Tuesday, March 11, 2014

வாத்ஸல்யமாய் அருளும் வாத்ஸல்ய தேவி





திருவல்லவாழ்

தந்தை தாய் மக்களே சுற்றமென்று  உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லும வல்லையாய் மருவு நெஞ்சே

-என்று நெக்குருகிப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடிமேல்
சேமம் கொள் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே 


பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில்  
70 வது திவ்ய தேசம்.திருவல்லவாழ் ...
பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். 


இந்த உருக்கத்துக்குக் காரணமானவர், திருவல்லவாழ் பெருமாளான கோலப்பிரான் ஐயனை, திருவாழ் மார்பன், ஸ்ரீவல்லபன், அலங்காரப் பிரான், அலங்காரத் தேவன் என்றெல்லாமும் அழைத்து பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.

திருமங்கையாழ்வார் தன் மனதை நோக்கிப் பேசுகிறார்: ‘‘பற்று என்ற உணர்வால் மயங்கி கிடக்கும் மனமே, தந்தை, தாய், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று பலவாறாக உலகியல் பந்தங்களில் உழன்று நீ தவிக்கிறாய்.

ஒரு கட்டத்தில் இதெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட தொடர்புகள் என்றும் விரக்தி கொள்கிறாய். 

அதனால், உண்மையான பற்று எது என்று புரியாமல் மயங்குகிறாய். பிரளய காலத்திலும்கூட, பிரபஞ்சமே அழிந்திடும் நிலையிலும்கூட, புகலிடமாய்த் திகழ்பவன் எம்பெருமான். 

அதுமட்டுமா, படைப்புக் காலத்தில் முதலில் தோன்றும் இடமாகவும் திகழ்பவன் அவன். 

இத்தனை பராக்கிரமங்களுக்கும் சொந்தக்காரனான அவன்தான் எப்படிக் காட்சியளிக்கிறான்? எளியனாய், ஓர் இடையனாய் அல்லவா தோன்றுகிறான்!

அப்படிப்பட்ட பரந்தாமன், அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறான், திருவல்லவாழ் என்ற திருத்தலத்தில். 

உலகப் பற்றறுக்க விழையும்  மனமே, அந்த திவ்ய தேசத்தின் பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே இரு, போதும். உண்மையான பற்றினையும், அதன் அர்த்தத்தையும் நீ புரிந் துகொள்வாய்.’’ 

அப்படி, தலத்துப் பெயரைச் சொன்னாலேயே தவறாது நற்பேறு அளித்திடும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை  தரிசித்து நலம் பெறலாம் ..!

ஆலயத்துக்கு முன்னால் செம்பால் ஆன உயர்ந்த துவஜஸ்தம்பம் 
நேர் கோணத்தில் கோயிலைப் பார்த்து இராமல், 
சற்று விலகி அமைந்திருக்கிறது. 


கோயிலுக்குள்ளே ஒரு கொடிமரம் நேராக கர்ப்பகிரஹ 
கோணத்தில் நிற்கிறது!’ 

பிரதான நுழைவாயிலின் உச்சியில் திருவாழ்மார்பன் நின்ற 
கோலத்தில் சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

கோயிலுக்குள் கருவறையிலும் உலோகத் திருமேனியில் பெருமாள் இதே கோலம்தான் காட்டுகிறார்,

உள்ளே  நிமிர்த்திவைத்த நிலையில் சங்கு ஒன்று சுதை சிற்பமாகக் காணப்படுகிறது. அந்த சங்கைச் சுற்றி, ‘ஓம்சங்கபதே நமஹ; 
ஓம் விஷ்ணுபதே நமஹ’ என்று மலையாளத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

முன் மண்டபத்தில் திருமால் பாற்கடல் சயனனாக அருள் காட்சிதருகிறார்

இடது பக்கம்  நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பெரிய கலா மண்டபம் ஆன்மிகக் கலை நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட விசேஷ நாட்களில்  கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள்.
[​IMG]
கருவறை மண்டபத்துக்கு எதிரில் கோபுர வடிவிலான மண்டபத்தில் மிகப் பெரிய கருடாழ்வார் ஓவியமாகத் திகழ்கிறார். 
பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால், இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். 

கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே, கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம். 

கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை 
கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள்.

பக்தர்களின் சிதறு தேங்காய் வழிபாட்டுக்காக கருடாழ்வார் மண்டபத்துக்கு முன்னால் சாய்வாக ஒரு பாறை நிறுவப்பட்டுள்ளது -

பிரதான மண்டபத்துக்கு முன்னால் சம்பிரதாயமான துவஜஸ்தம்பம். அருகில் காண்டாமணி கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. 

துவஜஸ்தம்பத்தைக் கடந்தால் மிகப் பெரிய பலிபீடம். அருகே துலாபாரம் காணிக்கைப் பகுதி. வெளிப்பிராகாரச் சுற்றில் விக்னேஷ்வர் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். அவரைப் போலவே ஐயப்பனும் தனியே விளங்குகிறார். 

மேற்கூரையில்லாத சந்நதியில் ‘குறையப்ப சாமி’ அருள்கிறார்.  பக்தர்களின் குறைகளை எல்லாம் களையச் சொல்லி திருவாழ்மார்பனுக்கு சிபாரிசு செய்பவராம்!

வட்டவடிவ கருவறைச் சுற்றில், இடது மண்டபத்தில் துலாபார காணிக்கைகளான வாழைக்காய்கள், வாழைப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 

கருவறைச் சுவரில் விஷ்ணுவின் பல கோலங்களும், கிருஷ்ணனின் லீலைகளும் ஓவியங்களாக மிளிர்கின்றன. 
பூஜையின் ஓர் அங்கமாக மஹாவிஷ்ணுவின் புகழை 
மேளதாள ஒத்துழைப்புடன்  பாடுகிறார்கள். 

 மேற்கு பார்த்து சுதர்ஸன மூர்த்தி தனியே தரிசனம் தருகிறார். கருவறை சுற்று மண்டபத்தைப் பல தூண்கள் தாங்கிப் பிடித்துள்ளன.

அங்கே, விஷ்ணு, சிவன், பார்வதி, நிருத்த கணபதி, சுப்பிரமணியர், விஷ்வக்சேனர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். 

 கோயிலுக்குள் ஆண்கள் மேலுடலில் பாதிப் பகுதியைச் சட்டையால் மறைத்துக் கொண்டு வருகிறார்கள். முழுச் சட்டையையும் கழற்றுவதிலிருந்து இங்கே சலுகை போலிருக்கிறது! 

வியாசரும், துர்வாசரும் வந்து தங்கி பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள். இவர்களில் துர்வாசர் பிரதிஷ்டை செய்த மூலவர்தான் திருவாழ்மார்பன் 

இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவள் சங்கரமங்கலத்து அம்மை. குழந்தைப் பேறு வேண்டி ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்தாள் அவள். ஏகாதசி அன்று நீர்கூடப் பருகாமல், கடும் விரதம் அனுசரித்த அவள், அடுத்த நாள், நீராடிவிட்டு ‘பாரணை’ செய்வாள். அதாவது, உணவு எடுத் துக்கொள்வள். இப்படி நீடித்து இந்த விரதத்தை மேற்கொண்டாளானால், அவளுடைய வேண்டுகோள், இறையருளால் நிறைவேறும் என்பது அவளுடைய திடமான நம்பிக்கை.
[Vallaban.jpg]
 விரதத்தை சரியாக முடிக்க இயலாதவகையில், இடையூறு செய்தான் தோலகாசுரன் என்ற  அரக்கன் ஒரு துவாதசி நாளில், சங்கரமங்கலத்து அம்மை பாரணை மேற்கொள்ள முடியாதபடியும், அவளுக்கு ஊரார்  எந்த உதவியையும் செய்துவிடாத படியும் தடுத்தான்.

திடுக்கிட்ட அம்மை, பரம்பொருளின் அருள் வேண்டிட - 
பிரம்மச்சாரி கோலத்தில் பூமியில் இறங்கினார் பகவான். 
தோலகாசுரனுடன் கடும் போர் புரிந்தார். இறுதியில் தன் சக்கரத்தை அவன் மீது ஏவிவிட, அவன் உருக்கு லைந்து நிர்மூலமானான். 

பிறகு சக்கரமும் அந்த தோஷம் நீங்க, பூமியைத் துளைத்து ஒரு நீர்நிலையை உருவாக்கி, அதில் நீராடி, இத்தலத்துப் பெருமானின் வலது கரத்தில் போய் அமர்ந்தது. 

இப்படி, இந்தத் தலத்தில் சக்கரத்துக்குப் புராண முக்கியத் துவம் இருப்பதாலோ என்னவோ, சங்குக்கும் மேன்மையளிக்க வேண்டி, அதற்குக் கோயிலின் முற்பகுதியிலேயே பகவான் தனி இடம் வழங்கி சிறப்பித்திருக்கிறார் போலிருக்கிறது!

அசுரனை வதைத்துத் தன் விரதத்தைக் காத்த பிரம்மச்சாரியைக் கண்ணுற்றாள் அம்மை. தான் அணிந்திருந்த மான்தோல் ஆடையால் தனது இடது மார்பை அவன் மறைக்க முயற்சிப்பதையும் கவனித்தாள். 

உடனே அது பரந்தாமன்தான் என்பதும், அவன் மறைக்க முயற்சிப்பது தன் இடபாகத்தில் எழுந்தருளியிருக்கும் மஹாலக்ஷ்மி யைத்தான் என்பதையும் புரிந்துகொண்டாள். 

தோலகாசுரனை ஒரு பிரம்மச்சாரியால்தான் வீழ்த்த முடியும் என்ற நிபந்தனை காரணமாகவே எம்பெருமான் பிரம்மச்சாரியாக வந்தான் என்பதையும் தெரிந்துகொண்டாள்.

உடனே அவர் பாதம் பணிந்து தன்  நன்றியைத் தெரிவித்தாள். 

அதோடு, ‘‘நீ உன் மார்பை மறைத்தாலும், அதனுள் உறையும் மஹாலக்ஷ்மியை நான் அறிவேன். மறைக்க முயற்சிக்கும்  அந்த நொடியில் நான் தாயாரை தரிசித்துவிட்டதால், இதே திரு வாழ் மார்பனாக, இங்கே உன்னை தரிசிக்க வரும் அடியார் அனைவருக்கும்  ஆனந்த தரிசனம் நல்க வேண்டும்,’’ என்று நெகிழ்ந்து கேட்டுக்கொண்டாள். 

திருமாலும் அதற்கிணங்கி, இந்தத் தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரும்  தன்னை தரிசித்தாலேயே தாயாரையும் சேர்த்து தரிசிக்கும் பாக்கியமும் கிட்டுமாறு விதி செய்தார்.

 சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது, பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். 

தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். 

அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். 

அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. 

இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். 

மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.

இப்படி அரூபமாக, பரந்தாமனுக்குள் விளங்கும்  தாயாரின் பெயர் வாத்ஸல்ய தேவி! எந்த பாரபட்சமும் பார்க்காத, எல்லா பக்தர்களையும் ஒரே வாத்ஸல்யத்துடன் (பாசத்துடன்)  பரிபாலிக்கும் தாயார் இவர்! 
இந்தக் கருவறையை தரிசித்தாலே வாழ்வில் நல்திருப்பங்கள் ஏற்படும் என்பது பலரது அனுபவம்.

திருவண்வண்டூர் தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவல்லவாழ்.கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும், செங்கணூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும்... பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவல்லா எனும் திருவல்லவாழ் திருத் தலம்




ஆராட்டு விழா


14 comments:

  1. வாத்ஸல்ய தேவி அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. திருவல்லவாழ் சிறப்புகள் அறியாதவை அம்மா... நன்றி... படங்கள் அனைத்தும் அருமை...

    கோவில் எங்குள்ளது எனும் தகவலுக்கும் நன்றி...

    ReplyDelete
  3. ’திருவல்லவாழ்’ என்னும் புதிய திருத்தலமான கோயில் பற்றிய பல்வேறு செய்திகளை அறிய முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  4. கோயிலின் இருப்பிடம், செல்லும் வழிப்பாதை, அங்குள்ள விசேஷங்கள், பெயர் காரணங்கள், யார் யார் மட்டும் தரிஸிக்கலாம், அதனால் என்ன என்ன பலன்கள் என அனைத்து விபரங்களும் அழகாகச் சொல்லியுள்ளது சிறப்பு.

    >>>>>

    ReplyDelete
  5. பிரும்மச்சாரி கோலத்தில் திருமால் தன் வாத்ஸல்யதேவியை தன் நெஞ்சினில் மறைத்துக்கொண்டிருந்தாலும், இந்தப்பதிவின் மூலம் நாங்களும் அறியத்தந்துள்ளது அருமை.

    ’வாத்ஸல்யதேவி’க்கு என் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  6. படங்களும், பல்வேறு தகவல்களும், ஸ்தல வரலாறுகளும், புராணக் கதைகளும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தன.

    >>>>>

    ReplyDelete
  7. கமுகு இலையில் .....

    சாதமும், தொட்டுக்கொள்ள உப்புமாங்காயும் சேர்த்து அளித்த பிரஸாதாமாக உள்ளது இன்றைய தங்களின் பதிவு.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  8. சங்கரமங்கலத்து அம்மையிடம் உப்பு மாங்காயை விரும்பிக் கேட்டு வாங்கி உண்டான் எனில் - அந்த உத்தமனின் மகத்துவம் தான் என்னே!..

    ReplyDelete
  9. திருவல்லவாழ் தலச்சிறப்புகள் அருமை.தெரியாத விடயங்கள் அனைத்துமே.அழகான படங்கள். நன்றி.

    ReplyDelete
  10. விளக்கங்கள், விபரங்கள், ஓவியங்கள் அனைத்தும் அருமை! கருடாழ்வார் இறைவன், இறைவியைச் சுமந்து பறக்கும் ஓவியம் மிக அழகு!

    ReplyDelete
  11. மிக அருமையானதொரு ஆலயத்தினை நேரில் சென்று தரிசிப்பது போல அழகாக விவரித்து பகிர்ந்துள்ளீர்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  12. முதல் முதலில் இத்தலம் பற்றி அறிகிறேன்...
    விளக்கமான கட்டுரையுடன் அழகான படங்களுமாய்...
    அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. திருவல்லவாழ் கோவிலைப் பற்றிய தகவல் அனைத்தும் அறியாதவை. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  14. திருவல்லாவிற்கு நான் இரண்டு மூன்று முறை போய்வந்திருக்கிறேனே. பெண்களுக்கு அனுமதியில்லை என்று எழுதியிருக்கிறீர்களே, அதனால் சொன்னேன்.
    நிறைய புது தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete