Tuesday, November 11, 2014

வளமான வாழ்வு தரும் வண்ணமய கணபதி.






நமோ வ்ராத பதயே நமோ கணபதயே 
நம, ப்ரமதே பதயே, நமஸ்தே அஸ்து
லம்போதராய ஏக தந்தாய விக்ன நாசினே
சிவ சுதாய வரதமூர்த்தயே நமோ நம:

விநாயகப் பெருமானுக்குரிய எல்லா மந்திரங்களையும்   உள்ளடக்கியதான "மாலா' மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று 48 நாட்கள் விநாயகர் சந்நிதிமுன் 21 முறை தியானித்து வழிபட்டால் நினைத்த நற்காரியங்கள் வெகுவிரைவில் சித்தியாகும் 

ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் அற்புதத் தோற்றங்கள் பல கோவில்களில் கருமை நிறத்தில் அருள்புரிந்தாலும், 
சில தலங்களில் வெண்மை, மஞ்சள், சிவப்பு, சந்தனம், பச்சை ஆகிய வண்ணங்களில் எழுந்தருளியுள்ளார். 

மஞ்சள் விநாயகர்

வேலூர் சேண்பாக்கத்தில்  கூரை இல்லாத திறந்தவெளிக் கோவிலில் ஸ்ரீசெல்வ விநாயகர் மஞ்சள் பிள்ளையாராக  மஞ்சளில் பிடித்த லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். 



 நாகை- திருவாரூர் சாலையிலுள்ள மாஞ்சாடி கிராமத்தில், ஸ்ரீபாலசுப்பிரமணியரால் உருவாக்கப்பட்ட மஞ்சள் பொடி விநாயகரை தரிசிக்கலாம்.

 மஞ்சளால் உருவான விநாயகரை "ஹரித்ரா கணபதி' என்று போற்றுவர். ஹரித்ரம் என்றால்  தரித்திரத்தைப் போக்குபவர் என்று பொருள்.

தெய்வ காரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மஞ்சளை மங்கலப் பொருளாக வைக்கவேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. 

அந்தவகையில் மஞ்சள்தூளை கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து விநாயகராக பாவித்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

, வெள்ளெருக்கம் வேரினைக் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவார். இந்த வெள்ளெருக்கு விநாயகரை வழி பட்டால் பில்லி, சூன்யம், தீயசக்திகள் அண்டாது.
சந்தன விநாயகர்

கர்நாடக மாநிலம், பேலூரிலுள்ள நர்த்தன விநாயகரின் திருவுருவம் 
சந்தன மரத்தாலானது.

கும்பகோணத்திற்கு வடமேற்கில் ஒன்பது 
கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் 
ஸ்ரீசாட்சிநாதர் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர்  
சந்தன நிறம்கொண்டு திகழ்பவர். 

கிருதயுகத்தில் ஏற்பட்ட பிரளயத்தின்போது மக்களைக் காத்தவர். 

இவர் ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து, சப்த சாகரத்தின் (ஏழு கடல்) பெருக்கையும் ஒரு கிணற்றில் அடக்கினார். 

அப்போது வருண பகவான் தன் திருமேனியிலிருந்து சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றால் விநாயகரை உருவாக்கி பிரதிஷ்டை செய்து, அவருக்கு "பிரளயம் காத்த விநாயகர்' என்று பெயரிட்டு போற்றி வழிபட்டார். 

சந்தன நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகரின் திருமேனியில் நிறைய கிளிஞ்சல்கள் உள்ளதைக் காணலாம். 

இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயக சதுர்த்தியன்று இரவு மட்டும் தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. தேனாபிஷேகத்தின்போது தேன் முழுமையாக விநாயகரின் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். அப்போது செம்பவளமேனியராய் காட்சிதருவார். தேனுறிஞ்சி பிள்ளையார் வணங்குபவருக்கு இனிய வாழ்வை அருள்பவர்..

பசுமை விநாயகர்

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் பசுஞ்சாணத்தை கூம்பு வடிவில் பிடித்து, அதில் அறுகம்புல் செருகி வழிபடுவர்.   . பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்ட பின்பே நாற்று நடுவார்கள். அதேபோல் அறுவடை சமயத்திலும் வழிபடுவர். 

அறுவடையான நெற்கதிர்களை களத்துமேட்டில் அடித்து நெல்மணிகளை உதிர்த்தபின், அதிலுள்ள பதர்களைப் பிரிக்க முறத்தினால் தூற்றுவார்கள். அப்பொழுது இளங்காற்று வீசாவிட்டால் பதர்கள் பிரியாது. 

அதுபோன்ற சமயங்களில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் செருகி, ஒரு கூடை போட்டு மூடி, அதை கோணிப்பையால் போர்த்திவிடுவார்கள். பின்னர், "பிள்ளையாரே, இளங்காற்று வீசணும். இல்லைன்னா நீ மூச்சுமுட்ட கூடைக்குள்ள இருக்கவேண்டியதுதான்' என்று சொல்வார்கள். 

அப்படிச் சொன்ன சில நிமிடங்களில் இளங்காற்று வீச ஆரம்பிக்கும். உடனே கூடையை அகற்றி பிள்ளையாரை வணங்கிவிட்டு பதர்பிரிக்கச் சென்று விடுவது வழக்கம். இது இன்றும் கிராமப்புறங்களில் கடைப் பிடிக்கப்படுகிறது.

நிறம் மாறும் விநாயகர்

குமரி மாவட்டம் பத்மநாப புரத்துக்கு அருகேயுள்ள கேரளபுரத்தில், அரசமரத்தடியில் சந்திரகாந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட விநாயகரை தரிசிக்கலாம். 

இவர் உத்தராயன காலத்தில் (தை முதல் ஆனி வரை) கறுப்பாகவும், தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) வெண்ணிறத்திலும் காட்சியளிப்பார். 

இவர் வீற்றிருக்கும் அரசமரமும் நிறம் மாறுகிறது. 

விநாயகர் கறுப்பாக இருக்கும்போது ஒரு பக்க மரம் அடர்த்தியான பச்சையாகக் காட்சிதரும். மறுபக்கம் இலைகள் உதிரும்

. விநாயகர் வெள்ளை நிறத்தில் மாறும்போது மறுபக்கம் இளம் பச்சையாகக் காட்சிதரும். இம்மரத்தருகில் இருக்கும் கோவில் கிணற்று நீரும், விநாயகரின் நிறத்திற்கேற்றாற்போல் நிறம் மாறும். 

கேரளவர்மா என்ற மன்னன் ராமேஸ்வர அக்னிக்கடலில் நீராடும்போது கிடைத்த விநாயகர் என்பர். இவருக்கு அரசமரம் தவிர மேற்கூரையில்லை. 

உச்சிஷ்டகணபதி என்ற பெயர் கொண்ட விநாயகர் நான்கு கைகள் கொண்டு திகழ்வார். இவரது வண்ணம் சிவப்பு. 

மகாகணபதி ஆறு கைகளுடன் மஞ்சள் நிறத்துடன் காட்சிதருவார்.

இதேபோல் மஞ்சள் நிறம் கொண்ட ஊர்த்துவ கணபதிக்கு ஆறு கைகள் இருக்கும்;

பிங்கலகணபதிக்கும் ஆறுகைகள். ஸ்ரீலட்சுமி கணபதி நான்கு அல்லது எட்டு கைகள் கொண்டவர். இவரது நிறம் வெள்ளை என்கிறது புராணம்.

10 comments:

  1. இளங்காலைப் பொழுதில் - அழகிய ஆனைமுகனின் தரிசனம்!..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. படங்களும் விளக்கமும் நன்று

    ReplyDelete
  3. வண்ணமய கணபதி கண்டு மயங்கினேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. கணபதியைத் துதிக்கவும் போற்றவுமாக எத்தனையெத்தனை தகவல்கள்! விவசாயிகள் செயலும், கேரளபுரத்து விநாயகரும் வியப்பைத் தந்தனர்.

    ReplyDelete
  5. விநாயகர் பற்றி பலபல தகவல்கள் வாசிக்க ஆச்சர்யம். கேரளபுரவிநாயகர் அற்புதம் நிறைந்தவர். நன்றிகள்.

    ReplyDelete
  6. எப்படிவேண்டுமானாலும் உருவப் படுத்திக் கொள்ள அருள் புரியும் ஒரே கடவுள் விநாயகர் தானோ.இப்போதெல்லாம் கீதைப் பதிவுக்கு வருவதில்லையே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பிள்ளையார் பற்றி அறியத்தந்தீர்கள் அம்மா...
    படங்கள் ஒவ்வொன்றும் அழகு...

    ReplyDelete

  8. நானும்
    கணபதி பக்தன்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  9. இளங்காற்று வீச செய்யும் செயல் அருமை. இப்போதுதான் கேள்வி படுகிறேன்.

    அனைத்து செய்திகளும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete