Wednesday, April 18, 2012

திருவருள் தரும் திரு
“திரு” என்கிற சொல்லே ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரைக் குறிக்கும் சொல். 
“ஸ்ரீ” என்று வடமொழியில் பகர்கின்றார்கள்.

பாற்கடல் நாதனின் பங்கயற் பாவையை. “ஸ்ரீரித்யேவ ச நாமதே பகவதீ” என்று ஆசார்யரான ஆளவந்தார் ஆராதித்து வைத்தார்.
“ஸ்ரீ” என்று வடமொழியில் ஓதப்படுகிற திருநாமமே தமிழ்மொழியில் “திரு”வாக உருப்பெற்றது. 

திருவை உடைய மாலே திருமால் ஆனான். 
திருவைத் தன் வலமார்பில் தாங்கி நிற்றலால் 
திருநாரணனாகத் திகழ்கின்றான்.
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பனாகத் திருவேங்கடவனும் திருவருள் புரிகின்றான்.
ஆழ்வார்களால் அருளிச் செய்யப்பட்ட தமிழ் வேதத்தில்
 “திருவின் மணாளன்” என்றே போற்றப்படுகின்றான் திருமால்.

இதையே வடமொழி அருமறையும் “லக்ஷ்மீபதி” என்று அழகாக அவனை அழைத்தது. 

கணவனின் பெயரை மனைவியின் தொடர்பு கொண்டு அழைத்தற் போலே, இவளின் பெயரையும் அவன் தொடர்பு கொண்டே ஓதிற்று.

ஸ்ரீஸூக்தத்தில் “விஷ்ணுபத்நீ” என்றே விளித்தது. 
இதன் மூலம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிக்கமுடியாதவர் என்றாயிற்று.

சூரியனையும், சூரிய கிரணங்களையும், பூவையும் அதன் மணத்தையும் பிரிக்க முடியாததைப் போல “திரு”வையும் “திருமாலையும்” பிரிக்க முடியாது.

ஒரு நொடிப் பொழுதும் அவள் அவனை விட்டு அகலாள். அவனும் அவளை விட்டு அகன்று அறியான். “அகலகில்லாதவள்” என்று பொருள் படும்படியான “அநபாயிநீ” என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

திருமகள் கேள்வனாம் திருமாலால் திருவுக்குப் பெருமையா? 
திருவால் திருமாலுக்குச் சீர்மையா? 
“திருவுக்கும் திருவாகிய செல்வா! தெய்வத்துக்கு அரசே” என்று திருமாலைப் போற்றிப் பணிந்தார்கள் ஆழ்வார்கள்.

இதனால் உலகுக்கு ஆதிகாரணமாய் அமைந்த அழகிய மாலாலேதான் இவளுக்கு ஏற்றம் என்று தோன்றும். உண்மை அதுவல்ல என்று உரைக்கிறார் திருமழிசையாழ்வார்.

“திருவில்லாத் தேவரைத் தேறேன்பின் தேவு” என்று தெளிவாகத்
திகழ வைத்தார்.
திருவுடையவனே இவ்வுலகத்தில் தெய்வமாகச் சொல்லப்பட வேண்டியவன்.
திருவில்லாதவனை தேவன் என்று அழைத்தலே தவறு என்று
திண்ணமாய் உரைக்கின்றார்.

“வையம் தகளியா” என்று உலகையே விளக்காகக் கொண்டு திருவிளக்கேற்றினார் பொய்கை ஆழ்வார். 

பூதத்தாழ்வார் “அன்பே தகளியா” என்று திருவிளக்கேற்றினார். 

இவ்விருவர் ஏற்றிய விளக்கின் ஒளியில் தெய்வத்தைக் கண்டார் மூன்றாமவரான பேயாழ்வார். 

“நாரணனைக் கண்டேன்” என்று ஓதாமல் “திருக்கண்டேன்” என்றார் அவர். 

முதலில் வணங்கி நிற்பது திருமகளையன்றோ! 

திருமகள் திருமார்பில் திகழ்வதால், அவள் ஒளியால் திருமாலின் திருமேனியை இரண்டாவதாக தரிசித்தார். 

வேதங்களும் பரம்பொருளின் தன்மை அறுதியிட வேண்டி அலைந்து நின்றபோது, அரவிந்தப் பாவையின் அடிகளையே பணிந்தன.

திருவின் திருவடியில் தடவிய செம்பஞ்சுச்சாற்றின் சுவடு பதிந்த மார்பையுடையவனே திருமால்” என்று பணிந்தேத்திப் பரவி நின்றன.

அழகிய பாவை நல்லாள் திருமுகம் மலர்ந்து உறைகின்ற இடம் திருவரங்கம் பெரியகோவில். “திரு” ஆடக் கூடிய அரங்கம் ஆகிறபடியாலே திருவரங்கம் ஆயிற்று.

திருவரங்கனின் நாயகியாக ஸ்ரீரங்கநாச்சியாராகத் திகழ்கின்ற திருவுருவின் மேன்மையைப் போற்றியவர்கள் ஆழ்வார்களும் ஆசார்யார்களும்.

அதிலும் தனிப் பெருமையுடன் திகழ்கின்ற ஸ்ரீபராசரபட்டர் என்கிற ஆசார்யர் இவளை ஸ்ரீ குணரத்ன         கோசம்” என்று 61 பாக்களாலே பாடி மகிழ்கின்றார். திருவாலேயே வளர்க்கப்பட்ட தனிச்சிறப்பு நிரம்பப் பெற்றவர் இவர். அவளின் குளிர்ந்த திருவருளால் திருமாலையே வென்றவர்.


திருவரங்கனின் திருமுற்றம் மிகவும் பிரகாசமாகத் திகழ்கின்றது. “ப்ரணவாகார விமானம்” என்றும் “ஸ்ரீரங்க விமானம்” என்றும் பெயர் பெற்ற விமானம் ஜோதி வெள்ளத்தின் நடுவே ஒளிவிட்டுக்கொண்டிருக்கின்றது.

உலகமே தொழுது வழிபடவேண்டி வளமாக வளர்ந்து நிற்கின்றது. இதற்குக் காரணம் குன்றாத மங்கள ஒளி விளக்காக ஸ்ரீரங்கநாச்சியார் சுடர்விட்டுக் கொண்டிருப்பதால் தான் என்கிறார் பட்டர்.

திருவைத் தொழுத பிறகே திருமாலைச் சென்று தொழுவது என்பது மரபு.

ஒரு குழந்தை தாயின் நிழலில் ஒதுங்கிய பிறகன்றோ தந்தையை அணுக முயல்கின்றது?

அதுபோல உலகுக்குத் தாயான இவளை அடிபணிந்து அருள்பெற்ற பிறகே தந்தையான அரங்கனை அடிபணிய முயல வேண்டும்.

அவள் அருளால் அவனை வெல்வது எளிது.
அவள் அருளன்றி அவன் முன் நிற்பது அரிது.

அன்னையின் அருள் இழந்த அரக்கர் கோன் இராவணன் அம்பாலே அழிந்தான்.

அவன் தம்பி அவளைப் பணிந்ததாலே சிறப்புடன் வாழ்ந்தான்.

தன்னுடைய குழந்தைக்காகச் சண்டையிட்டும் தாயைப் போல்,
நமக்காக அரங்கனிடம் சிபாரிசு செய்து நிற்பவன் அவள்.

குற்றங்களால் குன்றாக வளர்ந்து நின்கின்ற நமக்கு 
குணக் குன்றாகக் காட்சி தருபவள் தாயார் அன்றோ!

அரங்கனிடம் நம்முடைய குற்றங்களைப் பொறுத்து நம்மை அனுக்ரகிக்குமாறு செய்திடுவாள். 

நல்லருளால் நம்மையும் நன்கு திருத்திடுவாள். 

நாம் அரங்கனின் அருள் பெற்று செம்மையுடன் 
வாழ்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்து நிற்பாள்.

“என் திருமகள் சேர் மார்பனின்” பாத கமலங்களையே தந்தருளும் ஸ்ரீரங்க நாச்சியாரின் திருவருளை என்றும் வேண்டி நிற்போம்.
அவள் அருளாலே எல்லா வளமும் பெறுவோம்.

19 comments:

 1. திருவருள் பெற்ற திரு
  கிடைக்கப்பெற்றேன்.

  மிக்க மகிழ்ச்சி.

  எனக்கும் இன்று திருவருள் கிடைத்துள்ளது.

  மற்றவை நள்ளிரவில்.

  இப்போது மின்தடையாக உள்ளது.

  ReplyDelete
 2. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "திருவருள் தரும் திரு":

  திருவருள் பெற்ற திரு
  கிடைக்கப்பெற்றேன்.

  மிக்க மகிழ்ச்சி.

  எனக்கும் இன்று திருவருள் கிடைத்துள்ளது./

  திருவருள் கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 3. மற்ற பின்னூட்டஙகள் தொடர்ந்து வழக்கம் போல் இனி வரும்.

  என் கணினிக்கு unlimited high speed connection இன்று மாலை கொடுக்கப் பட்டுவிட்டது.

  Power cut தான் அடிக்கடி நிகழ்கிறது.

  மீண்டும் பொறுமையாக வருவேன்.

  ReplyDelete
 4. ”ஸ்ரீ” யைப்பற்றியும் ”திரு” வைப்பற்றியு வெகு அழகாகச் சொல்லியுள்ள ”ஸ்ரீ” க்கு என் அன்பான வாழ்த்துகள்.

  வக்ஷஸ்தலத்தில் எப்போதும் பெருமாளே! வைத்திருக்கிறார்
  என்றால் சும்மாவா?

  ReplyDelete
 5. ஸ்ரீஸூக்த லக்ஷ்மிபத்நீ விளக்கம் வெகு அருமை.

  ஒருவரைவிட்டு ஒருவர் பிரிக்கவே முடியாதவர் என்பதைப் படிக்கும்போதே மனதில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியல்லவா ஏற்படுகிறது! ;)))))

  ReplyDelete
 6. சூரியனையும், சூரிய கிரணங்களையும்,
  பூவையும் அதன் மணத்தையும் எப்படி பிரிக்கவே முடியாதோ அதுபோலவே
  ’திரு’ வையும் ’திருமால்’ஐயும் பிரிக்க முடியாது.

  சபாஷ்! மிகவும் நல்ல உதாரணம் கொடுத்துள்ளீர்கள். மனம் நிறைவாக உள்ளது.

  ReplyDelete
 7. //ஒரு குழந்தை தாயின் நிழலில் ஒதுங்கிய பிறகன்றோ//

  சத்தியமான வார்த்தை.

  என் தாய் இருந்தவரை என் விருப்பு வெறுப்பு தெரிந்து அன்புடன் அதற்குத்தகுந்தார் போலவே நடந்து வந்தாள்.

  எனக்குப்பிடிக்காதவற்றை யார் மூலமும், எந்த ரூபத்திலும் என்னிடம் அண்டவே விடமாட்டாள்.

  இப்போது என் தாயை நினைத்தாலும், அவள் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் சிலவற்றை நினைத்து நான் அழுவதுண்டு.

  ஆயிரம் இருந்தாலும் தாயைப்போல் வருமா? என்றே நினைத்திருந்தேன்.

  இன்று என் தாய் போலவே வேறொருவரும் என் விருப்பு வெறுப்புக்குத் தகுந்தாற்போல நடந்து கொண்டார்கள். வியந்து போனேன்.

  என் சொந்தத்தாயாகவே நினைத்து அகம் மகிழ்ந்து போய் ஆயிரம் நன்றிகள் மனதுக்குள் சொல்லி மகிழ்ந்தேன்.

  இதைப்படித்ததும், என் தாய் இன்னும் சாகவில்லை. யார் ரூபத்திலோ எங்கோ இருந்துகொண்டு எனக்கு, ஆறுதல் அளித்து வருகிறார்கள், என நினைத்துக்கொண்டேன்.

  இந்தப் பகிர்வின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. அதற்கு ஓர் ஸ்பெஷல் நன்றி.


  தொடர்வேன்

  ReplyDelete
 8. இந்தப்பதிவின் எல்லாப்படங்களும் நல்ல அழகு. Bright ஆக உள்ளன.

  நம் ஸ்ரீரங்கம் தங்க விமானம், இராஜ கோபுரம் அதன் ப்றகு கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படங்கள் என எல்லாமே மிக நேர்த்தியாகப் பதிவிடப்பட்டுள்ளன. பளிச்சென்று உள்ளன.

  மீண்டும் நுனி முதல் அடிவரை பார்த்து விட்டு, படித்துவிட்டு வருவேனாக்கும்!!

  ReplyDelete
 9. 'திரு'வ‌ருள் இன்றி ஒருவ‌ரும் இல‌ர‌ன்றோ...

  ReplyDelete
 10. Fine Post and nice pictures as usual.
  My pranams to SRI(THIRU).
  viji

  ReplyDelete
 11. திருவருள் தரும் திரு தரிசித்தேன். திரு’வைப்பற்றியும் திருவரங்கம்’ பெயர்க்காரணம் அழகாக விளக்கியுள்ளீர்கள்.

  ReplyDelete
 12. அப்பப்பா எத்தனை விவரங்கள். நல்ல படங்களுடன். திரு எல்லோருக்கும் சேரட்டும். நன்று வாழ்த்துகள்.

  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 13. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி . வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 15. ’திரு’வை பரிசாக அளித்ததற்கு நன்றி. படங்களும் அருமை.

  ReplyDelete
 16. திருமகள் அருளாலே எல்லா வளமும் பெறுவோம்.

  படங்கள் எல்லாம் தெய்வீகம்.
  நன்றி.

  ReplyDelete
 17. 93. நிதய கல்யாண கோவிந்தா

  ReplyDelete
 18. 2805+8+1=2814 ;) ஓர் பதிலுக்கு நன்றி.

  ReplyDelete