Saturday, November 22, 2014

தீப மங்கள ஜோதீ




சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திடமார் கணநாதன் செம்மை - படரொளியோ
கந்த வேளாகும் கருதுங்கால் சற்றேனும் 
வந்ததோ பேத வழக்கு (ஞானசாரம்)

 ஜோதி வழிபாட்டின் பெருமையை விளக்கும் கார்த்திகை மாதத்தில், மாதம் 30 நாட்களும் தீபதானம் செய்வது சிறப்பு

ஜோதி - சிவபெருமான். ஜோதியில் கையை வைத்தால்,  சுடுகிற அந்த சூடு, பராசக்தி. 

ஜோதி சிவந்த நிறத்தில் காட்சி  அளிக்கிறது. அந்தச் சிவந்த நிறம் - விநாயகப் பெருமான். ஜோதியில் இருந்து வெளிப்பட்டுப் பரவும் ஒளி - முருகப் பெருமான்.

ஒரு ஜோதியிலேயே எவ்வளவு தெய்வ வடிவங்கள்!

தீப மங்கள ஜோதீ நமோ நம  (அருணகிரிநாதர்); 

அகலாகு செம்பொற் சோதீ (தேவாரம்)....

பரணி தீபம் கார்த்திகை தீபத்திற்குப் பூர்வாங்கமானது . பரணி தீபத்தைக் கொண்டே, மறு நாளான கார்த்திகை தீபத்தன்று, திருவண் ணாமலையில் தீபம்  ஏற்றப்படுவதாக ஐதீகம் உண்டு. 

பரணி நட்சத்திரத்திற்குத் தலைவன் யமதர்ம ராஜா. அந்த யமதர்மராஜாவைப் பிரார்த்தித்து ஏற்றப்படுவதே பரணிதீபம்.

பரணிதீபம் ஏற்றுவதிலும் முறைகள் உண்டு. நம் கையால் பஞ்சைத் திரித்துத் திரியாக ஆக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட 360 திரிகளை, ஒரு  மடக்கில் போட்டு (மண்ணால் செய்யப்பட்ட பெரிய அகல் விளக்கில்) எண்ணெய் விட்டு ஏற்ற வேண்டும். 

நமது வாழ்நாள் முடிந்ததும், நமது ஆன்மா இரண்டு வகையான வழிகளில் பிரயாணம் செய்து, மேலுலகை அடைகிறது. 

ஒருவழி உத்தராயண வழி, இரண்டாவது வழி தட்சிணாயண வழி. 

நற்செயல்கள், தானம், தவம், வழிபாடு முதலானவற்றைச் செய்தவர்கள், ஒளிமிகுந்த உத்தராயண வழியில் பயணம் செய்து, பிரம்மலோகத்தை அடைவார்கள். 

அவ்வாறு செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள், ஆகியோரின் உயிர், தட்சிணாயணம் என்னும் இருள் மயமான வழியில் பயணம் செய்து, இருள்  மயமான உலகை அடையும். அப்படிப்பட்ட ஜீவர்கள் பயணம் செய்யும் அந்த இருள் வழியிலும் ஒளி காட்ட வேண்டுமென யமனைப் பிரார்த்தித்து ஏற்றப்படுவதே - பரணி தீபம்.

நமக்கு ஓர் ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதைக் குறிக்கும் முகமாகவே 360 திரிகளை ஒன்றாகச் சேர்த்துப் போட்டு பரணி தீபம் ஏற்றுகி றோம்.
அதாவது இருள்மயமான வழியில், இறந்து போய் பயணப்படுபவர்களுக்கு ஒளிமயமான வழியைக் காட்டு என தினந்தோறும் (தேவலோக கணக்குப் படி) பிரார்த்திப்பதாகக் கருத்து. 

பரணி தீபம் யமனைப் பிரார்த்தித்து ஏற்றப்பட்டாலும், அந்தத் தீபத்தில் பார்வதி-பரமேஸ்வரரை ஆவாகனம் செய்து, அவர்களை வழிபட வேண்டும்.  அதனால் யமதர்மராஜா மகிழ்வார்.

 பரணி தீபத்திற்கு மறுநாளான கார்த்திகை தீபம். ஞான நூல்கள் அனைத்தும் இறைவனை ஜோதி மயமானவராக ஒளி மயமானவராக அறிவிக்கின்றன.

, ‘
.  கோயில்கள், திருமடங்கள், வீடு, நான்கு தெருக்கள் கூடும் இடங்கள் மற்றும் வீதிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.  கார்த்திகை மாத பௌர்ணமி தொடங்கி முன்று நாட்களாவது, தங்கள் வீட்டில் வரிசையாகத் தீபமேற்ற வேண்டும். 
கார்த்திகை தீப வழிபாட்டிற்கென்றே, திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் ‘அக்னி’ தலமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜோதி வடிவமாக நின்ற சிவபெருமானின் அடி - முடி தேடி, விஷ்ணுவும் பிரம்மாவும் சென்றதாகச் சொல்லப்படும் கதை நிகழ்ந்தது திருவண்ணாமலையில்தான்.
அடி-முடி தேடிக் காணமுடியாத இந்த ஜோதியே அருணாசலமாக ஆனது. 

அக்னிமயமான மலை அது. மற்ற மலைகளில் எல்லாம், மழை பெய்தால், அப்படியே மழைநீர் வழிந்து, வடிந்து ஓடும். ஆனால் திருவண்ணாமலை திருத்தலத்தில் உள்ள அருணாச்சலம் என்னும் அந்த மலையில் எவ்வளவுதான் மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்து ஓடாது. அனைத்தையும் ‘அக்னி’ மயமான மலை அதை  உறிஞ்சிக்கொண்டுவிடும். 
கார்த்திகை தீபத் திருநாளன்று மாலையில் ஜோதி தரிசனம் செய்து, அருணாசலம் என்னும் அந்த மலையை ‘கிரிவலம்’ செய்தால் -அஞ்ஞானம் நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். முக்தி பெறலாம். விருப்பங்கள் நிறைவேறும்.

. ஒருசமயம் அம்பிகை விளையாட்டாக சிவபெருமானுடைய இரண்டு கண்களையும் தன் கரங்களால் பொத்தினாள். 

சூரிய-சந்திரர்களையே தன் கண்களாகக் கொண்ட சிவபெருமானின் கண்கள் மூடப்பட்டதால், இரவு-பகல் இல்லாமல் போய் விட்டது.அதனால் மிகவும் வருந்திய தேவீ, தன் பாவம் தீரக் காஞ்சியில் தவம் புரிந்தாள். அப்போது சிவபெருமான் தோன்றி, ‘‘தேவீ! உன் பாவம் தீர்ந்தது. நீ போய், திருவண்ணாமலையில் தவம் செய்! எம்மேனியில் பாதியாக இடம் பெறு வாய்’’ என்றார்.

அதன்படியே அம்பிகை திருவண்ணாமலை வந்து தவம் செய்து, இறைவனின் திருமேனியில் பாதி பெற்றாள். அர்த்தநாரீசுவரர் என்ற திருநாமமும் சிவ பெருமானுக்குக் கிடைத்தது. 

அம்பிகை, தன் தவம் நிறைவுபெற்று, தன் எண்ணமும் ஈடேறப்பெற்றதால் கார்த்திகை மாதத்தில், திருவண்ணாமலை மேல் உள்ள தீபத்தைத் தரிசித்து, கிரிவலமும் வந்தாள். அதனால் உத்தமமான கார்த்திகை கார்த்திகை தீபத்திருநாளன்று தீபதரிசனம் செய்து, கிரிவலம் செய்பவர்கள் விரும்பியதைப் பெறுவார்கள்.

கார்த்திகை மாதப் பௌர்ணமி நன்னாளில்தான் கோமுகன் என்ற அரக்கனைக் கொன்று வேதத்தை மீட்டுவர, பகவான் பரவாசுதேவன் மச்சாவதாரம்  எடுத்தார். கார்த்திகைப் பௌர்ணமிக்கு மேலும் மகிமை சேர்க்கும் நிகழ்வு இது.

7 comments:

  1. கார்த்திகை மாதம் முழுவதும் கோவில்களில் ’கார்த்திகை சுற்று’ என்று கோவிலை சுற்றி வருகிறார்கள்.

    கார்த்திகை பெளர்ணமி மகிமை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கார்த்திகையில் ஜோதியைப் பற்றி தங்களது பதிவு மூலமாக பல புதிய செய்திகளை அறியமுடிந்தது. புகைப்படங்கள் அருமையாக உள்ளன.

    ReplyDelete
  3. அக்னி மயமான மலை என்பது மிகவும் வியப்பான செய்தி.........
    பயனுள்ள செய்திகள் ...பகிற்விற்கு நன்றி..

    ReplyDelete
  4. கார்த்திகை பற்றிய விரிவான பதிவுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. தீப மங்கள ஜோதி நமோ நம!
    பரணி தீப முக்கியத்துவம் அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
  6. முதலில் அந்த பொரிஉருண்டையை அனுப்புங்கள்.

    ReplyDelete
  7. கார்த்திகை தீபத்தன்று பொரி உருண்டை நைவேத்தியமா.?அதெப்படி ஒவ்வொரு நாள் நட்சத்திரத்துக்கும் கடவுளுக்கும் இன்ன பிரசாதம்தான் என்று தீர்மானிக்கிறார்கள். ?

    ReplyDelete