Tuesday, December 3, 2013

கிணற்றுக்குள் பொங்கும் கங்கை..!






பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!

பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர்
 (கலிகல்மஷம் பாதிக்காமல்)
கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!

புண்ணியமான ஸ்ரீதர ஐயாவாள்  இயற்றிய  கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.
ஸ்ரீதர ஐயாவாள்.கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் தன் பதவி, சொத்துகளைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்தவர்...!

தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் 
மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். 
சிவன்மேல் அபார பக்தி கொண்டவர்.

அதே சமயம் ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் பாராட்டாமல் திகழ்ந்தவர்..!

அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா

என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.

 உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும்,
கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும்,
என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும்,
பிறர் தோஷங்களை அறியாதவனாகவும்,
எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும்,
பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும்,
உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும்
எப்போது நான் மாறுவேன் கிருஷ்ணா என்று  அவர் பகவான் கிருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "கிருஷ்ண த்வாதச மஞ்சரி" ..!

தாங்கள்தான் சிவ பக்தராயிற்றே..! என்று  தேரில் ஊர்வலம் வந்த கிருஷ்ண விகரஹத்தை வணங்க விடாமல் தடுத்தனர் பொறாமை கொண்டவர்கள்..! 

அமைதியாக இல்லத்துக்குள் சென்று ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருக்க  ஊர்வலத்தை விட்டு கண்ணன் விக்ரஹம்  ஐயாவாள்  பூஜை அறையில் தோன்றிய போது பாடியது "டோலோ நவரத்ன மாலிகா" ..!

கார்த்திகை மாதத்தில் வரும் இவரது தந்தையார் மறைந்த திதி நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த  சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார். 
நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், ""சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன்'' என கேட்டார்.

அவர்மீது இரக்கம்கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது,  சிரார்த்த  சமையல் மட்டுமே தயாராக இருந்தது. 

பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல்
உணவைக்கொடுத்து பசியாற்றினார்.

சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள்
மட்டுமே உண்ணவேண்டும். 

மீதம் உள்ளதை பசுவுக்குதான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி, 
"பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்' என்றனர்.

"ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டுவா' 
என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம். 

ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்? இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, "உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன்' என உறுதியளித்து மறைந்தார்.
இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார். 

கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக "கங்காஷ்டகம்' பாடினார். 

ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து, திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்! 

அதில் காசியில், கங்கையில் போடப்பட்ட 

மங்கல திரவியங்கள் காணப்பட்டன.

பெரும் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காக "கிணற்றிலேயே கங்காதேவி அடங்க வேண்டும்' என்று மனமுருகி வேண்டினார் ஐயாவாள்.

நீர்ப்பெருக்கு படிப்படியாகக் குறைந்து  கங்கா தேவி அக்கிணற்றில் நிரந்தரமாகக் குடியிருப்பதாக ஐதீகம்.

அந்த நீர் கங்கைதான் என்பதற்கு பிரமாணம் கேட்டார்கள் பிராமணர்கள்..

ஐயாவாள் ஒரு விழுதுகளுடன் கூடிய பெரிய ஆலமரத்தை வேருடன் பிடுங்கி தலைகீழாக வேர் மேலே இருக்கும் வண்ணம் நட்டு தன் கிணற்று நீரைப்பாய்ச்சினார்.. ஆலமரம்  செழித்து வளர்ந்து அவர் பீமனின் அவதார அம்சம் என்பதையும் , கிணற்று நீர் கங்கை தான் என்பதையும் ஒருங்கே நிரூபித்தது..

அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள்.

ஐயாவாள் கங்கையை தன் வீட்டுக் கிணற்றில் வரவழைத்தது ஒரு கார்த்திகை, அமாவாசை தினம். 

இன்றளவும் திருவிசலூரில் இந்த நிகழ்ச்சி
"கங்காவதரண மகோத்ஸவம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது

 கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் சூரியனார் கோயில் செல்லும் வழியில் உள்ளது திருவிசலூர்.

இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று,பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். 
கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு  பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். 

அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்! 


26 comments:

  1. ஸ்ரீதர ஐயாவாளைப் பத்தியும் இந்த அதிசயக் கிணத்தைப் பத்தியும் இப்பத்தான் கேள்விப்படறேன்! என்னவொரு விந்தை இந்த விஞ்ஞான யுகத்திலயும்! நல்லதொரு பகிர்வுக்கு மகிழ்வுடன் என் நன்றி

    ReplyDelete
  2. வியப்பான தகவல் உட்பட படங்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  3. திருவிசைநல்லூர் கிணற்றுக்குள் பொங்கிய கங்கை பற்றி அறிந்து கொண்டேன். சிவனின் தலையிலிருந்து அருவியாய் கொட்டும் கங்கையின் படங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன. நன்றி!

    ReplyDelete
  4. கேள்விப்பட்ட கதையானாலும் திரும்பவும் படிக்கும்போது மனம் நெகிழ்கிறது.

    ReplyDelete
  5. எத்தனை அற்புதம்! ஆசரியம்! எல்லாவற்றையும் எப்படித்தான் இபடித் தொகுத்துத் தருகிறீர்களோ... அருமை!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  6. ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கார்த்திகை அமாவாசை நேற்று முடிந்து போனதில் மனதுக்கு மிகவும் வருத்தம் தான்.

    >>>>>

    ReplyDelete
  7. இருப்பினும் அதைப்பற்றிய சிறப்பான பதிவினை இன்று இங்கு பார்த்ததில், ஏதோ மனதுக்கு ஓர் ஆறுதல்.

    >>>>>

    ReplyDelete
  8. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    கடைசியில் காட்டியுள்ள படம் என்றும் என் நெஞ்சைவிட்டு நீங்காதது.

    சுற்றிலும், அழகாக மாலையிட்ட எத்தனை எத்தனை லிங்கங்கள்.

    நடுவே ஓர் மஹாலிங்கம்.

    நீர்ப்பரப்பின் வடிவமே லிங்கம் போல ....

    ஆஹா ! அருமையோ அருமை.

    எப்படித்தான் இப்படிப்பட்ட படங்களைத் திரட்டிக் காண்பித்து அசத்த முடிகிறதோ!!!!!!

    ஆச்சர்யம் ...... ஆச்சர்யம் !!!!!!

    >>>>>

    ReplyDelete
  9. ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாளைப்பற்றிய சரித்திர விளக்கங்களை மிகச்சுருக்கமாகவும் ஆனால் படு சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் சொல்லிச்சென்றுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. அவர் இயற்றியுள்ள கங்காஷ்டகம், திருவிச நல்லூர், கங்கை பொங்கிடும் கிணறு ஆகிய அனைத்துத் தகவல்களும் கோர்வையாக ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதே !

    ooooo

    ReplyDelete
  11. //”ஒரே நாளில் காசியில் உள்ள கங்கையில் நீராடி விட்டுவா”//

    நல்ல உள்ளமும், நல்ல எண்ணங்களும் புரியாமல் இவ்வாறு பிறர் மனதை நோகடிக்கும் ஜன்மங்கள். ;(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      கருத்துரைகள் அனைத்திற்கும் இனிய நன்றிகள்..

      நல்ல உல்ளம் கொண்ட அருளாளர்கள் ஈசனால் பாதுகாக்கப்படுவார்கள்..!

      Delete
  12. சிறப்பான தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. புதிய தகவலாக எனக்கு உள்ளது.
    மிக நன்றாகச் சுவைத்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. ஸ்ரார்த்த நியதிகளை மீறிவிட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் மேல் கோபங்கொண்ட சென்ற அந்தணர்கள், வேறு யாரை வைத்து எப்படி இன்று இவர் ஸ்ரார்த்தம் செய்கிறார் என பார்த்துவிடுவோம் என கர்வமாக நினைத்து, வெளியே ஓரிடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றனர்.

    அப்போது வெளியூரிலிருந்து மூன்று அந்தணர்கள், ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் இல்லத்திற்குள் நுழைகின்றனர்.

    இதுவரை அவர்களை இந்த ஊரில் எங்கும் நாம் பார்த்ததே இல்லையே, சர்வலக்ஷங்களும் நிறைந்த பிரும்ம தேஜஸுடன் செல்கிறார்களே, என வியந்துபோய், வீட்டின் வெளிப்புற ஜன்னல் இடுக்குகள் வழியாக உள்ளே நடப்பதைப் பார்க்கிறார்கள் .... உள்ளூர் அந்தணர்கள்.

    உள்ளே மூன்று இலைகளிலும் ஸ்ரார்த்தம் சாப்பிட அமர்ந்திருப்பவர்கள் சாக்ஷாத் பிரும்மா, விஷ்ணு, சிவனாக அவர்கள் கண்களுக்குத் தெரிகிறார்கள்.

    விஷ்ணுவுக்கான மேற்கு நோக்கிய இலையில் சாக்ஷாத் மஹாவிஷ்ணுவே அமர்ந்து போஜனம் செய்கிறார். அதுபோல கிழக்கு நோக்கிய இலையில் பிரும்மதேவனும், வடக்கு நோக்கிய பித்ருக்களுக்கான இலையில் சாக்ஷாத் பரமேஸ்வரனும் காட்சியளிக்கிறார்கள்.

    அதன் பிறகே ஸ்ரீதர ஐயாவாளின் பெருமையையும், தூய பக்தியையும் உள்ளூர் அந்தரணர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.

    இதை நான் ஓர் பிரவசனத்தில் கேட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .வாழ்க வளமுடன் ..!

      மும்மூருத்திகளும் வந்து பித்ரு போஜனம் செய்வதாக இருந்தால் ஐயாவாள் எத்தனை சிறப்பானவர் ..

      ஆத்மார்த்தமான கருத்துரைகள் அளித்து பதிவுக்கு சிறப்பளித்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..1

      Delete
  15. மகான் ஸ்ரீதர ஐயாவாள் அவர்களுக்காக பரமன் நிகழ்த்திய அற்புதத்தை எத்தனை முறை படித்திருந்தாலும் - தங்களின் கை வண்ணத்தில் வாசிக்கும் போது ஆனந்தமாக இருக்கின்றது.

    ReplyDelete
  16. சிறப்பான தகவல்கள் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  17. அடடா கிணற்றுக்குள் கங்கையா??... சூப்பர். அதிலும் கடைசிப் படம் சொல்லவே தேவையில்லை.. சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  18. வணக்கம்
    அம்மா
    அறிய முடியாத வியப்பான தகவல்... பதிவு அருமை வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  19. கார்த்திகை அமாவாசையின் சிறப்புகள்,வியப்பளிக்கும் தகவல்கள் என பதிவு மிக அருமை. கடைசிப்படம் அழகாய் இருக்கின்றது.

    ReplyDelete
  20. தெரிந்த கஹை தான் என்றாலும், உங்கள் பதிவில் படங்களுடன் படிக்கும் போது மனம் பரவசமாகிறது .
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  21. நாங்கள் சென்று வந்தோம். கூட்டம், கூட்டம் தாங்க முடியவில்லை.
    வர வர கூட்டம் அதிகமாகிறது.
    அவ்வளவு பேருக்கும் கிணற்றிலிருந்து நீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
    எல்லோரையும் உணவு அருந்தி செல்லும்படி வேண்டுகோள் மைக்கில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
    மழை வேறு பெய்து கொண்டே இருந்தது. மக்கள் அதை பொருட்படுத்தாமல் தரிசனத்திற்கு வரிசையில் நின்றார்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  22. படங்களும் பகிர்வும் அருமை.... மிக்க நன்றி.

    ReplyDelete
  23. தங்களுடைய வலைப்பூவை இன்று தான் பார்க்க நேர்ந்தது. ஆஹா. மிக அருமை. ஆன்மிக வலைப்பூவாக திகழ்வதை பார்க்கும்போது மனது பக்தி பரவசமடைகிறது. எதை படிப்பது, எதை விடுவது என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்ற பதிவுகளையும் படித்து என்னுடைய ஆன்மிக அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. Beautiful Madam.....may GOD LORD SHIVA Bless you for publishing this beautiful article

    ReplyDelete