயிர் பிரியாதது வருத்தமே எனினும் பாஞ்சாலியின் துகில் உரியும் போது பீஷ்மாராலும் தடுக்க முடியவில்லையே என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் தண்டனை அனைவருக்குமே உள்ளது என்பது தெளிவாகிறது இதன் மூலம்.
    அருமையான பதிவும் படங்களும். வாழ்த்துக்கள்......!

    ReplyDelete
  8. மிக அருமையான பகிர்வு அம்மா,தெரிந்துக் கொண்டேன் பீஷ்மாஷ்டமி பற்றி,நன்றி!!

    ReplyDelete
  9. எத்தனைமுறை படித்தாலும் அலுக்காத விவரங்கள்.

    ReplyDelete
  10. தெரிந்த கதையே ஆனாலும் , படங்களுடன் கதை படிக்க மிக மிக சுவாரஸ்யம். தெவிட்டாத கதை.

    ReplyDelete

  11. தெரிந்த கதையே ஆனாலும் ஜீனியஸ் மேடம் பதிவு படிப்பது போல் வருமா.?

    ReplyDelete
  12. குருசேத்திரத்தில் பீஷ்மர் அம்புபடுக்கையில் உள்ளதையும் அர்ச்சுனன் அவருக்கு கங்கை நீரை வரவழைத்து கொடுப்பதையும் ஒளி ஒலி காட்சியில் இரவு செய்து காட்டினார்கள். இங்கு நீங்கள் பகிர்ந்த படத்தில் உள்ள காட்சியும் பார்த்தோம். அருமையான படங்களுடன் பீஷ்மர் கதையை சொன்னது மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. பீஷ்மர் கதையை அதற்கான சரியான படங்களுடன் விளக்கியமைக்கு நன்றி அம்மா. இது நாள் வரையில் பாரதப்போர் மூலமாக கீதாஉபதேசம் மட்டும் தான் கிடைத்தது என்று நினைத்திருந்தேன். இன்று இந்த பதிவின் மூலம் விஷ்ணு சகஸ்ரநாமமும் கிடைத்து என்று தெரிந்துகொண்டேன் நன்றி அம்மா.

    ReplyDelete