Thursday, November 17, 2011

பட்டமங்கலம் குருவருள்
 அழகிய  குளத்தையும் ஆலமரத்தை தல விருட்சமாகவும் கொண்டு இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமுர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில் மட்டுமே.
 பட்டமங்கலம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில் தெப்பக்குளம்

சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.
தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி அனைத்து தலங்களிலுமே தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். 
யோகத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கடவுள் இவர்.

திருமால் பன்றி உருவமாகவும், பிரம்மன் அன்ன வடிவமாகவும் அதற்கு மேலாக மென்மை திருவடியுடன் வீராசனத்துடன் புன்னகை தவழும் சிவந்த திருவாய் மேனியாய், பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞானமுத்திரையும், இடது மேற்கரத்தில் நாகமும், இடது கீழ்கரம் தொடையில் வைத்தும் கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அருள்கிறார்.
[Gal1]
விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம். குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை.
தட்சிணாமூர்த்தி சன்னதி


ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும்.
 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும்.
[Gal1]
7 முறை பிரதட்சணம் செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும்.

9 முறை பிரதட்சணம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும்.
1008 முறை பிரதட்சணம்  செய்தால் தாம் விரும்பிய பெண்ணை மனைவியாக அடையலாம் 


11 முறை பிரதட்சணம் செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும்.
15 முறை பிரதட்சணம் செய்தால் செல்வம் பெருகும்.என்பது ஐதீகம்......
[Gal1]

இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவறே 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார்.
தல வரலாறு: 
இறைவன் பிருங்கி, நந்தி தேவர் முதலான நால்வருக்கு சிவகதையினை கூறிக்கொண்டிருந்தார். 
மூலவர் சிவன்
தமிழ்க்கடவுளாம் முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களான அம்பா, துலா,நிதர்த்தனி,அப்பிரகேந்தி,மேகேந்தி,வருஷகேந்தி ஆகியோர் மகா சித்திகளான அனிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, வசித்துவம்,பிரகாமியம், ஈசத்துவம் என்ற அஷ்டமாசித்திகளை உபதேசிக்கும்படி திருக்கயிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வேண்டினர்.

ஈஸ்வரனோ, கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்திகள் தேவையில்லை எனவும், இயற்கையாகவே அவர்கள் அஷ்டமாசித்திகள் அமையப் பெற்றவர்கள் எனவும் கூறினார்.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வேண்டவே, உமாதேவியாரின் பரிந்துரையின்படி, கயிலை மலையானும் அவர்களுக்கு, கிழக்கு நோக்கி, தட்சிணா மூர்த்தி வடிவில் அஷ்டமகா சித்துக்களை உபதேசித்து அருளினார்.

அவ்வாறு உபதேசிக்கும் போது, கார்த்திகை பெண்கள் கவனக்குறைவாக இருக்கவே, நெற்றிக்கண் உடையோனும் சினந்து, கார்த்திகை பெண்களை கதம்ப வனத்தில் கதம்ப மகரிஷி ஆசிரமப் பக்கம் ஆயிரம் ஆண்டுகள் ஆலமரத்தடியில் கல்லாகி கிடக்குமாறு சாபமிட்டார்.

பக்குவமில்லாதவர்களுக்கு உபதேசம் செய்ய பரிந்துரை செய்த பொன்னழகு மேனியாளான ஸ்ரீ உமா தேவியாரை நாவல் மரத்தடியில் காளியாக தவமிருக்கவும் கட்டளையிட்டார். 

தேவியை தனியே விட தேவன் மனம் இணங்குமா? 
காவலாக நந்தி தேசனை அனுப்பி வைத்தார்.

ஆயிரம் ஆண்டுகள் கழித்து திரும்பவும் மதுரை சொக்கராக சுவாமி எழுந்தருளிய காலத்தில் பாறைகளாக இருந்த கார்த்திகை மாதர்களை எழுப்பி மீண்டும் அஷ்டமாசித்தி உபதேசித்தார். 
சாப விமோசனம் அளித்த தலமே பட்டமங்கை ஆகும். இது நாளைடைவில் மருவி பட்டமங்கலம் என அழைக்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், காளியாய் மாற்றிய பாவம் நீங்க , உலகின் அழகியாய் மாற்றி, உமையவளை அழகு சௌந்தரியாய் ஆட்கொண்டார் எம்பெருமான்!
காளி வடிவில் உமை: இறைவன் அஷ்டமாசித்தியை நங்கையர்க்கு உபதேசிக்க யோசித்த போது அவர்களுக்கு பலமாக சிபாரிசு செய்ததற்காக உமையம்மையும் சபிக்கப்பட்டார்.

அவர் காளி கோலத்தில் நாவல் மரத்தடியில்
நவையடிக் காளியாக அருள்பாலித்து வருகிறார்.

சாபவிமோசனம் வேண்டி நாவல் மரத்தடியில் நவையடிக் காளியாக கடும்தவம் செய்து அம்பிகை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அழகுசவுந்தரியாக அருள்பாலிக்கிறார். 

மணிமுத்து நதியின் தென் கரையில் மௌனமாய் ஒளி வீசி மனித குலம் மேம்படுத்த வந்த மரகதம்அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் 
(உற்சவ அம்மன்)
 ஸ்ரீ குரு பகவான் கோவிலுக்கு கிழக்கில் 300 மீட்டர் தொலைவில் ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில் உள்ளது. 

கோவில் அங்கு இருந்தாலும், அம்பாள் அழகு சௌந்தரி குடியிருப்பதென்னவோ அம்பாளை அநுதினமும் அன்புடன் நேசிப்பவர்களின் மனதில் தானே!

 நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் நாயகியே
காவல் பலபுரிந்து காத்தருள்வாய் எம்குலத்தை
ஆவல் மிகக் கொண்டேன் அழகு சௌந்தரியே
அருள் புரிவாய் அம்மா..!
அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில்
ஒரே கோவிலில் பயமுறுத்தும் காளியாகவும், அரவணைக்கும் அழகு அன்னையாகவும் அம்பாளை காண்பதரிது. 

பட்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீ அழகு சௌந்தரி கோவிலில்தான் உமையவள், நவமரத்தடியில் காளியாகவும், அழகின் அழகியான அழகு சௌந்தரியாகவும் இருந்து அருள் பாலித்து வருகிறாள். 

கருவறை,அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிரகாரம் மதில் சுவர்களுடன் கூடிய திருக்கோவில்.கோவில் முன்புறம் அம்மன் குளம் என்ற தீர்த்தகுளம் உள்ளது.

அம்பாளுக்கென உள்ள நந்தவனம் ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் கோவிலின் முன் உள்ளது.

இங்கு மலரும் பூக்கள் அம்பாளின் பூஜைக்காக பயன்படுத்தப்படுகின்றது.

பங்குனி உத்தரத்தில் திருத்தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. நவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

அழகு சௌந்தரியை அன்றாடம் நினைப்பவர்கள், அகிலத்தில் வானளவு புகழ் பெறுவர் ,,

 ஸ்ரீ நவயடிக் காளியையும் , ஸ்ரீ அழகு சௌந்தரியையும் தரிசித்து விட்டு 
ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வந்தால் ஊழ் வினை அகன்று,
மனதில் நிம்மதி நிலைத்தோங்கும்!
அருள்மிகு மதியாத கண்ட விநாயகர்  உற்சவர்
பட்டமங்கல நாட்டின் நடுநாயகமாக உள்ள மூலவர் மதியாத கண்ட விநாயகர். மதி (சந்திரன்), ஆதவன் (சூரியன்) கண்டு வழிபடப்பட்ட விநாயகர். இத்திருக்கோவிலுள்ள விநாயகர் மதுரை பாண்டியன் கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டு கீழக்கோட்டை என்னும் கிராமத்தில் வைத்திருந்து பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மூர்த்தி மிக சிறியவர், கீர்த்தி மிக்கவர்.
                   
                      மதியாத கண்ட விநாயகா உன்னைத்                     
                     
                     துதித்து உன்பாதம் சரணடைந்த பக்தருக்கு 
                
                      விதியாலே எதுவறினும் மதியாலே வெல்ல வெற்றிக்
                     
                      கதிபதியே அருள் தருவாய்"

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை அல்லது திருப்பத்தூர் செல்ல வேண்டும். அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்ல பஸ்வசதி உள்ளது.
Pattamangalam Temple Therottam
[Image1]

 

தட்சிணாமுர்த்தி அருளும் அரசமரம் மிகப்பழமையானது. 

பல விழுதுகளைக்கொண்டு 50-60 அடி தூரத்திற்கு தழைத்து நிற்கும் கோலம் கண்கொள்ளாக்காட்சியாக மனதிற்கு நிறைவளிக்கும்..

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி ஆயிரம் காலத்துப் பயிரான திருமணம் செழிக்க அரசமரத்தோடு இயைந்த குரு பகவானைப் பிரதட்சிணம் செய்யலாம்.

அரசமரப்பிரதட்சிணம் புத்திர பாக்கியத்திற்கு சிறந்தது 
என்பது விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது..
VASANTH

VASANTH
VASANTH10 comments:

 1. படங்கள் யாவும் அருமையோ அருமை.

  குருவாரத்திற்கு ஏற்ற பதிவு - தக்ஷிணாமூர்த்தி பற்றியது - மிகப்பொருத்தமே

  ஸ்தல வரலாறுகள் ஜோர்.

  தோகை விரித்தாடும் அந்த மயிலை வைத்த கண் விலகாமல் நீண்ட நேரம் பார்த்து மகிழ்ந்தேன்.

  தேர் ரொம்ப ஜோர்.

  அரசமரத்தை சுற்றத்தான் ஆசை. ஆனால் அடிவயிறு வீங்கிடுமோ என்ற அச்சமும் உண்டு, ஏற்கனவே வீக்கமாக [தொந்தி] போட்டுள்ளதால். சுற்ற வேண்டியவர்கள் மட்டும் சுற்றட்டும். ))))))

  கோடி புண்ணியம் தரும் கோபுர தரிஸனம் தினமும் உங்களால் எங்களுக்குக் கிடைத்து வருகிறது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 2. சந்திரனும் சூரியனும் வழிபட்ட அந்தத் தொந்திப்பிள்ளையாரும் அருமை.

  மூர்த்தி சிறியவராயினும் கீர்த்தி பெரியது புரிகிறது. மகிழ்ச்சி )))))

  பட்டமங்கலம் + அழகு செளந்தரி [அழகின் அழகி .... ஆஹா]
  இரண்டுமே கேட்கும்போதே காதுக்கு இனிமையாக உள்ளதே.

  தனியாக காளி வேறு - இரட்டை வேடம் ஒரே படத்தில் [கோயிலில்]
  நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 3. உற்சவ அம்மன் ஜகத்ஜோதியாக நீலப் புடவையில், பட்டை ஜரிகையில், அரக்குக்கலர் கை அங்கிகளுடன் (ஸ்வெட்டர் போல)வெள்ளிக்கிளியுடன், எவ்ளோ அழகாக!))))))

  மனித குலம் மேம்படுத்த வந்த மரகதம் அல்லவா!))))))

  அருள்மிகு ஸ்ரீ அழகு செளந்தரி அம்பாள் அல்லவா அதனால் தான்!))))))))

  சுந்தரி செளந்தரி நிரந்தரியே .....
  பாடல் தான் ஞாபகம் வருகிறது!))))

  ReplyDelete
 4. தமிழ்க்கடவுளாம் முருகன் ஆறு குழந்தைகளாக தாமரையில் காட்டியுள்ளது, நடுவே அந்த நின்ற கோலத்தில் உள்ள அம்பாள் சூப்பரோ சூப்பர். அழகான் படமல்லவா அது. பொற்றாமரைக் குளம் அல்லவா அது! )))).

  அடுத்து ஒரு வேளை மனிதப்பிறவி எடுத்து, ஆணாகப் பிறந்தால், பட்டமங்கலம் அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி கோயிலுக்குப் போகணும் என்ற ஆசையையும், அவ்வாறு போனால் 1008 முறை பிரதக்ஷணம் செய்ய வேண்டும் என்ற ஆவலையும் உண்டாக்கி விட்டீர்களே!

  அந்த தம்பதி இருவரின் கைகோர்த்த படம் அருமையாகக் காட்டியுள்ளீர்கள்.
  [யாரோ? அவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? பாடல் ஞாபகம் வந்தது]

  ReplyDelete
 5. குரு பார்க்க கோடி நன்மை.

  அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை.

  ஆமாம் ஆமாம்.

  ஆனால் அதைவிட சக்தி வாய்ந்தது தங்களின் பதிவுகளை தினமும் பார்த்தாலே!

  இது தான் என்னால் சுலபமாக முடிந்தது. அதுவே நாளை முதல் எப்படியோ?

  அழகான பதிவு. வழக்கம்போல அருமையான படங்கள். விலாவரியான விளக்கங்கள்.


  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

  ReplyDelete
 6. காணக்கிடைக்காத பேறு
  தங்கள் பதிவால் பெற்றேன்
  நன்றி சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. தட்சிணாமூர்த்திக்கென்று தனிக்கோயில் இருப்பது இதுவரை நான் அறியாதது. தலவரலாறுடன் விரிவாக அறியத் தந்தமைக்கு நன்றி. அந்த மயில் படம் மனதில் நின்றது.

  ReplyDelete
 8. கடவுளின் அருளை பெற்றேன்.

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete