Monday, April 2, 2012

பாங்காய் அருளும் பங்குனி உத்திரம்


Divyadampathi
பங்குனி உத்திர சேர்த்தி சேவை!

பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இலங்கேஸ்வரனை வென்ற ஸ்ரீராமருக்கும் சீதாதேவிக்கும், பங்குனி உத்திரத்தன்றுதான் திருமணம் நடந்தது. அதுமட்டுமல்ல, ஸ்ரீராமரின் சகோதரர்களுக்குத் திருமணம் நடந்தது இந்நன்னாளில்தான்.

ஊண் உறக்கமின்றி கண் இமையாமல் நம்மைக் காக்கும்
 ‘இமையவர்கள்’ ஆன ஸ்ரீ தாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.
உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு, ‘பல்குணன்’ என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.
வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், 
அர்ஜுனன் தோன்றியதும் பங்குனி உத்திர நாளில்தான்.

ஆலகால விஷத்தை உண்ட பரமனுக்கும் பார்வதிக்கும் 
பங்குனி உத்திரத்தன்றுதான் திருமணம் நடந்தது.

பார்வதிதேவி மீனாட்சி என்ற பெயரில் பூமியில் பிறந்து, 
தன் பக்தியால் இறைவனை மணமகனாக அடைந்த 
இனிய நாளும் பங்குனி உத்திர நன்னாள்தான்.

அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள்தேவலோகத்தில் முருகனுக்கும், தெய்வானைக்கும் நடந்த திருமணம் இதே நாளில் நடந்ததாகக் கருதப்பட்டு, முருகன் கோயில்களில் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது.

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பலகோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.
[vanmiyur+tyagar.jpg]
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், வரதர் கோயில்கள்; செஞ்சி, தேவதானம் பேட்டை, திருவண்ணாமலை, ஸ்ரீகள்ளழகர் கோயில்கள்; ஸ்ரீ வில்லிப்புத்தூர், மதுரை ஸ்ரீகூட லழகர் கோயில்; திருமோகூர் சிட்னி முருகன் ஆகிய ஸ்தலங்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

வெப்பம் நீங்கிய குளிர்ச்சியும், வெளிச்சமும் நிறைந்த பௌர்ணமி
இரவில் திருவிழா நடத்திய காரணத்தாலேயே -
இறை வழிபாட்டுக்குரிய நாளாக பௌர்ணமி தனிச் சிறப்பு பெற்றது.

மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர் பங்குனி உத்திரமே, 
கருவூர் உள்ளி விழாவே’ என நாடறிந்த பெருந்திரு-விழாக்களைப் பற்றிய சான்றுகள் நமக்குக்கிடைக்கின்றன்..

பங்குனி உத்திரத்தன்று காவிரியின் தென்கரை, வடகரை 
இரு பகுதிகளிலும், அதன் வடக்கே அமைந்த 
கொள்ளிட ஆற்றங்கரைகளிலும், பற்பல ஊர்களின் மக்கள், 
இரவு நேரங்களில் ஆற்றின் மணல்வெளிகளில் இறை 
உருவங்களை அமைத்து, அலங்கரித்து - திருவரங்கப் பெருமானையும், வயலூர் முருகப்பெருமானையும் வழிபாடு செய்வார்கள். 
[veng3.JPG]
வழிபாட்டுப் படையலுக்காக, மூன்று கற்களை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கலிடுவார்கள். 

மக்களின் குலவை ஒலியும், இசை, நடனம் ஆகிய கொண்டாட்டங்களின் ஒசையும் நிறைந்து பௌர்ணமித் திருவிழா, தேசியத் திருவிழாவாகவே நடைபெறும்.
[m11.jpg]
 பங்குனி உத்திரத்தன்று காவிரியின் வடகரையில் உள்ள திருவரங்கத்தில், அரங்கநாதப் பெருமாளும் ஸ்ரீரங்கநாச்சியாரும் இணைந்து அமர்ந்து திருக்காட்சி தருவர். பங்குனி உத்திரத்தன்று இரவு முழுவதும் இணைந்து காட்சி தரும் திவ்யதம்பதியரை ‘சேர்த்திப் பெருமாள்’ என்று போற்றி, அடியவர் வழிபாடு செய்வர்.

அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி!
கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, "ஏன் இவ்வளவு நாழி?" என்று தான் கேட்பாள்.
அதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது!

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். 

வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.
வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். 

சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம்.

அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற 
திருநாமத்தாலும்  அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

உடையவர் ஸ்ரீராமானுஜர், பெருமாளும், தாயாரும் சேர்த்தியாகச் சேவை சாதித்த காலத்தில்தான் ‘கதியத்ரையம்’ என்ற நூலை அருளிச் செய்தார்
திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி உரையையும், திருப்பாவைக்கு ஈராயிரப்படி உரைகளையும் சரணாகதி கத்யத்துக்கு விரிவுரையும் எழுதிய நஞ்சீயர் என்ற திருமாலடியார் பங்குனி உத்திரத் திருநாளில்தான் தோன்றினார்.

கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம்

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.

அலைமகள் என்ற திருநாமத்தோடு கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள்.

அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.
காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பர ரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராள மானோர் திருமணம் செய்து கொள்வார்கள்- மதுரையைப்போலவே..

பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகாவிஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும், சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். 

காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு
ஏற்ற வாழ்க்கைத்துணையை அடையலாம்.
திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால்
பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே
வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது;

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது;

இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது;

திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது ;
பங்குனி உத்திர நாளில் தான்..

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டியில் 
பங்குனி உத்திரத்தன்று, நீராடி, ஆறுமுகநயினாரை வழிபட்டால் 
நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

நெஞ்சமே! தஞ்சம் ஏதுநமக்கினியே என்று கந்தர் அலங்காரம் பழநியப்பனைக் குறிப்பிடுகிறது.அதிகாலை முதல் இரவு வரை நமக்காக நடையே அடைக்காமல், கருணையோடு கால்கடுக்க நின்றருள் புரிகிறான்
பழநி முருகன். 

ஞானப்பழமாய் நிற்கும் பங்குனி உத்திரத்தன்று இங்கு நடக்கும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.


வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )
பால் கொண்டு நீராட்டிப்  பழம் தந்து பாராட்டி  பூமாலை போட்டேனடி
பூமாலை போட்டேனடி  திருப்புகழ் மாலை கேட்டேனடி 
(வேல் வந்து ... )
பங்குனியில் உத்திரத்தில் பழநி மலை உச்சியினில் 
கந்தன் என்னைக் கண்டானடி  எந்தன் சிந்தையில் நின்றானடி 
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி அந்த காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல் வந்து ... ).

வேலோடும், மயிலோடும், பேரழகோடும் - 
முருகன் காட்சிஅருளிதேரோடு தோன்றும் நாள்..

மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது வெள்ளி மலை முருகன் கோயில். இங்குள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

அதன் பின் இங்கு கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் பாறையில் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக் கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு வரும் என்பது நம்பிக்கை. 

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்

தென்மாவட்ட கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக உள்ளன. பங்குனி உத்திரத்தன்று இங்கு கூட்டம் அலைமோதும்.

இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். 

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். 

அதுபோல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

பங்குனி உத்திரம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேரோட்டம்.சிறப்பாக நிடைபெறும்..

அகத்திய முனிவரும், விஸ்வாமித்திரரும் வழிபட்ட சிறப்புடையசெங்கல்பட்டு அருகில் உள்ள தாழக்கோயில்.தாயுள்ளம் கொண்டபகத்வத்சலர் கோயில் உள்ளது

அம்பிகை திரிபுரசுந்தரிக்கு பங்குனி உத்திரம், நவராத்திரி ஒன்பதாம் நாள், ஆடிப்பூரம் நாட்களில் மட்டும் அம்பிகைக்கு முழுமையான அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும்

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். 

சபரிமலை ஐயப்பன் அவதார தினம் இது. 

காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார். 


பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! 
அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற பொருளில் பாடல் பாடினார். சிவனருளால் அவள் உயிர் பெற்றாள்.
பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், 
ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய் 
என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.

திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினி அம்பாளுக்கு குளிர்ந்த சந்திரன் நெற்றிக்கண்ணாக இருக்கிறது

அகத்தியர் இந்த அம்பிகையை ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மானேஸ்வரி, லலிதாம்பிகை என்றெல்லாம் புகழ்ந்துரைத்துள்ளார்.

சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வந்தால் இந்த அம்பாள் மனோபலமும் தருபவள் 
என் பது குறிப்பிடத்தக்கது.

அம்பாளைபூஜை செய்துவழிபட்டால், மாணவர்கள் பேச்சுத்திறமையிலும் கல்வியிலும் சிறந்து விளங்குவர்.

இந்தத் திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும்;
திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர்.
பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். 
மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். 

ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. 

காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். 

ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். 

அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். 

அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் 
பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவும் தான் நமக்கு வருகிறது.
.
திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும்
சேர்த்திச் சேவை அருளும் நாள்
.
வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள் ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்

நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் 
தேரில் பவனி வரும் நாள்
அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் செங்கற்களை பொன்கற்களாக மாற்றிக் கொடுத்த நாள்.

சென்னை-திருமயிலை அறுபத்து மூவர் (பங்குனி உத்திரத்தின் முன் நாள்
தந்தைக்கு பிரணவ உபதேசம் நல்கி அருளிய நாள்; சுவாமி மலையில் பெரும் விழா.
குரு வீடான மீனத்தில் சூரியனும், புதனின் உச்சவீடான கன்னியில் சந்திரனும் ஏழாம் பார்வையாகப் பார்த்துக் கொள்ளும் நாளே பங்குனி உத்திரம்
12-ஆவது மாதமான பங்குனியும், 12-ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனிதநாள் பங்குனி உத்திரம்.
எண்ணிக்கையற்ற பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன்- அதாவது அதிபதி சூரியன்.
சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். 

அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.

இப்படி எண்ணற்ற சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு பாங்காய் அருளும் பங்குனி உத்திரம் திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி நலம் பல பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
திருவாலியில் புது திருமாங்கல்யத்துடன் அமிர்தவல்லித் தாயார் 
சேவை சாதிக்கும் அழகு.

திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தம்பதிகள் 

21 comments:

  1. படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. ப்ரைட்டோ பிரைட். பளிச்சென்று கண்ணைப்பறிப்பதாக உள்ளன. ஒவ்வொன்றாக இனி தான் பொறுமையாக ரஸித்துப்பார்க்கணும், படிக்கணும்.

    ReplyDelete
  2. பங்குனி உத்திரத்தை உங்களைப்போல அழகழகான படங்களுடன், அசத்தலான விளங்கங்களுடனும் யாரால் பாங்காய் அருளமுடியும்?

    ”பாங்காய் அருளும் பங்குனி உத்திரம்”
    என்ற தலைப்பே அதற்காகத் தான் கொடுக்கப்பட்டிருக்குமோ? ;)))))

    ReplyDelete
  3. சேர்த்தித் திருநாள் என்ற பெயரே எவ்வளவு சிறப்பாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளது! ;))))))

    டூ திருநாளுக்கு நேர் எதிர்பதமோ இந்த சேத்தித் திருநாள்?

    டூ [காய்] விட்ட குழந்தைக்ள், மறுபடி சேத்தி [பழம்] என்று இணைந்து விடுவார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று. ஏனோ இந்த சேத்தி/சேர்த்தி திருநாள் என்ற சொல்லே எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.

    நான் யாரிடமும் டூ விடவே விரும்ப மாட்டேன். சேத்தித் திருநாள் தாயாரைப் பார்த்ததும் பரவஸம் ஏற்படுகிறது. ;)))))

    ReplyDelete
  4. //வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிஸனம் கிடைக்காது//

    ஆஹா, எனக்கு இப்போது இந்த நள்ளிரவு நேரத்தில் கிடைத்ததில் மட்டில்லா மகிழ்ச்சியே!

    //அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.//

    எவ்வளவோ நினைத்து நினைத்து மனதில் மறுகிக்கொண்டு தான் நானும் இருக்கிறேன்.

    அண்ணலையும் அவளையும் சேர்ந்து அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை இப்போது தரிஸித்தும் விட்டேன்.

    பார்ப்போம் .... நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்று. நட்பு, சொந்தம், உறவு. நெருக்கம் என்று நினைத்தவர்களெல்லாம் ஏனோ நல்லது சொன்னாலும் கேட்காமல் விலகி விலகிச் செல்கிறார்களே!
    இனி நாளை முதல் அவர்களும் தவறை உணர்ந்து சேர்ந்து கொள்கிறார்களா எனப் பார்த்தால் தெரிந்து விடும்.

    நம்பிக்கை என்றும் வீண் போகாது என்று நம்பியிருக்கிறேன்.

    நாளைப்பொழுது நல்லபடியாக விடிந்தால் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  5. கடைசி இரண்டு படங்களும், மேலே ஐந்து நாகங்கள் கீழே ஐந்து யானைகளுடன் தங்கக்கலரில் ஜொலிக்கும் படம், கோதை பிறந்த ஊராம்..... என்ற வரிகளுக்கு மேல் உள்ள படம், இளைய பெருமாளாகிய இராமனுஜமுனியைப் பற்றி எழுதியுள்ள பத்திக்கு மேல் உள்ள படம், முதன் முதலாகக் காட்டியுள்ள படம் ஆக இவை ஆறு படங்களுக்குமே இன்று முதல் ரேங்க் தரப்படுகிறது.;)))))

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  7. படங்களும் திரு அலங்காரங்களும் நெஞ்சை நிறைத்தது
    சகோதரி.
    பங்குனி உத்திர விளக்கம் அருமை.

    ReplyDelete
  8. அலை அலையாய் செய்திகளை அள்ளித் தந்து படவிருந்துகளையும் சேர்த்து அசத்திவிட்டீர்! இந்த வருடம் பௌர்ணமி ஒருநாள் தள்ளி வருகிறது!

    ReplyDelete
  9. Aha Aha Aha
    I dont find words to express Rajeswari.
    Such a nice post and pictures. Thanks Thanks for your efferets.
    viji

    ReplyDelete
  10. திரு உருவப்படங்களுடன்
    பங்குனி உத்திரத்தின் சிறப்புகள் அனைத்தையும் மிக மிக அருமையாக
    திகட்டத் திகட்ட அள்ளிக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு....

    புகைப்படங்கள் கண்ணைக் கவரும் அழகு!

    ReplyDelete
  12. கடவுளர்களின் திருமண மாதம் போலிருக்கிறது. உற்சவர்களின் படங்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  13. அறிந்த விஷயங்கள் பலவற்றை அருமையாகக் கோர்த்து தரும் பாணிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. அற்புதமான செய்திகள். அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. படங்கள் மிக அழகு..வண்ணங்கள் கண்ணைப் பறிக்கும் அற்புதம்..

    ReplyDelete
  16. great post with lot of informations.awesome.sheshavaahanam - kanchi?

    ReplyDelete
  17. great post with lot of informations.awesome.sheshavaahanam - kanchi?

    ReplyDelete
  18. அனைத்து படங்களும் அற்புதம்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete