Friday, November 28, 2014

கார்த்திகை உற்ஸவம்







திருவண்ணாமலையில் மட்டுமே கார்த்திகை தீபத்தின் போது 217அடி உயர ராஜ கோபுரத்தின் முழு உயரத்திற்கும் மாலை தயாரிக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது ..

அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம். அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு. வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு



கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.

மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.




நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

வைஷ்ணவக் கோயில்களில், 'பாஞ்சராத்ர தீபம்' என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம்.

ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஸ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை 'ஸ்ரீமுகம்' என்பர்.

கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.

ஈசனின்... ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை நாளில்தான்!

சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

திருநெல்வேலி- ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.

கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த உற்சவம் , காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!

8 comments:

  1. கார்த்திகை உற்சவம் கண்டு மகிழ்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. கார்த்திகை மாதத்தின் சிறப்புக்களையும் கோயில் விழாக்களையும் அறிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. இந்த மாதிரி ஐதிகங்களைக் கூறியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது எத்தனை தூரம் சரி என்று யோசித்தால் நலம் விளையும்

    ReplyDelete
  4. திருக்கார்த்திகை பற்றிய விவரங்கள் அருமை.

    ReplyDelete
  5. கார்த்திகை உற்சவத்தின் உற்சாகம் பதிவின் படங்களில் ஜொலிக்கின்றது. திருவிசைநல்லூர் பற்றி தனியே ஒரு பதிவாகவே நீங்கள் எழுதியதாக ஞாபகம்.

    ReplyDelete
  6. விடியற்காலையில் - அழகான தரிசனம்..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. பல ஊர்களிலுள்ள கோயில்களில் எவ்வாறு கார்த்திகைத் திருவிழா நடைபெறுகிறது என்பதைப் படங்களுடன் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete