Tuesday, April 10, 2012

மீனாக்ஷி சுந்தரேச கல்யாணம்
போஜனம் செய்ய வாருங்கள் மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள் நவ சித்ரமானதோர் 
கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள்

வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம் பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில் நட்ட நடுவே குத்து விளக்கேற்றி

தூண்கள் தோறும் தூண்டா விளக்கும் சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய பந்திபந்தியாய் பாயை விரித்து உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு  
தப்பாமல் இடம்பண்ணி போஜனம் செய்ய வாருங்கள்
\
மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள் யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில் அழகாய் இருந்தார
அகல்யை திரௌபதி சீதை தாரை மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார் போஜனம் செய்ய வாருங்கள்

மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி

இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்

பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்

சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்


பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில் பார்த்துப் பரிமாறினார்…கல்யாணகோலம் கொண்ட கல்யாணராமன்கல்யாண முருகன் தச்சாநல்லூர்


18 comments:

 1. ”மீனாக்ஷி சுந்தரேச கல்யாணம்”

  தினமும் ஏகப்பட்ட கல்யாண உதஸவங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறீர்கள்!

  ரொம்பப் புண்ணியம் உண்டு. நடத்தும் உங்களுக்கு மட்டுமா, தரிஸிக்கும் எங்களுக்கும் தானே!

  மிக்க மகிழ்ச்சி! ;)))))

  ReplyDelete
 2. ”போஜனம் செய்ய வாருங்கள்” என்ற பாடலை முழுவதுமா எழுதி அசத்தி விட்டீர்களே! சபாஷ்!!

  இங்கு எங்கள் வீட்டருகே சாரதா மாமி என்று ஒரு மாமி இருக்கிறார்கள்.

  இது போன்ற பாட்டுக்கள் ஏராளமாக கைவசம் வைத்துக்கொண்டு, கல்யாணம், நலங்கு போன்ற நேரங்களில் வெகு அழகாகப் பாடிக்கொண்டே இருப்பார்கள்.

  எல்லாப்பெண்மணிகளும் ஆசையாக அமைதியாக அமர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

  அந்த ஞாபகம் வந்தது எனக்கு.

  ReplyDelete
 3. மூன்றாவது படத்தில் உள்ள திருமாங்கல்யம் நல்ல அழகு.

  சுற்றிலும் மாதுளை முத்துக்கள் கலரில் கற்கள் பதித்துள்ளது மிக அழகு. இதே சைஸ், இதே டிசைன், இதே சுற்றிக் கல் வைத்தது அப்படியே டிட்டோ, என் பெரிய அக்காவுக்கு சமீபத்தில் 2009 அக்டோபரில் நடந்த ஸதாபிஷேகத்தின் போது வாங்கினோம்.

  பக்கவாட்டில் இரண்டு குண்டுகளுடன் எவ்ளோ அழகாக உள்ளது.

  இதை தரிஸித்தாலே திருமண வயதில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும், திருமணப் பிராப்தம் அமையக்கூடும் எனத் தோன்றுகிறது.

  சந்தோஷமாக உள்ளது. ;)))))

  ReplyDelete
 4. சாப்பாட்டுப்பந்தி, உணவு தான்யங்கள், வளையல்கள் என ஒரே கல்யாண கோலமாக காட்டி அசத்தியுள்ளீர்கள்.

  அந்த ஒன்பதாவது படத்தில் ஜன சமுத்திரத்தில் அந்தக்குதிரை வாகனம் எப்படி நகர முடியும். குதிரையாக இருப்பதால் ’லாங் ஜம்ப்’ செய்து ஒரே தாவாகத்தாவிச் சென்றிடுமோ.

  அதில் போட்டோ கவரேஜ் மிகவும் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 5. அந்த போஜனம் செய்ய வாருங்கள் பாட்டில் மொத்தம் 496 வகையறாக்கள் உள்ளன.

  கல்யாண சமையல் சாதம் ......
  அந்த காய்கறிகளும் பிரமாதம் ...
  இந்த கெளரவப் பிரஸாதம் ......
  இதுவே எனக்குப்போதும் ........

  அஹ ஹஹ ஹஹஹ்ஹா .....

  என்ற மாயாபஜார் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
 6. இந்தப்பதிவினில் உள்ள பல படங்கள் மிக அருமையாக அமைந்துள்ளன.

  போஜனம் செய்ய வாருங்கள் என, ஒரு பேச்சுக்காவது பாடல் மூலம் அழைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

  அதுவே வயிறு நிறைய சாப்பிட்டது போல ஓர் நிறைவைத் தருகிறது.

  ஆனந்தம் தரும் அழகிய அந்தக் காலப் பாடலுடன் கூடிய கல்யாணப்பதிவுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்,

  ReplyDelete
 7. கல்யாண விருந்து நேரிலேயே அழைக்கிற மாதிரி இருக்கிறது.

  ReplyDelete
 8. ஆஹா! காணக் கண் கோடி வேண்டும்.
  தெய்வத் திருமண பதிவுகள் தந்து எங்களுக்கும் அருள் கிடைக்கும் படி செய்தமைக்கு நன்றி!

  ***********

  ஹை!இம்புட்டு அயிட்டமா?கல்யாணம் எங்கன்னு கரெக்டா சொல்லுங்க, நானும் போஜனம் செய்ய வந்துடறேன்.மீனாட்சி சுந்தரேச கல்யாண மண்டபத்தில் நானும் போஜனம் செய்ய வந்துடறேன்.
  அது மயிலை என்றாலும் சரி!கயிலை என்றாலும் சரி!

  ReplyDelete
 9. கல்யாண கோலத்தில் ராமன்! எத்தனை அழகு!!!!!!

  ReplyDelete
 10. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் பற்றிய கட்டுரை அருமை - எத்தனை எத்த்னை படங்கள் - அத்தனையும் அருமை- பாடல் - போஜனப் பாடல் - நாவில் நீர் சொட்டுகிறது. அக்கார வசிசலும் சக்கரைப் பொங்கலும் வெவ்வேறா ? பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தில் போஜனம் செய்ய வந்துட்டோம்.

  ReplyDelete
 12. //cheena (சீனா) said...

  அக்கார வசிசலும் சக்கரைப் பொங்கலும் வெவ்வேறா ?//

  ஆம் வெவ்வேறுதான்.பெயரளவில் அக்காரம் என்றால் கரும்பு.கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரை என்றும், அடிசில் என்றால் சோறு என்றும் பொருள் கொண்டாலும் செய்முறைப்படி இரண்டும் வெவ்வேறுதான்.அடிப்படையில் செய்முறையிலும் மிகுந்த வேற்றுமை இல்லை என்ற பொழுதிலும் அந்த சிறு வேற்றுமையினால் இரண்டிற்கும் சுவை வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது.(சின்ன வேற்றுமையால ஏற்படற சுவை வேறுபாட்டை அனுபவிக்கனும்னா எவ்ளோ பெரிய சாப்பாட்டு ராமியா(பெண்பால்?) இருக்கணும்னு நீங்க நினைக்கறது தெரிஞ்சாலும் நான் மேற்கொண்டு சொல்றேன்)

  அக்கார வடிசிலில் பால் பால் பால் நெய் நெய் நெய் என்று இதுவே பிரதானம்.சர்க்கரைப் பொங்கல் பாவம்! பால் கொஞ்சமா சேத்து நீரில் கூட வேக வச்சுக்கலாம்.

  அக்கார வடிசிலில் நம் ஐஸ்வர்யத்தைக் காமிக்கறோம் பேர்வழி என்று முந்திரி திராட்சை சேர்க்கக் கூடாது.பாலில் குழைந்த அரிசி பாசிப்பருப்பு நெய்யுடன் வாயில் கரையணும்.இதில் குங்குமப் பூ (இதுக்கு முந்திரி பெட்டர்ங்கறீங்களா?)ஏலப் பொடி,பச்சைக் கற்பூரம் வேணும்.

  சர்க்கரைப் பொங்கல்ல பால் அதிகம் சேர்க்காத பாவத்தைக் கரைக்க முந்திரி திராட்சை அள்ளி விட்டுக்கலாம்.ஏலம் ப.கற்பூரம் லைட்டா!

  ஏதோ அனுபவிச்சத சொன்னேன். :-))

  ReplyDelete
 13. cheena (சீனா) said...
  //அக்கார அடிசலும் சக்கரைப் பொங்கலும் வெவ்வேறா ?//

  அன்பின் சீனா ஐயா அவர்களே!
  வணக்கம்.

  என்ன இப்படியொரு கேள்வி கேட்டு விட்டீர்கள்?

  சர்க்கரைப் பொங்கல் யார் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் சுலபமாகச் செய்து, அதன் பெயர் சர்க்கரைப்பொங்கல் என்று சொல்லி விடலாம், ஐயா.

  அக்காரஅடிசல் என்பது அப்படியல்ல.

  அதை நம் “கற்றலும் கேட்டலும் ராஜி மேடம்” அவர்கள் போல ஒருசிலரால் மட்டுமே, பதமாகப் பக்குவமாக, ருசியோ ருசியாக, சுவையோ சுவையாகத் தயாரிக்க முடியும்.

  ஒருமுறை அக்கார அடிசல், திருமதி ராஜி மேடம் செய்து, தாங்கள் சாப்பிட்டால் தான் உங்களுக்கு அதுபற்றியும், அதற்கும் இந்த சாதா சர்க்கரைப்பொங்கல் என்று நம் எல்லோர் வீடுகளிலும் தைப்பொங்கல் அன்று செய்கிறோமே, அதற்கும் உள்ள வித்யாசமே தெரியும்.

  உடனே புறப்படுங்கள் ஐயா ....
  கற்றலும் கேட்டலும் திருமதி ராஜி மேடத்தை நெரில் ச்ந்தித்து அக்கார அடிசல் செய்யச்சொல்லி சாப்பிட்டு வர.

  பெயரைச்சொன்னாலே நாக்கில் நீரும் ஊறும் பதார்த்தம் ஐயா, அது.

  ஆனால் அது செய்யத் தெரிந்தவர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

  உங்கள் அதிர்ஷ்டம், அவர்களுக்கு மிக நன்றாகச் செய்யத்தெரியும் என்று அவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

  [பொதுவாக வைஷ்ணவர்களுக்கு மட்டுமே இந்த அக்கார அடிசலும், புளியோதரையும் மிக நன்றாக ருசியாக செய்ய வரும்.]

  அன்புடன் vgk

  ReplyDelete
 14. பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர்
  எம்பாவாய்!

  வைணவ மரபில் திருப்பாவையின் 27ம் பாசுரத்தில் அக்கார அடிசிலின் குறிப்பு இருக்கிறது.

  இதில் முழங்கை வழி வார என்பது நெய் முழங்கையில் சொட்டுமாறு என்பதாக அமைந்துள்ளது.

  அதாவது அவ்வளவு நெய் அதற்கு வேண்டும் என்பது மட்டுமல்ல இதன் பொருள்.அப்படிச் செய்த அக்கார அடிசிலை கோபியர்களான ஜீவாத்மாக்கள் கண்ணன் என்ற பரமாத்மாவுடன் கூடி இருந்து உள்ளம் குளிர்கையில் கண்ணன் எங்கே கிளம்பி விடுவானோ என்று அக்கார அடிசிலை சாப்பிடாமல் கையில் வைத்துக் கொண்டு அவன் அழகை ரசித்துக் கொண்டிருப்பதால் முழங்கையில் நெய் வழிகிறது என்பதாக பொருள்

  ReplyDelete
 15. அக்கார அடிசிலை சாப்பிடாமல் கையில் வைத்துக் கொண்டு அவன் அழகை ரசித்துக் கொண்டிருப்பதால் முழங்கையில் நெய் வழிகிறது என்பதாக பொருள...//

  பக்திரசம் சொட்டச்சொட்ட ரசனை வழிந்தோடும் கருத்துரைகள் மனதிற்கு இனிமை கூட்டுகிறது தோழி..

  நிறைவான நன்றிகள்... தங்கள் அனைவருக்கும் அக்கார அடிசிலாய்..

  ReplyDelete
 16. raji said...
  //பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர்
  எம்பாவாய்!

  வைணவ மரபில் திருப்பாவையின் 27 ஆம் பாசுரத்தில் அக்கார அடிசிலின் குறிப்பு இருக்கிறது.

  இதில் முழங்கை வழி வார என்பது நெய் முழங்கையில் சொட்டுமாறு என்பதாக அமைந்துள்ளது.

  அதாவது அவ்வளவு நெய் அதற்கு வேண்டும் என்பது மட்டுமல்ல இதன் பொருள்.

  அப்படிச் செய்த அக்கார அடிசிலை கோபியர்களான ஜீவாத்மாக்கள் கண்ணன் என்ற பரமாத்மாவுடன் கூடி இருந்து உள்ளம் குளிர்கையில் கண்ணன் எங்கே கிளம்பி விடுவானோ என்று அக்கார அடிசிலை சாப்பிடாமல் கையில் வைத்துக் கொண்டு அவன் அழகை ரசித்துக் கொண்டிருப்பதால் முழங்கையில் நெய் வழிகிறது என்பதாக பொருள்//

  வெகு அழகான விளக்கம்.

  இந்த விளக்கத்தைப் படித்ததுமே அந்த முழங்கையில் சொட்டிய நெய்யுடன் கூடிய அக்கார அடிசல் சாப்பிட்டது போன்றதொரு திருப்தி ஏற்பட்டுவிட்டது.

  பக்தி ரசமும் ரசனையும் கூட நெய்யுடன் சேர்ந்தே என் முழங்கையில் வழிவதுபோல உணர்கிறேன்.

  சம்பந்தப்பட்ட அனைவருக்கும்,
  அக்கார அடிசலுக்கும்,
  திருப்பாவை பாசுரத்திற்கும்
  நன்றியோ நன்றிகள்.

  vgk

  ReplyDelete
 17. 82. வைஜயந்திமாலா கோவிந்தா

  ReplyDelete