Monday, April 18, 2011

எழிலாய் பழமை பேசி...


முழு நிலவு நிறைந்த சித்திரை மாத பௌர்ணமி நாளில் திருச்செங்கோட்டிற்கு அருகில் இருக்கும் ,மரப்பரை அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.எங்கள் குலதெய்வமாக வணங்கப்படும் ஆலயம் திருவிழாக் கோலம் கொண்டு விளங்கியது.கோவிலின் எல்லையில் கையில் விரவாளை தலைக்கு மேல் ஏந்தியிருக்கும் சிற்பம் பலமுறை சென்றிருந்தும் கண்களில் தட்டுப்படாத அற்புத காட்சி படமெடுத்துக் கொண்டோம்.
விவரம் பூசாரியிடம் கேட்டோம். எல்லை சாமியாம். கோவில் எல்லையில் தீய சக்திகள் அண்டவிடாமல் காக்கும் காவல் தெய்வம் என்றும் கர்ப்பக்கிரகத்திற்கு அருகில் தனியாக கோவில் கொண்டுருக்கும் அம்மன் பூங்காவனத்தம்மன் - இவர்கள் இருவரையும் தாண்டி கோவிலுக்குள் தீய சக்திகள் நுழைந்துவிட முடியாதாம்.

எத்தனையோ முறை கோவிலுக்குச் சென்ற போதெல்லாம் கவனிக்காத பல விஷயங்கள் வலைப்பூ ஆரம்பித்து நான்குமாதகளிலநூற்று ஐம்பதாவது பதிவை நெருங்கும் வேளையில் இன்று கோவிலுக்குள் நுழையும் போது பளிச்சிட்டன.
கோவிலைப் பற்றிய விவரங்கள் தன் தந்தையாருக்குதான் நன்றாகத் தெரியும்.வயதான அவரிடம் கேட்டு படங்களும்,விவரங்க்ளும் அனுப்பி வைப்பதாகவும் பூசாரி தெரிவித்தார்.
இத்தனை வருடங்கள் தொடர்ச்சியக கோவிலுக்கு வந்தும் குலதெய்வத்தைப் ப்ற்றி அதிக விஷயங்கள் தெரிந்து கொள்ளாமைக்கு வருந்தினோம்.
பிறந்த ஊருக்குச் சென்று தாயாரையும்,தம்பி குடும்பத்தையும் சந்தித்தோம். நான் படித்த உயர்நிலைப் பள்ளிக்கருகில் என் தாத்தாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டு,பூஜைகள் செய்யப்பட்டு, சிறுவயதில் அடிக்கடி சென்று வந்த  அருமையான அபூர்வமான சங்கு சக்ரதரியாக விளங்கும் வெங்கடேசப் பெருமாளை வணங்கினோம்.
 கோவிலுக்குப் பின்புறம் தெரியும் மயில்தோகை போன்ற வாதநாராயண மரத்தின் இனிப்பான கொழுந்து இலைகளையும்,அப்போது அங்கே அடர்ந்து வளர்ந்திருந்த துளசிவனத்தின் காரமான துளசி இலைகளையும் சேர்த்து வாயிலிட்டுச் சுவைத்தால் வாய் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்துப் போட்டமாதிரி சிவக்கும். யார் வாய் அதிகம் சிவந்திருக்கிறது என்று போட்டி போட்டு அதிக இலைகளை மென்று பார்த்துக் கொள்வோம். சுவைக்கு அருகில் இருந்த புளியமரக் கொழுந்து இலைகளையும் சேர்த்துக் கொள்வோம். இலை.புளியம் பிஞ்சு, துவர்க்காய் என்று பழமும் அல்லாத காயும் அல்லாத இடைப்பட்ட பதத்தில் இருக்கும் அவற்றை நாக்கு பட்டை உரிந்து எரிந்தாலும் சாப்பிட்ட இனிய மலரும் நினைவுகளை அசைபோட்டேன்.
அருகில் இருந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு களைகட்டும். தோழிகளுடன் சென்று முன்வரிசையில் இடம் பிடித்து அமர்ந்திருப்பேன். அம்மா வந்து காளைகள் சீறிவரும் அந்த வேளையில் ஆபத்து வந்துவிடும் வீட்டுக்கு வந்துவிடு என்று கைப்பிடியாக அழைத்து வந்துவிடுவார். ஏமாற்றத்துடன் ஏம்மா கூப்பிட்டு வந்தீர்கள் என்று கேட்க இன்று கூட தைரியம் இல்லைதான். அன்று எப்படி இருந்திருக்கும்?...  

அனுமனும், கருடனும் கொள்ளை அழகாய் தரிசனம் தருகிறார்கள். இந்த இடத்தில் இருக்கும் பாறைக் கற்களும்,திருப்பதி மலையில் சிலாதோரணம் என்னும் இடத்தில் இருக்கும் கற்களும் ஒரேவகையாகத் தோன்றுவதாக தம்பி தெரிவித்தார்.
வாஸ்துப்படியும் ஊரின் தென்மேற்குத்திசை திருப்பதி போலவே உயர்ந்து குன்றுகளாக கரட்டுப் பாறைகளால் நிறைந்து வாஸ்து சிறந்திருப்பதை இப்போது எண்ணிப்பார்க்க முடிகிறது.
உழைக்க் அஞ்சாத உழைப்பாளிகள் நிறைந்த ஊர். ஊரின் பெயர் காரணமும் ஆராய்ச்சிக்குரியது.வேலநத்தம். வேலன் என்றால் முருகன். ஔவைப்பாட்டியிடம் சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழமா? என்று தமிழோடு விளையாடிய முருகன் ஆடு மேய்ப்பவனாக இங்கே இருந்திருக்கலாம். ஆட்டையாம்பட்டி என்பது ஆட்டு இடையன் பட்டி என்று தமிழ்க் கடவுள் பட்டி போட்டு ஆடுகள் மேய்த்திருக்கலாம்.
திருவண்ணாமலை சாமியாரின் சமாதியும் கிணறும் அருகில் இருக்கிறது.
சென்றாயப் பெருமள் கோவில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று தரிசித்தோம். சென்று உடனே உதவி வழங்குவதால் சென்றாயப் பெருமாளாம்.
பெரிய ஆளுயரப் புற்று. சுயம்பு.திருவேங்கடமுடையானாக அற்புதமாக அலங்கரித்திருந்தார்கள்.சிறுவயதில் நிறைய முறை தரிசனம் செதிருக்கிறேன்.
எங்கள் ஊரில் ஞானந்தகிரி ஆசிரமம் பெயர் பெற்றது.திருக்கோவிலூர், தென்னாங்கூர், ஏற்காடு போன்ற இடங்களிலும் தபோவனம் அமைந்திருக்கிறது.
இங்கிருக்கும் சுரங்கப்பாதை ஒரு வீட்டில் முடிவடைவதாகச் சொன்னார்கள்.
ஞானந்தகிரி சுவாமிகளுக்குப் பிறகு யாரும் பயன்படுத்துவதில்லை.
இதன் வரலாறும் விசாரித்து சொல்வதாக தம்பி கூறியிருக்கிறார்.
மனைவி உடையான் விருந்துக்கு அஞ்சான்,
வாக்னம் உடையான் வழிக்கு அஞ்சான்
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள்.
என் மகனும் ஜெனி மரத்திற்கு என்தாயாரிடம் உறவினர்கள் பெயர்கள், முன்னோர்கள் பெயர் எல்லாம் கேட்டு குறிப்புகள் தயாரித்து கணிணியில் ஏற்றி வைத்திருக்கிறார்.
இனிய நினைவுகளுடன் கோவை திரும்பினோம் 

13 comments:

 1. அருமையான பதிவு அம்மா.
  பதிவு எழுத ஆரம்பித்த பிறகு நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம். நிறைய விஷயங்கள் நம்மை சுற்றி இருப்பது இப்போது தான் தெரிகின்றன.
  எங்களை நிறைய கோவில்களுக்கு அழைத்து செல்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 2. உங்கள் மலரும் நினைவுகள், குழந்தைப்பருவம், குல தெய்வம் பற்றிய குறிப்புகள் யாவும் அருமை.கோவிலில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்த முன்னோர்கள் வழித்தோன்றல் அல்லவா நீங்கள், அது தான் உங்களுக்கும், உங்கள் படைப்புகளுக்கும் தெய்வாம்சத்தைக் கூட்டுகிறது. சாதாரண ஒரு கல் என்று தோன்றும் மற்றவர்களுக்கு, உங்களின் அருள் பார்வையும், அழகிய வர்ணணைகளும் சேரும் போது அந்தக்கல்ல்லில் உள்ள தெய்வாம்சம் வெளிப்படுகிறது. உங்கள் மூலமாக தெய்வ தரிஸனம் கிடைப்பதில் எனக்கு மிகவும் பரவஸம் ஏற்படுகிறது. அதை எழுத்தில் சொல்லத்தெரியவில்லை. நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இதுபோன்ற பல படைப்புகள் தந்து மகிழ்விக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன். அன்புடன் vgk

  ReplyDelete
 3. என் மகனும் ஜெனி மரத்திற்கு என்தாயாரிடம் உறவினர்கள் பெயர்கள், முன்னோர்கள் பெயர் எல்லாம் கேட்டு குறிப்புகள் தயாரித்து கணிணியில் ஏற்றி வைத்திருக்கிறார்.

  .....Family Tree - Genealogy - விவரங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பதிவு செய்து வைத்து இருப்பது நல்லதுதான். அருமையான பகிர்வுங்க.

  ReplyDelete
 4. அட ஊர்லயிருந்து எப்போ வந்தீங்க.?

  வழக்கம் போல சூப்பரா படங்களோடு..

  கொஞ்ச நாள் அதிக வேலை அதான் வரமுடியல தப்பா நீனைக்காதீங்க..

  ReplyDelete
 5. முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு என்றொரு பாடல் உண்டு. அதை நினைவு படுத்துவது போல இருந்தது உங்கள் பதிவு. காவல் தெய்வம், குல தெய்வம் என்றெல்லாம் சிறிய கோவில்களையும் பராமரிக்க வைக்கும் பழக்க வழக்கங்கள். அவரவர்களின் முன்னோர்கள் பற்றிய விவரங்கள் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 6. புதிய தகவல்களுடன் கூடிய புகைப்பட பகிர்வு.

  ReplyDelete
 7. உங்கள் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யம்.வாசிக்கவும் ஆர்வம் !

  ReplyDelete
 8. சுவாரஸ்யமான பதிவுங்க.எழுத ஆரம்பித்ததால் கவனிக்கிறோமா,இல்லை கவனிக்க ஆரம்பித்ததால் எழுதுகிறோமா என்பது கோழி முதலா, முட்டை முதலா போலத் தான்.

  ReplyDelete
 9. Rajeswai Thanks dear. Thanks a lot.
  Sitting a very very long distance from my place,sitting inside four wall,
  Your writings giving me much more energy.
  I enjoyed everybit of the writing and felt like visited the place personnally.
  Again Thanks.
  viji

  ReplyDelete
 10. காவல் தெய்வத்துடன் கிராமத்துக் கோயில் தர்சனம் மனத்திற்கு நிறைவை தருகிறது.

  ReplyDelete
 11. தகவல்களுக்கு நன்றி. இந்த ஆலயம் திருச்செங்கோட்டில் இருந்து எந்த வழியில் உள்ளது என்று தெரிவித்தால் தரிசனம் செய்துவர உதவியாக இருக்கும்

  ReplyDelete