Monday, November 11, 2013

ஒளி மயமான துறவூர் திருவிழா

கேரள மாநிலத்தின் துறவூரில் உள்ள இரட்டைக் கோவில் எனப்படும் 
ஸ்ரீ மகாசுதர்சனர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் ஓணத்திருவிழா போலவே தீபாவளிப் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். 

ஆண்டு முழுவதும் வேத மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும்  துறவூர் ஆலயத்தில் மிகமிக முக்கியமான திருவிழா தீபாவளித் திருவிழாவாகும்.

நாலம்பலம் எனப்படும் ஆலய வளாகத்தில் வடப்புறம் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியும், தென்புறம் ஸ்ரீ மகாசுதர்சன மூர்த்தியும் அருகருகே எழுந்தருளியுள்ள அரிய தலம் இது.

வைணவ ஆலயங்களில் பொதுவாக சுதர்சனர் சந்நிதியில், முன்புறம் சுதர்சன மூர்த்தியையும், பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மரையும் நாம் தரிசிக்கலாம்.

இந்தத் துறவூர் ஆலயத்தில் இந்த இரு மூர்த்திகளையும்
எதிரே நின்று தரிசிக்க முடியும்.

ஒரே மதிற்சுவருக்குள் இரு தனிக் கோவில்கள். தனித்தனியே தங்க முலாம் பூசிய கொடி மரங்கள், பலிக்கல், நமஸ்கார மண்டபம் உள்ளன. 

தென்புறம் மகாசுதர்சன மூர்த்தி சுமார் இரண்டரை அடி உயரத்தில் மகாவிஷ்ணு அம்சமாக வட்ட வடிவக் கருவறையில் காட்சி தருகிறார்.

நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்தி அருள்புரிகிறார்.

இந்தக்  கோவிலிலிருந்து வடக்கப்பன் எனப்படும் நரசிம்மமூர்த்தி கோவிலுக்குச் செல்ல ஆலயத்திற்குள்ளேயே வழி உள்ளது.

தென்புறத்தில் உள்ள சுதர்சனர் தெக்கேப்பன் என்றும், வடக்கில் உள்ள நரசிம்மர் வடக்கேப்பன் என்றும் அழைக்கப்படுகின்றனர். ..!

நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கின்ற கருவறை சதுர வடிவம் கொண்டதாகும். நின்ற கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளியுள்ள இவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்று போற்றப்படுகிறார். 
thuravoor temple kerala
அங்கமாலியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரியின் கனவில் இறைவன் தோன்றி தான் இருக்கும் இடத்தைக் காட்டியதாகவும்; அதன்படி அஞ்சனக்கல்லில் உருவான மகாவிஷ்ணு விக்ரகத்தை அவர் பூமிக்கடியில் கண்டார் என்றும்; இதுவே நரசிம்ம மூர்த்தி என்றும் கருதப்படுகிறது.

இரு பெருமாள்களுக்கும் சேர்ந்து ஒரே நைவேத்தியம்தான்.

முதல் நைவேத்தியம் நரசிம்மருக்கே.
முதல் பூஜை சுதர்சனருக்கு. சுதர்சனர் சந்நிதியில் பிரசாதம் கிடையாது. 

அந்தப் பிரசாதமும் நரசிம்மர் சந்நிதியிலேயே வழங்கப்படுகிறது.
இவ்வாறு பல மரபுகள் இந்த ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த ஆலயத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூநிலம் என்ற இடத்தில் நரசிம்மமூர்த்தி தண்ணீரில் கரை ஒதுங்கினாராம்.

இதை நினைவூட்டும் வகையில் சித்திரை மாதம் முதல் நாள்
அன்று அங்குள்ள ஒரு மண்டபத்தில் எழுந்தருளுகின்றார். 
ஏழாம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் தோன்றிய ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான  நரசிம்ம உபாசகர் ஆன  ஸ்ரீ பத்மபாதர் -காசித் தலத்தில் வழிபட்ட ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியே துறவூரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பாகும். 
கோவிலின் நுழைவாயிலை அடுத்து கேரளக் கோவில்களில் காணப்படும் ஆனப்பந்தல் எனப் படும் மண்டபம்  கேரளக் கோவில்களில் உள்ளவற்றிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது. 

நரசிம்மரையும் மகாசுதர்சனரையும் ஒருசேரப் பிரதிஷ்டை செய்திருப்பதால், இந்த ஆலயத்தில் கடைப் பிடிக்கப்படும் பூஜைகளும் நியமங்களும் மிகமிகக் கட்டுப்பாட்டோடும் சிரத்தையோடும் செய்யப்படுகின்றன. 

இந்தக் கருவறையில் பூஜை செய்பவர் பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும்; ஆலய வளாகத்திற்கு வெளியே அவர் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளன.

துளு அந்தணர் வகுப்பைச் சேர்ந்த ஐந்து குடும்பத்தினரால்
பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஆலய வளாகத்திற்குள் மகா கணபதி,  அனுமன் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன.

கி.பி. 1,700-ல் சமாதி அடைந்த - காசி மடத்தில் 11-ஆவது ஆச்சார்ய புருஷராகத் திகழ்ந்த - ராஜேந்திர தீர்த்த சுவாமிகளின் பிருந்தாவனமாக இந்த அனுமன் ஆலயம் கருதப்படுகிறது.

தீபாவளி விழாஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது ..
லட்சக்கணக்கான மக்கள்  உற்சாகமாகக் கலந்துகொள்கிறார்கள்..! 

திருவிழா நேரத்தில் பக்தர்களைப் பெரிதும் கவர்வது 
யானைகளின் அணிவகுப்பாகும். 
Thuravoor Mahakshethram Narasimhamoorthy Mahasudarsanamoorthy
கடந்த ஆண்டு 12 முக்கியமான யானைகள் கலந்து கொண்டன.

கேரள ஆலயங்களில் அணிவகுக்கும் யானைகளின் அடையாளம் கண்டு, அவற்றின் சிறப்புகளைப் போற்றுவதும் ரசிப்பதும் கேரள மக்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்காகும். 

இங்கு மக்கள் தங்களை "ஆனப்ரேமிகள்' (யானைகளை நேசிப்பவர்கள்) என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். இந்த யானை அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளின் பெயர்களும் கூட விழா அழைப்பிதழில் குறிப்பிடப் படுகின்றன. ..!
தீபாவளி நாளன்று ஆலயத்தைச் சுற்றிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு ஆலய வளாகம் ஒளி மயமாகத் திகழ்கிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுவதை வலிய விளக்கு என்று அழைக்கின்றனர்.

அன்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில், கௌடசரஸ்வத் பிராமணர்கள் என்ற வகுப்பினரால் நிர்வகிக்கப் பட்டு வருகின்ற பல முக்கியமான ஆலயங்களில் துறவூர் ஆலயமும் ஒன்றாகும்.

 துறவூர் ஆலயத் திற்கு சிருங்கேரி, காஞ்சி, அகோபிலம் போன்ற மடாதிபதிகள் வருகை தந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆலப்புழை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (சஐ 47) சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது துறவூர். இத்தலத்தை மஹாக்ஷேத்திரம் என்று கேரள மக்கள் போற்று கின்றனர். சபரிமலை யாத்திரைக் காலத்தில் பக்தர்கள் தங்கிச் செல்லும் ஊராக திகழ்கிறது. 


http://www.thuravoortemple.org/
http://www.thuravoortemple.org/thuravoor-mahakshethram-temple-festival-photo-gallery-kerala

20 comments:

 1. துறவூர் திருவிழா பெருமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. துறவூர் திருத்தளமும் அதன் பெருமைகளும் தெரிவித்தமைக்கு நன்றி.தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. விழா அழைப்பிதழில் யானைகளின் பெயர்கள். ஆனப்ரேமிகள் என்பது பொருத்தமான பெயர்தான். துறவூர் பற்றிய பல செய்திகளின் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. அறியாத தெரியாத பல அரியத் தகவல்களை அறியத்தந்துள்ளது நன்று.

  >>>>>

  ReplyDelete
 5. வழக்கம் போல அற்புதமான படங்கள் + சிறப்பான அலங்கரிக்கப்பட்ட யானைப்படங்கள்.

  >>>>>

  ReplyDelete
 6. வழக்கம் போல அற்புதமான படங்கள் + சிறப்பான அலங்கரிக்கப்பட்ட யானைப்படங்கள்.

  வரிசையாக ஒரு ஸ்டாண்டில் தீபங்கள் ஏற்றியுள்ள படமும் பார்க்க மிகவும் ஜோராக உள்ளது

  >>>>>

  ReplyDelete
 7. வழக்கம் போல அற்புதமான படங்கள் + சிறப்பான அலங்கரிக்கப்பட்ட யானைப்படங்கள்.

  வரிசையாக ஒரு மிகப்பெரிய ஸ்டாண்டில் தீபங்கள் ஏற்றியுள்ள படமும் பார்க்க மிகவும் ஜோராக உள்ளது

  >>>>>

  ReplyDelete
 8. எங்கிருந்தாலும் வாழ்க !

  >>>>>

  ReplyDelete
 9. துறவூர் ..... !

  எல்லாவற்றையுமே [முக்கியமாக வலைப்பதிவினை] ஒரேயடியாகத் துறந்து விடலாமா என நினைக்கும் எனக்கு, ..... அசரீரிபோல ...... இந்தத் தலைப்பு ...... துறவூர் ...... நல்லதொரு பெயராகவேத் தோன்றுகிறது.

  நாளுக்கு நாள் வெறுப்பல்லவா ஏற்பட்டு வருகிறது!

  -oOo-

  ReplyDelete
 10. Aha......
  I heard of this temple but not visited.
  Its a rare thing that keralities celebrating Deepavali.
  All the pictures are very nice.
  I noted down this temple into my list to be visited.
  Thanks dear.
  viji

  ReplyDelete
 11. ஒரு வேண்டுகோள்
  மேலே உள்ள லக்ஷ்மி தேவின் படத்தை என்னக்கு mail செய்ய முடியுமா?
  முத்தாலும், குண்டன் கற்கள், கொண்டும் அலங்கரிக்க ஆசையாக உள்ளது.
  ஏற்புடைய படம்..
  முடிந்தால் அனுப்பவும்.
  நன்றி.

  ReplyDelete
 12. சுவாரஸ்யமான விவரங்களுடன் அழகிய படங்கள் அணிவகுக்க நல்ல பதிவு. பத்மநாப ஸ்வாமி கோவிலில் பூஜை செய்பவர்களுக்குக் கூட இதே போன்று சில கட்டுப்பாடுகள் உண்டு இல்லையா? ஆறுமாதத்துக்கு ஒருமுறைதான் சுழற்சி மாறும். அதுவரை அவர்கள் கோவிலை விட்டு வெளியேறக் கூடாது-இது போன்று.

  ReplyDelete
 13. அருமை அம்மா.. படங்களும் விளக்கங்களும்.. இன்று புதியதாய் ஒரு தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.. பகுத்தறிவுக் கருத்துகள் பல வந்துவிட்டன.. நீங்க அதை எப்படி பார்க்கறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது படிச்சுட்டு சொல்லுங்க.. http://www.kovaiaavee.com/2013/11/1.html

  ReplyDelete
 14. துறவூர் கோவில் , யானைகளின் அணிவகுப்பு, கோவில் சம்பிரதாயங்கள் பற்றிய செய்திகள் அறிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் கண்ணைக் கவருவதாக அமைந்துள்ளன. நன்றி.

  ReplyDelete
 15. துறவூர் நரசிம்ம பெருமாள், சுதர்சனர் தரிசனம் கண்டேன்! அழகானபடங்களுடன் விளக்கமான பதிவு! நன்றி!

  ReplyDelete
 16. வணக்கம் சகோதரியாரே..
  துறவூர் திருவிழா கண்களுக்கும் செவிகளுக்கும் இனிமை சேர்த்து விட்டது தங்கள் பதிவு. படங்கள் அத்தனையும் அருமை. ஆன்மீகம் கமலும் பதிவு. பகிர்வுக்கு நன்றி அம்மா..

  ReplyDelete
 17. படங்களுடன் விளக்கம் அருமை அம்மா...

  ReplyDelete
 18. ஆஹா விநாயகர் ஸ்பெசல்... ! அனைத்து படங்களும் பரவசம்.

  ReplyDelete
 19. துறவூர் திருவிழா பற்றிய அரிய தகவல்களையும் அழகிய படங்களையும் கொண்ட அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 20. அட இன்னிக்கு கேரள கோவிலா.... நல்லது. படங்களும் தகவல்களும் நன்று.

  ReplyDelete